Wednesday, May 16, 2018

சாதியால் சாதித்தது என்ன???


தமிழ்நாட்டிலுள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தமிழருடையது என்றிருந்தேன்,

தமிழ்நாட்டிலுள்ள தொழில் நிறுவனங்கள் அனைத்தும் தமிழருடையது என்றிருந்தேன்,

தமிழ்நாட்டிலுள்ள உணவகங்கள் அனைத்தும் தமிழருடையது என்றிருந்தேன்,

தமிழ்நாட்டிலுள்ள ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள் அனைத்தும் தமிழருடையது என்றிருந்தேன்,

தமிழ்நாட்டிலுள்ள பொட்டிக்கடைகளையும் உள்ளடக்கி வர்த்தகம் அனைத்தும் தமிழருடையது என்றிருந்தேன்,

தமிழ்நாட்டிலுள்ள தனியார் மற்றும் அரசு பணியாளர்கள் அனைவரும் தமிழர்தான் என்றிருந்தேன்,

தமிழ்நாட்டின் நிலங்கள் அனைத்தும் தமிழருடையது தான் என்றும், உழவர் சங்கத்தலைவர்கள் அனைவரும் தமிழர்தான் என்றிருந்தேன்,

அதுபோக தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் அனைத்திலும் தமிழர் தலைமைதான் என்றிருந்தேன்,

இதுபோக இன்னும் விடுபட்டுள்ள அனைத்திலும் தமிழர்தான் ஆதிக்கத்தில் உள்ளனர் என்றிருந்தேன்,

இப்போதுதான் கொஞ்சம் தடுமாற்றம் வந்தது, எல்லாத்திலும் தமிழராக இருந்திருந்தும் பின்பு ஏன் ஈழம் சுடுகாடாகியது,தமிழ்நாடு ஆகிக்கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழுந்தது,

கேள்விக்கான விடையை தேடும்போது ஆதிக்கத்திலுள்ள ஒரு கருத்தியலின் சித்தாந்தம் இறுதியாக சாதியொளிப்பில் நின்றது,

எதற்காக இந்த சாதியொளிப்பு நாடகம் என ஆராய்ந்து ஆணிவேரை பிடித்திழுக்க முயன்றால், அவ்வேரை வலுவாக பிடித்திருந்தது தமிழரல்லாத வேற்றினச் சாதிகள்,

பிறகுதான் அரசியலையும், அரசியல் அதிமுக்கிய தலைகளின் பூர்வீகத்தையும், ஒவ்வொரு துறையிலும் ஊடுறுவியிருந்த வேற்றினச் சாதிகளையும் பலருடைய தேடலின் மூலம் அறிய நேரிட்டது,

ஒரு இனம் தன் தொன்மையை இழந்து நிற்கவேண்டும் என்பதற்காகவும், உடமை, உரிமை,ஆளுமை, அரியணையை தக்கவைத்துக்கொள்ள கூடாது என்பதற்காகவும்,

மன்னராட்சி அநாகரிக கூட்டம் மொழியை கவசமாக்கி, இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டி, அதையும் இனமென்று பொய்யுரைத்து ஒரு தொன்மை வாய்ந்த இனத்தை காயடித்துக்கொண்டிருக்கிறது என்பதை,

இவ்வளவையும் அறிய புதைக்க நினைத்த சாதி எனப்படும் குடிவழியை தோண்டியெடுத்து அக்குவேர் ஆணிவேராக பிரித்து வகைப்படுத்த முடிந்தது,

யாருக்கு எப்படியோ, யாருக்கு எத்தனைக் கேள்விகள் எழுந்தாலும், தமிழ்நாட்டில் வாழ்வோரெல்லாம் தமிழரே என்ற பிம்பத்தை உடைத்தெறிய சாதி என்னும் குடிவழியை வைத்தே இனங்காண முடிந்தது,

இக்குடிவழியில்,வந்தவனாலும், உள்ளவனாலும் ஏற்பட்டுள்ள விரிசலை, காழ்ப்பை, பகையை,பொறாமையை, சுயநலத்தை களைய என்ன செய்ய வேண்டுமோ அதைமட்டும் ஆக்கப்பூர்வமாக செய்யவேண்டும்.

இரா. வேல்முருகன்

Saturday, May 12, 2018

எலும்பு வைத்தியர் காசி விஸ்வநாதன்படத்தில் இருப்பவர் எலும்பு வைத்தியர் காசி விஸ்வநாதன். இவர் மதுரையைச் சேர்ந்தவர். இவர் மதுரை மட்டுமல்லாமல் வடுகபட்டி, பெரியகுளம், சின்னமனூர் ஆகிய ஊர்களில் எலும்பு வைத்தியம் செய்து வருகிறார்.

இவரது தாத்தா காலத்திலிருந்து இவர்கள் இந்தத் தொழிலைச் செய்து வகிறார்கள். இவரது தந்தைக்குப் பின் இவர் தனது வைத்திய சேவையை தொடர்கிறார். பொதுவாக இவர்களின் வைத்திய முறை நமது பாரம்பரிய வைத்திய முறையாகும். எலும்பு முறிவுகளுக்கு கட்டுப் போட்டு மருந்து கொடுப்பார்கள்.

ஆங்கில வைத்தியம் என்பது உடலைக் கிழித்துச் செய்வது. நமது பாரம்பரிய வைத்தியம் வெளிப்புறம் இருந்தே சிகிச்சை அளிப்பது. ஆங்கில வைத்தியர்கள் எலும்பு முறிவை எக்ஸ்ரே எடுத்து அதன் அடிப்படையில் கட்டுப் போடுதல், அறுவைச் சிகிச்சை செய்தல், முறிந்த எலும்புகளை போல்ட்-நட் போட்டு இணைத்தல் போன்ற சிகிச்சை முறைகளைப் பின்பற்றுகிறார்கள். பெரும்பாலும் ஆங்கில வைத்திய முறையை சிகிச்சை என்று சொல்வதை விட சித்ரவதை என்றே சொல்லலாம். இது போன்ற இணைப்புகளால் அந்த உறுப்புகள் இணைக்கப்பட்டிருக்குமே தவிர செயலற்றதாக இருக்கும். ஆனால் பாரம்பரிய வைத்திய முறையில் அந்த உறுப்பு மீண்டும் இயங்கத் தொடங்கும்.

அப்படி பலரும் தங்கள் எலும்பு முறிவுகளை ஆங்கில வைத்திய முறையில் சரி செய்ய முடியாமல் பெரும் பணத்தை இழந்து இவரிடம் வந்து சிகிச்சை பெற்றுக் கொள்வதைக் காணலாம். பாரம்பரிய வைத்திய முறையில் வைத்தியத்திற்காக சிறிதளவு செலவு செய்தாலே போதுமானது.

ஒருநாள் காலையில் எழும்போது என் மனைவியால் நிமிர முடியவில்லை கீழ் முதுகில் கடுமையான வலி ஏற்பட்டது. உடனே நாங்கள் வழக்கமாக சிகிச்சை எடுத்துக் கொள்ளும் ஆங்கில வைத்தியரிடம் காட்டினோம். சோதனை செய்த மருத்துவர் முதுகெலும்பு டிஸ்க் லேசாக விலகியுள்ளது. மூன்று நாட்கள் ஊசி போட்டால் சரியாகிவிடும். பின்னர் பெல்ட் போட்டுக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதன்படி தினமும் 2 ஊசி என்ற கணக்கில் 3 நாட்கள் தொடர்ந்து ஊசி போட்டுக் கொண்டோம் வலி குறைந்தாலும் நிற்கவில்லை. பெல்ட் போட்டுக் கொள்ளச் சொன்னார். பெல்ட் போட்டும் பலனில்லை.

அதுபற்றி சொன்னதும் இனி எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர் சொன்னார். எந்த வழியிலும் அது விரும்பத் தகாத ஒன்றாகவே இருக்கும் என்பதை உணர்ந்தோம். இது பற்றி நண்பர்கள் சிலரிடம் விசாரித்தபோது எலும்பு வைத்தியர் காசி விஸ்வநாதனைப் பற்றிச் சொன்னார்கள். அவர்கள் சனிக்கிழமை தோறும் எங்கள் ஊரின் அருகேயுள்ள வடுகபட்டி, பெரியகுளத்திற்கு வந்து சிகிச்சை அளித்து வருவது தெரிந்தது.

அவரைச் சந்தித்து ஆங்கில வைத்தியர் சொன்ன தகவலைச் சொன்னோம். முதுகெலும்பு விலகி இருந்தால் உங்களால் நகரக் கூட முடியாது என்று சொன்ன அவர் முதுகு சவ்வு விலகி இருக்கிறது. வாரம் ஒருமுறை கட்டுப் போட வேண்டும். 3 முறை கட்டுப்போட்டால் சரியாகிவிடும் என்று சொன்னார். அதன்படி அவர் கட்டுப் போட்டு மருந்துகளைக் கொடுத்து  அனுப்பினார். சரியாக ஒரு மாத காலத்திற்குள் சரியாகி விட்டது.

இவ்வாறு கட்டுப் போடச் சென்றபோது பனை மரத்தில் இருந்து விழுந்து கை எலும்பை முறித்துக் கொண்ட ஒருவர் சிகிச்சைக்காக வருவதை பார்க்க முடிந்தது. அவர் மதுரையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து ஓரிரு லட்சங்களை இழந்திருந்தார்.

முறிந்த எலும்பில் நான்கு துளைகளைப் போட்டு எலும்புகளை இணைக்க முயன்றிருந்தார்கள். அதற்கான எக்ஸ்ரேக்கள் அவரிடம் இருந்தன. எலும்பு இணைக்கப்பட்டிருந்தது ஆனால் கை செயலற்று இருந்தது. அதைப் பார்த்த வைத்தியர் கையை சரி செய்து விடலாம் என்று சொல்லி கட்டுப்போடும் வேலையைத் துவங்கினார். இன்று வைத்தியரைச் சந்தித்த போது அந்த நபர் தேறி வருவதாகச் சொன்னார்.

எலும்பு தொடர்பான சிறு  வலி, முதல் முறிவு வரை இவரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சை செய்து கொள்ளலாம். எலும்பு வைத்தியம் முக்கியமாக இருந்தாலும் இவர் மற்ற நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கிறார். மதுரை, தேனி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக இவரை அணுகலாம். வைத்தியரின் தொடர்பு எண் 99426 47440

Friday, April 13, 2018

தமிழ்க் குலத்தின் தனிப்பெருந் திருநாள்
தமிழ் மக்களுக்கு வரப்போகும் தைப்பொங்கல் புதிய ஆண்டும் புதிய சகாப்தமும் ஆகும். நீண்ட காலம் தொட்டு தமிழ் மரபு தைப் பொங்கலைத்தான் புத்தாண்டாக வைத்துக் கொண்டாடி வந்தது. இடையில் ஏற்பட்ட மாற்றம்தான் மேஷ ராசியில் சூரியன் புகும்போது அதாவது சித்திரை மாதத்தைப் புது ஆண்டாகக் கொண்டாடிய பழக்கம்.

இன்றைய தமிழ் நாடு கலை, மொழி, மதம், அரசியல் தலைமை இத்தனையிலும் சீரழிந்து சின்னாபின்னப்பட்டு நிற்கிறது. இந்த நிலை நீடிக்காது. சீக்கிரம் மாற்றமும் மாண்பும் ஏற்படப் போகிறது.

தமிழர்கள் தமிழ் பாஷைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று வேகமாகப் பேசுகிறதோடு, ‘தமிழ்ப் பண்பு ஆரியர்களால் அழிக்கப்பட்டு விட்டது என்று பறைசாற்றுகிறதோடு, தமிழனை நாஸ்திகப் பாதைக்கு இழுத்துச் சென்று இழிவுபடுத்துகிற நிலைமைக்கு முனைந்து நிற்கிறார்கள். முழு மூச்சாகவும் பாடுபடுகிறார்கள். இது இந்தியாவின் தேசீயம் வேகமாகப் பேசிய நபர்களால் மறைமுகமாக காமன்வெல்த் உறவிற்கு இழுத்துச் சென்ற கதைபோல, தமிழை முன்னேற்ற நினைக்கும் கூட்டம் தமிழனை இழிவுபடுத்திய நாசத்தன்மையாகும்.

ஆலய வணக்கம், பூஜை வழிபாடு, கூட்டுப் பிரார்த்தனை இவை எல்லாம் ஆரியர் கூற்று என்று சொல்லப்படுகிறது சீர்திருத்தவாதிகளால். ஆரியரென்பர் சரித்திரப்படி இந்தியாவில் நுழைந்த காலம் கிட்டத்தட்ட 3500 வருஷங்களாகும். தமிழ் மன்னன், தமிழ்ச் சங்கம், தமிழ்க் கலை, தமிழ் சித்திரம் வாழ்ந்த காலம் பல வருஷங்களுக்கு முன்பே இருந்தாகும்.

இன்றைக்கு, இந்து மகாசமுத்திரமாகக் கிடக்கின்ற நீர்ப் பரப்பு நிலமாக இருந்த காலத்தில் மடகாஸ்கர் என்ற ஆப்பிரிக்கா ஓரமுள்ள தீவை மேற்கு எல்லையாகவும், ஆஸ்திரேலியக் கண்டத்தை கிழக்கு எல்லையாகவும் வைத்துப் பரந்து கிடந்ததொரு பூமிப் பரப்பு. அதற்குப் பெயர் லெமோரியாக் கண்டம். அதுதான் ஆதி பூகோளம், அப்பொழுது விந்தியா- சார்ப்பூரா என்ற மலைகள் இந்தியாவின் வட எல்லையாக இருந்தன. அதற்கு வடக்கிலுள்ள ஐக்கிய மாகாணம், பஞ்சாப், காஷ்மீரம், நேபாளம், இமயமலை, ரஷ்யாவின் தென்பகுதி இவைகளெல்லாம் நீர்ப்பரப்பாக சமுத்திரத்திற்குள் கிடந்தன.

அக்காலத்திலேயே சங்கம் சிற்றகத்தியம்’, பேரகத்தியம் என்னும் பெருநூலை ஆதாரமாகக் கொண்டு அழகாக அமைந்து நின்ற ஒரு பழம் பெருமை ஆராய்ச்சிகாரர்களுக்கும், சங்க நூலை படித்தவர்களுக்கும் தெரியாமற் போகாது. இதை ஆங்கிலேயனும் லாஸ்ட் ஆஃப் லெமோரியா என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறான். சீர்திருத்தவாதி வாங்கிப் படிக்கவும்.

அகஸ்தியார் மாணாக்கர் பலருள் ஒருவரான தொல்காப்பியரைக் கொண்டு இலக்கணப் பாதையில் நின்ற காலம். அதற்குப் பிற்பட்டது பாண்டிய நாட்டின் தமிழ் எல்லையை - மதுரையைத் தலைமையாக வைத்து கடைச் சங்கம் அமைத்து, கடைசியில் நக்கீரரைத் தலைவராக வைத்து வாழ்ந்து, இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன் அழிந்த காலம்.
முதல் சங்கம், இடைச் சங்கம், பாண்டியன் காலமே. இந்தப் பண்டைய தமிழ்நாட்டை - சர்வ நூலும் கண்ட ஒரு தமிழ் பாஷையை அவர்கள் கையாண்ட பழக்க வழக்கத்தை - மதத்தை - வழிபாட்டை - தெய்வீக வாழ்க்கையை சிதறடிப்பது, சீர் குலைப்பது தமிழுக்குப் பாடுபடுவதாகாது. இதில் தமிழர்கள் உஷாராக வாழ்ந்து தமிழன் என்ற மானத்தோடு தலைநிமிர்ந்து நடக்கத் தமிழன்னை வருகிற புத்தாண்டில் புத்துணர்ச்சி அளிப்பாளாக

வாழ்க தமிழ்த்தாய்!
வளர்க தமிழ்!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், கண்ணகி இதழில் 17.01.1960-ல் எழுதிய கட்டுரை

Thursday, March 15, 2018

திராவிடத்தை தூக்கி எறிந்த தினகரன்


தினகரனின் புதிய கட்சியின் பெயர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம். மேடையில் அவருக்கு தமிழ்க் கடவுளான முருகனின்ன சின்னமான வேல் பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டும் அவர் திராவிடத்தை விட்டு விலகி விட்டதைக் காட்டுகிறது.

கொடியில் ஜெயலலிதாவின் படத்தை வைத்துள்ளார். கொடியில் இனப்பகை ஈவெராவின் படமோ, திராவிட நாடு பற்றி பேசிப் பின்னர் அதைக் கைவிட்ட அண்ணாவின் படமோ இருப்பதை விட ஜெயலலிதாவின் படம் இருப்பது ஒன்றும் பெரிய குறை அல்ல.

நான் ஏற்கனவே சொன்னது போல தினகரன்தான் அடுத்த அதிமுகவின் தலைவர் என்பதை பாஜக தனது சொந்த செலவில் விளம்பரம் செய்தது. அதுவே அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் விரும்பும் தலைவராக தினகரனை மாற்றியுள்ளது.

இந்த நிலையில் அவர் அடுத்த முதல்வராகவும் தமிழர்களின் சிறந்த ஆளுமையாகவும் ஆக அத்தனை வாய்ப்புகளும் உள்ளன. எனவேதான், தமிழ்த் தேசியம் பேசக் கூடிய என்னைப் போன்றோர் தினகரன் உண்மையிலேயே தமிழர்களுக்கான ஒரு தலைவராக வரவேண்டும் என்று விரும்புகிறோம். அதேவேளையில் அதிமுகவின் அடுத்த தலைவராக மாறும் அவர் திராவிடத்தை உதறித் தள்ள அவருக்குள்ள சிக்கல்களையும், அதை அவர் எப்படி
சமாளிப்பார் அல்லது ஊடக, பொதுப் புத்திகளைக் கடந்து அவர் அதைச் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு என்னைப் போன்றவர்களுக்கு இருந்தது.

ஆனால் இரட்டை இலைச் சின்னம் இல்லாமல் குக்கர் சின்னத்தில் பெற்ற மாபெரும் வெற்றி அவரை திராவிடத்தை தூக்கி எறியும் துணிச்சல் மிக்க மனிதராக மாற்றியுள்ளது என்று கருதுகிறேன். அதேபோல மத்திய ஆளும் பாஜகவிற்கு எழுதித் தராத அடிமைகளாக உள்ள ஈபிஎஸ், ஓபிஎஸ்களை மக்கள் தூக்கி எறிந்தார்கள். இந்த நிலையில் தினகரன் மத்திய அரசுக்கு, தேசிய கட்சிகளுக்கு எதிராக அரசியல் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அதுவே தமிழ்த் தேசிய அரசியலாகும்.

எனவேதான் என்னைப் போன்ற உண்மையான தமிழத் தேசியவாதிகள் தினகரனை கூர்மையாக கவனித்து அவரது அரசியல் நகர்வுகளை கணித்து வருகிறோம். எங்களது நோக்கம் தமிழர்களின் அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே. அதன் மூலம் அவர்களுக்கு அனைத்து பாதுகாப்புகளும் கிடைக்க வேண்டும் என்பதே.

அதிமுக கட்சியிலிருந்து தினகரன் ஆதரவாளராக மாறியுள்ளவர்கள் தினகரன் திராவிடத்தை தூக்கி எறிந்து விட்டார் என்ற கருத்தை கிண்டல் செய்கிறார்கள். அதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. தினகரன் திராவிடப் பாதையில் பயணித்தால் தமிழர்கள் அவரையும் தூக்கி எறிவார்கள் என்பதை காலம் சொல்லும். இல்லாவிட்டால் அவர் தமிழர் தலைவர் என்று கொண்டாடப்படுவார்.