Wednesday, December 14, 2011

இந்தியா உடையுமா? தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வு இருக்கா? 4

பண்புடன் குழுமத்தில் நடைபெற்ற வாதங்களின் ஒரு பகுதி

//அதாவது தேவன் ஜி....இந்த மாதிரி "மின்சாரத்தை நிறுத்துவோம்" என ஓட்டுக்கு ஸ்டண்ட் அடிக்கும் வாய்ப்பாவது கழகங்கள் கையில் இருந்தால் அவர்கள் அதை செய்திருப்பார்கள்.ஆனால் அப்படி செய்ய முடியாது.தமிழக அரசு உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் ஒரு சொட்டு கூட கர்னாடகத்துக்கு போவதில்லை. தமிழ்நாட்டில் இருந்து கிடைக்கும் நெய்வேலி மின்சாரம் மத்திய அரசின் கட்டுபாட்டில் உள்ளது.அதை தமிழக அரசால் நிறுத்த முடியாது.தனிதமிழ்நாடு அமைந்ததும் மின்சாரம் தரமாட்டேன் என வேண்டுமனால் நீங்கள் சொல்லிகொள்ளலாம்.அவர்களும் கர்னாடகாவில் இருந்து கிடைக்கும் பாக்சைட், இரும்பை தமிழ்நாட்டுக்கு அனுப்பமாட்டேன் எனலாம்.வட இந்தியாவில் இருந்து வரும் லாரிகளை தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தலாம்.இதில் லாபம் யாருக்கு, நஷ்டம் யாருக்கு என நிதானமாக கனக்கு போட்டு பாருங்கள்.இம்மாதிரி ஸ்டண்டுகள் பிரச்சனையை தீர்க்காது, இருப்பதையும் கெடுத்துவிடும் என்பதை உணர்வோம்.//

செல்வன் ஐயா,
நெய்வேலி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கலாம். அதேபோல மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்வளத்தைத்தானே கேரளாவும், கர்நாடகாவும் தர மறுக்கின்றன. அப்படி இருக்கும்போது ஏன் நெய்வேலி மின்சாரத்தை தடுக்க முடியாது. இவ்வாறு தடுப்பதெல்லாம் பிரச்சனையின் தீவிரத் தன்மையை உணர்த்தவேதானே ஒழிய யாருக்கு நஷ்டம் லாபம் என்பதை காட்ட அல்ல. ஒரு நாடு தங்களது உரிமைகளை பெற போராடலாம் என்கிறபோது அதற்கு வரம்புகள் கிடையாது. இந்தியாவில் இருப்பதால் உங்களுக்கு பல வசதிகள் கிடைக்கின்றன. இல்லாவிட்டால் உங்களுக்கு ஒரு வசதியும் கிடைக்காது என்ற பாணியில் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் தமிழ் நாட்டுடன் ஒப்பிடும்போதும் சிறிதும் வளம் இல்லாத நாடுகளும் இருக்கின்றன.

//அதைதான் யாரும் செய்வதில்லை என ஆகிவிட்டதே? ஜெயலலிதா, கருனாநிதிக்கு என்ன வியாதி இருக்கு,ஆஸ்பத்திரிக்கு எப்போது போகிறார்,வருகிறார் என மக்களுக்கு தெரியுமா?ஆயிரத்தெட்டு மக்கள் பிரச்சனை இருக்க இதை பிடித்துகொண்டு தொங்குவதில் எந்தபலனும் இல்லை ஜி.//

அதை யாரும் செய்யாவிட்டால் அப்படியே விட்டுவிடலாமா? இப்படி விட்டுவிட்டுத்தான் தமிழக அரசியல் இன்றைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மக்களாட்சியில் மக்கள்தான் பிரச்சனைகளை தட்டிக் கேட்க வேண்டும். இது போல சில பிரச்சனைகளை தள்ளுவதால் அரசியல் ஒழுக்கங்களையும் தள்ளுகிறீர்கள். இதுவே அரசியல்வாதிகளுக்கு வசதியாக போய்விடுகிறது. இதை தடுப்பதால் கிடைக்கும் பலன் அவர்கள் பெரும் குற்றங்கள் செய்ய துணியமாட்டார்கள்.

//நீங்கள் திறம்பட செய்ய சொல்லும் ஐடியாக்கள் எல்லாம் அரசியல் ஸ்டண்டாக தான் இருக்கே ஒழிய அவை எந்த பிரச்சனையையும் தீர்க்கவில்லை. "மின்சாரத்தை நிறுத்துவோம், காய்கறியை அனுப்பமாட்டோம், எல்லையை மூடுவோம், ஐநா சபையில் புகார் செய்வோம்" என விஜயகாந்த் படத்தில் வருவது மாதிரி தீர்வை சொல்லிகொண்டிருக்கிறீர்கள்.

தனிநாடு எடுத்துகொள்வோம் என்பதும் அதுமாதிரி தான். தனிநாட்டை விடுங்கள்..முதலில் தனித்தமிழ்நாடு கட்சியினர் ஒரு எம்.எல்.ஏ பதவியை எங்காவது அடைய முடிகிறதா என பாருங்கள்.அதன்பின் சட்டசபையை பிடித்து ஆட்சிக்கு வந்து தனிதமிழ்நாடு கேட்டு தீர்மானம் போட்டு..நினைத்தாலே தலை சுற்றுகிறது.நீங்கள் என்னவென்றால் இப்போதே "தனிதமிழ்நாட்டை எடுத்துகொள்வோம்" என சொல்லி கொண்டிருக்கிறீர்கள்.//

புதிதாக சொல்லும் எதுவுமே ஸ்டன்ட் ஆகத்தான் தோன்றும். நான் சொல்பவை கருத்தளவில்தான் இருக்கின்றன. இவற்றை செயல்படுத்தும்போதுதான் அவற்றின் ஆற்றல் தெரியும். விஜயகாந்தின் படங்களை மக்கள் ஏன் விரும்பி பார்த்தார்கள். அவர்களுக்கு பிடித்திருக்கிறது என்பதால்தானே. அதை விடுங்கள். அதே மாதிரி நீங்களும் வசனங்களை பேசுங்கள். ஏன்? இந்திய அரசு நீங்கள் என்பதால் அவற்றை நீங்கள் செய்தே காட்டலாம். அதைத்தான் நாங்கள் செய்யச் சொல்கிறோம்.

மற்றபடி அரசியலில் எம்எல்ஏ பதவியை அடைவதுதான் எனது முதல் குறிக்கோள். அதனை வரும் காலங்களில் அடைந்து காட்டுவேன். ஒரு காலத்தில் இந்தியாவுக்கு விடுதலை வாங்குவோம் என்பதும் தலைசுற்றும் காரியமாகத்தான் இருந்தது. ஆனால் அது சாத்தியமாயிற்று.


//நீங்கள் எதை செய்தாலும் எனக்கு பிரச்சனையில்லை. ஒரு எம்.எல்.ஏ அல்லது ஒரு எம்பியை உங்கள் கட்சியினர் சட்டசபை,பாராளுமன்ரத்துக்கு அனுப்பிவிட்டு அதன்பின் உங்கள் இயக்கத்தை விஜயகாந்த்,ராமதாச் கட்சிகளுடன் ஒப்பிட முயலலாம் என்பது என் கருத்து. //

அதை செய்யும் முயற்சியில்தான் இருக்கிறோம்.


//தனிதமிழ்நாடு கட்சியினரும் ஜோக்கர்கள் தான். அவர்களை தீவிரவாதிகள் என்றெல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை.ஆயுதம் ஏந்தி பொதுமக்களை கொல்பவர்கள் தான் தீவிரவாதிகள். ஆயுதம் ஏந்தாமல் மேடை போட்டு மக்களை பேசியே கொல்பவர்கள் ஜோக்கர்கள்.//

உங்களுக்கு தெரிந்தது வில்லன் அல்லது ஜோக்கர். ஹீரோ என்றால் அது நீங்கள்தான் (இந்தியா). மற்றவர்களை ஹீரோவாக ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள்.

//ஆயிரம் ஆண்டுக்கு முன் இந்தியாவும் இல்லை,தமிழ்நாடும் இல்லை.//

உண்மைதான். ஆனால் தமிழினம் இருந்தது. அவர்கள் தங்களுக்கென சுதந்திரமான அரசாங்கங்களை கொண்டிருந்தனர்.

