Saturday, December 24, 2011

தமிழை சிதைக்கலாமா?

(பண்புடன் குழும விவாதத்தின் ஒருபகுதி)
//நாட்டுக்கு "சுதந்திரம்' கிடைத்து இன்றைக்கு 65ஆவது ஆண்டு நடக்கிறது. 650 ஆண்டு சுதந்திர வாய்ப்பில் தமிழ் மக்கள் அடைந்த நிலை, "இங்கிலீஷ் வேண்டாம்; தமிழ் வேண்டும்'. இதுதானா? அய்யோ பைத்தியமே! தமிழை (பிறமொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்படாத) தமிழ் மூல நூல்களை, தனித் தமிழ் இலக்கிய நூல்களில் எதை எடுத்துக் கொண்டாலும், அவற்றிலிருந்து எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பதான இலக்கணப்படி அமைந்த தமிழ் "சுவை' அல்லாமல், அறிவு, பகுத்தறிவு, வாழ்க்கை அறிவு, வளர்ச்சி பெறுவதற்கான ஏதாவது ஒரு சாதனத்தை சிறு கருத்தை, பூதக் கண்ணாடி வைத்து தேடியாவது கண்டுபிடிக்க முடியுமா? கண்டுபிடித்து பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்று தமிழ் அபிமானிகளை வணக்கத்தோடு கேட்கிறேன்.

சர்வத்தையும் விஞ்ஞான மயமாக மேல்நாட்டு முறைகளைக் கொண்டு ஆக்கி, சர்வத்திலும் மேல்நாட்டானை (புதிய முறைகளை)ப் பின்பற்றி, வளர்ச்சி அடையவே முயற்சிக்கிறோம். திட்டம் போடுகிறோம். இந்தக் காரியங்களுக்குதமிழர் – முத்தமிழர் சங்கங்களையே நம்பி என்ன காரியத்திற்கு, ஆங்கிலக் கருத்தோ,இங்கிலீஷ் சொல்லோ, ஆங்கிலேயனிடம் பயிற்சியோ இல்லாமல் இங்கிலீஷை பகிஷ்கரித்து விட்டு என்ன சாதித்துக் கொள்ள முடியும்?பலரும் அறிந்த சொல்லைப் புறக்கணிப்பானேன் ?

சாதாரணமாக பிரயாணத்திற்குப் பயன்படும் ரயில், கார், லாரி, பஸ், சைக்கிள் என்ற பெயர்களை எதற்காக மாற்ற வேண்டும்? இந்தியாவில் உள்ள பல நூற்றுக்கணக்கான மொழி பேசும் மக்களும், இந்தப் பெயர்களை அப்படியேதான் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.–

தமிழ் படித்தால் நடைப்பிணமாய் இருக்கலாம்...தமிழ் மக்கள் என்னும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்னும் தமிழானது, முன்னேற்றம் என்னும் உடல் தேறுவதற்கோ வளர்வதற்கோ பயன்பட்டு இருக்கின்றதா? பயன்படுமா? "தாய்ப்பால் சிறந்தது' என்பதில் தாய்ப்பாலில் சக்தியும், சத்தும் இருந்தால்தான் அது சிறந்ததாகும். இங்கு தமிழ் என்னும் தாயே சத்தற்றவள் என்பதோடு, நோயாளியாகவும் இருக்கும்போது அந்தப் பாலைக் குடிக்கும் பிள்ளை உருப்படியாக முடியுமா? தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்கு பாலும் ஊறும்; அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும்!


இப்படிப்பட்ட இந்தத் தாய்ப் பாலைக் குடித்து வளர்ந்த பிள்ளைகள், இந்நாட்டிலேயே நடைப்பிணமாய் இருப்பதைத் தவிர, அதுவும் மற்றவன் கை காலில் நடப்பதைத் தவிர, உழைப்புக்கு – காரியத்துக்குப் பயன்படும்படியான, தன் காலால் தாராளமாய் நடக்கும்படியான பிள்ளை – ஒற்றைப் பிள்ளை தமிழ்நாட்டில் இருக்கின்றதா என்பதை அன்பர்கள் காட்டட்டுமே – என்றுதான் பரிவோடு கேட்கிறேன்.இன்றைய தினம் கூட மேற்கண்ட தமிழ்த் தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள், இங்கிலீஷ் புட்டிப் பாலை அருந்தி இருப்பார்களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ சக்தியும், திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள் வாழ்க்கை நிலையே வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரம் உள்ள உழைப்பாளிகளாகி இருப்பார்கள்.//

திரு செல்வன் அவர்களே,

தமிழ் பற்று, தமிழ் மொழி மீதான ஆர்வம் என்பதை நீங்கள் தவறாக புரிந்துகொண்டிருக்கிறீர்கள்.

தமிழக மக்களும்தான். அதற்கு அர்த்தம் ஒருவர் தமிழ் மொழி தவிர மற்ற மொழிகளை கற்கக் கூடாது என்று பொருளல்ல. நீங்கள் எத்தனை மொழி வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். அதற்காக தாய் மொழியை மறக்கவோ அல்லது அதனை சிதைக்கவோ கூடாது என்பதைத்தான் தமிழ் மொழி ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவதெங்கும் காணோம் என்று பாரதி சொன்னான். அதைத்தான் நாங்களும் சொல்கிறோம். நீங்கள் மற்ற மொழிகளை பயின்றால்த்தான் தமிழ் மொழியின் இனிமை தெரியும்.

வட மொழியும், ஆங்கிலமும் இன்னும் பிற மொழிகளையும் தமிழர் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் தமிழ் மொழியை அழிக்கக் கூடாது.

நடப்பது என்ன? சாதாரண மக்கள் வரை வேண்டுமென்றே தமிழில் ஆங்கிலத்தை கலந்து பேசி அதனை பெருமை என்று கருதுகின்றனர். இவர்கள் யாரும் முழுக்க முழுக்க ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ பேசினால் யாரும் குறை சொல்லப்போவதில்லை. தமிழ் தெரியாத ஒரு வேற்று மாநிலத்தவர், நாட்டவர் அப்படித்தான் பேசி வருகின்றனர். அவர்களை யாரும் குறை சொல்லவில்லை.

தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்கள் வேண்டுமென்றே மொழிக்கலப்பை செய்வதைத்தான் தவிர்க்க வேண்டும் என்கிறோம். ஆங்கிலம் படிக்காதீர்கள் என்று சொல்லவில்லை. கருத்துப் பரிமாற்றத்திற்கு ஆங்கிலம் அவசியம். இந்தி மொழியை தமிழ் அரசியல்வாதிகள் வெறுக்கக் காரணம் அதன் திணிப்புதானே தவிர. அந்த மொழியை அல்ல.

இது வட இந்திய அரசியல்வாதிகளின் செயலுக்கான எதிர்வினையே தமிழக அரசியல்வாதிகளின் இந்தி எதிர்ப்பு. மற்றபடி தனித் தமிழ் ஆர்வலர்கள் தமிழ் மொழியைத் தவிர வேறு மொழிகளை படிக்காதீர்கள் என்று சொல்வதாக நீங்கள் நம்பினால் அது தவறு.

ஆங்கிலம் கலந்து பேசினால்த்தான் கௌரவம் என்று நினைத்து சாதாரண மக்கள் ஒரு மயக்கத்தில் உள்ளனர். அவர்கள் முழுக்க முழுக்க ஆங்கிலத்தை தெளிவுற கற்று அம்மொழியை பேசினால் தவறில்லை. ஆனால் ஆங்கிலத்தையும் கற்காமல், தமிழையும் கற்காமல் இரண்டு மொழியும் அழித்து மூன்றவது ஒரு மொழியை உருவாக்கி வருகின்றனர். இதற்குத்தான் தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

தற்போதுள்ள நிலைமை தொடர்ந்தால் இன்னும் நூறு ஆண்டுகளில் தமிழ் மொழியை சுத்தமாக மறந்து விடுவார்கள். அதன் பின் இந்த பிரச்சனையே இருக்காது. பின்னர் ஆராய்ச்சியாளர்கள், பண்டிதர்கள் தமிழை விழுந்து விழுந்து ஆராய்ச்சி செய்வார்கள். சாதாரண மக்கள் தங்களுக்குத் தெரியாமலேயே அந்த மொழியை மறந்து விடுவார்கள்.

அந்த நிலையை தடுக்கத்தான் மொழி ஆர்வலர்கள் முயற்சி செய்கிறார்கள். மற்றபடி மாற்று மொழிகளை கற்க வேண்டாம் என்று சொல்லவில்லை.
•••••••••••••••••••••••••••••••••••••••
//அடுத்தவனை அது பேச வேண்டாம், இதை செய்யவேண்டாம் என்று திட்டுவதை தவிர தமிழ் ஆர்வலர்கள் செய்த உருப்படியான காரியங்கள் ஏதேனும் உண்டா?

அடுத்தவனுக்கு தமிழ் படி தமிழில் பேசு என்று உபதேசம் செய்து விட்டு தானும் தன்னுடைய குடும்பமும் ஆங்கிலமும் இந்தியும் கற்று முன்னேறுவது தானே இந்த தமிழ் ஆர்வலர்களின் பல்லாண்டு செயல்.

தமிழை வளர்க்க செய்த, செய்கின்ற, செய்யப்போகின்ற செயல்களை கொஞ்சம் சொல்லுங்களேன்.

ராஜசங்கர்//

திரு ராஜா சங்கர் அவர்களே,

தமிழ் ஆர்வலர்கள் யாரையும், எதையும் பேச வேண்டாம் என்று சொல்லவில்லை. தமிழில் எதையும் கலக்காதீர்கள் என்றுதான் சொல்கிறோம். மற்றபடி நீங்கள் உலகத்தின் எந்த பாஷையையும் பேசினாலும் நாங்கள் வருத்தப்படப்போவதில்லை.

நீங்கள் தமிழை பேசாவிட்டாலும் யாரும் வருத்தப்பட மாட்டார்கள். ஆனால் தமிழில் கலப்படம் செய்யாதீர்கள்.

எந்த மொழியை கற்றுக் கொள்ளுங்கள். அதற்கு தடையில்லை. தமிழை மட்டும் அழிக்காதீர்கள் என்பதுதான் எங்களது வேண்டுகோள்.
•••••••••••••••••••••••••••••••••••••••

//வேற்று மொழி தெரியாதவன் தமிழில் மொபைல் போன் என்பதை எப்படி சொல்லுவான்?? கைப்பேசி/குறுபேசி/செல்பேசி என்று அதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் படுத்தல் கள்.

இதில் கைப்பேசி என்று சொன்னால் குறு பேசி என்று சொல்பவர்களுக்கு கோபம். செல்பேசி என்று சொன்னால் இந்த இரண்டு பேருக்கும் கோபம். இதிலேயே யாரும் ஒன்றும் செய்யவில்லையே? //

திரு ராஜா சங்கர் அவர்களே,

நீங்கள் சொல்வது தமிழ் படுத்துதல்கள். அதுவல்ல தமிழ் ஆர்வலர்களின் வேலை. அது சில ஆர்வக் கோளாறுகளால் செய்யப்படுவது. இதனால் யாருக்கும் கோபம் வரவில்லை.
•••••••••••••••••••••••••••••••••••••••
//அன்றாடம் சோத்துக்கு உழைப்பவன் செல்போன் என்று சொல்லிவிட்டு அடுத்தவேலையை பார்க்கபோவானா? அல்லது செந்தமிழில் பேசி வயிற்றை காயப்போடுவானா? //

வயிற்றுக்குச் சோறு கிடைக்கிறது என்றால் ஹீப்ரூ வேண்டுமானாலும் பேசுங்கள் என்றுதான் சொல்கிறோம். அதற்காக நான் ஹீப்ரூவை தமிழில் கலந்து பேசுவேன் என்பதைத்தான் ஏற்றுக் கொள்ள முடியாது.
•••••••••••••••••••••••••••••••••••••••
//தமிழில் பெயர்வைக்க, கருத்துக்களை சொல்ல தமிழை படித்திருக்கவேண்டும். கண்டுபிடிப்புகளை நிகழத்தியிருக்கவேண்டும். அதற்கெல்லாம் கையாலாகாதவர்கள் ஏன் தமிழில் பேசு என கூவ வேண்டும்? //

தமிழை படிக்கவிடாமல் செய்து வருவதும் தமிழ் மொழிக்கு எதிரான சதி என்கிறோம். கண்டுபிடிப்புகளுக்கும் மொழிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன? கண்டுபிடிப்புகளை வேறு மொழிகளில் சொல்லத்தான் வேறு மொழி தேவை. தமிழர்கள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை என்று நீங்களாக நினைத்துக் கொண்டால் அதற்கு நாங்கள் எதுவும் செய்ய முடியாது. தமிழர்கள் கையாலாகாதவர்கள் இல்லை. அவர்கள் சாதனை செய்து வருகிறார்கள்.

அவர்களது சாதனை பெரும் சாதனையாக ஆகிவிடுமோ என்றுதான் சிலர் அஞ்சுகின்றனர். மற்றபடி நீங்கள் எந்த மொழியில் பேசினாலும் கவலை இல்லை. தமிழில் வேறு மொழிகளை கலந்து பேசாதீர் என்றுதான் சொல்கிறோமே தவிர, பேச வேண்டாம் என்று சொல்லவில்லை.
•••••••••••••••••••••••••••••

நீங்கள் தமிழை பேசாவிட்டாலும் யாரும் வருத்தப்பட மாட்டார்கள். ஆனால் தமிழில் கலப்படம் செய்யாதீர்கள்.

ராஜசங்கர்,

மிதிவண்டியும், தொலைக் காட்சியும்,மின்னஞ்சலும் தமிழர் கண்டறிந்ததா..? அன்றாட வாழ்விற்க்குள் வரவில்லையா என்ன.அவ்வளவு ஏன் கணிணி, கணிப்பொறி என்று சுஜாதா காலத்தில் எவ்வளவு சர்ச்சைகள் வந்தது. சில படுத்தல்கள் காரணமா கலப்பை ஏற்றுக்க வேண்டியது இல்லையே. நேரிடையா முழுமையா ஆங்கிலத்தில் பேசிக்கலாமே.. ?

நமக்கு பழைய வரலாற்றை அறிய சமஸ்கிரத கலப்பு தேவை படுகிறது. வருங்காலத்தில் வாழ ஆங்கில கலப்பு தேவை படுகிறது எனில், காலந்தோறும் பிற மொழிகள் கலப்பிற்க்கு விட்டு கொடுத்தால் தமிழ் எங்கு மிச்சம் நிற்க்கும்..?

அவ்வளவு ஏன் நீங்கள், நான், செல்வன், தேவன் என நாம் அனைவரும் சமகாலத்தில் பிறமொழி வாழ்வியல் (அலுவலக) சூழலில் வாழ்ந்து கொண்டு இங்கு தமிழில் பேசவில்லையா..?

தமிழ் பயணி
•••••••••••••••••••••••••••••
செல்வன்

ரேம்போ உணர்ச்சிவசப்பட்டு பைத்தியம் என்றெல்லாம் கூறி இருக்கிறீர்கள்..

அந்த பாடலில் ஆங்கிலம் கற்க கூடாது என்றோ பேசக்கூடாது அன்றோ இல்லை மொழி கலப்பில்லாமல் பேசுங்கள் என்று தான் இருக்கிறது. அதற்க்கு எதற்கு இவ்வளவு வியாக்கியாங்கள்..

இன்னைக்கு நத்தார் விடுமுறை நாள்.. பொழுது போகவில்லையா..

அப்புறம் என்ன அது //பகிஷ்கரித்து விட்டு//???

பாக்கியராசன் சே
•••••••••••••••••••••••••••••••••••••••
//நான் எந்த மொழியில் எப்படி பேசவேண்டும் என்பதை சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. வேண்டுமானால் நீங்கள் தனித்தமிழில் பேசி வாழந்து காட்டுங்கள். அது எப்படியிருக்கிறது என்று பார்த்து மற்றவர்கள் பின்பற்றுவார்கள்.

சினிமாவில் ஒய் திஸ் கொலைவெறி என்று பாடினால் நாக்கில் ஜொள் வழிய கேட்கவேண்டியது. என்கு டமில் த்ரியாத் என்று சொன்னால் அதையும் கேட்டு கொண்டாடவேண்டியது. அப்புறம் எவனோ தமிழில் பேசவில்லை என ஒப்பார் வைக்கவேண்டியது.

முதலில் நீங்கள் ஒழுங்காக தமிழ் பேசி வாருங்கள். அப்புறம் அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்லலாம்.//
//மிதிவண்டி, தொலைக்காட்சி, மின்னஞ்சல் என்றெல்லாம் நடைமுறை வாழ்க்கையில் எத்துணை பேர் சொல்லுகிறார்கள்? புழங்குகிறார்கள்? ஒரு சதவீதம் அல்லது இரண்டு சதவீதம் இருக்குமா?

கணினி என்பது ஏன் புழக்கத்தில் இருக்கிறது என்றால் அந்த சொல் பன்னெடுங்காலமாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. சாப்ட்வேர் என்பதற்கு இது தான் சொல் என எல்லோரும் ஒரு ஒருமித்த கருத்துக்கு வந்துவிட்டார்களா?

//நமக்கு பழைய வரலாற்றை அறிய சமஸ்கிரத கலப்பு தேவை படுகிறது. வருங்காலத்தில் வாழ ஆங்கில கலப்பு தேவை படுகிறது எனில், காலந்தோறும் பிற மொழிகள் கலப்பிற்க்கு விட்டு கொடுத்தால் தமிழ் எங்கு மிச்சம் நிற்க்கும்..? //

ஏனென்றால் நாம் எதையும் செய்வது கிடையாது. அறிவியலுக்கு ஏற்றவாறு எதையும் மொழிபெயர்த்தோ தமிழ்படுத்தியோ வைக்கவில்லை. ஏதேனும் ஒரு புத்தக கண்காட்சிக்கு போய் பாருங்கள் அறிவியல் நூல்கள் எத்துணை இருக்கிறது என?

சமையல்கலை, சினிமா, சோதிடம், கற்பனைகதைகள், சிறுகதைகள், கவிதை என்றெல்லாம் தான் இருக்குமே தவிர வேறு ஏதுவும் இருக்காது. அப்படியிருக்க, தமிழ் எப்படி வாழும்?????

நமக்கு தேவை, சினிமா, கவிதை, கதை அடுத்தவனை திட்டுவது. அப்புறம் தேவலோகத்தில் இருந்து யாரேனும் வந்து தமிழை வாழவைப்பார்களா????

//
அவ்வளவு ஏன் நீங்கள், நான், செல்வன், தேவன் என நாம் அனைவரும் சமகாலத்தில் பிறமொழி வாழ்வியல் (அலுவலக) சூழலில் வாழ்ந்து கொண்டு இங்கு தமிழில் பேசவில்லையா..? //

முழுக்க முழுக்க செந்தமிழில் பேசவில்லை. இப்போது பேசவும் முடியாது.

ராஜசங்கர்//


ஐயா ராஜா சங்கர் அவர்களே,

உங்களை யாரும் எந்த மொழியிலும் பேச சொல்லவில்லை.

தமிழில் கலப்படம் செய்யாதீர்கள் என்பது எங்களது கோரிக்கையே. அதையும் ஆணையாக சொல்லவில்லை.

மக்களிடம் காணப்படும் இழிநிலையே திரைத் துறையிலும் உள்ளது. மக்களிடம் உள்ள நிலை மாறும்போது இந்த நிலை மாறலாம்.

மற்றபடி நாங்கள் முடிந்தவரை தமிழில் பேசி, எழுதி வருகிறோம்.
•••••••••••••••••••••••••••••••••••••••
//முழுக்க முழுக்க செந்தமிழில் பேசவில்லை. இப்போது பேசவும் முடியாது. //

அது உங்களது நம்பிக்கை. மற்றபடி ஏற்கனவே கலந்துவிட்ட சமஸ்கிருத, ஆங்கில சொற்களை நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை. இனியும் அதிகமான வேற்றுமொழிச் சொற்களை புகுத்தாதீர்கள்.

மொழியை சிதைக்காதீர்கள் என்றுதான் சொல்கிறோம்.

ஏழு கோடிப்பேரில் தமிழறிந்த, கற்ற, புலமை பெற்ற அறிஞர்கள், ஆசிரியர்கள் ஒரு ஒரு லட்சம் பேராவது இருக்கமாட்டார்களா?

அந்த ஒரு லட்சம் பேரும் ஆளுக்கு ஏதேனும் ஒன்று செய்திருந்தாலே இன்னேரம் தமிழில் நல்ல நூல்கள் வந்திருக்கும், நல்ல படிப்பாளிகள் கிடைத்திருப்பார்கள். அந்த ஒரு லட்சம் பேர் ஒரு பத்துவருடத்திலேயே ஒரு கோடிப்பேராவது ஆயிருக்கமாட்டார்களா?

இந்த அளவுக்கு தமிழ் பற்றை வைத்துக்கொண்டு ஏன் கோரிக்கை கீரிக்கை எல்லாம் வைக்கவேண்டும்?

கையாலாகாதவர்கள் சொல்வதற்கு எந்த மதிப்பும் கிடையாது.

வளராத மொழி, மாற்றங்களை தாங்காத மொழி சிதைந்தே போகும். அது காலத்தின் கட்டாயம்.

வீடு கட்டினால் பராமரிக்கவேண்டும். பராமரிக்காதவீடு இடிந்தே போகும்.

ராஜசங்கர்


•••••••••••••••••••••••••••••••••••••••

ஐயா ராஜா சங்கர் அவர்களே,

அந்த தமிழர்களிடம்தானே நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். தெலுங்கர்களிடமோ, மலையாளிகளிடமோ நாங்கள் தமிழை பேசுங்கள், தமிழை வளருங்கள் என்று கோரிக்கை விடுக்க வில்லையே.

எங்களது ரத்த உறவுகளான அந்த ஏழு கோடிப்பேருக்கும், அவர்களிடையே உள்ள கற்றறிந்தோருக்கும்தான் நாங்கள் இந்த கோரிக்கையை முன் வைக்கிறோம்.

தமிழை கற்றறிந்த மாற்று இனங்களுக்கோ, தமிழை வியாபார மொழியாக பேசும் மார்வாடி போன்ற இனத்தவருக்கோ நாங்கள் கோரிக்கை விடுக்க வில்லை.

அந்த ஏழுகோடிப்பேரில் உள்ளவர்களாகத்தான் தமிழ் ஆர்வலர்கள் இந்த கோரிக்கையை முன் வைக்கிறார்கள். இப்போதே ஏராளமான வாசிப்பும், படைப்புகளும் உருவாகி வருகின்றன. இன்னும் சிறிது காலத்திற்குள் நீங்கள் விரும்பும் வகையில் கோடிக்கணக்கான படைப்புகள் உருவாகும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

//வளராத மொழி, மாற்றங்களை தாங்காத மொழி சிதைந்தே போகும். அது காலத்தின் கட்டாயம். வீடு கட்டினால் பராமரிக்கவேண்டும். பராமரிக்காதவீடு இடிந்தே போகும். //

உங்களது கருத்தை ஏற்கிறேன். ஆனால் அந்த வளர்ச்சி முறையான வளர்ச்சியாக இருக்க வேண்டும். வளர்ச்சி என்ற பெயரில் சிதைவு இருக்கக் கூடாது.

உடலில் ஒரு பாகம் மட்டும் வளர்ந்தால் எப்படி இருக்கும்? அதுதான் கூடாது என்கிறோம்.

வீட்டுப் பராமரிப்பு பணிகளில் ஒன்றுதான் மொழிக் கலப்புச் செய்யாதீர்கள் என்பது.

No comments:

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...