Tuesday, October 4, 2011

சாதிப் பிரச்சனைக்கு தீர்வுண்டா?பண்புடன் குழுமத்தில் நடைபெற்ற சாதிப்பிரச்சனைக்கு தீர்வு உண்டா என்று நடைபெற்ற விவாதத்தின் அடிப்படையில் இந்த கட்டுரையை எழுதுகிறேன். உலகில் இந்தியாவை தவிர ஏனைய பகுதிகளில் சாதி என்ற அமைப்பு இல்லாவிட்டாலும் கூட மனிதர்கள் சிறு குழுக்களாக இருப்பதும் அவர்கள் தங்களிடையே வேற்றுமை பாராட்டி வருவதும் நடப்பில் உள்ளது. நடைபெற்ற விவாதத்தில் படித்தவர்கள் மத்தியிலும் சாதி உணர்வு உள்ளது, எனவே இந்த உணர்வை ஒழிக்க முடியாது என்று பாதிக்கும் மேற்பட்டோர் வாதிட்டனர். சாதி பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக இருப்பதால் அது ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று என்று மறுபாதியினர் குறிப்பிட்டனர். இதனை ஒழிக்க கட்டாய முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சிலர் கூறினர்.

இந்த பிரச்சனையை ஆழமாக புரிந்துகொள்ளும் நோக்கில் இதுபற்றி ஆராய்வோம்.

சாதி வலுவான சமூக கட்டமைப்பு

சாதி என்பது ஒரு பிரச்சனைக்குரிய அமைப்பாக இருந்தாலும், இது வலுவான சமூக, அரசியல், பொருளாதார கட்டமைப்பாக உள்ளது. ஒரு சாதியில் இருப்பவர் சமூக அந்தஸ்து என்று வரும்போது அவர் தனது சாதியை சேர்ந்தவரையும் எடைபோட்டுத்தான் பார்க்கிறார். அதேவேளையில் மாற்று சாதியினருடன் ஒப்பிடும்போது அவர் தன் சாதியினரை கண்மூடித்தனமாக நம்புகிறார். சமுதாயத்தின் அடிப்படை கட்டமைப்பான திருமணம் சாதி அடிப்படையிலேயே நடைபெறுகிறது. குடும்ப விழாக்கள் முற்கொண்டு குழந்தை பிறப்பு, காதணி விழா, பூப்புனித நீராட்டு, இறப்பு என சமூக விழாக்கள் அனைத்தும் சாதிக்கட்டமைப்புக்குள்தான் நடைபெறுகிறது. எனவே இதுபோன்ற ஒரு வலுவான கட்டமைப்பை ஒழிப்பது என்பது இயலாத காரியம், மாறாக இது நல்ல ஒரு அமைப்பே என்று சிலர் கருத்து தெரிவித்தனர்.

உண்மைதான் சாதி சமூகத்தின் ஆணிவேராக இருந்து சமூகத்திற்கான ஒரு அடிப்படை அமைப்பாக இருந்து வருகிறது. இதனை ஒழிப்பது என்பது இயலாத காரியமே. அதேவேளையில் இதில் உள்ள குறைபாடுகளை களைய முயற்சி செய்தால் அது தவறு இல்லையே? உதாரணமாக இதே சாதி அமைப்புதான் காதல் திருமணங்களை எதிர்க்கிறது. காதல் திருமணங்களை எதிர்ப்பது என்பது மனித இனத்திற்கு எதிரான செயல் அல்லவா?

பொருளாதார கட்டமைப்பு

அதேபோல சாதி நிதியுதவியிலும் ஒரு உதவிகரமான அமைப்பு என்று கூறப்படுகிறது. இதற்கு உதாரணமாக குடும்ப விழாக்களில் அளிக்கப்படும் மொய்-அன்பளிப்பு நிதி உதவியை கூறலாம். அதே போல ஒருவருக்கு நெருக்கடி ஏற்படும்போது, ஒருவர் தன் தொழிலில் நஷ்டத்தை அடைந்து தோல்வியை சந்திக்கும்போது, அவரது உறவினர்கள் அவனுக்கு ஊக்கமளித்து வேண்டிய நிதி உதவியை செய்கின்றனர். வியாபாரத்தில் வளர்ச்சி பெற உதவுகின்றனர். மார்வாடி சாதியினர் தங்களது சாதி நபர் ஒருவர் தொழிலில் பலமுறை தோல்விபெற்றாலும் மீண்டும் மீண்டும் பொருளுதவி செய்து அவரை கைதூக்கி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் மற்ற பிரச்சனைகள் வந்தாலும் உடனே ஓடிவருவது ஒருவரின் சாதிசனம்தான் என்று கூறப்படுகிறது.

