Saturday, December 17, 2011

இந்தியா உடையுமா? தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வு இருக்கா? 5

//நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்... தனது குடும்பத்திற்காக வாழ்ந்த பின் தனக்கு அருகில் இருப்பவன் எந்த மொழி பேசினாலும், எந்த இனத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும் எந்த நாட்டைச் சார்ந்தவனாக இருந்தாலும் மனிதனாக இருக்கும் பட்சத்தில் அவனுக்கு உதவ வேண்டும் என்று நான் சொல்கிறேன்... பக்கத்தில் இருப்பவன் தமிழ் மொழி பேசுபவனாகவோ, அல்லது தமிழினத்தைச் சார்ந்தவனாகவோ இருந்தால் தான் உதவுவேன் எனச் சொல்வதைத்தான் நான் ஒப்புக் கொள்ள முடீயாது என்கிறேன்... //

பிரசாத் அவர்களே,
நீங்கள் உங்கள் அருகே உள்ள யாருக்கு வேண்டுமானாலும் உதவி செய்யலாம். சாதி, மதம், மொழி, இனத்தை பார்க்கத் தேவையில்லை. அப்படி நான் சொல்லவும் இல்லை. அதே வேளையில் உலகம் உங்களை அப்படி நடத்துகிறதா என்று பார்க்க வேண்டும். உலகிலேயே யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்னவன் தமிழன்தான். இதுபோன்றதொரு பழமொழி வேறு எந்த மொழியிலாவது இருக்கிறதா என்பதும் ஆச்சரியமே. உங்களது மொழி தமிழ் மொழி என்ற ஒரே காரணத்திற்காக நீங்கள் ஒதுக்கப்பட்ட, அடக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட, துன்புறுத்தப்பட்ட நிலையை எதிர்கொண்டதுண்டா? இன்று உலகில் பல இடங்களில் தமிழன் அந்த நிலையில் இருக்கிறான். அது ஏன்? உங்களது நியாயம் ஏன் அவர்களிடம் இருப்பதில்லை? நீங்கள் சொல்வது சரியா? அவன் சொல்வது சரியா? ஏன் இந்த பேதம்?

//தனக்கு உதவாதவனுக்கு நாம் ஏன் உதவ வேண்டும் எனக் கேட்பதும், தனது குடும்பத்துக்கு உதவாதவனுக்கு நாம் ஏன் உதவ வேண்டும் எனக் கேட்பதும், தனது சாதிக்கு உதவாதவனுக்கு நாம் ஏன் உதவ வேண்டும் எனக் கேட்பதும், தனது இனத்தவனுக்கு உதவாதவனுக்கு நாம் ஏன் உதவ வேண்டும் எனக் கேட்பதும் சுயநலக் கேள்விகளே...//

நீங்கள் உங்களது குடும்பத்திற்கு உதவ நினைத்த மறுகனமே அதற்குள் உலகின் மறுகோடியில் இருப்பவனும் வந்து சேருவான். அது ஒரு சிறந்த பண்பே. ஆனால் அந்த பண்பு உலகில் குறைந்து கொண்டே செல்கிறதே ஏன்? அதற்கு நீங்கள் விளக்கம் தரமுடியுமா? உலகே தன்னை மட்டுமே பார்க்கும் சுயநலத்தால் ஆட்டுவிக்கப்படும்போது அந்த சுயநலத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள நம் சுயநலத்தை பேணுவது தவறா? பதில் சொல்லுங்கள்?

//ஒரு சின்ன உதாரணம், தமிழனை சிங்களன் கொன்று கொண்டிருந்த சமயத்தில், தமிழன், தமிழின அழிப்பு எதிர்த்து குரல் கொண்டிருந்த சமயத்தில் சென்னையில் சிங்களர்கள் சிலரைத் தாக்கியச் சம்பவம் நடந்ததே அது நம்முள் இருக்கும் ஒரு இன பேதத்தை, இன வெறியை அல்லவா சுட்டிக் காட்டுகிறது. இன்று சிங்களன் நம்மை அழித்ததற்காக சிங்களனை அடித்தது சரி என்று சொன்னால், நாளை தமிழரை ஏமாற்றிய அனைத்து தரப்பினரையும் எதிர்த்து தமிழன் கலகம் விளைவிப்பான் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியுமா... //

தமிழகத்தில் சிங்களவன் தாக்கப்பட்டதை நீங்கள் தட்டிக் கேட்கிறீர்கள். உங்களை மெச்சுகிறேன். தமிழன் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டபோது யார் தட்டிக் கேட்டார்கள்? நீங்கள் கேட்டீர்களா? உலகம் கேட்டதா? அங்கு ராணுவத்தினரால் எடுக்கப்பட்ட பகைப்படங்களும், காணொளிகளும் இங்கிலாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பின்புதானே உலகே குரல் எழுப்பியது. நாகரீக உலகில் போரை இப்படித்தான் நடத்த வேண்டும் என்று பல சட்டங்கள் இருக்கும்போது, சிங்களவன், ஐநா குழுவினரை வெளியே அனுப்பி விட்டு, பத்திரிகையாளர்களை உள்ளே விடாமல் போரை நடத்தியதே அதை யார் கேட்டது?

அதற்கு துணை போன இந்தியா முழுப்பூசணியை சோற்றுக்குள் மறைத்து இலங்கையை பாதுகாக்க இன்றும் முயன்று வருகிறதே அதை யார் கேட்பது? இன்னமும் முள்வேலி முகாம்களுக்குள்ளும், சித்ரவதை முகாம்களிலும், இன்னும் இடம் தெரியாத இடங்களிலும் அடைத்து வைக்கப்பட்டு தமிழன் கொல்லப்பட்டு வருகிறானே அவனை யார் தட்டிக் கேட்பார்கள் சொல்லுங்கள்? உலகம் முழுவதும் உள்ள நாடுகள் லட்சக்கணக்கான ராணுவத்தையும் ஏராளமான ஆயுதங்களையும் வைத்திருக்கின்றனவே எதற்காக? தங்கள் இனத்தை, நாட்டை பாதுகாக்கத்தானே? அதாவது ஒருவன் தன்னை கொல்ல முயல்கிறான் என்றால் அவனை கொலை செய்தால் தவறில்லை என்பதுதான் உலக நியதி. நீங்கள் அதற்கு என்ன சொல்கிறீர்கள்? அனைத்து தரப்பினரையும் எதிர்த்து தமிழன் கலகம் செய்வானா என்று கேள்வி எழுப்பும் நீங்கள் ஏன் அந்த அனைத்து தரப்பையும் பார்த்து ஏன் தமிழனை ஏமாற்றினீர்கள் என்று உங்களால் கேள்வி எழுப்ப முடியுமா? தமிழர்கள் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும், அவர்களது உரிமைகளும் பாதுகாக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று உங்களால் சொல்ல முடியுமா?

//தமிழ் தேசியவாதம் பேசும் நீங்கள் சொல்லலாம், நாங்கள் எங்கள் உரிமைய மட்டுமே கேட்போம், அடுத்தவரை இம்சிக்க மாட்டோம் என்று... ஆனால் உங்களை பின்தொடர்பவர்கள் எல்லாம் சாத்வீகமாக போராடுவார்கள் என்று நம்ப வேண்டாம். ஒரு கட்டம் வரை போராடிப் பார்த்து பின் அடிக்கு அடி, உதைக்கு உதை என்று ஆயுதத்தை கையில் எடுப்பார்கள்... சிங்களனுக்கும் தமிழனுக்கும் இலங்கையில் நடந்தது போன்ற யுத்தம், நாளை இந்தியனுக்கும் தமிழனுக்கும் நடக்கலாம்...நடக்காது என்று உறுதியாக உங்களால் சொல்ல முடியுமா... அப்படீ நடக்காமல் தமிழ் தேசியவாதம் உருவாக்கிக் காட்டுவோம் என்று சொன்னால் அந்த தமிழ் தேசியவாதத்திற்கு எனது வாழ்த்துகள்...//

தலைவன் வழியே மக்கள் வழி, மக்கள் விருப்பத்திற்கு எதிராகவே கருணாநிதி ஈழப்போரின்போது மக்களை அடக்கி வைக்கவில்லையா? அப்போது இந்த தமிழர்களால் என்ன செய்ய முடிந்தது? அப்படியானால் தமிழ் மக்களை தமிழ் தேசியத் தலைவர்களால் கட்டுப்படுத்த முடியுமா என்று ஏன் சந்தேகப் படுகிறீர்கள்? போராடிப் பார்த்த பின்னர்தானே ஆயுதத்தை கையில் எடுக்கிறார்கள். எடுத்த உடனேயே ஆயுதத்தை கையில் எடுக்க வில்லையே? எந்த நிலையிலும் ஆயுதப் போர் கூடாது என்றால், அமெரிக்காவும் சீனாவும் ஏன் இந்தியாவும் ஏன் ஆயுதங்களை குவித்து வைத்திருக்கின்றன? உங்களால் பதில் சொல்ல முடியுமா? ஒரு நாடு என்பது மக்களின் பாதுகாப்புக்காவே அந்த பாதுகாப்பு இழக்கப்படுகிறது அல்லது முறிக்கப்படுகிறது என்றால் உலகில் எந்த நாடுமே போர்புரியத் தயாராகவே இருக்கிறது. அப்படி இருக்கும்போது தமிழ்தேசியம் மட்டும் ஏன் போர் புரியக் கூடாது என்று விரும்புகிறீர்கள்?

//தனது அருகில் இருப்பவர்களுக்கு சாதி, மதம், மொழி, இனம் என்று பாராமல் உதவுபவர்களுடன் நான் பயணிக்கிறேன். புரிதலுக்கு நன்றி..//

தமிழினமே அப்படித்தான் வாழ்ந்து வருகிறது. இல்லையென்றால் தமிழனால் இத்தனை நாடுகளில், மாநிலங்களில் வாழ முடியாது. அதையும் சிலரால் பொருத்துக் கொள்ள முடியவில்லை என்பதே பிரச்சனை. நாங்களும் உங்களைப் போன்றவர்களாக இருந்தவர்கள்தான். பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லை, உணவுக்கு மதிப்பில்லை என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்ட பின்தான் தனித் தமிழ்நாடு பற்றி பேச வேண்டிய நிலை ஏற்படுகிறது. இல்லையென்றால் ஸாரே ஜஹான் ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமரா என்றுதான் நாங்களும் பாடிக்கொண்டிருந்திருப்போம். ஆனால் இன்று அது பொய் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. அஹிம்சை வழியில் போராடி காந்தி உருவாக்கிய இந்தியா இன்று இன அழிப்பில் ஈடுபட்டு வருகிறது. அதனை ஏன் என்று நீங்கள் கேட்க மாட்டீர்களா?

No comments: