Sunday, December 18, 2011

இந்தியா உடையுமா? தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வு இருக்கா? 7

ஐயா பிரசாத் வேணுகோபால் அவர்களே,
நீங்கள் இதனை உங்களது இறுதி வாதம் என்று கூறினாலும் இந்த இழையை வாசிப்பவர்களுக்காக நான் என் கருத்தை கூற வேண்டும் என்பதற்காக இந்த விளக்கத்தை கூறுகிறேன்.


//தாங்கள் தமிழன், தமிழ் பேசுபவன் மட்டுமே உலகெங்கும் பாதிக்கப்படுகிறான். வேறு எவரும் பாதிக்கப்படுவதில்லை, பாதிக்கப்பட்டால் கேட்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்ற பாங்குடனேயே பார்க்கிறீர்கள்.//

அதற்கு ஈழப்போரை விட வேறு என்ன சாட்சி? கேட்பது யார்? நான் இன்றைய பிரச்சனைகளை மட்டும் வைத்து தமிழ் தேசியம் பற்றி பேசவில்லை. இனிமேலும் தமிழினம் ஒரு பெரும் பின்னடைவை, அழிவை சந்திக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழ்தேசியம் குறித்து பேசுகிறேன்.

//நான் நடக்கும் அநியாயம் வெளியே உலகுக்குத் தெரியும் பொழுது உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் எதிர்வினைகள் வந்த வண்ணம் இருக்கிறது என்ற பாங்குடன் இருக்கிறேன்.... இலங்கையில் தமிழினம் அழிக்கப்பட்டது உலக அரங்கிற்குத் தெரிந்ததும், அதனை எதிர்த்து குரல் கொடுத்தவர்கள் தமிழர் அல்லாது வேறு எவரும் இலர் என்ற பாங்கு தெரிகிறது உங்கள் வாதத்தில்.//

ஒருவன் இறந்தபின் கிடைக்கும் ஆதரவால் பிரயோஜனம் இல்லை. இன்று சோமாலியா மீது எத்தனை நாடுகள் அக்கறை கொண்டுள்ளன? எத்தனை நாடுகள் குரல் கொடுக்கின்றன என்று சொல்ல முடியுமா?

//மேலும், தமிழின அழிப்பின் போது தமிழகத் தலைமை கவனிக்காது போனதால், இங்கு தமிழக மக்கள் அங்கு பாதிக்கப்படும் மக்களுக்காக வருத்தப்பட்டதும், ஏதேனும் செய்ய முடியாதா என்று ஏங்கியதும் பொய்யாகி விடுமா... //

அப்போது இந்திய தலைமை என்ன செய்தது? அந்த ஏக்கத்தால் என்ன செய்ய முடிந்ததா? இரங்கல் தெரிவித்தால் பிரச்சனை தீர்ந்துவிடுமா?

//தமிழகத்தில் தலைமை சரியில்லை என்பதால் ஒட்டு மொத்த தமிழக மக்களை குறை சொல்ல முடியாது என்பது போல, சிங்களவனின் தலைமை சரி இல்லை என்பதால் ஒட்டு மொத்த சிங்களவனும் தமிழனை எதிரியாக மட்டுமே பார்க்கிறான் என நாம் நினைத்து கொள்வதும், இந்தியாவின் தலைமை சரியில்லை என்பதால் இந்தியர்கள் அனைவரும் தமிழரை வெறுக்கிறார்கள் என்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதா என்று நீங்கள் சொல்ல வேண்டும்...//

இந்தியர்கள் கெட்டவர்கள் இல்லை. சிங்களவரும் கெட்டவர்கள் இல்லை. எந்தவொரு இனமும் கெட்ட இனம் இல்லை. ஆனால் மாற்று இனங்களின் அதிகாரங்களை பெற்ற அரசியல்வாதிகளின் நிலைதான் கேள்வியை எழுப்புகிறது. அவர்கள் ஒரு இனத்திற்கு எதிராக செயல்பட்டால் அந்த இனம்தான் அவ்வாறு செயல்பட்டதாக கருதப்படும். ஆனால் இந்தியர்கள் எந்த அளவு மாற்று இனங்களின் பிரச்சனைகளை அறிந்துள்ளனர். அதற்கு எவ்வாறு தங்களது பிரதிபலிப்பை காட்டுகின்றனர் என்பதும் கேள்விக்குரியதாக உள்ளது. நமக்கு முல்லைப் பெரியாறு பிரச்சனை தீப்பற்றி எரிகிறது. ஆனால் வடநாட்டு டிவியில் கூட போனால் போகிறது என்ற கணக்கில் செய்தி அளிக்கிறார்கள். நீங்கள் உங்கள் மாற்று இன நண்பர்களிடம் தமிழர்களின் கருத்துக் குறித்து கேட்டு எழுதுங்களேன். நாங்களும் தெரிந்துகொள்கிறோம்.

//இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நான
நன்னயம் செய்து விடல்//

தமிழன் எந்த நீதியை சொல்லவில்லை? இதுபோல ஒரு கருத்து இந்தி இலக்கியத்தில் இருந்தால் எடுத்துப்போடுங்கள் நானும் தெரிந்துகொள்கிறேன். மாற்று இனம் நம்மை எப்படி நடத்துகிறது என்றுதான் கேள்வி. தமிழன் யாரையும் தவறாக நினைக்கவும் இல்லை, நடத்தவில்லை. தமிழ் நாட்டில் எத்தனை கேரள நடிகர் நடிகைகள் உள்ளனர் என்று எல்லாருக்கும் நன்றாக தெரியும். மலையாளத்தில் எத்தனை தமிழ் நடிகர் நடிகைகள் உள்ளனர் என்று சொல்ல முடியுமா?

//வள்ளுவன் சொல்லி வைத்தான்... இதனை உண்மையில் நான் அனுபவப்பட்டிருக்கிறேன்... என்னை எள்ளியவர்களுக்கு உதவி செய்து அவர்களை என்னை விரும்பும் நண்பர்களாக்கியிருக்கிறேன்... மனிதம் சாகவில்லை... சாகாது... சிலருக்கு இன்று புரியும், சிலருக்கு இன்னும் சிறிது நாள் கழித்து புரியும். உலகில் எது அழிந்தாலும் மனிதம் அழியாது...//

நீங்கள் அனுபவப்பட்டிருக்கிறீர்கள். நான் அனுபவத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறேன். நாங்கள் எப்படி இனம் மெழி பாராமல் சமூக சேவை செய்கிறோம் எங்கள் பகுதிக்கு வந்து கேட்டுப்பார்த்தால் உங்களுக்குத் தெரியும். மனிதம் சாகவில்லை. ஆனால் தமிழன் சாகிறான். அது சாகாது, அதற்காகத்தான் தமிழன் உயிர் பிழைக்க வேண்டும் என்கிறேன். உலகில் எந்த இனம் வாழும் என்பது அப்போது வாழும் இனத்திற்குத்தான் தெரியும்.

//தலைமையை மாற்றும் அதிகாரம் உம்மிடம் இல்லை என்றால் தனி தமிழ்த்தேசியம் தனித்தமிழ்நாடு கேட்கலாம்... ஆனால் நம்மிடம் இருக்கும் உரிமையை நாம் சரியாக பயன்படுத்தி நமக்கான உரிமை மீறல்களை எதிர்க்கும் பலத்தை நாம் உருவாக்காமல் தனி தமிழ்தேசியம், தனித்தமிழ்நாடு எனக் கேட்பதில் யாது பயன்//

நாங்கள் தலைமையை மாற்றும் அதிகாரத்தை பற்றித்தான் பேசுகிறோம். தமிழகத்தில் தலைமை அதிகாரம் இருக்கிறது என்று நீங்கள் எப்படி சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. இருந்திருந்தால் திருவாளர் கருணாநிதியே ஈழத் தமிழர்களை காப்பாற்றியிருப்பார். நம்மிடம் உள்ள உரிமையை சரியாக பயன்படுத்துவதற்காகத்தான் தனித்தமிழ்நாடு தேவை என்று சொல்கிறேன். நீங்கள் ஒரு பொதுக் கூட்டத்திற்காக ஒரு காவல் நிலையத்தில் சென்று அனுமதி கேட்டுப்பாருங்கள். அப்போது அதிகாரம் எங்கே இருக்கிறது என்று தெரியும். ஈழத்தமிழர் முகாமுக்கு செல்ல அனுமதி கேட்டுப்பாருங்கள் அதிகாரம் எங்கே இருக்கிறது என்று தெரியும்.

//ஐயா... நீங்களே சொன்னது போல் காந்திய இந்தியா இன்று காந்தியத்தை இழந்து நிற்பதைப் போல், இன்றைய தனித்தமிழ்தேசியம் என்று நீங்கள் எதிர்பார்க்கும் நாடு நாளைய உதவாக்கரை தலைமையால் சீர்குலைந்தால் தனிதமிழ்தேசியத்தையும் மறுபடி பிரிக்க வேண்டும் என்று மக்களைக் குரல் கொடுக்க சொல்வீர்களா, அல்லது தலைமையை மாற்ற போராடச் சொல்வீர்களா மக்களை... இன்று தனிதமிழ்நாடு கோரிக்கை முன்னெடுக்கும் நீங்கள் நாளை தனித்தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரிவினர் பிரிய நினைக்கும் போது அவர்களின் பிரச்சினைகளைச் செவிமடுக்காது பிரித்துக் கொடுத்து விடுவீர்களா...//

காந்தியைத்தான் உலகமே நம்பியதே தவிர சோனியா காந்தியை நம்பவில்லை. காந்தியத்தை இந்தியா ஏன் இழந்தது என்று ஏன் உங்களால் கேள்வி எழுப்ப முடியவில்லை? அந்த கேள்வியை எழுப்பி அதற்கு நீங்களே பதில் சொல்லுங்கள். நீங்கள் தேசியம் என்ற பெயரில் எந்த தவறையும் செய்வீர்கள். இன்று நானும் என்னைப்போன்றோரும் இவ்வாறு பேசுவதற்கு என்ன காரணம்? உங்கள் இந்தியாதானே? அது ஒழுங்காக தனது வேலையை செய்திருந்தால் நாங்கள் எதற்கு பேசப்போகிறோம். தமிழ் நாட்டில் ஒரு பிரிவினருக்கு எதிராக அடக்குமுறை, அழிப்பு நடந்தேறி அந்த பகுதியினர் பிரிந்து செல்ல விரும்பினால் நிச்சயம் அவர்களுக்கான நாட்டை பிரித்து கொடுப்போம். உங்களை மாதிரி அடக்கு முறை செய்து மக்களின் உரிமைகளை நசுக்க மாட்டோம். பிரச்சனைகளை செவி மடுக்காததுதானே பிரச்சனையே. நீங்கள் எங்கே பிரச்சனையை செவிமடுத்தீர்கள்?

//கூட்டுக் குடும்பம் என்பது சண்டை சச்சரவுகளுடன் கூடியது தான். ஆனால் அதில் இருக்கும் மகிழ்ச்சி அலாதி... துன்பங்களைப் பகிர கிடைக்கும் சொந்தம் அதிகம்... கூட்டுக் குடும்பத்தின் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று விரும்புவதைப் போன்றது, இந்தியாவிலிருந்து தனிதமிழ்நாடு கேட்பது...//

கூட்டுக் குடும்பம் சண்டைச் சச்சரவுகளை ஏற்படுத்தக் கூடியதுதான். ஆனால் கொலை செய்யக் கூடியது அல்லவே? அதில் உள்ள மகிழ்ச்சி அலாதியானது. அது எங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அந்த மகிழ்ச்சிகளை கடந்த துயரங்கள் நடந்தால் என்ன செய்வது? இந்தியாவுடன் கொண்டிருப்பது ஒன்றும் குடும்ப உறவு கிடையாது. இந்தியவில் உறவுகளுக்கு மதிப்பும் கிடையாது. அதனால்தான் இந்தியா தனது அண்டை வீட்டாருடன் பகைத்துக் கொண்டு நிற்கிறது. ஒரு நட்பு நாடு இருக்கிறதா என்று சொல்லுங்கள்? நீங்கள் உறவைப் பற்றி எப்படி பேசுகிறீர்கள்? எல்லா நாடுகள் மீதும் ஆதிக்கம் செலுத்த நினைத்தால் முடியுமா? அன்பு மூலம்தான் நட்பு ஏற்படும் அதிகாரத்தின் மூலம் அல்ல.

//மறக்க வேண்டாம்.... நாளை தனிக்குடித்தனத்திலும் குழந்தைகள் பிறக்கு. குழந்தைகள் வளரும்... மீண்டும் அவர்களும் தனிக்குடித்தனத்திற்குச் சண்டை போடுவார்கள்...//

எங்கள் குழந்தைகள் சிறந்த உறவுகளை ஏற்படுத்துவார்கள். உறவின் ஆழம் தெரியாத மரமண்டைகளாக இருக்க மாட்டார்கள். அப்படியே அவர்கள் ஏதாவது ஒன்றை விரும்பினால் அவர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டுமே தவிர இனம் தெரியாத ஒருவனின் அனுமதிக்காக காத்திருக்கக் கூடாது.

//இறுதியாக, நாம் இருவரும் வெவ்வேறு திசையில் நின்று கொண்டு இதுதான் சரி என்று பேசிக் கொண்டிருக்கிறோம்... அதனால் முடிவு கிட்டாது... ஏனென்றால் இருவரும் இதுதான் சரி என்ற முடிவோடு இருக்கிறோம். அதனால் பேசி ஆவது ஒன்றும் இல்லை என்றே நினைக்கிறேன்... மேலும் வளர்க்க விரும்பவில்லை.... இவைதான் எனது இறுதி கருத்துகள்...

உங்கள் கொள்கை நிலைத்து நின்று வெற்றி பெற மனமார வாழ்த்துகிறேன்... வாழ்க வளமுடன்...//

இதுதான் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் நீங்கள் முடிவுக்கு வந்துவிட்டீர்கள். நான் நல்ல முடிவு கிடைக்கும், எனது கருத்து ஏற்றுக்கொள்ளப்படும் என்று காத்திருக்கிறேன். என்னிடம் நம்பிக்கை இருக்கிறது. உங்களிடம் அது இல்லை.

உங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி.

No comments: