Saturday, December 17, 2011

இந்தியா உடையுமா? தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வு இருக்கா? 7

//ஒரு காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த இந்திய தேர்தல் ஆணையம் காலப்போக்கில் தேவையான சீர்திருத்தங்கள் செய்து கொண்டு தனித்து விளங்க ஆரம்பித்தது. அதே போல இன்றைக்கு மீனவர் பிரச்சினை தவிர கச்ச தீவு மற்றும் அனைத்து நதி நீர் பிரச்சினைகளிலும் நீதி மன்ற தீர்ப்புகள் அமலாக்கத்தில் தான் பிரச்சினை.

நீதி மன்றம் இது நாள் வரை தனது தீர்ப்பை மத்திய அரசு நடை முறைபடுத்தி வரும் என்பதா இருக்கிறது. ஆனால் சில சுயநல அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசானாது சரிவர நீதிமன்ற தீர்ப்பு அமலாக்கத்தை செய்வதில்லை. நீதி மன்றமானது மெல்ல மெல்ல அதற்க்கு தேவையான ஆணைகள் மற்றும் ஏற்பாடுகளை பெற்று கொண்டு விடும் என்பதில் ஐய்யமில்லை. //

ஐயா தமிழ்ப்பயணி அவர்களே,

தேர்தல் ஆணையம் தானாக சீராகவில்லை. அது சீராக்கப்பட்டது. அரசியல் கட்சிகள் இல்லாதபோது செயல்பட வேண்டிய நிலையிலேயே அது சுதந்திரமாக செயல்பட முடிகிறது. தேர்தல் கமிஷன் ஒரு நிர்வாகத்துறை, அதாவது செயல்படும் துறை. நீதிமன்றங்களின் உத்தரவை செயல்படுத்த முடியாமல் இருப்பதுதான் பிரச்சனையே. ஒரு நல்ல ஜனநாயக நாட்டில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்த முடியாமல் போனால் நிர்வாகத்துறை (அரசாங்கம்) தானாக பதவியை துறக்க வேண்டும். அதுபோல இந்தியாவில் எத்தனை அரசாங்கங்கள் செய்துள்ளன? அரசாங்கம் அப்படி செய்யாதபோது நீதிமன்றத்தால் அரசாங்கத்தை கலைக்க முடியுமா? நீதித்துறை நிர்வாகத்துறையாக மாற முடியாது. மாறவும் கூடாது.

நீதிமன்றம் தன்னிச்சையாக செயல்பட்டால் அங்கு அரசாங்கமே தேவையில்லாத நிலை ஏற்பட்டு விடும். 2ஜி நிலையில் நீதி மன்றம் தலையிட்ட பின்னரே அந்த வழக்கு முறையாக விசாரிக்கப்பட்டு வருகிறது. அதுவும் இந்திய அரசியல்வாதிகளுக்கு பிடிக்கவில்லை. நீதிமன்றம் நிர்வாகத்தில் தலையிடுகிறது என்று சொல்கின்றனர். நீதிமன்றத்திற்கு ஏற்ற நிர்வாகத்துறையை உருவாக்குவதே இந்தியர்களின் தேவை.

ஒரு ஜனநாயக நாட்டில் பாராளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று இணையானதாக இருக்க வேண்டும். ஏதாவது ஒன்று முன்னுக்குப் பின்னாக செயல்பட்டாலும் அங்கு ஜனநாயகம் இல்லை என்றே பொருள்.

//இங்கு பேசும் எந்தவொரு தனித் தேசியவாதியும் நீதிமன்றம் வஞ்சித்து விட்டதாக பேசுவதில்லை. இதனை பொதுமக்களும் அறிவார்கள். அரசியல் வியாதிகளின் சித்து விளையாட்டு தான் என்பது நன்கு அறிவார்கள். மக்கள் நம்பிக்கை இழப்பு என்பது நீதி மன்றம் போன்ற இடங்களில் நீதி மறுக்க படும் போது தான். //

நீதி மன்றம் வஞ்சித்துவிட்டதாக கூறவில்லை. ஆனால் நீதி மன்றம் அளித்த நீதியை நிலைநாட்ட முடியவில்லை என்றுதான் சொல்கிறோம். அதாவது நீதி கிடைத்தும் கிடைக்காத நிலை. அதுவும் நீதி மறுக்கபடுவதும் ஒன்றே.

நீங்கள் சொல்லும் அரசியல் சித்துவிளையாட்டுத்தான் இந்திய அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற தனம் என்று சொல்கிறோம். இந்திய தேசிய தொலைக் காட்சிகளைப் பாருங்கள் முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து எத்தனை பேர் பேசுகிறார்கள் என்று தெரியும். அவர்களுக்கு அதைவிட முக்கியமான பிரச்சனைகள் உள்ளன. இதுதான் உணர்வற்ற நிலை, அல்லது நாட்டு மக்களின் உணர்வை புரிந்துகொள்ளாத நிலை என்று சொல்கிறோம்.

//தவிரவும் முல்லை பெரியாறுக்காக போராடும் மக்கள் அனைவரும் ஏதோ தனி நாட்டிற்க்கு ஆதரவாக போராடுவதாக இங்கு ஒரு தோற்ற மாயை உருவாக்க முயலுகிறார்கள் தனி தேசியவாதிகள். //
முல்லைப் பெரியாறு போராட்டமும் தனித் தமிழ் நாட்டுப் போராட்டமும் ஒன்று அல்ல. ஆனால் மீனவர் போராட்டம், கூடங்குளம் போராட்டம், முல்லைப் பெரியாறு போராட்டம் போன்றவை அது போன்ற ஒரு போராட்டத்திற்கு வழிவகுக்கும் என்று சொல்கிறோம். அமைதிப் பூங்காவாக இருந்து வந்த தமிழ்நாடு இன்று எவ்வளவு கொந்தளிக்கிறது என்று பாருங்கள்.

//ஒவ்வொரு காலத்திற்க்கு ஒவ்வொரு பிரச்சினை. இந்தி பிரச்சினை ஒரு தலைமுறை, இட ஒதுக்கீடு ஒரு தலைமுறை, நதி நீர் மற்றும் சுற்று சூழல் மற்றொரு தலைமுறை. இவைகளை காட்டி இதோ வருது.. அதோ வருது..
தனி நாடு.. !!//

தனித் தமிழ்நாடு வருகிறதோ இல்லையோ, தமிழர்களும் இந்தியாவை வெறுக்கின்றனர் என்பது உண்மையாகி வருகிறது. அந்த தனித்தமிழ்நாடாக ஆனாலும் ஆச்சரியமில்லை. ஒருவேளை தமிழர்கள் தொலைநோக்குப் பார்வையுடன் தனித் தமிழ்நாட்டை உருவாக்கியிருந்தால் இந்த பிரச்சனைகள் வந்திருக்கவே இருக்காது.

No comments: