Monday, October 17, 2011

வறுமையும் பட்டினிச் சாவும் ஒழியுமா?


வறுமையும் பட்டினிச் சாவும் ஒழியுமா?
(உலக உணவு தினம் அக்டோபர் 16)

தனியொரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை
அழித்திடுவோம் என்று பாடினான் பாரதி.

ஆனால் உணவில்லாமல் மஹாராஷ்டிராவில் ஆதிவாசிகள் ஆண்டு தோறும் மாங்கொட்டைகளை உண்டு உயிர்விடுவதை காண்கிறோம். இன்று சோமாலியாவில் லட்சக்கணக்கான உயிர்கள் உணவில்லாமல் செத்துக் கொண்டிருக்கின்றன என்ற செய்தி நம் நெஞ்சை பிளக்கிறது.

தகவல் தொழில் நுட்பம் மிகுந்த இந்த உலகில் இப்படியும் நடக்குமா? என்று கேட்க வைக்கும் அளவிற்கு பட்டினிச் சாவுகள் நடந்து வருகின்றன. இதற்கு பல்வேறு காரணங்களை சொல்லலாம்.

அரசியல் காரணங்கள்
இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 43% பேர் நீண்ட காலமாக போதிய உணவு இல்லாமல் பட்டினியாக இருந்து வருகிறார்கள். ஆனால் இந்திய அரசியல்வாதிகளும் பணக்காரர்களும் தங்களது தொப்பைகளை குறைக்க அறுவைச் சிகிச்சை செய்து கொள்கின்றனர். நகர்ப்புறங்களில் உடல்பருமன் வியாதி பரவி வருகிறது. இது அண்மையில் லண்டன் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தி. (http://www.theaustralian.com.au/news/world/india-faces-new-epidemic-with-60-million-people-morbidly-obese/story-e6frg6so-1226142567221)

இந்தியாவில் போதுமான உணவு தானியங்கள் அரசு கிட்டங்கிகளில் சேமிக்கப்பட்டிருந்தும் அவை முறையாக பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்படுகின்றன. இதற்கு காரணம் அரசின் நிர்வாக குறைபாடுகளே. இன்று உலக அளவில் மக்கள் நலன் பேணும் அரசியல்வாதிகளுக்கு புறம்பாக அதிகாரத்தை விரும்பும் நபர்களே அரசியலில் உள்ளனர். இவர்களது முக்கிய நோக்கம் தங்களது பதவியை தக்க வைத்துக் கொள்வதே. இவர்களுக்கு நாட்டு மக்களைப் பற்றியோ அல்லது ஏழை மக்களைப் பற்றியே கவலை இல்லை. ஏழை மக்களை வாக்குக்காக பயன்படுத்தும் இவர்கள் மற்ற நேரங்களில் அவர்களை ஒரு வேண்டாத சுமையாகவே கருதுகின்றனர். எனவே அவர்கள் சாப்பிட்டார்களா இல்லையா என்பதெல்லாம் இவர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் தங்களது தொகுதிகளில் ஏழை மக்களின் பகுதிகளை கண்காணித்து அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உணவுப் பொருட்களை பெற்றுத் தந்தாலே அங்கு பட்டினிச் சாவு ஏற்படுவது மறைந்து விடும்.

செல்வந்தர்கள் - சமூக பொறுப்பு
செல்வம் சேர்ப்பதை நோக்கமாக கொண்ட செல்வந்தர்களிடம் தங்களது செல்வத்தை தானம் செய்யக் கோர முடியாது. ஆனால் தங்களது பங்குக்கு சமுதாய நலன் கருதி அறங்களை செய்யலாம். அதனை சிலர் செய்து கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் வளர்ந்த மேலை நாடுகளிடம் ஒப்பிடுகையில் இந்தியா போன்ற வளர்ந்த நாடுகளில் செல்வந்தர்களிடம் கொடைக்குணம் மிகக் குறைவே என்று கூறலாம்.

இந்த கோடீஸ்வரர்கள் தங்களது பணத்தை பகிர்ந்து தரத் தேவையில்லை. இவர்கள் பணம் சம்பாதிக்கும் முறையை யாருக்கோ சொல்லித்தரவும் தேவையில்லை. இவர்கள் இந்த யுக்தியை தங்களது ஊரில், கிராமத்தில் தங்களது உறவினர்களுக்கு சொல்லித் தந்து அவர்களை மேற்பார்வை செய்யலாம். இதில் வர்த்தக குழுக்களும் பங்கேற்கலாம். இவ்வாறான முயற்சிகள் காலப்போக்கில் வறுமை பட்டினியை ஒழிக்க உதவும்.  


ஆசியாவிலேயே அதிகளவு இளம் கோடீஸ்வரர்கள் இந்தியாவில் உருவாகி வருவதாக அண்மைச் செய்தி கூறுகிறது. இவர்கள் 2010ம் ஆண்டில் மட்டும் நாட்டின் உற்பத்தியில் (73.07 லட்சம் கோடி) 34% முதலீடு செய்யத்தக்க வருமானத்தை (34.23 லட்சம் கோடி) பெற்றுள்ளனர். (http://www.dnaindia.com/money/report_youngest-indian-millionaires-lead-asia-world-hnis_1598548) அதேவேளையில் கோடிக்கானோர் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்ந்து வருகின்றனர். இந்த வறுமைக் கோட்டிற்கு விளக்கமாக கிராமப்புறங்களில் வாழ்பவர்கள் ஒரு நாளைக்கு ரூ.26 மற்றும் நகர்ப்புறங்களில் வாழ்பவர்களில் ஒருநாளைக்கு ரூ. 32 சம்பாதிப்பவர்கள் என்று இந்திய திட்ட கமிஷன் உச்ச நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. (http://www.guardian.co.uk/global-development/poverty-matters/2011/oct/04/india-measuring-poverty-line) இந்த வேறுபாட்டை என்னவென்று சொல்வது?

வறுமை பட்டினிக்கான சமூக பொறுப்பு
பெருநகர், நகரம், சிறு நகரங்களில் வாழ்பவர்களை வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்களாக கூற முடியாது. நகரங்களில் எப்படியாவது எல்லாருக்கும் வேலை - பணம் - உணவு கிடைத்து விடுகிறது. நகர்ப்புறங்களில் வறுமை இருந்தாலும் மிகக் குறைந்தளவே இருக்கிறது. ஆனால் வறுமையில் சிக்கிக் கொள்பவர்கள் கிராமங்களை சேர்ந்தவர்களே. குறிப்பாக கல்வியறிவற்ற காடு மற்றும் வானம் பார்த்த பூமியை நம்பியுள்ள ஆதிவாசிகள் மற்றும் கிராமத்து மக்கள் பட்டினிச் சாவை சந்திக்கின்றனர். இவர்களது சாவுக்கு கற்றிந்த, பணம் படைத்த, அதிகாரம் படைத்த அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். செல்வந்தர்கள் ஏழைக் கூட்டத்திடம் மாட்டி தங்களது பணத்தை இழந்துவிடக் கூடாது என்று அஞ்சுவது இயல்பே. ஆனால் அவர்கள் தங்களால் இயன்ற அளவு அந்தக் கூட்டத்தை மாற்ற, அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். இவர்கள் சம்பாதித்தல், சேமித்தல், முதலீடு செய்தல் போன்ற நிதி அறிவுரைகளை ஏழைகளுக்கு வழங்கலாம்.

செல்வந்தர்களின் சேவைக்கு உதாரணமாக விப்ரோ நிறுவனத்தின் அதிபரான ஆஸிம் பிரேம்ஜியை கூறலாம். இவர் தனது நிறுவன ஊழியர்களுக்காக விப்ரோ ஈக்விட்டி ரிவார்ட் டிரஸ்ட் என்ற அமைப்பையும், மற்றவர்களுக்காக ஆஸிம் பிரேம்ஜி பவுண்டேஷன் மற்றும் யுனிவர்சிட்டியை நிறுவியுள்ளார். இவரது நிறுவனத்தில் தகுதியான ஊழியர்களை கண்டறிந்து அவர்கள் நிறுவனங்களின் பங்குகளை வாங்கவும், அதன் மூலம் கடன், வட்டி, லாபப்பங்கு போன்றவற்றை பெற்று வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ளவும் வாய்ப்பளிக்கப்படுகிறது. அதேபோல ஆஸிம் பிரேம்ஜி இந்தியா முழுவதும் உள்ள 13 லட்சம் அரசு பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் உதவிக்காக பல உதவிகளை செய்து வருகிறது. இதற்காக பிரேம்ஜி ரூ. 8000 கோடி வரை நிதி ஒதுக்கியுள்ளார். இந்தியாவில் இதுவரை இவ்வளவு பெரிய தொகையை அறக்கட்டளைக்காக ஒதுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (http://en.wikipedia.org/wiki/Azim_Premji#Wipro_Equity_Reward_Trust)

மற்றொரு நிறுவனமான டாடா நிறுவனத்தின் சேவையையும் இங்கு குறிப்பிடலாம். டாடா நிறுவனம் ஜாக்ருதி யாத்ரா (விழிப்புணர்வு பயணம்) என்ற பயணத்தை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இந்த பயணத்திற்காக தொழில்துறையில் ஆர்வம் மிக்க நூற்றுக்கணக்கான படித்த படிக்காத ஆங்கிலம் தெரிந்த தெரியாத தாய்மொழி மட்டுமே பேசத் தெரிந்த இளைஞர் இளைஞிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களும் சேர்க்கப்படுகின்றனர். இவர்களுக்காக இந்தியா முழுவதுமாக (ஏறக்குறைய 20 நாட்கள்) ரயிலில் அழைத்துச் செல்லப்பட்டு தொழில் நிறுவனங்களை பார்வையிட, தொழிலதிபர்கள் சந்திக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. (http://www.jagritiyatra.com/) இதுபோல செல்வந்தர்கள் நிறுவனங்களின் பங்கேற்பின் மூலமாக மட்டுமே வறுமையை ஒழிக்க முடியும்.தற்போது இந்தியாவில் செல்வச் சேர்ப்பு பற்றிய புத்தகங்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இருந்து வந்தாலும் அவை கீழ்த்தட்டு மக்களை சென்று சேரும் வகையில் இல்லை. மேலை நாடுகளில் இருப்பதைப் போல செல்வச் சேர்ப்பு பற்றி பேசும் ஊக்கப்பேச்சாளர்கள் போன்றவர்கள் இல்லை என்றே கூறலாம். பொதுவாக ஏழை மக்களிடம் தங்களுடைய வாழ்க்கை இவ்வளவுதான். இதில் மாற்றம் ஏற்படப் போவது இல்லை என்ற நிலை உள்ளது. அந்த நிலையை மாற்ற வேண்டும். அதற்கு ஆயிரக்கணக்கான ஊக்கப்பேச்சாளர்கள் தேவை. இது போன்ற முயற்சிகள் நீண்டகால அடிப்படையில் வறுமையை ஒழித்து பட்டினியை குறைக்கும்.

உணவு பாதுகாப்பு
புகழ் பெற்ற பொருளாதார நிபுணரான ஆதம் ஸ்மித் மக்கள்த் தொகை பெருக்கல் விகிதத்திலும், உணவு உற்பத்தி கூட்டல் விகிதத்திலும் பெருகிச் செல்லும் என்று கூறினார். ஆனால் அவரது கூற்றை எந்த அரசாங்கமும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. மாறாக மக்கள் தொகையை பெருக்கிக் கொண்டு பயிர் விளையும் நிலப்பரப்பை குறைக்க உதவிக் கொண்டும் வருகின்றன.  

தற்போது உணவுப் பொருள் பாதுகாப்பு அரசிடம் மட்டுமே உள்ள காரணத்தால் அது முழுமையாக பாதுகாக்கப்படாமல், தக்க நேரத்தில் உரியவருக்கு சென்றடையாமல் வீணாகி விடுகிறது. அதே வேளையில் விவசாயிகளால் தங்களது உற்பத்தி பொருட்களை சேமிக்க இயலாமல் போகிறது. உணவுப் பொருள் பாதுகாப்பை அரசு வர்த்தகர்கள் சங்கங்கள் விவசாயிகள் கூட்டமைப்பின் மூலம் மேற்கொள்ளலாம். ஆனால் இந்த பணியை அரசு - வர்த்தக சங்கங்கள் விவசாயிகள் என இணைந்து திறம்படச் செய்ய இயலும். இந்த முயற்சியில் வேளாண்மை, பொருளாதார வர்த்தக நிபுணர்களையும் சேர்த்துக் கொண்டால் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும். எந்தவொரு திட்டத்தையுமே இலவச திட்டமாக செயல்படுத்தாமல் வர்த்தக அடிப்படை கொண்ட திட்டமாக நடத்தினால் முதலுக்கு மோசமாகாது, வெற்றிகரமான திட்டமாகவும் அமையும்.   

இதில் வட்டார உணவு உற்பத்தி, உணவுத் தேவை போன்றவற்றை கணக்கிட்டு எஞ்சிய உணவு தானியங்களை விற்பனை செய்வது சிறந்தது. இதன் மூலம் தேவையில்லாத பகுதியில் உணவுப் பொருட்களை சேர்த்து வைப்பதை தவிர்க்கலாம். இந்த திட்டங்கள் பட்டினிச் சாவுகளை குறைக்க உதவும். உணவுப் பாதுகாப்பு மற்றும் வினியோகம் குறித்து தனிக்கட்டுரை எழுதலாம் என்று கருதியுள்ளேன்.          


  


No comments: