Wednesday, December 14, 2011

இந்தியா உடையுமா? தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வு இருக்கா?

பண்புடன் குழுமத்தில் நடைபெற்ற விவாதத்தின் ஒரு பகுதி


ஐயா தமிழ் பயணி அவர்களே,

இந்த பதிலையாவது அளிக்க துணிந்தீர்களே அதுவரைக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள்.

தேவன்,
• உங்களுக்கு உவப்பான பதில் வராவிடில் மற்றவர்களுக்கு தெரியாது என்பது உங்கள் முடிவு என்று புரிகிறது. இந்த இழையின் தொடக்கத்தில் இருந்தே கிட்டதட்ட எரிதம் (spam) அளவுக்கு இந்த கேள்வியினை தொடர்ந்து கேட்டு வருகிறீர்கள்.

எனக்கு உவப்பான பதிலை நான் கேட்கவில்லை. என் பதில் எல்லாருக்கும் ஏற்புடையதாக இருந்தால்தான் அதற்கு வரவேற்பு கிடைக்கும். அதேபோல உங்களது பதில் ஏற்புடையதாக இருந்தால்தான் அதற்கு வரவேற்பு இருக்கும். உங்களுக்கு (தமிழ் பேசும் இந்தியருக்கு) உவப்பான பதிலைக் கூட யாரும் சொல்லவில்லை. காரணம் என்னவென்றால் அவர்கள் அதைப்பற்றி சிந்திக்கவில்லை. அவர்களது குறி தமிழ் தேசியம் பேசுபவர்களிடம் குற்றம் காண்பதே. அதனால்தான் வேண்டுமென்றேதான் இந்த கேள்வியை நான் மீண்டும் மீண்டும் முன்வைத்தேன்.

• தண்ணீர் பிரச்சினை மற்றும் புவியியல் ரீதியிலான பலவீனம் இல்லாத நாடுகள் சமகாலத்தில் பூவுலகில் அரிதே. அனைத்து நாடுகளும் பிரச்சினைகளுடன் தான் தீர்வுகளை நோக்கி நம்பிக்கையுடன் வாழ்ந்து வருகின்றன.

பிரச்சனைகள் இல்லாத நாடு இல்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் பிரச்சனைக்கு உண்மையான தீர்வை காண எட்ட விரும்பாத நாடுகளும் இல்லை என்றே சொல்லலாம். ஆனால் பிரச்சனைகளுக்கு தீர்வு காண விரும்பாத பிரச்சனையே இல்லை என்பதைப் போல காட்டிக்கொள்ளும் ஒரு நாட்டினால் எப்படி பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்?

• எயிட்சிற்க்கு மருந்து சொல்ல தெரியாது என்பதால் டாக்டர்கள் முட்டாள் கிடையாது. மருத்துவ அறிவியலே தவறு என்பது ஆகாது. வெறிநாய்க் கடி, அம்மை, காச நோய், போலியோ போன்ற பல்வேறு உயிர் கொல்லிகளை தீர்த்தே உள்ளன.

எயிட்சிற்கு இன்று மருந்து இல்லாமல் போகலாம். ஆனால் அதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதுபோல நாங்கள் இந்திய அரசியலுக்காக இந்திய அரசியல்வாதிகளை குறை சொல்ல விரும்பவில்லை. அரசியலே தவறு என்றும் சொல்லவில்லை. எங்களால் எங்களுக்கு ஏற்ற சிறந்த அரசியல்வாதிகளையும் அரசியலையும் உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். அதுவே தமிழ்தேசியம் என்று நாங்கள் முன்வைக்கிறோம்.

• இந்தியா சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளில் பல்வேறு சோதனைகளை கடந்து தான் வளர்ந்து வருகிறது. மிக முக்கியமாக இராணுவ ஆட்சி முறையை தாண்டி. இந்தியாவுடன் சுதந்திரம் பெற்றவை அக்கம் பக்கம் நாடுகள் அனைத்தும் மக்களாட்சியை பகுதியளவில் இழந்தே உள்ளன. தவிர கருத்துரிமை, அடிப்படை சுகாதாரம், மக்களாட்சி போன்ற பல்வேறு விசயங்களில் தேவையான அளவு வளர்ந்தே உள்ளது.

இந்தியா வளர்ந்து வருகிறது (குறிப்பிட்ட வர்க்கங்களை தவிர) இந்தியர்கள் பின்னடைந்து வருகின்றனர். இந்த 60 ஆண்டு காலத்தில் இந்தியா முடிந்தவரை தேசிய இனங்களை, அவற்றின் அடையாளங்களை அழித்து வந்திருக்கிறது.

அதேபோல ஒரு மாபெரும் சந்தையாகவும், பெரும் முதலாளிகளுக்கு விளையாட்டு மைதானமாகவும் மாறிவருகிறது. இந்த நிறுவனங்கள் இந்தியர்களை நுகர்வோராகவும் நுகர் பொருளாகவும் மாற்றி வருகின்றன. இதைப்பற்றியெல்லாம் இந்திய அரசியல்வாதிகளுக்கு கவலையில்லை. அவர்கள் மேல்த் தட்டு அரசியல் நடத்துகின்றனர். இதனால் கீழ்த்தட்டு மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.

இந்தியம் தனது இந்தியத்தை பாதுகாக்க ஒரு சீரான தன்மையை ஏற்க முயற்சி எடுக்கலாம். அதேவேளையில் அது தனிப்பட்ட இனங்களை அழிக்கும் முயற்சியாக இருக்கக் கூடாது. இதற்கு ஜனநாயக அரசு அல்லது எதேச்சதிகார அரசு என்ற பாகுபாடில்லை. அடக்குமுறைகளும், சீரழிவுகளும் ஓரளவுக்கு மேல் தாக்குப்பிடிப்பதில்லை. இதுதான் உலக வரலாறு. வல்லரசு என்று பெயரெடுத்த நாடுகள் எல்லாமல் ஜால்ராக்களாக மாறி வருவதை வரலாறு தவறாமல் காட்டி வருகிறது. இந்தியாவும் வல்லரசாக விரும்பி ஏராளமான தவறுகளை செய்து வருகிறது. அதற்கான பலனை இந்தியா அனுபவித்தே ஆகவேண்டும்.

• சில மாதாந்திர விடுதியறை மருத்துவர்கள் போல ஏதோ முறையின் மூலம் தீர்வு இருப்பதாக நீங்களும் பேசி வருகின்றீர்கள். நீஙகள் கூறும் தமிழ் தேசியம் வந்த பின் சுற்றியுள்ள மூன்று மாநிலங்களும் மீது என்ன போர் தொடுத்து நீரை பெற்று தரப் போகிறீர்களா.. ? சர்வதேச நீதி மன்றங்களையும் இவர்கள் மதிக்காமல் போனால் என்ன நடக்க போகிறது..?

எங்களுக்கு எந்த வித ஆதரவும் இல்லாத நிலையில் நாங்கள் எதற்காக போர் புரிய போகிறோம். ஏதோ நாங்கள் எங்களுக்குத் தெரிந்த முறையில் நாங்கள் எங்களது பிரச்சனைகளை நாங்கள் தீர்த்துக் கொள்வோம். அதற்காக நாங்கள் போர் தொடுப்போம் என்று பொருளில்லை. சர்வதேச மன்றங்களை மதிக்காமல் போனால் அது எங்களுக்கு அவமானம் இல்லை. அது அந்த மன்றங்களுக்குத்தான். அதேவேளையில் அந்த மன்றங்களால் எங்களையும் கட்டுப்படுத்த முடியாது.


• ஆனால் தமிழர்களாகிய எங்களுக்கு மிக அருகாமையில் கிடைத்த ஒரு இடைக்கால தலைமையும் சர்வாதிகார தனமாகவே இருந்ததால் சூடு கண்ட பூனையாக இப்போது உள்ள இந்திய அமைப்பே போதும் என்று இருக்க வேண்டியுள்ளது. உங்கள் போராட்டமும், போரும் எம்மை எங்கு கொண்டு சென்று நிறுத்த போகின்றன..?

தமிழ் பேசும் இந்தியர் என்று சொல்லுங்கள். உங்களால் என்ன அரசியலை உருவாக்க முடிந்தது? நீங்கள் எப்போது அரசியலில் அக்கறை காட்டினீர்கள்? எந்த விதமான அரசியலை முன்னெடுத்தீர்கள். நீங்கள் எடுத்த அரசியல் உங்களுக்கு சூட்டை எடுத்தது என்றால் நாங்கள் எடுக்கும் அரசியலும் சூட்டை போடும் என்று அர்த்தம் இல்லை. எங்களை எங்கே நிறுத்தப்போகிறீர்கள்? இதுபோன்ற பயம்தான் உங்கள் சிந்தனையை மழுங்கடிக்கிறது. சுதந்திரத்தை விட அடிமைத்தனம் பெரிதென்று நினைக்கிறீர்கள். உங்களது கூற்று உண்மையென்றால் காந்தியடிகளின் பின்னால் சென்றவர்கள் எல்லாம் தவறு செய்தார்கள் என்று சொல்கிறீர்களா?

• நீங்கள் கோரும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் செயலாற்றும் தன்மை மற்றும் இந்திய மைய அரசின் அதிகார நிறுவலும் காலப் போக்கில் வலுப்பெறும். அதை விடுத்து எய்ட்சிற்க்கு மருந்தே உலகில் கிடையாது என்பதால் யாரும் தற்கொலை செய்துக் கொள்வது கிடையாது.

அதற்கான அறிகுறியே கிடையாது. இந்திய உச்ச நீதிமன்றம் நாளுக்கு நாள் செல்லாக்காசி வருகிறது. அதற்கு வேறு எந்த நாடும் காரணம் அல்ல. இந்திய நாட்டின் மேதகு இந்தியர்களே. எய்ட்ஸ்க்கு மருந்து இல்லை என்றாலும், ஒரு சிகிச்சை முறையை மேற்கொள்ளும் உரிமையை மருத்துவர்கள் நோயாளிகளுக்கு தருகின்றனர். எங்களுக்கு சிகிச்சை முறை வேண்டாம் என்றால் நாங்கள் தற்கொலை செய்துகொள்ளப் போகிறோம் என்று பொருளில்லை.

இந்த பதிலில் தண்ணீர் பிரச்சனையைப் பற்றி மட்டுமே பேசி அதற்கு தீர்வு சொல்லாமல் நாடும் அமைப்பும் வலுப்பெறும் என்று சொல்லி இருக்கிறீர்கள். இப்போதே தண்ணீர் பெற்று தர இயலாத உங்களால் வலுப்பெற்ற பின்னர் என்ன செய்துவிட முடியும்? அப்போது இது முடிந்து போன பிரச்சனை என்று சொல்வீர்கள். கச்சத் தீவு பிரச்சனை மாதிரி.

முடிந்தால் கச்சத் தீவு பிரச்சனைக்கு தீர்வு சொல்ல முடியுமா என்று சொல்லுங்கள். அந்த பிரச்சனையை நீங்கள் ஒரு (தமிழராக அல்லாமல்) இந்தியர் என்ற முறையில் ஆராய்ந்து பதில் சொல்லுங்கள். காத்திருக்கிறேன். அதோடு முடிந்தால் மீனவர் தாக்கப்படும் பிரச்சனைக்கும் தீர்வு சொல்லுங்கள். இந்திய மீனவர்கள் பாகிஸ்தானால், பங்காளதேஷால் சுடப்பட்டால் என்ன ஆகும் என்றும் ஆலோசித்துச் சொல்லுங்கள்.

No comments: