Saturday, September 3, 2011

இந்த நிலையும் மாறிவிடும்

ஒரு பேரரசன் ஒருநாள் கண்ணாடியின் முன்பாக நின்று தலைவாரிக் கொண்டிருந்தான். அப்போது உச்சந்தலையில் ஒரு முடி நரைத்திருந்தது தெரிந்தது. தனக்கு வயதாகி விட்டது என்று அறிந்த அவன் கவலைப்பட ஆரம்பித்தான். ஏனெனில் அவனுக்கு வாரிசு என்று சொல்லிக்கொள்ள யாருமில்லை. அதோடு சுற்றியுள்ள சிற்றரசர்கள் அவனை வீழ்த்த தக்க தருணம் பார்த்து காத்திருந்தார்கள்.

கவலை அதிகமாக அதிகமாக மந்திரி சபையை கூட்டினான். கூடிய மந்திரிகளிடம், எதிரிகளால் தனக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டால் என்ன செய்வது? அதற்கு தகுந்த யோசனை சொல்லுங்கள் என்று கேட்டான்.

அவர்கள் ஒவ்வொருவரும் கோட்டையை வலுப்படுத்துவது முதல் படையை பெருக்குவது என பல ஆலோசனைகளை கூறினர். ஆனால் மன்னனால் அவற்றை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அப்போது வயதில் மூத்த ஒரு அமைச்சர் சொன்னார், ‘மன்னா நான் ஒரு ஆலோசனை சொல்வேன். ஆனால் நீங்கள் நிபந்தனைக்கு கட்டுப்பட வேண்டும்‘ என்றார்.

என்ன சொல்லுங்கள் என்றார் மன்னன். நான் ஒரு ஆலோசனையை ஒரு ஓலையில் எழுதித் தருவேன். ஆனால் நீங்கள் அதனை இப்போது பார்க்கக் கூடாது. உங்களுக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்படும்போது மட்டுமே அதனை பார்க்க வேண்டும் என்று அந்த அனுபவம் வாய்ந்த மந்திரி சொன்னார். மன்னன் அதனை ஏற்றுக்கொள்ள, அந்த ஓலை மன்னனின் மோதிரத்தில் அடைக்கப்பட்டது.


காலங்கள் கடந்தன. மன்னனின் அச்சம் உண்மையானது. எதிரி நாட்டு மன்னர்கள் ஒன்று திரண்டு போர் தொடுத்தனர். போரில் தோல்வி பெற, மன்னன் தப்பி ஓடும் நிலை ஏற்பட்டது. மன்னன் தனது குதிரையில் தப்பி அருகேயுள்ள காட்டுப்பகுதிக்கு செல்கிறார். எதிரியின் வீரர்கள் துரத்தி வருகின்றனர்.


மன்னன் காட்டிலிருந்து மலைப்பகுதிக்கு குதிரையில் செல்கிறார். குறுகலான இருந்த அந்த பாதை திடீரென்று முடிந்து விடுகிறது. கீழே அதலபாதாளம். விழுந்தால் அதோ கதிதான். என்ன செய்வது? ஒன்றும் புரியவில்லை. மந்திரியின் ஆலோசனை நினைவுக்கு வருகிறது. உடனே மன்னன் மோதிரத்தை திறந்து பார்க்கிறான். அதில், இந்த நிலைமையும் மாறிவிடும் என்று இருக்கிறது. அது எப்படி என்று கேட்டவாறு மன்னன் கீழே இருந்த பள்ளத் தாக்கை பார்க்கிறான்.

அந்த பள்ளத்தாக்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. நமது நாட்டிற்குள்ளாகவே இப்படியொரு காடு இருக்க நாம் இதுநாள் வரையில் பார்க்காமல் இருந்துவிட்டோமே? என்று மன்னன் சிந்தனையில் ஆழ்ந்தான்.

இதற்கிடையில் மன்னனை துரத்தி வந்த எதிரிநாட்டு வீரர்கள் வழிமாறி சென்றுவிட்டனர். அதன் பின் காட்டுக்குள் சென்ற மன்னன் அங்குள்ள மக்களோடு மக்களாக மாறி சிறிது சிறிதாக படை திரட்டுகிறான். ஓரிரு ஆண்டுகளுக்குள் பெரும் படையை திரட்டி விடுகிறான்.

அந்த படையுன் உதவியுடன் தன் நாட்டின் மீது போர் தொடுத்து நாட்டை மீட்கிறான். மீண்டும் நாட்டை மீட்ட மன்னனை வரவேற்க நகரமே விழாக்கோலம் பூணுகிறது. பாதையின் இருபுறமும் மக்கள் வெள்ளமாக திரண்டு இருக்கிறார்கள். மன்னன் மாலை மரியாதை, வெற்றிக் கோஷங்களுடன் வரவேற்கப்படுகிறார். அப்போது மன்னனின் மனதில் அகந்தை பிறக்கிறது. என்னை வெல்ல முடியுமா என்ற எண்ணம் அவனது மனதில் தோன்றுகிறது.

அப்போது சூரிய ஒளி குதிரையின் கடிவாளத்தை பிடித்திருந்த அவனது கை மோதிரத்தில் பட்டு பிரதிபலிக்கிறது. உடனே அந்த மோதிரத்தில் உள்ள வாசகம் நினைவுக்கு வருகிறது. இந்த நிலையும் மாறிவிடும். அகந்தை தெளிய மன்னன் தனக்குள் புன்னகைத்துக் கொள்கிறான்.

(ஓஷோவின் குட்டிக் கதைகளிலிருந்து)