Thursday, October 27, 2011

அடிமை இந்தியா - ஓஷோ

இந்தியா இரண்டாயிரம் ஆண்டுகளாக அடிமையாக இருந்து வந்தது. முதலாளிகள் மாறிக்கொண்டே வந்தனர். ஆனால் அடிமைகள் மாறாமல் இருந்தனர். என் குடும்பம் முழுவதுமே சுதந்திரத்திற்காக போராடியது. எல்லாருமே தண்டிக்கப்பட்டனர்,சிறையிலடைக்கப்பட்டனர். நான் வயதில் மிகச் சிறியவனாக இருந்த காரணத்தால் நான் என் சித்தப்பா, அப்பாவுடன் இணைந்து போராடினேன். அவர்களிடம் ஒரு சிறு விஷயத்தை சொல்வேன், “உங்களால் ஒரு சிறு விஷயத்தை புரிந்துகொள்ள முடியவில்லையா?இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒரு நாட்டை சிறு நாடுகள் கைப்பற்றி ஆட்சி செய்ய முடியுமா? இந்த நாட்டை ஒரு நாடு என்று கூட சொல்ல முடியாது. இதனை கண்டம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் ஐரோப்பா முழுவதையுமே இந்த நாட்டிற்குள் அடக்கி விடலாம். இங்கிலாந்தை சொன்னால் அது இந்தியாவின் ஒரு பெரிய மாவட்டத்தை விட பெரியதாக இருக்காது. அது மட்டுமல்ல... முகலாயர்கள் வந்தார்கள். துருக்கியர் வந்தனர். மங்கோலியர் வந்தனர். ஹூனர்கள் வந்தனர். இந்த நாடு யாருக்கு வேண்டுமானாலும் அடிபணிந்து அடிமையாக தயாராக இருந்தது.

எனது கருத்து என்னவென்றால், ஆட்சியாள வந்தவர்களுடன் சண்டையிடுவது பற்றியது அல்ல. உண்மையான கேள்வி என்னவென்றால், யார் அடிமையாவது என்று உங்களுக்குள் நடைபெறும் சண்டையைப் பற்றியதாகும். இல்லையென்றால் இது சாத்தியமே இல்லை. எப்படி ஒரு சிறு கூட்டத்தினர் வந்து நாடு முழுவதையும் ஆட்சி செய்ய முடியும்? நிச்சயமாக ஒவ்வொருவரின் உடலுக்குள்ளும் ஒரு அடிமை மறைந்திருக்க வேண்டும்.

இதை நீங்கள் இன்றும் கூட பார்க்கலாம். சுதந்திரம் பெற்று நாற்பது ஆண்டுகளுக்கு பின்னரும் கூட (இந்தப் புத்தகம் 24 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது) நீங்கள் என்ன பெற்று விட்டீர்கள்? இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் சீனா தாக்குதல் நடத்தியது. முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு அளவுகடந்து துயரப்பட்டார். அனுப்பப்பட்ட ராணுவம் தோற்கடிக்கப்பட்டது. சீனா அழகிய இமயமலைப் பகுதியில் ஆயிரக்கணக்கான மைல்களை கைப்பற்றியது. இந்தியா தோற்கடிக்கப்பட்ட பின்னர் நேரு, "அந்த நிலம் பயனற்றது. அங்கே புல் கூட முளைக்காது." என்று சொன்னார். அப்புறம் எதற்காக ராணுவத்தை அனுப்ப வேண்டும்? வீணாக கொல்லப்படுவதற்கா? அல்லது புல் கூட முளைக்காத ஒரு நிலத்தை பாதுகாக்கவா?

அதற்குப் பின்னால், எந்தவொரு ஜனாதிபதியும், பிரதமரும் அதைப் பற்றிப் பேசக்கூட இல்லை. அல்லது 'அந்த ஆயிரக்கணக்கான மைல் அழகிய இமயமலை என்ன ஆனது?எப்போது அதை திருப்பித் தரப்போகிறீர்கள்?' என்று கூட கேட்கவும் இல்லை.

பாகிஸ்தான் காஷ்மீரின் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டது. இந்திய ராணுவத்தின் தளபதியாக இருந்தவர் சௌத்ரி. அவரது மனைவி என்னிடமும் எனது கருத்துக்களிலும் அதிக பற்றுக் கொண்டவர். உண்மையில் நடந்தது என்னவென்று அவர் என்னிடம் சொன்னார். தளபதி சௌத்ரி சூரியோதயத்திற்கு முன்னரே, அதாவது பாகிஸ்தான் ராணுவம் கண்விழிக்கும் முன்னரே தாக்குதலை நடத்த தயாராக இருந்தார். அவரது யுக்தி சரியானதாகவே இருந்தது. 'நாம் பாகிஸ்தான் பிடித்துக்கொண்ட நமது பகுதியை மட்டுமே மீட்கக் கூடாது. மிக அருகேயுள்ள லாகூரையும் பிடித்துக் கொள்ள வேண்டும்' என்று அவர் சொன்னார்.

அப்போதுதான் பேச்சுவார்த்தை என்று வந்தால் நமது கை ஓங்கி இருக்கும். 'நாங்கள் லாகூரைத் தருகிறோம். நீங்கள் எங்களது பகுதிகளை கொடுங்கள் என்று கேட்கலாம்.'இல்லாவிட்டால் நீங்கள் எப்படி பேச்சுவார்த்தை நடத்துவீர்கள்? எதற்காக நடத்துவீர்கள்?நீங்கள் எதையும் கொடுக்காமல் வெறுமனே எதையாவது கேட்பீர்களா? நாற்பது ஆண்டுகளாக இந்தியா தொடர்ந்து கேட்டுக் கொண்டே வருகிறது. 'நீங்கள் பிடித்த பாகங்களை திருப்பி கொடுத்து விடுங்கள்' என்று. அவர்கள் அதனை திருப்பித் தராமல் காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதி என்று அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தி விட்டனர். இப்போது அது கைப்பற்றப்பட்ட பகுதி அல்ல. இந்தியத் தலைவர்கள் அமைதியாகவே உள்ளனர். யாருமே எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

தளபதி சௌத்ரி தொடர்ந்து போன் செய்து, “என்னை முன்னேறிப் போக விடுங்கள்“ என்று கேட்டார். ஆனால் நேருவாலும் அவரது அமைச்சரவையாலும் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. "நீங்கள் சூரியோதயம் வரை காத்திருக்க வேண்டும்" என்று சொன்னார்கள். ஆனால் உண்மையைக் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். அவர் சூரியோதயம் வரை காத்திருந்தாரானால், காஷ்மீர் முழுவதும் பாகிஸ்தான் வசம் போயிருக்கும்.

அவர் அது வரை காத்திருக்கவில்லை. அவர் உண்மையில் ஒரு தைரியமானவராக இருந்தார். ஆனால் அவர்கள் பிரதமரின் உத்தரவைத் தராமல் அவரை சூரியன் உதயமாவதற்கு சற்று முன்னர் வரை காத்திருக்கச் செய்தனர். அவரது தைரியத்தின் காரணத்தால் பாகிஸ்தானால் ஒரு சிறு பகுதியை மட்டுமே பிடிக்க முடிந்தது. ஆனால் அது மிகவும் அழகிய பகுதியாகும். ராணுவ அறிவியலைப் பொறுத்தவரை அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். ஏனெனில் அந்த சிறு பகுதி பாகிஸ்தான் சீனாவுடன் இணைய வழி செய்கிறது. அந்தப் பகுதி இல்லாவிட்டால் பாகிஸ்தான் - சீனா நாடுகளின் எல்லைகள் தனித்தனியாக இருந்திருக்கும். பாகிஸ்தான் அந்தப் பகுதியை எடுத்துக் கொண்டது. இப்போது சீனா, லாகூர் வரை ஆயிரக்கணக்கான மைல் நீளம் கொண்ட சூப்பர் ஹைவேயை நிர்மாணித்துள்ளது. இரண்டு நாடுகளுமே இந்தியாவுக்கு எதிரிகள். இப்போது ஒன்று சேர்ந்து விட்டன.

"என்னை முன்னேற அனுமதியுங்கள். பாகிஸ்தான் அந்தப் பகுதி மீதே தன் கவனத்தை வைத்துள்ளது என்ற காரணத்தால், அந்தப் பகுதியை விட்டுவிடுங்கள். அவர்கள் அந்த பகுதியை எடுத்துக் கொள்ளட்டும். நேரத்தை வீணடிக்காதீர். என்னை முன்னேறிச் செல்ல விடுங்கள். நான் அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நகரமான லாகூரை பிடித்து விடுவேன்." என்று சௌத்ரி வற்புறுத்தினார். லாகூர் பதினைந்து மைல் தூரத்தில்தான் இருந்தது. சில நிமிடங்களில் வேலை முடிந்து விடும். ஆனால் அமைச்சரவை கூடிப்பேசியது... பேசியது.... கூடிப்பேசுவதைப் பொருத்தவரை இந்த நாடு மிகவும் புத்திசாலியானது. பல நூற்றாண்டுகளாக இந்த நாடு எதையும் செய்யாமல் எல்லாத்தையுமே பேசிக்கொண்டே வந்திருக்கிறது.

சௌத்ரி லாகூரை பிடிக்கப் போகிறார் என்பதை அவர்கள் அறிந்ததும், அவர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்? "உத்தரவு இல்லாமல் அப்படிச் செய்ய நீங்கள் யார்?" என்று கேட்டார்கள். அவருக்கு தண்டனை கொடுத்தனர். முன்னதாகவே ஓய்வு பெறச் செய்தனர். "லாகூரை பிடிக்க விட்டிருந்தால், காஷ்மீர் பிரச்சனைக்கு உடனடித் தீர்வு கண்டிருக்க முடியும். பாகிஸ்தான் லாகூரை விட்டுக் கொடுக்கத் தயாராக இருந்திருக்காது. ஏனெனில் லாகூர் நம்மை ஆஃப்கானிஸ்தான்- சோவியத் யூனியனுடன் இணைக்கிறது" என்று அவரது மனைவி என்னிடம் சொன்னார்.

சோவியத் யூனியனுடன் சாலை, ரயில் போக்குவரத்தின் மூலம் இந்தியா இணையும் அபாயத்தை பாகிஸ்தான் கையிலெடுக்காது என்ற தனது கருத்தில் சௌத்ரி உறுதியாக இருந்தார். எனவே அவர்கள் தங்களது நிலையிலிருந்து மாறி பேச்சுவார்த்தைக்கு வரலாம். "நாங்கள் பிடித்ததை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிடித்ததை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்" என்று சொல்லியிருப்பார்கள்.

அடிமையாக இருக்க இந்த நாடு இரண்டாயிரம் ஆண்டுகளாக பாடம் கற்று வருகிறது. எனவேதான் சுதந்திரமடைந்து நாற்பது ஆண்டுகள் ஆகியும், சுதந்திரம் என்ற வார்த்தை அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கிறதே தவிர அதனை எங்கேயும் பார்க்க முடியவில்லை. இல்லையெனறால், நான் ஒரு சர்ச்சைக்குரியவன் என்ற ஒரே காரணத்திற்காக, என்னைத் தடுக்க ஒரு போலீஸ் கமிஷனருக்கு எவ்வாறு துணிச்சல் வரும்? இன்னும் முப்பது நிமிடங்களுக்குள் பூனாவை விட்டு வெளியேறு என்று சொல்ல முடியும்?

எனக்கு ஒன்றை மட்டும் சொல்லுங்கள். உலகம் முழுவதும் ஏதாவது முக்கியத்துவம் பெற்ற ஒருவர் சர்ச்சை இல்லாமல் இருக்கிறாரா? ஏசு சர்ச்சைக்குரியவராக இருக்கவில்லையா?அவர் தனது தந்தையுடன் தச்சு வேலை மட்டும் செய்து வந்திருந்தார் என்றால் அவரை யாரும் சிலுவையில் அறைந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் அவரது தந்தையை சிலுவையில் ஏற்றவில்லை.

புத்தர் சர்ச்சைக்குரியவராக இருக்கவில்லையா? ஆனால் எந்த அரசராவது அவருக்கு எதிராக ஆணை பிறப்பித்தாரா? அவருடைய காலத்தில் இந்தியா இரண்டாயிரம் அரசர்களால் ஆளப்பட்டது. அவர் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு தடையில்லாமல் சென்று வந்தார். அவர் விசாவோ பாஸ்போர்ட்டோ கூட பெறவில்லை. கௌதம புத்தரை விட சர்ச்சைக்குரிய நபர் யாருமே இருக்க முடியாது. ஏனென்றால் அவர் இந்து மதத்தின் ஆணிவேரான வேதங்களுக்கு எதிராக பேசினார். அவர் பூசாரிகளாகவும் இந்துக்களுக்கு சட்டத்தை உருவாக்கி கொடுப்பவர்களாகவும் இருந்த வந்த பார்ப்பன‌ர்களுக்கு எதிராகப் பேசினார். இருந்தும் கூட அவர் ஒரு சர்ச்சைக்குரிய நபர் என்ற ஒரே காரணத்திற்காக அவரை யாரும் தடுக்கவில்லை.

நாம் அப்படி ஒரு அடிமைகளாகிவிட்டோம் என்று தோன்றுகிறது. நாம் ஒரு அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியுள்ளோம். இது உலகம் முழுவதும் உள்ள சிறந்த அரசியலமைப்பு சட்டங்களின் பிரதியாகும். நாம் அங்கிங்குமாக கிடைத்த சிறு சிறு துண்டுகளை எடுத்து ஒட்டிக்கொண்டோம். நான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் தவறாமல் ஒரு சிறுகதை நினைவுக்கு வரும் – அன்றைய தினம் டார்வினின் பிறந்தநாள். அவரது அண்டை வீட்டுச் சிறுவர்கள் அவருக்கு ஒரு பரிசு அளிக்க விரும்பினர். ஏனெனில் அவர் மிகவும் புகழ் பெற்ற மனிதர். அதோடு அவர் வாழ்ந்த காலத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய மனிதரும் கூட. அவர் குழந்தைகளுடன் மிகவும் அன்புடன் பழகுவார். அவர்களுடன் விளையாடுவார். அவர்கள் அனைவருமே அவரது நண்பர்கள் ஆவர்.

அவரது பிறந்த நாளுக்கு என்ன கொடுப்பது என்று குழந்தைகள் யோசித்துக் கொண்டிருந்தனர். அவர் விலங்குகளைப் பற்றி அறிவதையே தனது ஒற்றைக் குறிக்கோளாக கொண்டிருந்தார். எப்படி உயிர் தோன்றியது, அது எப்படி இவ்வளவு வடிவங்களை எடுத்தது என்பதை கண்டுபிடிப்பதில் முனைப்பாக இருந்தார். எனவே குழந்தைகள் என்ன செய்தார்கள் என்றால்... குழந்தைகள் பெரியவர்களால் சிதைக்கப்படும் வரை புத்திசாலிகளாகவே உள்ளனர். அவர்கள் சில பூச்சிகளைப் பிடித்தனர். அவற்றை துண்டுதுண்டாக வெட்டினர். ஒன்றிலிருந்து இறக்கை, ஒன்றிலிருந்து கால்கள், மற்றொன்றிலிருந்து உடல்,வேறொன்றிலிருந்து தலை என வெவ்வேறு பூச்சிகளின் உறுப்புக்களை வெட்டி ஒன்றாக இணைத்தனர். அவர்கள் அவற்றை பசை போட்டு ஒட்டி ஒரு புதிய பூச்சியை உருவாக்கினர். பூச்சிகள், பறவைகள், விலங்குகளில் மாபெரும் நிபுணராக உள்ள டார்வினால் அது என்ன பூச்சி என்று சொல்ல முடியுமா என்பதை தெரிந்துகொள்ள காத்திருந்தனர்.

அவர்கள் மிகவும் பரவசமாக இருந்தனர். அன்று மாலை அதனை டார்வினிடம் கொண்டு வந்தனர். அது என்னவென்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் தனது வாழ்நாளில் உலகம் முழுவதும் சுற்றியுள்ளார். ஆனால் பக்கத்து வீட்டில் உள்ள இந்த சிறுவர்கள், தன்னால் பார்க்க முடியாத ஒரு பூச்சியை கண்டுபிடித்து விட்டனரா என்று வியந்தார். அதனை நெருக்கமாக வைத்துப் பார்த்தார். அவருக்கு வயதாகிக் கொண்டிருந்தது.“என் கண்ணாடியை கொண்டு வாருங்கள். நான் இந்த பூச்சியை பார்த்ததே இல்லையே” என்று கூறினார். அவர் தனது கண்ணாடியை அணிந்து கொண்டதும், “இப்போது இது என்ன பூச்சி என்று சொல்லுங்கள்?" என்று குழந்தைகள் கேட்டனர். அப்புறம் அவர், "இது ஒரு ஹம்பக்!" (போலியான பூச்சி) என்று சொன்னார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் போலியானது. கொஞ்சம் சோவியத் அரசியலமைப்பு,கொஞ்சம் அமெரிக்க அரசியலமைப்பு, பெரும்பாலான பகுதி இங்கிலாந்தின் அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டது. மற்ற நாடுகளில் எதெல்லாம் நல்லது என்று பட்டதோ, தனிநபர் சுதந்திரம், வேறுபாடு பாராட்டாமை, கருத்துச் சுதந்திரம், மக்களால்,மக்களுக்காக, மக்களின் அரசாங்கம் என்று எல்லாத்தையுமே எடுத்துக் கொண்டனர். எல்லாமே கடன் வாங்கியது. படிக்கும்போது மிகவும் சிறந்த ஒன்றாகத் தோன்றும். ஆனால் பொருத்தமில்லாதது.

சர்ச்சைக்குரியவனாக இருக்கிற காரணத்தால் நான் முப்பது நிமிடங்களுக்குள் பூனாவை விட்டு வெளியே செல்ல வேண்டுமா? நான் எங்கே போவது? ஏனென்றால் நான் எங்கே சென்றாலும் சர்ச்சைக்குரியவனாக இருப்பேன். சர்ச்சைக்குரியவனாக இருப்பது குற்றம் என்றால், என் நாட்டில் எனக்கு இடமே இருக்காது. ஆனால் இந்த நாடு உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பீற்றிக் கொள்கிறது.

இந்த சுதந்திரத்திற்காகத்தான் எனது குடும்பம் முழுவதும் போராடி, சிறை சென்று அவதிப்பட்டது. குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள் அனைவரும் சிறை சென்றுவிட்ட காரணத்தினால், வீட்டில் பெண்கள் மட்டுமே இருந்தனர். இதனால் தொழில்கள் முடங்கின. நாங்கள் குழந்தைகளாக இருந்தோம். சிறு குழந்தைகளாக இருந்தோம். பள்ளிக்கு கூட பணம் செலுத்த முடியவில்லை என்ற காரணத்தினால் நாங்களும் அவதியுற்றோம். இந்த சுதந்திரத்திற்காக என் குடும்பம் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான குடும்பங்கள், அவதியுற்றன. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

தலைவர்கள் அனைவருமே சர்ச்சைக்குரியவர்கள். மஹாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு,முகமது அலி ஜின்னா, டாக்டர். அம்பேத்கர். இவர்கள் அனைவரும் சர்ச்சைக்குரியவர்கள். உங்களுக்கு சிறிதளவாவது புத்தி இருந்தால், நீங்களும் சர்ச்க்குரியவராவீர்கள். ராணுவத்தில் மட்டும் உங்களது புத்திசாலித்தனம் மழுங்கடிக்கப்படும். நீங்கள் ஏதாவது தவறான ஒன்றைப் பார்த்தாலும் கூட செய்ய 'மாட்டேன்' என்று சொல்லாத வகையில் அது அழிக்கப்படும். எந்த சூழ்நிலையிலும், 'சரி' என்று சொல்லுவதற்காகவே உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆதாரம் – ஓஷோவின் “தி மெஸையா, வால் 12“ புத்தகம் நன்றி - http://www.messagefrommasters.com/

No comments: