Saturday, December 24, 2011

இந்தியா உடையுமா? தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வு இருக்கா? 8

//எனக்கு விவாதம் செய்ய விருப்பம் இல்லை என்ற போதும் இந்த மடலை தருவது அவசியமாகிறது...

எனக்கு தந்த இந்த பதிலில் ஏதோ நான் மட்டும் முன்முடிவோடு பேசி எனது கருத்தில் எனக்கு நம்பிக்கை இல்லாததால் உங்கள் பதிலுக்கு நான் செவிசாய்க்காது ஓடுவது போன்ற கருத்து நிலவுகிறது...

ஆனால், உங்கள் பதிலில், உங்கள் கருத்து ஏற்றுக் கொள்ளப்படும் என்கிற நல்ல முடிவு கிடைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளதைப் பார்க்கையிலேயே தெரியவில்லையா அல்லது உங்களுக்கு புரியவில்லையா, நீங்கள் உங்கள் கருத்தை முன்முடிவாக வைத்துக் கொண்டு என்னை ஏற்றுக் கொள்ள பிரயத்தனப்படுகிறீர்கள் என்று... ஆக மொத்தம் இருவரும் முன்முடிவுடன் இருக்கிறோம் என்று உணர்ந்தே நான் நிறுத்திக் கொள்கிறேன் எனச் சொன்னேன்... அதனை நீங்களும் உறுதி செய்து விட்டீர்கள்... நன்றி...//

திரு பிரசாத் வேணுகோபால் அவர்களே,

நீங்கள் விவாதத்தில் ஈடுபடுவது உங்கள் விருப்பம். அதில் நான் தலையிட விரும்பவில்லை. அதேவேளையில் எனது கருத்திற்கு எதிரான கருத்தை நீங்கள் கூறினாலும், வேறு யார் கூறினாலும் அதனை ஏற்றுக் கொண்டு அதற்கு பதில் கூறும் பொறுப்பு எனக்கு உள்ளது என்று கருதுகிறேன். மற்றபடி நான் எனது கருத்தை யாரையும் ஏற்றுக் கொள்ளச் சொல்லவில்லை. எனது கருத்தில் உண்மை இருப்பதாக தெரிந்தால், அது சாத்தியம் இருந்தால், அது நடக்கும் என்று நம்பினால் அவர்கள் என் கருத்திற்கு ஆதரவு தெரிவிக்கலாம். மற்றபடி நான் என் கருத்தை யார் மீதும் திணிக்க விரும்பவில்லை. மற்றபடி நான் வாதத்திறமை கொண்டவன் என்று நிரூபிப்பது எனது நோக்கமல்ல.

மேலும் நான் முன் வைக்கும் தமிழ் தேசிய கருத்திலும் சில குறைபாடுகள் இருக்கலாம். அவற்றை சுட்டிக்காட்டினால் அவற்றை நான் மாற்றிக்கொள்வேன். எனது கருத்து இறுதியானதும் அல்ல. அது மாறுதலுக்கு உரியது. நான் ஒரு வழியை, ஆரம்பத்தை மட்டுமே சொல்கிறேன். அது சரி என்று பட்டால் நான் அதில் செல்வேன். என் கருத்தை ஒத்த கருத்துள்ளவர்களும் அதில் பயணிக்கலாம். அதனை (தமிழ் தேசிய அரசியல் சட்டத்தை) உருவாக்குபவர்கள் அந்தந்த துறையில் அறிஞர்களாக இருப்பார்கள். இது தனியொரு மனிதனாக என்னால் மட்டுமே சாத்தியமானது அல்ல.

//விவாதம் தமிழர் பிரச்சினைக்கு தனிதமிழ்த்தேசியம் தான் தீர்வு என்று நீங்கள் சொன்னீர்கள்... நானோ நல்ல தலைமைக் கிடைத்தால் கன்டிப்பாக தமிழர் பிரச்சினை தீரும் அன்றேல் தனிதமிழ்த்தேசியம் பிரிந்தாலும் சரி அதிலிருந்து இன்னும் பல பெயரில்லாத தேசியங்கள் பிரிந்தாலும் சரி, த்லைமைச் சரியில்லை என்றால் பிரச்சினை தீர்வாகாது என்கிறேன்... நீங்களோ அதற்கு, இல்லை நல்ல தலைவர்கள்(கருனாநிதி, ஜெயலலிதா) இருந்தார்கள்... அவர்கள் செயல்படா வன்னம் இந்திய தேசியம் தான் கட்டுக்குள் வைக்கிறது என்கிறீர்கள்... நிச்சயமாக ஒரு தமிழக மக்களின் குறைகளைத் தீர்க்க வேண்டும் என்ற எண்ணமுடைய மாநில முதல்வரால் இந்திய அரசியலுக்குள்ளேயே அதைச் செய்ய முடியும், இந்திய அரசியலமைப்பு அத்தகைய ஸ்திரத்தன்மையுடன் இருக்கிறது என்கிறேன்... ஆனால் அத்தகைய ஸ்திரத்தன்மை வாய்ந்ததில்லை இந்திய அரசியலமைப்பு என நீங்கள் சொல்கிறீர்கள்...//

நான் என் கருத்தில் உறுதியாக இருக்கிறேன். தலைமை கிடைத்தாலும் பிரச்சனை தீரும் என்கிறீர்கள். வரவேற்கிறேன். ஆனால் தற்போதுள்ள நிலையில் இந்திய தேசத்திற்குள் இருக்கும் எந்தவொரு தலைமையுமே, இந்திய அரசுக்கு கட்டுப்பட்டுத்தான் செயல்பட வேண்டும். அப்படி இருக்கும்போது அந்த தலைமை எப்படி சுதந்திரமாக செயல்பட முடியும்?

கருணாநிதியும் ஜெயலலிதாவும் நல்ல தலைவர்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அதே தலைவர்கள் தனித் தமிழகத்தின் அரசுத் தலைவர்களாக இருந்திருந்தால் ஈழப்போரின்போது கைகட்டி வேடிக்கை பார்த்திருக்க மாட்டார்கள் என்று நான் சொல்கிறேன். அவர்கள் நடத்தும் அரசியலுக்காகவாவது ஏதாவது செய்திருப்பார்கள். அவர்கள் இந்தியத்தில் கலந்து இந்தியர்களின் முடிவுகளை எதிர்பாத்திருந்ததால் அவர்களால் எதுவும் செய்யவில்லை என்று சொல்கிறேன். இந்திய தேசியத்தை மீறி அவர்களால் ராணுவத்திற்கு உத்தரவு கொடுக்க முடியாது என்பதே உண்மை. இந்திய அரசுக்குள் இருக்கும் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளலாம் என்பதை நான் ஏற்கிறேன். அதேவேளையில் வெளியில் உள்ள தமிழர்களுக்கு அவர்கள் என்ன செய்ய முடியும்? இந்தி அரசிலமைப்பு நிலைத்தன்மை கொண்டதல்ல என்பதே என் கருத்து அது பற்றி உங்களுக்குத் தெரிந்த அரசியல் அறிஞர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள். சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்கிறேன்.

//உண்மையில் பிரச்சினையின் அடிநாதம் எங்கிருக்கிறது தெரியுமா... தமிழக மக்களிடம்... தங்கள் நலனில் அக்கறை உடைய ஒருவனைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு கிடைக்கும் தேர்தல் சமயத்தில் அதனை லாவகமாக ஐந்நூறுக்கும் ஆயிரத்திற்கும் ஓட்டாக விற்றால், தலைமையில் இருப்பவன் போட்ட முதலீடை திரும்ப பெற ஐநூறு கோடிக்கும், ஆயிரம் கோடிக்கும் தமிழக மக்களை அடகு வைக்காமல் வேறு என்ன செய்வான்... இன்றாவது இந்தியாவிடம் அடகு வைக்கிறான்... தனித்தமிழ்தேசியத்தின் தலைமை இப்பொழுது இருக்கும் தலைமைகளைப் போல் அமைந்து விட்டாலோ, தமிழனை அடகு அல்ல அடிமையாக விற்றாலும் சொல்வதற்கில்லை... தமிழர் நலனைச் சிந்திக்கும் ஒருவன் தலைமையில் தனிதமிழ்தேசியமோ, அல்லது இந்திய தேசியமோ தமிழர் நலனை மீட்க முடியாது... தலைமை முழுவதும் சரியாக இருந்தால் மட்டுமே அது முடியும்... தலைமை சரியாக அமைந்துவிட்டால், தமிழர் நலன் காக்க தனிதமிழ்தேசியம் தேவை இல்லை... இந்தியாவில் இருந்து கொண்டே தமிழர் நலனைக் காக்க முடியும்... அன்றேல் தனித்தமிழ்தேசியத்திலும் தமிழர் நலன் கேள்விக்குறியாகவே இருக்கும்... தலைமை முழுவதும் தமிழர் நலன் காக்கும் அளவிற்கு நல்லவர்களாக மாறுவார்களா...//

நீங்கள் சொல்வதை நான் ஏற்கிறேன். உண்மை பிரச்சனை மக்களிடம்தான் உள்ளது. மக்களாட்சியில் ஒரு அரசு திறம்பட செயல்படுவதை கண்காணிக்கும் பொறுப்பு மக்களுக்கு உள்ளது. அந்த மக்களில்தான் நானும் இருக்கிறேன், நீங்களும் இருக்கிறீர்கள். வெறுமனே மக்களை மட்டும் குறை சொல்லிவிட முடியாது. கற்றோர், அறிஞர்கள், இலக்கியவாதிகளுக்கும் பங்கு உள்ளது. பண்டை தமிழகத்தில் ஒரு பிச்சைக்கார கவி கூட அரசை எதிர்த்து துணிந்து தன் கருத்தை முன்வைத்தான். ஆனால் இன்று கற்றிந்தோர். தன் பிழைப்பு, தன் குடும்பம் என்பதை மட்டுமே பார்க்கின்றனர். அண்டை வீட்டாரை பற்றிக் கூட நினைப்பதில்லை. அப்புறம் எங்கே அரசியல் பற்றி யோசிக்கப் போகிறார்கள். அதன் விளைவுதான் இன்றைய தமிழக நிலை.

நல்ல தலைமை அமையாதபோது தமிழ் தேசியமும் மோசமானதாகவே அமையும் என்ற வாதத்தை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அது தொடராது. இதற்கு உதாரணமாக பாகிஸ்தானை கூறலாம். விடுதலைக்குப் பிறகு அந்நாடு பாதி நாட்களை ராணுவ ஆட்சியின் கழித்துள்ளது. ஆனால் இன்னமும் மக்களாட்சியில் நம்பிக்கை வைத்துள்ளது. ஒருநாள் அது மேம்பட்ட மக்களாட்சியை அடையலாம். அதேபோல இதுநாள் வரை ராணுவ ஆட்சியின் கீழிருந்த பர்மா இப்போது மக்களாட்சியை நோக்கி நகர்கிறது. அதுபோல தமிழ் தேசியமும் நல்ல மக்களாட்சியை அமைக்கும் நிலையை அடையும். அதேவேளையில் தற்போது உருவாக்கப்படும் தமிழ் தேசிய அரசியலமைப்பு தீய தலைமைகள் ஆட்சிக்கு வராத வண்ணம் அமைக்கப்பட வேண்டும். அதை மீறி வந்துவிட்டால் அவர்களை உடனே பதவியிறக்கும் பதவியை பறிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என்று சொல்கிறேன். ஆனால் இதெல்லாம் லோக்பாலுக்கே பாடாய் படும் இந்தியத்தில் சாத்தியமில்லை.


//ஒரே ஒரு கேள்வி, தமிழர் நலன் காக்கும் கட்சிகள் எனத் தங்களைச் சொல்லிக் கொண்டு தமிழகத்தை ஆள வருகின்ற அனைவரும், என்றேனும் தமிழக நலனுக்காக ஒட்டு மொத்தமாக மத்திய அரசை நோக்கி குரல் கொடுத்துள்ளார்களா இத்தனை கால தமிழக அரசியலில்... அனைவரும் தங்கள் வளர்ச்சிக்காக தமிழக மக்களின் உணர்ச்சிகளை அவ்வப்பொழுது தூண்டி விட்டு அதில் குளிர் காய்பவர்களே அன்றி எவனும் உண்மையாக தமிழர் நலனைக் காக்க இங்கு அரசியல் செய்வதில்லை என்பதே உண்மை... அதனாலேயே எனக்கு தனிதமிழ்தேசியத்தில் நம்பிக்கையும் இல்லை... முதலில் தமிழக மக்களின் நலனுக்காகவே நாங்கள் வாழ்கிறோம், தமிழர் உரிமைக்காகவே நாங்கள் வாழ்கிறோம் எனச் சொல்பவர்கள் அனைவரும் ஒன்றாகத் திரளுங்கள்... அனைவரும் தமிழர் நலன் தமிழர் உரிமைக்காக போராடுபவர்கள் என்றால் எதற்கு இத்தனைக் கட்சிகள்... எதற்கு இத்தனை பிரிவினைகள்... கட்சிகளை ஒன்றாக்க முடியுமா என்று பார்ப்போம்... பிறகு மக்களை ஒன்று திரட்டுவோம்...//

உங்கள் கேள்வி நியாயமானதுதான். இதுவரை அந்த கட்சிகளால் ஒன்றிணைய முடியவில்லை. அதனால்தான் அவற்றால் மக்களின் ஆதரவையும் பெற இயலவில்லை. உண்மைதான் இதுவரை தமிழக அரசியலில் மக்களின் உணர்வுகளை தூண்டிக் குளிர்காய்பவர்கள்தான் வந்திருக்கின்றனர். அதனால்தான் சிறந்த அரசியலை நேக்கி தமிழர்கள் பயணிக்க வேண்டும் என்று சொல்கிறேன். மக்கள், கற்றறிந்தோ, அறிஞர்கள் அரசியலில் ஆர்வம் கொள்ளாத வரை சிறந்த அரசியல் அமையாது. அந்த ஆர்வத்தை மக்கள் ஆதரவைப் பெற்றுச் சொல்லவேண்டும். அப்போதுதான் அவர்களின் கருத்துக்கு மதிப்பு இருக்கும். வெறுமனே பத்திரிகைகளிலும் இணையத்தில் எழுவதாலும் எதையும் சாதிக்க முடியாது. அதுபோன்ற அறிஞர்கள் இணைந்தால் இந்த கட்சிகளை இணைப்பது கடினமல்ல.

தமிழ்தேசிய அரசியலமைப்பு பற்றிய முன்னோட்டத்தை என் பிளாக்ஸ்பாட்டில் பேட்டிருக்கிறேன். நேரமிருந்தால் அதனை வாசித்து விட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

No comments: