Friday, December 16, 2011

பிரிவினைக்கான காரணங்கள் செத்துவிடவில்லை

அபி அப்பா - அருமை அருமை அப்துல்லா! இதே உதாரணத்துடன் நான் என் ஜுரத்திலும் விவாதம் செய்ய வந்தேன் இரவு ஒன்று. அப்போது அங்கே "டொக் டொக்கினேன். யாரும் இல்லை. காலை எழுந்து பார்த்தா அப்துல்லாவின் அதகளம். அருமை.

அண்ணா ஆரம்பத்தில் இருந்து "திராவிடநாடு" "பிரிவினைவாதம்" என்ற கொள்கையினை கொண்டிருந்தாலும், அதை அவர் மத்தியிலே, நேரு பிரதமராக இருந்த போது கண்ணியம் மிக்க காயிதேமில்லத் அவையில் இருந்த போது, பல ஜாம்பவான்கள் அவையில் இருந்த போது இந்தியாவின் அனைத்து பத்திரிக்கைகளும் பாராளுமன்றத்தை உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்த போது ஐந்து அடி உயரமுள்ள அண்ணா எழுந்து முழகிய தேதி தொழிலாளர் தினமான மே முதல் தேதி 1962. அன்று தான் அண்ணா தனது கன்னிப்பேச்சை பாராளுமன்றத்தில் முழங்கினார்.
"I belong to Dravidian stock : I am proud to call myself a DRAVIDIAN...." என தொடங்கிய அந்த பேச்சின் போது யாரும் குறுக்கிடவில்லை. நேரு கூட பேச்சு தொடரட்டும் என்றே சொன்னார். பேச ஆரம்பித்த போது ஐந்து அடி உயர அண்ணா பேச்சு முடிந்து அமர்ந்ததும் மூவுலகும் அளந்ததாக சொல்லப்படும் வாமன அவதாரம் போல இருந்தார்.

தன் பேச்சில் திராவிடநாடு பிரிவினை கொள்கையை ஆணித்தரமாக வாதிட்டார்.ஆனால் அவை அவரது பேச்சை நிராகரித்தாலும் பத்திரிக்கைகள் அதை இந்தியா முழுமைக்கும் வெளிச்சம் போட்டு காண்பித்தது. நேருவும் கூட "உங்கள் பேச்சின் சாராம்சத்தை நான் ஒத்துக்கொள்ள முடியாது என்றாலும் பேச்சு அருமை" என்றே சொன்னார். அந்த அவை அதை ஏற்றுக்கொள்கின்றதோ இல்லியே ஆனால் அண்ணா அதை அங்கே பதியவைத்தார் என்பதை விட திராவிடநாடு பிரிவினை தீயை பற்ற வைத்தார் என்றே கொள்ளவேண்டும்.

ஆனாலும் நேரு உள்ளிட்ட வடநாட்டு காங்கிரஸ் தலைவர்களை மெல்லியதாக பயம் ஆட்டுவிக்க தொடங்கியது அன்று முதல் தான். பின்னர் அண்ணா தமிழகம் வந்தார்.காரணம் அதே மாதம் 26, 27 தேதிகளில் திமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இருந்தது. அதில் விலைவாசி உயர்வுக்கு போராட்டம் நடத்த தீர்மானித்து ஜூலை 9ம் தேதி போராட்டம் அமைதியான முறையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் தாலுக்கா அலுவலகங்களில் முன்னே தர்ணா என அறிவிக்கப்பட்டது. இது ஒரு சாதாரண தர்ணா போராட்டம் மட்டுமே. ஆனாலும் நேரு அண்ணாவை "உள்ளே" தள்ளிவிட்டு ஒரு பாராளுமன்ற இடைத்தேர்தலை நடத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். ஆமாம் அந்த சாதாரண தர்ணாவுக்கு அண்ணாவுக்கு பத்துவாரம் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. போராட்டம் அதனால் இன்னும் தீவிரம் அடைய அண்ணாவுடன் கைதான இருவரை போலீஸ் அடித்து கொன்றது. ஒருவர் பெயர் கோ சு மணி, இன்னும் ஒருவர் பெயர் என்னவோ செழியன் என நினைவு. அதே நேரம் திருச்செங்கோடு தொகுதிக்கு பாராளுமன்ற இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

அண்ணாவை உள்ளே வைத்து விட்டு தேர்தல். செ.கந்தப்பன் என்னும் திமுக வேட்பாளர் வெற்றி. காங்கிரஸ் கட்சி செங்கோடன் தோல்வி. நேருவின் கோபம் அண்ணா மீது இன்னும் ஆக்ரோசமாக திரும்பியது.அண்ணா அப்போது வேலூர் சிறையில் இருந்தார். அப்போது தான் சீன படையெடுப்பு மற்றும் இந்திய நாட்டில் சீனா கால் வைத்த நிகழ்வு. நேருவுக்கு தர்மசங்கடம்.

சிறையில் இருந்து வெளியான அண்ணா "சீனர்களின் படையெடுப்பை நாம் சகித்து கொள்ள மாட்டோம், அவர்கள் இந்தியா மீது தடம் பதித்த காலடிகளை எடுக்கும் வரை நேருவுக்கு திமுக கண்மூடித்தனமாக ஆதரிக்கும். சொந்த வீடு இருந்தால் மட்டுமே கூறை வேய முடியும். இந்தியா இருந்தால் மட்டுமே நாங்கள் பிரிவினை கோர முடியும். சீனாவின் ஆக்கிரமிப்பில் இந்தியா சென்றால் நாம் திராவிடநாடு அடைய இன்னும் சில நூற்றாண்டுகள் ஆகலாம்" என முழங்கினார்.

இது கேட்க வேடிக்கையாக இருக்கும். ஆனால் அப்துல்லா சொன்ன உதாரணத்தை ஒப்பிட்டு பாருங்கள் அப்போது புரியும். மேலும் அண்ணா "அவர்கள் ஒரு கோடி பேரை இழந்தாவது இந்தியாவை பிடிக்க திட்டமிட்டுள்ளனர். அதனால் நம்மவர்கள் முடிந்தால் பட்டாளத்தில் சேருங்கள் இல்லாவிடில் இந்திய ராணுவ செலவுக்கு பணம் கொடுங்கள்" என கூட முதல் பணமாக எம் ஜி ஆர் அவர்கள் 75000 ரூபாய் கொடுத்தார்.

எல்லாம் முடிந்தது. அப்போது நாம் சீனாவிடம் ஜெயித்தோமா தோற்றோமா என இங்கே ஆராயவேண்டாம். ஆனால் திமுகவின் இந்த நிலைப்பாட்டினால் காங்கிரஸ் தமிழகத்தில் செல்வாக்கை இழந்தது. அப்போது நாட்டில் ஒட்டு மொத்த இந்திய நாட்டில் ஒரு அசாதாரண சூழல். உடனே தான் அனைத்து பிரிவினை வாத சக்திகளையும் ஒடுக்க நேரு கொண்டு வந்தது தான் பிரிவினைவாத தடைச்சட்டம். இங்கே அண்ணா, வடக்கே காஷ்மீர், பஞ்சாப், நாகர்கள் என எல்லோரையும் அடக்க பிரிவினைவாத தடைச்ச்ட்டம் கொண்டு வரப்பட்டது.

ஆச்சு. திமுகவினை அழிக்க நேரு நாள் குறித்து விட்டார். ஏனனில் அந்த சட்ட ஷரத்துகள் அப்படி காத்திரமாக இருந்தன. உடனே அண்ணாவின் முன்பாக இருந்தது இரண்டே வழிகள் தான்.
1. திராவிடநாடு பிரிவினையை கைவிட்டு பழையபடி சமூக சமுதாய சீர்திருத்த இயக்கமாக மாறிவிடுதல். (இதிலே தீண்டாமை ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, இட ஒதுக்கீடு எல்லாம் வந்து விடும்)

2. அல்லது பிரிவினை கோரிக்கையை கைவிடாமல் புரட்சி இயக்கமாக மாற்றி வன்முறை, கொரில்லா தாக்குதல்.... நக்சல்பாரி இயக்கம் போல ஆக்குதல்

முதலாவது செயல்படுத்தினால் கழகம் அழிந்துவிடும். ஏனனில் அது வ்ரை திராவிடநாடு என்று சொல்லி இரு தேர்தலை சந்தித்து விட்டாகி விட்டது. அதனால் அதும் முடியாது. இரண்டாவது, வன்முறை இயக்கம்... சரிப்பட்டு வராது. ஒன்று அதிலே வெற்றி கிட்டும், இல்லாது தோல்வி தான் கிட்டும். வெற்றி கிட்டினால் ஓக்கே. ஆனால் தோல்வி கிட்டினால் ஒரு தமிழ் சமுதாயம் அழிந்து விடும். அது மீண்டும் தலைதூக்க ஒரு நூறு வருடம் ஆகும். போர் என்றால் இழப்பு அதிகமாகும். ஆண்கள் கொல்லப்படுவர். தமிழ் பெண்கள் சூரையாடப்படுவர். பின்னர் பிறக்கும் குழந்தைகள் கூட தமிழனின் ஒரிஜினாலிட்டி போய் கூழை கும்பிடு போடும் ஆளாகவோ அல்லது வேறு மாதிரியாகவோ ஆக வாய்ப்பு ஆகிவிடும்.

அப்போது தான் அண்ணா அந்த முடிவு எடுத்தார். திமுக இனி பிரிவினைவாதம் பேசாது. ஜனநாயகம் தான் பேச்சும். திமுக பிரிவினைவாத கொள்கையை விட்டாலும் பிரிவினைக்கான காரணங்கள் செத்துவிடவில்லை என அறிவித்தார். இது தான் ராஜதந்திரம்.

இன்னும் வேண்டுமா? தென்னாட்டு பெர்னாட்ஷா அண்ணாவின் கருத்துகள் பற்றி அப்துல்லா இன்னும் படிக்க வேண்டும் என இங்கே சொன்னதை நினைத்து மீண்டும் சிரித்து கொண்டே என் சிற்றுரையை முடிக்கிறேன்... ஜோடா ப்ளீஸ்....

நன்றி- அபி அப்பா ஏதோ ஒரு குழுமத்திற்காக எழுதியது

No comments: