Thursday, December 29, 2011

உணர்ச்சி அரசியலை தவிர்ப்பீர்

தற்போது தமிழக மக்களிடையே கட்சி பாகுபாடற்ற ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது. அடுக்கடுக்கான நிகழ்வுகள் தமிழ் இளைஞர்களையும் அவர்களது சிந்தனையையும் தூண்டியுள்ளன. ஈழப்போரில் ஆரம்பித்து மீனவர் படுகொலை, மூவருக்கு தூக்குத் தண்டனை, கூடங்குள அணுத் திணிப்பு, முல்லைப் பெரியாறு பிரச்சனை என ஒவ்வொன்றாக அவர்களின் உணர்வுகளை தூண்டியுள்ளன.

இதில் அரசியல் கட்சியில் உள்ளவர்கள் என்ன செய்வதென்று தங்களது தலைமையை நோக்க, எந்தவித அறிகுறிகளையும் காணமல் அவர்கள் உள்ளுக்குள் புழுங்கி தவித்து வருகின்றனர். அரசியல் கட்சி சாராதவர்கள் தங்களது அதிகாரம் இப்படி பறிக்கப்பட்டு விட்டதே என்று உள்ளுக்குள் வெம்பி புலம்பி வருகின்றனர்.

தமிழகத்தில் பெரும்பாலும் படித்த மேல்த்தட்டு வர்க்கத்திடம் தமிழ் உணர்வு மழுங்கடிக்கப்பட்டு விட்டது. அப்படி உணர்வு இருந்தாலும் அவர்கள் யாரையும் நம்பி அதை வெளிக்காட்டத் தயாராக இல்லை. கீழ்த்தட்டு மக்கள் தங்களது உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். இதில் இயலாமையின் உச்ச நிலையை அடைந்த முத்துக்குமாரன், செங்கொடி போன்றோர் தங்கள் இன்னுயிரை துறந்தனர். முல்லைப் பெரியாறு போராட்டத்திலும் தங்களது உயிரை விட சிலர் முயன்றனர்.

ஆனால் தமிழகத்தின் தற்போதைய காலகட்டம் மிகவும் முக்கியமான கால கட்டம் ஆகும். தமிழகம் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்த நிலையில் உள்ளது. ஆனால் இந்தியாவுக்காக ஒரு காந்தி இருந்தார். தமிழகத்திற்கு ஒரு தலைவர் இல்லை. எனவேதான் பொங்கி வரும் உணர்வை தமிழர்கள் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். சுதந்திரம் பெற்ற பின் இந்தியா, தமிழர் தொடர்பான பிரச்சனைகளில் தமிழருக்கு எதிரான நிலையையே எடுத்து வந்திருக்கிறது. எனவே இனியும் இந்தியாவை நம்பி பலன் இல்லை.

செய்ய வேண்டியது என்ன?
எனவே இளைஞர்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கை, தமிழர் பாதுகாப்பு, உரிமைகளை கருத்தில் கொண்டு தொலை நோக்குப் பார்வையுடன் சிந்தித்துச் செயல்பட வேண்டும். அவர்கள் உணர்வு கொண்ட சக தோழர்களை அடையாளம் காண வேண்டும். அவர்களோடு இணைந்து அறிவுப் பூர்வமாக செயல்பட வேண்டும். தனித் தனி அமைப்புகளில் இருந்து கூட ஒன்றாக செயல்படலாம். ஆனால் நோக்கம் ஒன்றாக இருக்க வேண்டும். அவ்வாறு செயல்படும்போது உங்களுக்குள் சிறந்த தலைவர்களை நீங்கள் அடையாளம் கண்டு தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

அதிகாரத்தை பெற முடிகிறதோ இல்லையோ கிடைக்கிற நேரங்களில் நேரடியாக மக்களிடம் செல்லுங்கள். வீடு வீடாக, தெரு தெருவாக சென்று அவர்களது பிரச்சனைகளை கண்டறியுங்கள். அந்த பிரச்சனைகளை போக்க என்னனென்ன செய்ய வேண்டுமோ அவற்றை செய்யுங்கள். அதில் தோல்வி ஏற்படலாம். அதனால் துவண்டு விடாதீர்கள். தொடர்ந்து மக்களோடு இணைந்து பணியாற்றுங்கள். நீங்கள் மக்களின் மனதில் இடம் பிடித்து விடலாம். அப்போது நீங்கள் மக்களின் பிரதிநிதிகளாகலாம்.

சட்டசபையில் திராவிட கட்சிகளைவிட அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும். அதன் பின் அரசியலில் புதிய மாற்றங்களை கொண்டு வரவேண்டும். தமிழ் மக்கள் சிறந்த அரசியலை நடத்தக் கூடியவர்கள் என்பதை நிரூபித்துக் காட்டவேண்டும். அதற்காக என்னென்ன சாதனைகள் செய்ய வேண்டுமோ அத்தனை சாதனைகளையும் செய்ய வேண்டும். முதலில் கற்றறிந்தோரை ஒன்று சேருங்கள். அவர்களின் வட்டங்களை பெரிதாக்குங்கள்.

இந்த வட்டம் பெரிதாகும்போது உங்களது வேலைகள் எளிதாகிவிடும். சாதிப் பிரச்சனை தமிழனுக்கு முதல் எதிரி என்பதை கண்டுகொள்ளுங்கள். எனவே மாற்றுச் சாதிகளைச் சேர்ந்த ஒத்த கருத்துடைய தோழர்களை ஒன்று சேருங்கள். அனைவருக்கும் சாதிச் சமநிலையை உணர்த்துங்கள். அதன் பின் சாதி மறைந்து விடும். படித்த பெரியவர்களை ஒன்று சேருங்கள். அவர்களின் அறிவுரையின்படி ஆங்காங்கே நிலவும் சிறு சிறு பிரச்சனைகளை முளையிலேயே கிள்ளிப் போடுங்கள். தமிழ்ச் சாதிகள் இடையே அனைவரும் சமம் என்ற எண்ணம் ஏற்பட வேண்டும். அதன் அடுத்த நிலைதான் சாதியற்ற சமுதாயம். சாதிச் சமநிலை ஏற்பட்டால் சாதியற்ற சமுதாயம் தன்னால் உருவாகும். சாதிகள் ஒன்றிணைந்தால் தமிழனை ஏமாற்றுபவர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும்.

சமூக ஒருங்கிணைப்பை உருவாக்குங்கள். ஒவ்வொரு பிரச்சனைக்கும் அரசாங்கத்தையே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்காமல், மக்கள் தாங்களாக தேவைகள் மற்றும் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுங்கள். எனவே என் உணர்வுள்ள தமிழ் மக்களே உணர்ச்சி வசப்பட வேண்டாம். உணர்ச்சி அரசியலை கைவிடுங்கள். நிதானத்துடன் தொலைநோக்குப் பார்வையுடன் அரசியல் செய்ய ஆரம்பியுங்கள். உங்களது எதிர்காலம் உங்கள் கையில்தான் உள்ளது.

1 comment:

தேவன் said...

ungal karuthu murtilum unmai, nitchayam ungal athangathai print pottu ovoru iljan kaiyilum kodukkirean, cadalure mavattam murtilum pathikkappattullathu agaiyal thalaivar suravali surtupayanam merkollavendum, oru oru kiramamaga sentru makkali santhikkavendum, puyal mudintha udan thalaivar varavendum. by sirpi paandiyan,nagaraseyalalar, chidambaram.