Saturday, December 17, 2011

இந்தியா உடையுமா? தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வு இருக்கா? 6

திரு ராஜா சங்கர் அவர்களே,

நீங்கள் மீண்டும் மீண்டும் பிராமணர் என்ற கருத்தை முன் வைப்பதால் நான் அது பற்றிய எனது கருத்தை விளக்க விரும்புகிறேன்.

விடுதலைப் போராட்ட காலத்தில் இருந்த சமுதாய நிலை வேறு இன்றைய சமுதாய நிலை வேறு. அன்றை நிலைக்கு காரணம் பிராமணர் என்பதால் தந்தை பெரியார் பிராமணத்துவ எதிர்ப்பை கைக்கொண்டார். அவரும் தனிப்பட்ட பிராமணர்கள் மீது வெறுப்புக் கொண்டவராக இல்லை.

இன்றைய சூழலில் தமிழரின் நிலைக்கு பிராமணர்தான் காரணம் என்று நான் சொல்லவில்லை. பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் இந்திய இறையாண்மையின் கீழ் சிக்கிய தமிழர் இறையாண்மையை முக்கிய காரணமாக நான் பார்க்கிறேன்.

மற்றபடி இன்றும் பிராமணர்களில் பெரும்பாலானோர் தமிழர் உணர்வுக்கு எதிராக இருக்கலாம். இது ஒரு சாதி மற்றொரு சாதி மீது கொண்டிருக்கும் உணர்வு போன்றதே. எல்லா சாதிகளிலுமே நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கிறார்கள். ஒரு சிலரின் செயலுக்காக ஒரு சாதியையே குறைகூறுவது ஏற்றுக் கொள்ள முடியாது.

பிராமணர் ஒரு தனி இனமாக கருதப்பட்டாலும் அவர்கள் தமிழர்களோடு தமிழராக வாழ்ந்து வருகின்றனர். தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் இன்றும் பல சேவைகளை செய்து வருகின்றனர். ஆனால் புகழ் பெற்ற சில பிராமணர்கள் தமிழ் இனத்திற்கு எதிராக செயல்பட்டு வருவதால் அது இன்னமும் இன எதிர்ப்புத் தோற்றத்தையே கொடுக்கிறது. எனக்கு பல நல்ல பிராமணர் நண்பர்கள் உள்ளனர்.

அதேபோல இன்றைய சூழலிலும் பிராமணர் தங்களை தமிழர் அல்லாமல் வேறு ஒரு இனமாக அடையாளம் காட்டிக்கொள்ளவோ, அல்லது வேறு மொழியை பயன்படுத்தவோ முடியாது. அவர்கள் தமிழர் மீது வெறுப்பு கொண்டிருக்கிறார்களோ இல்லையோ தமிழ் மொழியையே பேசி தமிழராகவே வாழ்ந்து வருகின்றனர்.

நான் ஏற்கனவே சொன்னது போல, தமிழ் தேசியம் என்பது எந்த ஒரு சாதிக்கும், இனத்திற்கும், நாட்டிற்கும் எதிரானது அல்ல. இது தமிழர் தன் இறையாண்மையை பெறுவதற்கான இலக்கு. இதில் நான் தமிழருக்கு எதிரான பிராமணர்களை நான் கணக்கில் கொள்ளவில்லை. தமிழர் ஆதரவான பிராமணர்களை கணக்கில் எடுத்துக் கொள்கிறேன். இந்த இலக்கில் பிராமணர்களும் எங்களுக்கு உதவுவார்கள் என்றே கருதுகிறேன். அந்த உதவியை என்னால் பெறமுடியும் என்று உறுதியாக நம்புகிறேன்.

No comments: