Sunday, August 14, 2011

தமிழ் ஈழ சமநிலை இழப்பு – இந்தியாவின் புவிசார் அரசியல் அழிவு


இந்திய-இலங்கை மற்றும் சர்வதேச அரசியல் விவகாரங்களை உன்னிப்பாக கவனித்து வரும் திரு வி.எஸ். சுப்ரமணியம் அவர்களது கருத்தாழம் மிக்க கட்டுரைகள் கிரவுண்ட் ரிப்போர்ட் மற்றும் விடுதலைப்புலிகளின் மக்கள் முன்னணி இணைய தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அவற்றை தமிழ் குழுமங்களுக்காக தமிழில் வழங்கியுள்ளேன்.
தமிழ் ஈழ சமநிலை இழப்பு இந்தியாவின் புவிசார் அரசியல் அழிவு
வி.எஸ். சுப்ரமணியம்
தமிழில் பெ.அ. தேவன்
தங்களது உரிமைக்காக ஈழ தமிழர்கள் மேற்கொண்ட போராட்டத்திற்கு எதிராக சிங்கள இலங்கை நடத்திய இனப்படுகொலைக்கு இந்திய அரசு மறைமாக ஆதரவளித்தது. இந்த ஆதரவு சீனாவின் செல்வாக்கை தடுக்கவே அளிக்கப்பட்டது என்று நாராயணன் “மும்மூர்த்திகள்“ உண்மைக்கு மாறாக நியாயப்படுத்தி கூறியுள்ளனர். இந்தியாவை “தனிமைப்படுத்தவே“ யுக்திகளை மேற்கொண்டு வருகிறோம் என்று சீனா வெளிப்படையாக அறிவித்த பின்னரும், “சீனாவின் பக்கம் சாய்ந்து விட்ட“ இலங்கையை “மகிழ்விக்க“இந்தியா மிதமிஞ்சிய நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் அந்நாடு உலக அரசியலில் வகை தெரியாமல் மாட்டிக்கொண்டுள்ளது. நேரு சூ என் லாய் உடன் அணிசேரா ஒப்பந்தம் செய்துகொண்டார். ஆனால் சீனா இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் பெரும்பகுதியை பிடித்தது. சீனா ஏற்படுத்திய இந்த அச்சத்தின் காரணமாகவே இந்தியா தனது வெளியுறவு கொள்கையை சீனாவை மையமாக கொண்டு வகுத்து வருகிறது என்று சர்வதேச அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இப்போது சீனா இந்தியாவை சுற்றியமுள்ள பர்மா, பங்காளதேசம், பாகிஸ்தான், சிங்கள இலங்கை ஆகிய நாடுகளை தனது கூட்டு நாடுகளாக ஆக்கிக் கொண்டுள்ளது. இலங்கையின் கட்டுப்பாட்டில் இல்லாத தமிழ் ஈழம் 2009 மே வரை சீனவிற்கு அச்சுறுத்தலாகவே இருந்து வந்தது.
இலங்கையின் இனப்படுகொலையில் பங்கேற்றதன் மூலம் இந்தியா தமிழ் ஈழத்தை (எல்டிடியை) விட்டுக் கொடுத்து விட்டது என்றே அரசியல் நிபுணரான பத்ரகுமார் குறிப்பிடுகிறார். மற்ற புகழ் பெற்ற அரசியல் நிபுணர்களான நாடேறி அடிகள் மற்றும் அனில் அத்தாலே ஆகிய இருவரும் சீனாவின் அச்சுறுத்தல் சுற்றி வளைத்து இந்தியாவின் கழுத்தருகே வந்துவிட்டது என்று அடித்துச் சொல்கின்றனர். இது இந்தியா மீது நாட்டுப்பற்றுக் கொண்ட அனைவருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, டெல்லியில் உள்ள அதிகார தரகர்களைத் தவிர.
ஜான் கெர்ரி(அமெரிக்க வெளியுறவின் செனட் குழு) அமெரிக்க-இலங்கை உறவு பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தமிழ் ஈழ (எல்டிடிஈ) சமநிலை இழப்பை வெல்வதை நோக்கமாக கொண்டே அமெரிக்க-இலங்கை உறவுகள் கொள்கை உருவாக்கப்படும் என்றும் சீனாவின் புவிசார் அரசியல் பற்றியும் அதில் தெளிவாக குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது. ஈழத்தின் சமநிலை இழப்பு நேரடியாக அமெரிக்காவை பாதிக்காவிட்டாலும் கூட அமெரிக்கா ஒரு அவசரநிலை உணர்வுடன் இந்த பிரச்சனையை கையாள நினைக்கிறது. ஆனால் இந்த பிரச்சனையில் உண்மையில் ஆர்வம் காட்டவேண்டிய, உரிமைகொண்ட, பங்குகொண்ட இந்தியா பகல்கனவு கண்டவாறு கும்பகர்ணத் தூக்கத்தில் உள்ளது. டெல்லியை சேர்ந்த ‘மும்மூர்த்திகள்‘ தீவிரமாக முயன்று தங்களது அரசியல், பொருளாதாரம் மற்றும் ராஜதந்திரத்தை பயன்படுத்தி இந்த அச்சுறுத்தலை தென்னாட்டு வாசலுக்கு அழைத்து வந்துள்ளனர்.
இந்தியாவின் இந்திய-இலங்கை கொள்கை, ஆழம் தெரியாத அபாயத்தை நோக்கி அர்த்தமில்லாமல் அலைபாய்ந்து வருகிறது. தற்கொலைக்கு சமமான நாராயணின் கொள்கைகள் சீனாவை இதுவரை இல்லாத நெருக்கமான தூரத்திற்கு, இந்தியாவின்/தமிழ்நாட்டு கடற்கரைப்பகுதிக்கு கொண்டு வந்துள்ளது. தமிழர்களுக்கு எதிரான தனது தவறான கருத்தை, குறுகிய நோக்க பிரிவினையை மறைக்கும் வகையில் செயல்பட்ட நாராயணன் தான் இட்டுக்கட்டிய புவிசார் அரசியலை ராஜபக்சேயை “மிதமிஞ்சி மகிழ்விக்கும்“ ராஜதந்திரத்திற்கு உதவும் வகையில் தீட்சித்தின் குறுக்கிடும் புவிசார் அரசியலுக்கு திருப்பினார். தீட்சித்தின் குறுக்கிடும் புவிசார் அரசியல் கொள்கைகளுக்கு 1983ம் ஆண்டு இனக்கலவரங்கள் வழிவகுத்து கொடுத்தன. இதுவே இந்தியா தெற்காசியாவின் வல்லரசு என்ற நிலையில் இருப்பதற்கு சவால் விடுக்கும் சக்திகளுடன் சிங்கள இலங்கை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புகொள்ள உதவியது. மேலும் 1987ம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கும் வழிவகுத்தது. இப்போது தமிழ் ஈழம் என்ற தடை இல்லாத நிலையில் இலங்கையின் ஆதரவுடன் சீனா இந்தியாவின் தெற்காசிய வல்லரசு ஆதிக்கத்தை அடித்து நொறுக்க தயாராகிவிட்டது.
அதேபோல டெல்லி ‘மும்மூர்த்திகளின்‘ புவிசார் அரசியலும் தமிழீத்தின் தடையை தகர்த்து சீனாவின் அச்சுறுத்தலை வீட்டு வாசலுக்கு கொண்டுவர சுறுசுறுப்பாக வேலை செய்தது. சீனா இதனை இலங்கையின் வளர்ச்சிப்பணிகளுக்கான ஒப்பந்தங்களை பெறுகிறேன் என்ற போர்வையில் செய்தது. முக்கியத்துவம் இல்லாத சில ஒப்பந்தங்கள் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டன. சிங்கள இலங்கையில் சீனாவின் திட்டங்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சுறுத்தல்களை சமாளிக்க இந்தியாவுக்கு ராணுவ அடிப்படை வசதிகளை செய்ய ஆகும் செலவுடன் ஒப்பிடுகையில் அங்கு கிடைக்கும் வர்த்தக ரீதியான லாபம் மிகச் சொற்பமே.
கெர்ரியின் அறிக்கையில், இலங்கை தனது லாபத்திற்காக தனது சர்வதேச போட்டியாளர்களிடம் ‘வலுவான பேரம்பேசும் அமைப்பை‘ பயன்படுத்தி தமிழ் ஈழ தடையை போக்குவதில் எவ்வளவு கண்ணும் கருத்துமாக இருந்தது என்பதும் தெளிவுபடுத்தி காட்டப்பட்டுள்ளது. கெர்ரியின் அறிக்கையின்படி தனது கூட்டு நாடுகளுக்கு குறிப்பாக ஜப்பானுக்கு கடல்வழியாக வளங்களை (குறிப்பாக எண்ணெய்) எடுத்துச் செல்வது மற்றும் தேவைப்பட்டால் தலையிடும் ஆற்றல் கொண்டதாகவும் இருந்து தமிழ் ஈழம் இலங்கையில் மூன்றில் இரண்டு பங்கு கடற்பகுதியை கட்டுப்படுத்துவதாக இருந்தது...‘ அடுத்த பின்விளைவு என்னவென்றால் சீனா சிங்கள இலங்கையை கொண்டு இந்தியாவில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும் அபாயமாகும். தமிழ் ஈழத்தை அழித்து அந்த நாடு சீனா பக்கம் சாய்ந்துள்ளது அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதற்கு காரணம் ராஜபக்சே என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், ஆற்றல் அல்லது அச்சுறுத்தலை ஒப்பிட்டுப் பார்க்கையில் சிறிதும் சமநிலையில் இல்லாத இந்தியா, நாராயணன் ‘மும்மூர்த்திகளின்‘ திரைமறைவு வேலைகள் காரணமாக, இலங்கை சீனாவின் பக்கம் சாய்வதை தடுத்து வந்த முக்கிய சக்தியான ஈழத்தை அழித்ததுதான். நாராயணனின் இந்த வினோதமான ‘புவிசார் அரசியல்‘ சோனியா குடும்பத்தை திருப்திப் படுத்துவதாகவே அமைந்தது. உயர் புலனாய்வு திறன் கொண்ட நாராயணன் இலங்கை, இந்தியாவின் பாதுகாப்புக்கான முக்கிய இடமான ஹம்பந்தோட்டாவில் சீனா கால்பதிக்க இடம் கொடுத்ததை கண்கொள்ளாமல் விட்டுவிட்டார். டெல்லியின் ‘மும்மூர்த்திகள்‘ நாட்டு நலனை கருத்தில் கொண்டா அவ்வாறு செய்தார்கள் என்பதை வாசகர்களே புரிந்து கொள்ள வேண்டும். நாராயணன் தமிழர்களுக்கு எதிரானவர் என்பது நன்கு தெரிந்ததே என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். அவருடைய பிரிவினை கருத்துக்ளின் காரணமாகவே மும்பை பாதுகாப்பு மற்றும் தெலுங்கானா தோல்விகள் ஏற்பட்டன.
சீனாவின் செல்வாக்கு தமிழ்நாட்டின் சேது சமுத்திரத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் பயன்களையும் குறைப்பதாகவே அமையும். ராணுவம் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் மன்னார் மற்றும் கச்சத்தீவு உள்ளநிலையில், பாக் நீர்ச்சந்தி வழியாக கப்பல்களை ஹம்பந்தோட்டா கொண்டு செல்ல ஏதுவாக அது சில மணிநேர பயண தூரத்திலேயே உள்ளது. இதன் காரணமாகவே வடக்கு இலங்கையில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதற்கு கூடுதலாக இங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகளிலிருந்து வரக்கூடிய அச்சுறுத்தல்களை முன்கூட்டியே தடுப்பதற்காகவே சிங்கள இலங்கை இவ்வாறு ராணுவத்தை குவித்து வைத்துள்ளது. இலங்கையை மகிழ்வித்துவரும் இந்தியா/தமிழ்நாடு இலங்கைக்கு எதிரியா என்ன? இலங்கையை மகிழ்விப்பதற்காகவே இந்தியா தனது குடிமக்களான தமிழ்நாட்டு மீனவர்களை பாதுகாப்பதைக் கூட கைவிட்டு விட்டது.
புதுடெல்லியில் கொள்கை ஆராய்ச்சிக்கான மையத்தின் வெளியுறவு ஆய்வுகள் பிரிவில் பேராசிரியராக பணியாற்றும் பிரம்ம செலானி அண்மையில் ஒரு முன்னணி பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியில், ராஜீவ் காலத்திலிருந்தே சோனியாவின் குடும்பம் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வந்ததற்கான காரணம் பற்றி அரிய கருத்துக்களை கூறுகிறார். தமிழ்நாடு இன்னொரு காஷ்மீராக உருவாவதை தடுக்கவே டெல்லி ‘மும்மூர்த்திகள்‘ வினோதமான கூட்டணியான கொழும்பு/ டெல்லி/ பீஜிங் கூட்டணி மூலம் சீனாவிற்கு ஒரு கதாபாத்திரத்தை கொடுத்ததாக கூறுகிறார். இந்த டெல்லி மும்மூர்த்திகள் சீனா ஹம்பந்தோட்டா திட்டங்களுக்கு தனது தொழிலாளர்களை (இது தனது போர்வீரர்களை உள்ளே திணிப்பதற்கான மரியாதையான சொல், பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்த சீனா போர் வீரர்களை அனுப்பியுள்ளது) மட்டுமே பயன்படுத்தும் என்ற விதிமுறைகளை கண்டுகொள்ளவில்லை. இந்த கொழும்பு/ டெல்லி/ பீஜிங் கூட்டணி தமிழ்நாட்டை எப்போதுமே கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக செய்யப்பட்டதா?

இந்த தவறான செயல்களால், ஹிமாச்சல பிரதேசத்தின் வழியே உள்ளே நுழைய முயற்சிக்கும் அதேவேளையில், இந்தியாவின் வயிற்றுப்பகுதியில் நுழைய இன்னொரு வாய்ப்பு கிடைப்பதன் மூலம் சீனா மதிப்பிட முடியாத பெரும் பலனை அடைந்துள்ளது. இப்போது தமிழ் ஈழம் என்ற தடை இல்லாத நிலையில், இலங்கை தனது கடற்படையின் மூலம் பாக் நீர்ச்சந்தியில் தமிழக மீனவர்களை அவமானப்படுத்தும் வகையில் தாக்கி வருகிறது. இதன் மூலம் தமிழகம்/ இந்தியாவை அது எச்சரித்து வருகிறது. முப்பது ஆண்டுகளாக தமிழ் ஈழ கடற்படை தமிழக மீனவர்களை பாதுகாத்து, இலங்கை கடற்படைக்கு தடையாக இருந்து வந்தது. இப்படி உருவாகி வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்க தமிழகம்/ இந்தியா தமிழ் ஈழத்திற்கு ஆதரவான கொள்கையை பின்பற்ற வேண்டும். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் இலங்கை ராணுவ ஆற்றல் பெற்ற வெளிநாடுகளுடன் மேற்கொள்ளும் உறவில் இந்தியாவுக்கு சில உரிமைகள் உள்ளன. சீனாவின் செல்வாக்கை மெதுவாக்க அல்லது ஊடுறுவலை திரும்ப பெறச் செய்ய இந்த உரிமைகள் வலுப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் சிங்கள இலங்கையின் மூலம் இந்திய/தமிழக எல்லை ஒரு சிம்ம சொப்பனமாக அமையாமல் இருக்கும்.
2010 பிப்ரவரியில் சாக்(எஸ்ஏஏஜி)-ல் பேராசிரியர் சூர்யநாராயணனின் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் அவர், இந்தியாவின் இருதரப்பு உறவு ஒப்பந்தங்கள் மற்றும் மத்திய மாநில உறவுகள் தமிழகத்தை மையமாக கொண்டு அமையும் என்று கூறியிருந்தார். அவரது கூற்று சரியான தருணத்தில் கூறப்பட்டதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு முறையுமே டெல்லி தனக்கு இழப்பு ஏற்படும் வகையில் சிங்கள இலங்கை அரசை மிதமிஞ்சி மகிழ்விக்க முயன்று வருகிறது. ஸ்ரீமாவோ-சாஸ்திரி ஒப்பந்தத்தின்(1964) கீழாக, இலங்கை 5 லட்சம் தமிழர்களை வெளியேற்றியது என்பதை இந்தியா ஒப்புக்கொண்டது. இந்த ஒப்பந்தம் இந்திய வம்சாவழியான தமிழர்களில் 64 சதவீதம்பேர் உரிமைகளை இழக்கும் வகையில் 11ல் 4 பேர் மட்டுமே இலங்கை குடியுரிமையை பெற வழி செய்தது.
டெல்லி பிரபாகரனை வெறுப்புடன் நடத்திய காரணமாக, இந்திய வம்சாவளி தமிழர்களின் ஒப்பற்ற தலைவரான எஸ். தொண்டமான் ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டப்பட்டார். இந்த ஒப்பந்தம் மலேசியா போன்ற நாடுகள் அங்குள்ள இந்தியர்களை திருப்பி அனுப்பி வைக்க வழி செய்யலாம். ஸ்ரீமாவோ-இந்திரா ஒப்பந்தம் (1974) மூலமாக இந்தியா ராமநாதபுரம் ராஜாவின் ஜாமீனுக்கு உட்பட்ட கச்சத்தீவையும், பாக் நீர்ச்சந்தியில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடிக்கும் உரிமையையும் இலங்கைக்கு தாரை வார்த்தது. கிழக்கு பாகிஸ்தானுக்கு பெரு பாரு பகுதியை வழங்கும் முடிவை டா. பிசி ராய்(மேற்கு வங்க முதல்வர்) தடுத்து நிறுத்தினார். இதனை அடிப்படையாக கொண்டு தமிழக அரசு, கச்சத்தீவை மத்திய அரசு இலங்கைக்கு கொடுத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் சட்ட நிவாரணம் கோரலாம். சிங்கள இலங்கையுடன் கொண்டிருக்கும் சந்தேகத்திற்கிடமான நட்புக்காக, ‘தொலைவில்‘ இருக்கும் டெல்லி தமிழகத்தில் நிலவும் கசப்புணர்வை அலட்சியப்படுத்தி, அதன் நலன்களை தாராளமாக விட்டுக் கொடுத்து வருகிறது. இந்திய கூட்டாட்சியின் அரசியலமைப்பு அமெரிக்காவின் வெளியுறவு குழுவிற்கு இணையானதாக இல்லை. தான்தோன்றித்தனமான இந்திய வெளியுறவுக் கொள்கை பற்றி யாரும் சம்பந்தப்பட்ட மாநிலங்களை அழைத்து விவாதம் செய்வதும் இல்லை, அதனை சமநிலைப்படுத்துவதும் இல்லை. இதுவே அமெரிக்காவில் நடைபெறுவதாக இருந்தால், வெளியுறவு நியமனங்களை கட்டுப்படுத்தும் வெளியுறவுக் குழு, மத்திய-மாநில அரசியலை தங்கள் விருப்பத்திற்கு வளைத்து தமிழகத்தை புண்படுத்தி இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ள நாராயணன் ‘மும்மூர்த்திகளின்‘ தகிடுதத்த வேலைகள் அரங்கேற அனுமதித்திருக்காது.

No comments:

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...