அதேவேளையில் நொடித்துப்போன ஒருவனை கைவிடுவதும் இந்த சாதிதான் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பணம் இல்லாதவனை சமமாக நடத்தாததும் இந்த சாதிதான். பொருள் இருந்தால் சாதிசனம் தன்னால் வரும் என்பார்களே?

அரசியல் சக்தி
சாதி அமைப்புக்கு மக்களிடையே உள்ள நம்பிக்கைதான் சாதி அரசியல், வாக்கு வங்கி அரசியலுக்கு வழிவகுத்துள்ளது. ஒரு சாதி வாக்கு என்பது மொத்தமாக கிடைக்கும் வாக்கு என்றே கருதப்படுகிறது. இதனை சரியாக புரிந்து வைத்துள்ள அரசியல் கட்சிகள் சாதிகளிடையே பிரிவினையை வளர்த்து அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றன. இந்த அரசியல் கட்சிகள் சாதிகளிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு மாறாக சாதிகளிடையே பகைமையை வளர்த்து வருகின்றன. இந்த நிலையில் சாதிகள் ஒன்றின் மீது ஒன்று நம்பிக்கை இல்லாத நிலையிலேயே இருந்து வருகின்றன. அதேபோல சாதிகளால் தனிப்பட்ட முறையில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என்பதும் உண்மையே. சாதி ஆதரவு இல்லாமல் ஆட்சியை பிடிப்பதும் என்பதும் முடியாது என்பதும் உண்மையாகவே தெரிகிறது. எனவேதான் நாளுக்குநாள் சாதி அரசியலும் சாதி கட்சிகளும் பெருகி வருகின்றன.


சாதிச் சமநிலை
இந்தியாவில் நிலவும் தீண்டாமை சாதியை அடிப்படையாக கொண்டது. இதனால் தீண்டாமையை ஒழிக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இருந்தாலும் சாதி மட்டும் ஒழிந்தபாடில்லை. இதற்கு இன்னொரு காரணம் சாதிகளை மேம்படுத்த பொருளாதார ரீதியில் பின்னடைந்துள்ள பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர் என்ற அடிப்படையில் சாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது ஆகும்.

இட ஒதுக்கீடு வழங்க ஒருவரின் சாதியை அறிந்து கொள்வது அவசியம் என்ற நிலையில் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்படும்போதே சாதி கேட்கப்படுகிறது. இது அவர்கள் பெறும் கல்விச சான்றிதழிலும் குறிக்கப்படுகிறது. இது தொழுவத்தில் கன்றுகளை அடையாளம் காண சூட்டுக்கோலால் அடையாளம் இடுவதைப்போல உள்ளது. சான்றிதழில் சாதியை குறிப்பிடுவதை நிறுத்திவிட்டால் சாதி மறைந்துவிடும் என்றும், ஆனால் சான்றிதழில் சாதி குறிப்பிடுவதை நிறுத்திவிட்டால் மட்டும் சாதி மறைந்து விடாது என்று பலரும் வாதம் செய்தனர். இது உண்மைதான்.

ஆனால் சான்றிதழில் சாதி குறிப்பிடுவது நிறுத்தப்பட்டால் அதன் ஆணிவேரை அறுப்பது போன்றதாகும். அதேவேளையில் இட ஒதுக்கீட்டை எப்படி அளிப்பது என்ற பற்றிய கேள்வியும் எழுகிறது. இட ஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும்போது அது அனைத்து தாழ்ந்த நிலையில் உள்ள குடும்பங்களுக்கும் உதவும்.  

இட ஒதுக்கீட்டு முறையின் தோல்வி

நாடு விடுதலை பெற்று 65 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த இந்த 65 ஆண்டுகள் நீண்ட காலமாகும். இந்த காலத்தை வைத்துப் பார்த்தால் நம்நாட்டில் உள்ள இட ஒதுக்கீட்டுக் கொள்கை தோல்வி பெற்றுவிட்டது என்றே கூறவேண்டும். ஏனெனில் ஒதுக்கீடு வழங்கப்படும் தலித் மக்களின் வாழ்க்கையில் பெரிதும் முன்னேற்றம் ஏற்பட்டுவிடவில்லை. இன்னும் பல சாதிகள் தங்களை ஒதுக்கீட்டுப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரி வருகின்றன. இவ்வாறு அண்மையில் போராடிய சாதியினர்தான் ராஜஸ்தானை சேர்ந்த குஜ்ஜார் சாதியினர்.

இவர்களது கோரிக்கை தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏன் சாதிகளின் பட்டியல் குறையாமல் அதிகரிக்கிறது என்று கேட்டனர். மேலும் சாதிகள் குறையாதபட்சத்தில் இட ஒதுக்கீட்டால் பயனில்லை என்றுதானே அர்த்தம் என்று அவர்கள் கேட்டனர். ஆனால் அரசாங்க வழக்கறிஞர்களால் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலவில்லை.

எனவே இட ஒதுக்கீட்டை விட்டு விட்டு சாதிகளை முன்னேற்ற சரியான பொருளாதார கொள்கையை உருவாக்க வேண்டும். மேலும் சாதி அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டு பொருளாதார குழுக்களை அமைக்க வேண்டும். இந்த குழுக்கள் மாற்றுச் சாதி குழுக்களுடன் இணைந்து தொழில் தொடர்புகள், வியாபார வாய்ப்புகள் போன்றவற்றை உருவாக்கித் தரவேண்டும். பொருளாதார முன்னேற்றமே சாதி முன்னேற்றத்தை தருவதாக அமையும். ஆனால் இதனை செய்ய சாதி அமைப்புகளோ, கட்சிகளோ, அரசாங்கமோ செய்யத் தயாராக இல்லை என்பதுதான் உண்மை.           

இட ஒதுக்கீட்டு முறையை நம்பியே ஏராளமான படித்த தலித் இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை வீணாக்கிக் கொள்கின்றனர் அவர்கள் மத்தியில் வர்த்தகத்தில் ஈடுபடுவது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கித் தரவேண்டும். பொருளாதார முன்னேற்றம் அடைந்து விட்டாலே ஓரளவு சாதிச் சமநிலை அடைந்து விட்டது என்று கூறலாம்.

சாதி வன்முறை
எல்லாச் சாதிகளிலும் பண்பாளர்களும் சில்லறைகளும் உள்ளன. இந்த சில்லறைகள்தான் தங்களது சாதி வெறியை ஊட்டி அதனை வளர்த்து வருபவர்கள். சாதி அரசியல் நடத்துபவர்களுக்கும் இவர்களே தேவை. எதுவும் சொன்னால் தாங்கள் ஒதுக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் பண்பாளர்கள் இவர்களை செய்வதை கண்டு கொள்வதில்லை. இதுவே சில்லறைகளுக்கு ஊக்கமாக அமைகிறது. இது இன்று பள்ளி கல்லூரி மாணவர்களிடமும் பரவியுள்ளது என்பது மிகவும் கொடுமையான விஷயம். இதனை போக்க சாதி பொருளாதாரக் குழுவை அமைப்பது போல சாதி நல்லிணக்க குழுக்களை அமைக்க வேண்டும். இந்தக் குழு பிரச்சனை ஏற்படும் பகுதிகளில் உருவாகும் சிறு பிரச்சனைகளை கண்டறிந்து உடனடியாக அவற்றை போக்க வேண்டும்.

உதாரணமாக குருபூஜை விஷயத்தில் தேவர் மற்றும் தலித் மக்கள் ஏற்படும் வன்முறை சில்லறைகள் காரணமாகவே ஏற்படுகிறது. இரு தரப்பினரும் தாங்கள் செல்லும் வழிகளில் உள்ள மாற்றுச் சாதியினரை ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொள்கின்றனர். சாதி நல்லிணக்கக் குழு இருந்தால் வழியில் உள்ள கிராமங்களை கண்காணித்து பிரச்சனைகளை போக்கிவிடலாம். நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒருவருக் கொருவர் உதவி செய்யலாம். உதாரணமாக மும்பையில வாழும் சீக்கியர் இந்துக்களின் பண்டிகை காலத்தில் சாலையில் ஊர்வலமாக செல்பவர்களுக்கு குளிர்பானம் வழங்குவதை குறிப்பிடலாம். இதனை சாதிச் சங்கங்கள், சாதிக் கட்சிகள், அரசாங்கம் செயல்படுத்த முன்வரலாம். இதனை ஒரு நீண்டகால திட்டமாக செயல்படுத்தினால் வெற்றி நிச்சயம்.

சாதி வலிமையை ஆற்றலாக மாற்றலாம்
சாதி பிரச்சனை தீர்க்க முடியாதது போல தோன்றினாலும் முயற்சி செய்தால் காலப்போக்கில் இதனை போக்கிவிடலாம். அதற்கு தேவை சாதி ஒழிப்பு அல்ல. சாதியின் சக்தியை ஆற்றலாக மாற்றுவதாகும். காட்டாற்று வெள்ளத்திலிருந்து மின்சாரம் தயாரிப்பது போல சாதியின் சக்தியை ஆக்கப்பூர்வமான ஆற்றலாக மாற்றிவிடலாம். அவ்வாறு மாற்றப்படும் பட்சத்தில் நிச்சயம் சாதி வெறி தணிந்து அது உதவிகரமான அமைப்பாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.    

கடுமையான நடவடிக்கைகள்
சாதியை ஒழிக்க வேண்டும் என்ற துணிச்சலான முடிவை அரசாங்கம் எடுத்தால் சில கடுமையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம். சாதியை தக்க வைத்துக் கொள்ள விரும்புபவர்களுக்கு தனியான கட்டணச் சான்றிதழ் மற்றும் சாதி வரி, சாதி திருமண வரி, கூடுதல் வரிகள் விதித்தல் போன்றவற்றை விதிக்கலாம். சாதிகளை தக்க வைத்துள்ளவர்களிடம் வேலை, வர்த்தகம், அனுமதி போன்ற அனைத்து நடவடிக்கைகளிலும் பின்தள்ளப்படுவது. இது காலப்போக்கில் சாதி வெறியை குறைப்பதாக அமையலாம். இருந்தாலும் இதுபோன்ற நடவடிக்கைகள் மக்களிடையே அதிருப்தியையே ஏற்படுத்தும்.

3 comments:

Tamilppannai said...
This comment has been removed by the author.
Tamilppannai said...

(ஜாதியை)சாதியை பற்றி இவ்வளவு விரிவாக பேசும் நீங்கள் அது எங்கேயிருந்து வந்தது என்றோ அதன் உண்மையான பொருள்(அர்த்தம்) தமிழ் பொருள் யாது என்றோ விளக்காதது சாதியைப்பற்றிய சரியான புரிதல் இல்லை என்பதையேதான் காட்டுகிறது!..........குரங்குகளில் பலவகைகள் இருக்கும் போது அதையெல்லாம் வெறுமனே குரங்குகள் என்று அழையாமல் ஏன் உர்ரான்குட்டான் குரங்கு, சிங்கவால் குரங்கு,கருங்குரங்கு,..........எனப்பலப்பல பெயரிட்டு மனிதர்கள் அழைக்கின்றனர்?...........அவையனைத்தும் பல (ஜாதியா)சாதியா?.................உங்களின் பார்வையில் அவையனைத்தும் ஒரெ குடும்பமாக இருக்கவேண்டும்/இருக்கமுடியும் என்பது உங்களின் வாதமா?...............விடை! அவையனைத்தும் ஒரே இனமாக இருப்பினும் வேறு வேறு பிரிவாகத்தான்/குழுக்களாகத்தான்/சாதியாகத்தான்(ஜாதியாகத்தான்) இருக்கும் ஏனெனில் அவை ஒவ்வொன்றின் தன்மைகளும் குணங்களும் மாறுபடுவதன் காரணமாகத்தான் ஆனாலும் அவைகளுள்ளும் சில பொது பண்புகளும் இருக்கத்தான் செய்கிறது!............குரங்கிலிருந்து மருவிய மனிதனுக்கும் இது பொருந்தும்!...............

rdj said...

Divide the entire people by( beyond caste, religion) economically to get the economic benefits for improve their livelihood.For example Below poverty line, (BPL)Lower middle class (LMC)Upper middle class (UMC), Developing People in Business (DPB)and Developed people in Business(DPB).Let the people keep their caste for within them for marriage,religion, festivals extra.No body will hurt each other in the name of caste then it will be punishable by law very seriously.We made the caste systems by some of our selfish people who wants to rule them by divide in the name of caste.To prove the superiority to some one simply by because of personal ego.People did their job agar ding to there capacity by generations by generations.When competition starts and people get educated they came to know that they were exploited by the systems in the works by the name of caste with help of and in the name of religion.

When they agitated against systems they were punished by the untouchable way by the name of religion.We know the history how the Christianize comes in India and the conversion starts,

The best way for real understanding of the life in to day world every one must study BUDDHA.
PLEASE VIST.www.vridhamma.org

Thanks with best regards
BRDRR