//எப்படி தீர்ப்பீர்கள் என்பதை இன்னமும் சொல்லவில்லை."செயலில் காட்டுவேன், செய்து முடிப்பேன்" என தீர்வை சொல்லமல் பூடகமாக பேசிகொண்டு உள்ளீர்களே ஒழிய எப்படி தீரும்,முடியும் என்பதை சொல்ல காணோம்:-).வரும் ஐடியாக்களும் எல்லாம் பீதியூட்டுபவையாகவே உள்லன. ராஜபக்சே ஆட்சியில் தமிழர்கள் வாழ்வது போல கர்னாடகாவில் மராட்டியத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்கிறீர்கள்.இதை எல்லாம் கேட்டாலே குலை நடுங்குகிறது.இதுக்கு தான் தனிதமிழ்நாடா?//

தீர்வுகளை சொன்னால் அவை இன்னும் பிரச்சனைகளை தீர்க்கவில்லை என்கிறீர்கள். விஜயகாந்த் பட வசனங்கள் என்கிறீர்கள். நான் பூடகமாக பேசுவதாக கற்பனை செய்து கொள்கிறீர்கள். நான் சொன்னது தமிழர்கள் மலேசியா, சிங்கப்பூரில் எப்படி இருப்பார்களோ அப்படி இருப்பார்கள் என்று சொன்னேன். உங்கள் குலை நடுக்கம்தான் பிரச்சனையே. நீங்கள் எல்லாரையும் கண்டு பயப்படும்போது, உங்களால் விஷயங்களை தெளிவாக பார்க்கவும் முடியாது தீர்க்கவும் முடியாது. ஏனெனில் நீங்கள் (இந்தியா) பிரச்சனைகளை நல்ல முறையில் தீர்க்க நினைக்காதவர்கள், தீர்க்க முடியும் என்பதில் நம்பிக்கை கொள்ளாதவர்கள்.


//எப்படியோ மக்கள் பிரச்சனைகளை தீர்க்க முயல்கிறேன் என்ற வரை மகிழ்ச்சி.//

நீங்கள் தீர்க்கவே வேண்டாம் பிரச்சனையாகிவிடும் என்கிறீர்கள். இது சூடு பட்ட பூனை பால் குடிக்க விரும்பாதது போலத்தான்.


//எனக்கு உங்கள் மேல் நம்பிக்கையின்மை எல்லாம் இல்லை. கருத்து வேறுபாடு அப்பா,பிள்ளைக்குள்ளேயே சகஜம். என் அப்பா இந்தி போராட்ட வீரர்.போராட்டத்தில் கலந்துகொண்டு லத்தி அடி வாங்கி வாங்கியிருக்கிறார்.அவருக்கும் எனக்குமே எந்த அரசியல் கருத்தொற்றுமையும் இல்லை.அதனால் தேவன் என்ற நண்பருடன் இருக்கும் கருத்து வேறுபாடு அவர் மேல் நான் வைத்திருக்கும் நம்பிக்கையை பாதிக்காது.

இந்த நிமிடம் வரை தேவன் நல்லவர், நாட்டுக்கு நல்லது என தான் நம்பும் கொள்கையை மக்களுக்கு போதிக்கிறார் என தான் நினைத்து கொண்டிருக்கிறேன்.நானும் அதேபோல மக்களுக்கு நல்லது என நான் கருதும் கொள்கையை நம்பிகொண்டிருக்கிறேன். உங்கள் தனிதமிழ்நாடு கொள்கையை நான் எதிர்க்க காரணம் இந்தியா மேல் எனக்கு இருக்கும் காதல் தான் காரனமே ஒழிய உங்கள் திறமை, நேர்மை இவற்றின் மேலான சந்தேகம் அல்ல.//

செல்வன் அவர்களே,
எனக்கும் உங்கள் மீது சிறிதும் வெறுப்போ, கோபமோ கிடையாது. நீங்கள் விடுதலைப் புலிகளை பார்த்திருப்பதால் அவர்களைப் போல தனிநாடு வாங்க முடியாது என்று நம்புகிறீர்கள். அவர்களை போல போராடத் தேவையில்லை காந்தியைப் போல போராடியும் தனி நாடு வாங்கி விடலாம் என்று நான் சொல்கிறேன். அது காந்தி போராடிய மண்ணில் சாத்தியமே என்று நான் நம்புகிறேன். இதுதான் வித்தியாசம்.

நானும் நேற்று வரை இந்திய என்ற துணைக் கண்டத்தின் மீது நம்பிக்கையும் பற்றும் கொண்டவனாகத்தான் இருந்திருக்கிறேன். ஆனால் அதன் அண்மைக்கால செயல்பாடுகளை பார்க்கும்போது அதன் பாதை திரும்பி விட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. அது நல்ல கேப்டன்களை இழந்து விட்ட ஓட்டை விழுந்த கப்பல், எனவே அதிலிருந்து தப்பி விடுவதுதான் அனைவருக்கும், குறிப்பாக தமிழருக்கு நலம் என்று இன்று நான் நம்புகிறேன்.

நான் நேற்று வரை கொண்டிருந்த கருத்தை நீங்கள் இன்று கொண்டிருப்பதில் தவறில்லை. அதனால்தான் என் கருத்தை மற்றவர்களுக்குச் சொல்கிறேன். ஜனநாயகத்தில் அடிப்படை தத்துவமே எதையும் வெளிப்படையாக சொல்வது என்பதால் எனது கருத்தை மற்றவர்களுக்கு சொல்கிறேன். இந்தியா என்போன்றவர்களின் நம்பிக்கையை பெற பிரம்ம பிரயத்னப்பட வேண்டியிருக்கும். அது நடந்துவிட்டால் பெரும் ஆச்சரியமே.


//நான் அடுத்த வேளை உணவுக்கு வழியின்றி இருந்த நாட்களிலும்,சைக்கிளில் வேலைக்கு போய்கொண்டிருந்த நாட்களிலும் எனக்கு எந்த அரசியல்வாதியும் தேவைபட்டதில்லை.என் படிப்பு, வருமானம் எல்லாவற்றையும் நானாக உழைத்தே அடைந்தேன். எனக்கு வாழ்க்கையில் யாரும் எதையும் தூக்கி கொடுக்கவில்லை. எல்லாவற்றையும் போராடியே அடைந்தேன். அதை சொல்வதில் மகிழ்ச்சியும் அடைகிறேன்.//

நீங்கள் சொல்லும் நிலையில்தான் நானும் இருக்கிறேன். ஆனால் உங்கள் போராட்ட காலத்தில் உங்களது இயலாமையால் சில உரிமைகளை விட்டுக் கொடுத்திருக்கலாம். அது போன்ற உரிமைகளை விட்டுக் கொடுக்காதிருக்க மற்றவரின் உதவி தேவைப்படுகிறது. அந்த உதவியை செய்பவர்தான், செய்யக் கூடியவர்தான் தலைமைப் பண்பை பெறுகிறார். அவர் அரசியல்வாதியாக இருக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால் அவரைப் போன்றோர்தான்அரசியலுக்குத் தேவை. உங்களது முயற்சியை பாராட்டுகிறேன்.


//நீங்கள் நல்ல மனிதராக அரசியலில் இருப்பீர்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.ஆனால் மக்களுக்கு நன்மை செய்ய நல்ல மனம் மட்டும் போதாது.பொருளாதாரம் குறித்த தெளிவு வேண்டும்,மக்களுக்கு நல்லது செய்யும் திட்டங்களை தீட்ட தெரியவேண்டும்.இல்லாவிட்டால் மக்களுக்கு நல்லது என நினைத்து கெட்டதை செய்யும் ஆபத்து உள்ளது. நேரு நல்லவர்தான்.அவரது பொருளாதார கொள்கைகள் நாட்டை குட்டிசுவராக்கின. கேரல கம்யூனிஸ்டு கட்சியினர் அப்பழுக்கற்றவர்கள்.கரைபடியாத கரங்களுக்கு சொந்தகாரர்கள்.ஆனால் பொருளாதாரம் தெரியாமல் கேரளாவின் தொழில்துரையை கெடுத்து நாசமாக்கி விட்டார்கள்.இம்மாதிரி ஆட்களை விட ஊழல் செய்தாலும் தொழில்துறையை கெடுக்காமல் விட்ட திராவிட இயக்கங்கள் ஆயிரம் மடங்கு பரவாயில்லை எனவே சொல்வேன்

கூடங்குளத்தில் அணு உலையை எதிர்ப்பது, வால்மார்ட்டை எதிர்ப்பது போன்றவை எனக்கு தனி தமிழ் இயக்கத்தினர் பொருளாதார ரீதியாக நல்லது செய்வார்கள் என்ர நம்பிக்கையை அளிக்க மறுக்கிறது.ஆட்சியாளர்கள் தனிப்பட்ட முரையில் நல்லவர்களாக இருந்தும் மின்சாரம் கொடுக்கவில்லையெனில் மக்களுக்கு என்ன பலன்?//

அரசியலில் நல்லவர்களாக இருந்தால் மட்டும்போதாது. வல்லவர்களாக இருக்க வேண்டும். அதாவது அதிகாரம் என்பது வியாபாரம் போன்றதே. அதில் எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்க முடியாது, விட்டுக் கொடுக்க கூடாது. ஒரு தனிப்பட்ட மனிதன் விட்டுக் கொடுத்தால் அது அவனுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு தலைவன் விட்டுக் கொடுத்தால் அந்த நாட்டுக்கே, அவனை நம்பியுள்ள மக்களுக்கே இழப்பு ஏற்படும்.

அந்த தலைவன் அரசியல், சமூக, பொருளாதார இன்னும் பிற துறைகளில் தெளிவான கருத்துக்களை கொண்டிருக்க வேண்டும். நேரு நல்லவர் இல்லை செல்வன். அவர் ஒரு தந்திரமான, கோழையான அரசியல்வாதி அவருடைய தவறான கருத்துக்கள் செயல்களின் விளைவுகள்தான் இன்று வரை இந்தியாவுக்கு பலவித பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்தியாவில் கூடன்குளம், அணைத்திட்டங்கள் போன்ற பெரும் திட்டங்களை நிறைவேற்றும்போது மக்கள் நலம் சிறிதும் கண்டு கொள்ளப்படுவதில்லை. முறையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு புனரமைப்பு செய்து தருவதில்லை. அதேபோல போபால் விஷவாயுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று வரை நீதி கிடைக்காதது அனைவரும் அறிந்ததே.

செல்வன், ஒரு நாடு செல்வத்தில் திளைப்பது அவசியமே. ஆனால் அதற்காக பொதுமக்களை, அவர்களின் உரிமையை விலை கொடுக்க முடியாது. கொடுக்கவும் கூடாது. இந்தியா சுதந்திர பொருளாதார கொள்கைகளை பின்பற்றுவதில் தவறில்லை. ஆனால் பாதிக்கப்படும் மக்களுக்கு எந்தவித மூகாந்திரமும் இல்லை என்பதுதான் வருத்தமான உண்மை. ஏனெனில் டெல்லியில் இருப்பவர்கள் எந்த பிரச்சனையிலும் நாட்டின் பிற பகுதிகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. மாட்டிக் கொண்டால்தான் பிரச்சனையை பற்றி சிந்திக்கின்றனர். அதனால்தான் அண்ணா ஹஸாரே போன்ற ஒரு சாதாரண சமூக சேவகருக்கு அவர்கள் வளைந்து கொடுக்க வேண்டியுள்ளது.

பொருளாதாரக் கொள்கைகளைப் பற்றி சிந்திக்க திராவிட கட்சிகளுக்கு திராணி ஏது. அதிலும் பல ஆயிரம் கோடிகளை சுருட்டலாம் என்று தெரிந்தால் அதையும் தந்திரமாக சிந்திப்பார்கள். தன் குடும்பத்திற்கு மட்டும் தனியுரிமை கிடைக்கும் என்றால் அதற்கேற்றார்போல பொருளாதார கொள்கைளை வடிப்பார்கள். இந்தியாவால் போதுமான மின்சாரம் தயாரிக்க முடியவில்லை என்பது ஒரு கேவலமான விஷயம்.

No comments: