Sunday, August 28, 2011

அரசியலும் நிதி நிர்வாகமும் - 1எந்தவொரு வேலைக்குமே நிதி என்பது மிகவும் அவசியம். அது அரசியலுக்கும் மிகமிக அத்தியாவசிய தேவையாக உள்ளது. அந்த தேவையை எவ்வாறு சமாளிப்பது என்று இந்த கட்டுரையில் காண்போம்.   

தனிநபர் நிதி ஆதாரம்

மாதத்தில் 26 நாட்கள் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் ஒருவர் அரசியலுக்காக நிதியை ஒதுக்க முடியாது. அந்த வருமானம் அவரது தேவைக்கு அதிகமான ஒன்றாக இருக்கும்போதே அதில் ஒரு சிறு பகுதியை அரசியலுக்காக செலவிட இயலும். அதேவேளையில் ஒருவர் தனது அரசியல் ஈடுபாட்டிற்காக தனது தரப்பில் செலவழிப்பதும் அவசியமே. ஒருவர் ஒரு கூட்டத்திற்காக பத்துப்பேரை அல்லது இருபது பேரை ஒன்று திரட்டும்போது, அவர்களுக்கு தேனீர் வாங்கி கொடுக்கவோ அல்லது அவர்களை பேரூந்தில் அழைத்துச் செல்லவோ வேண்டியுள்ளது.

இதற்கு அவர் நிதி வசதி பெற்றவராக இருக்க வேண்டும். இதுபோன்ற செலவுகளை ஒருவர் சுயமாக சமாளிக்க கூடியவராக இருக்க வேண்டும். ஒரு பயனும் கிடைக்காதபோது இது போன்ற முதலீடுகள் வீணான ஒன்றாக ஆகாதா? ஏன் இந்த செலவுகளை செய்ய வேண்டும்? என்ற கேள்வி தானாகவே எழும்.

அரசியல் நோக்கில் செலவுகளைச் செய்ய குறைந்த நபர்களே துணிகின்றனர். இதுபோன்ற சிறு செலவுகளால் நீங்கள் எந்தவித பலனையும் எதிர்பார்க்க இயலாது. ஆனால் இந்த செலவுகள் நீங்கள் உங்களது அதிகாரத்தை கையில் எடுப்பதற்கான முதலீடு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த செலவுகளை செய்யும்போதுதான் ஒருவர் ஒரு கூட்டத்தை வழிநடத்த இயலும். நீங்கள் ஒரு கூட்டத்திற்கோ அல்லது இடத்திற்கோ மக்களை சுயமாக செலவு செய்து வாருங்கள் என்றால் வரமாட்டார்கள். வருவதே பெரிது, இதில் பணம் வேறு செலவழிக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்புவர். ஆனால் இதே மக்கள்தான் நமக்கு அதிகாரத்தை தரப்போகிறார்கள்.

முடிந்தவரை சுய தொழில் செய்பவர்களே அரசியலுக்கு உகந்தவர்கள். ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியாது. நினைத்த நேரம் வெளியில் கிளம்ப இயலாது. அரசியலில் ஈடுபட நேரச் சுதந்திரம் தேவை என்பதால் சுய தொழில் செய்பவர்கள் இயற்கையாகவே அரசியலுக்கு தகுதி பெற்றவர்களாகின்றனர். இது போன்ற சிறு செலவுகளை நாம் சாதாரணமாக நமது நண்பர்களுக்காக அல்லது உறவினர்களுக்காக செய்துகொண்டுதான் இருக்கிறோம். உங்களது கருத்து, செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு வரும் நபரிடம் நீங்கள் நிதியை எதிர்பார்கக முடியாது. அப்படி எதிர்பார்த்தால், அது நீங்கள் அவரை உங்களிடமிருந்து துரத்துவது போன்றதாகும்.

நியாயமாக, நேர் வழியில் சம்பாதிப்பவர்களால் இதனை ஒரு உறுப்படியான செலவு என்று கருதி செய்ய இயலுவதில்லை. இங்கே அவர்கள் சுயமாகவே தங்களை அரசியலிலிருந்து வடிகட்டிக் கொள்கிறார்கள். அரசியலை சாக்கடையாக அனுமதிக்கின்றனர். ஆனால் இவர்கள் சேவை மனப்பான்மையுடன் சில ஆலய வழிபாடு, ஏழைகளுக்கு திருமணம் போன்ற விஷயங்களுக்காக செலவிடுவதை காணலாம். அரசியல் ஒரு பெரும் சேவையல்லவா? இவர்கள் இந்த சேவையை செய்வது பற்றியும் யோசிக்க வேண்டும். 

சில நேரங்களில் துண்டுப் பிரசுரம், போஸ்டர், பதாகை அடிக்க வேண்டியிருக்கும். இது நீங்கள் செய்யும் சேவைக்கானவையாகவோ அல்லது நீங்கள் செய்த சேவையை வெளிப்படுத்தவோ தேவையாக உள்ளது. பெரிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வது, மேடை அமைப்பது, ஒலிபெருக்கி, நாற்காலிகள் ஏற்படு செய்வது என்றால் பெருஞ்செலவுகள் ஏற்படும். இதனை நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள தொழிலதிபர்கள், தாராள குணம் உள்ளவர்களிடம் நன்கொடை பெற்று சமாளிக்க வேண்டும். முடிந்த ஒவ்வொரு பணியை ஒவ்வொருவரிடம் விட்டுவிட முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு செய்யும்போது நீங்கள் அவர்களின் நம்பிக்கையை பெற்றிருப்பதும் அவசியம். சில காலமாகவது சில சேவைகளை செய்து வரும்போதுதான் நீங்கள் அவர்களுக்கு அறிமுகமாவீர்கள், அவர்கள் உங்களை மதித்து நன்கொடை தருவர். அதேபோல கடைகளிலிருந்தும், தனிநபர்களிடமிருந்தும் சிறு சிறு தொகைகளை சேகரிக்கலாம். உங்களது முயற்சியில் உங்களுக்கு ஆதரவாக இருப்பவர்களிடமிருந்து நன்கொடைகளை எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் சேவை செய்பவர்களிடம் பணத்தையும், பணத்தை அளிப்பவர்களிடம் சேவையையும் எதிர்பார்க்க முடியாது.

இது போன்ற திறமை கொண்டவர்களைத்தான் அரசியல் கட்சிகள் பதவி அளிக்கின்றன. பதவியை பெற்ற பின்னர். நிதி இல்லாத காரணத்தால் ஒரு வேலையை செய்ய முடியாமல் இருப்பதை கட்சிகள் விரும்புவதில்லை. இந்த திறமை இல்லாதவர்கள் அரசியலில் ஈடுபட தகுதியற்றவர்கள்.  

அதேபோல திரட்டப்படும் நிதியை வழிநடத்துபவர்கள் (தலைவர்கள்) தாங்களே கையாளாமல், அதனை நிர்வகிக்கும் பொறுப்பை சக தோழர்கள் ஓரிருவரிடம் ஒப்படைத்து அதனை அவர்கள் எவ்வாறு நிர்வகிக்கின்றனர் என்று கண்காணித்து வரவேண்டும். நிதியை அளவைப் பொறுத்து வங்கி கணக்கு வைத்து செயல்படுவது சிறந்தது. அவ்வாறு நிதியை ஒப்படைக்கும்போது அவர்கள் நிதியை சரியாக கையாளக் கூடியவர்கள்தானா என்பதை அறிந்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இப்படி செய்யும்போது நிதி மோசடி செய்கிறார் என்ற பழிச் சொல் ஏற்படாது. மேலும் பொறுப்புகளை பகிர்ந்து கொடுத்ததாகவும் இருக்கும்.      

No comments: