Monday, December 26, 2011

இந்தியா தானாக தன்னை உடைத்துக் கொள்ளுமா?

// சகோதரர் தேவன் அவர்களுக்கு!

தமிழர்களுக்கென்று தனி நாடு உலகின் எந்த மூலையிலாவது வர வேண்டும் என்று வெந்து கொண்டிருக்கும் புண்பட்ட தமிழர்களில் அடியேனும் ஒருத்தி தான்...
தனிப்பட்ட முறையிலும், பொதுமக்கள் ரீதியிலும் ஈழத்தமிழச்சியாக எனகென்று என் நாடு இருந்தால் எத்தனை நன்மை என்று ஏங்கி ஏங்கி சாகும் வரை வெந்து கொண்டிருக்கும் படி என் வாழ்வில், எங்கள் குடும்பங்களில் உறாவுகளில் நண்பர்களில், அயலவர்களில் என்று 1956-முள்ளியவளை வரை பாரிய இழப்புகளை அனுபவித்த ஈழத்துப் பெண் தான் நான்..!

ஏக்கம் தனி நாட்டுக்கானதாயிருந்தாலும் ..அதன் சாத்தியக்கூறுகளையிட்டு இன்று வரை கேள்விக்குறிகளோடு மட்டுமே காலம் போய்க் கொண்டிருக்கிறது. இன்று வரை தனி ஈழத்துக்காக ஏங்கிய நான் இறாந்து போனாலும் கூட தனி ஈழத்துக்கு எதிரான கருத்துக் கொண்டவர்களின் காலத்திற்கு முன் அவர்கள் கண்களுக்கு முன் தனி நாடு கிடைக்க வேண்டும் என்று விரும்புபவள் நான் .

ஆனாலும் தனிநாட்டுக்கு எதிரான கருத்துக் கொண்டவர்களின் எகத்தாளாங்களையே இன்று வரை சகித்துக் கொண்டிருக்கும் பரிதாபத்துக்குரிய ஈழத் தமிழர்களில் ஒருவள்...தான் நான்!!

சமீப காலமாக தமிழகத்தில் தலையெடுத்திருக்கும் தனித் தமிழ் நாட்டுக்கான போராட்டம் பற்றி நானும் செய்திகள் மூலம் அறிந்து கொண்டிருக்கிறேன். எங்களுக்கு கிட்டாதது எங்கள் தொப்புள் கொடி உறவுகளுக்காவது கிட்ட வேண்டும் என்பது எனது அவா.

ஆனால்....என்னிடம் சில சந்தேகங்களும், சில கருத்துகளும் இருக்கின்றன. அவற்றை இங்கு உங்களுடன் பகிர்வதில் தவறில்லை என்றே எண்ணுகிறேன்.

தனித் தமிழ் நாட்டுக்கான புரட்சி என்பது இன்னும் செயல் வடிவில் தமிழகத்தில் வரவில்லை; மத்திய அரசுக்கு பூச்சாண்டி காட்டும் விதத்தில் அதை ஒரு பகடைக் கருத்தாகவே இந்த வினாடி வரை தமிழகத்தில் அரசியல் வாதிகளும் சரி, அரசியலைப் பிடிக்க நினைக்கும் மற்றவர்களும் சரி உபயோகப்படுத்துகின்றனர் என்பது தான் என் கருத்து.

தமிழகத்தின் வெகு சாதாரண பொதுமக்களில் கூட அமைதியாயிருந்த தமிழ் உணர்வு மிக்க இளைஞர்களை முள்ளிவாய்க்கால் போர் தட்டி எழுப்பியிருப்பது உண்மை தான். அவர்கள் மனங்களில் இந்தியாவின் பச்சைத் துரோகத்தை மன்னிக்கும் மாற்றுக் கருத்துக்கு இடமில்லாமல் இருப்பதும் உண்மை தான்...

ஆனால் இந்த உணர்வும் சரி , தேசியத் தலைவரின் விடுதலைப் போராட்டத்தை போற்றும் வீறும் சரி இன்றைய காலகட்டத்தில் உங்கள் உணர்வுகளை எந்த வடிவில் பதிவு செய்ய போகிறது என்பது தான் எனது சந்தேகம்???//


சகோதரி சுவாதி அவர்களே,
இதுநாள் வரை தமிழ் மக்கள் இந்திய தேசத்தில் நம்பிக்கை வைத்து அதையே தங்களது நாடு என்று நம்பி வந்தனர். ஆனால் இந்தியா தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. இது அண்மைக் காலங்களில் தமிழர்களால் தெளிவாக உணரப்பட்டு வருகிறது.

இன்றைய தமிழ் அரசியல் நிலைக்கு வேறு யாரும் காரணம் அல்ல தமிழர்களே. தமிழர்கள் தான், தங்களது குடும்பம், வேலை, தொழில், சம்பாத்தியம் என்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு வாழ்ந்து வந்தனர். அரசியலில் ஆர்வம் காட்டவில்லை. அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் சாதாரண மக்கள் மட்டுமல்ல கற்றறிந்த சான்றோர்களிடமும் ஏற்படவில்லை. அத்தகைய எண்ணம் ஒருசிலரிடம் இருந்தாலும் அவர்களது எண்ணத்தை, மக்கள் ஆதரவுடன் செயலுக்கு கொண்டு வரமுடியாதவர்களாக, அல்லது தெரியாதவர்களாக இருந்தனர். இதுதான் இன்றைய தமிழரின் நிலை. அது ஈழப்போரின்போது தமிழர்களின் இயலாமையை வெளிப்படுத்தியது. ஆனால் பலன் ஒன்றும் இல்லை. இப்போது அரசியல் செய்ய வேண்டும், உரிமைக்காக போராட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. இந்த எழுச்சியை வழிமுறைப்படுத்தும் தலைவர்கள் இல்லை. இதற்கு அவர்கள் ஊறிய இந்திய அரசியலே காரணம்.

இன்னமும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் கூட தொலைநோக்குப் பார்வையுடன் அரசியல் செய்யாமல் பிரச்சனை அடிப்படையிலான அரசியலையே செய்து வருகின்றனர். இந்த நிலை மாறும் என்று நம்புவோம். அதற்கான முன்னெடுப்புகள் நடைபெற்று வருகின்றன. அது வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.

//முத்துக்குமார் தொடங்கி சகோதரி செங்கொடி வரை கருகிச் சாம்பலானது தான் பலன்..! அவர்களுடைய உயிர்க் கொடைக்கு இன்று வரை --இந்த நொடி வரை எந்த ஒரு இளைஞனின் தமிழ் உணர்வாலும் சரி, கொந்தளிப்பாலும் சரி நிகர் காண முடிந்ததா?? அல்லது முடியுமா?? சந்தேகம் தான்!

தமிழத்தில் எந்தப் போராட்டமானாலும் ஒரு தீக்குளிப்பு தான் முன்னிற்கிறது. அல்லது அடையாள உண்ணாவிரதமாயோ ஒரு நாள் கடையடைப்பாயோ தான் இருக்கிறது. இத்தகைய போராட்டம் எந்த வகையிலும் எந்த எதிரியையும் சீந்தாது.//

தீக்குளிப்புகள் உணர்வின் வெளிப்பாட்டால் என்னசெய்வது என்று தெரியாமல் இளைஞர்கள் தங்கள் இயலாமை காரணமாகவே தற்கொலை செய்துகொள்கின்றனர். அவர்களை வழிப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆயுதப் போராட்டம் என்பது இந்திய சூழலில் சிறந்த போராட்டமாக அமையாது. காரணம் இந்தியா என்ற வல்லரசு தேசிய இனங்களை நசுக்குவதில் கரைகண்டுள்ளது. உதாரணமாக பஞ்சாப் போராட்டத்தை இந்தியா நசுக்கியதை கூறலாம்.

மேலும் காலங்காலமாகவே இந்தியர்கள் ஆயுதப்போராட்டத்தில் நம்பிக்கை இல்லாதவர்களாக இருக்கின்றனர். இதன் காரணமாகத்தான் காந்தி அமைதிப்போராட்டத்தை கையிலெடுத்தார். அது வெற்றிக்கு வழிவகுத்தது. தற்போதைய காலகட்டத்தில் அறவழிப் போராட்டத்தை இந்தியாவால் நசுக்க முடியாது. அதுவே தனித் தமிழ்நாட்டுக்கான சிறந்த போராட்ட முறையாக இருக்கும். அதற்காக அது வெறும் ஆர்ப்பாட்டமாக, உண்ணாவிரமாக இருக்கும் என்று கருத வேண்டாம். இந்திய கூட்டாச்சியின் அச்சாணியை உடைக்கும் அறவழிப்போராட்டத்தை நடத்த இயலும்.


//இந்தியாவைப் பொறுத்தவரை ....பொதுமக்களின் மனநிலையைப் பொறுத்தவரை குடும்பம், படிப்பு, வேலை, கல்யாணம், சகோதரிக்கு வரதட்சணை சேர்ப்பது, மாமனாரிடம் தலைத் தீபாவளிக்கு சீர் வாங்குவது என்ற ரீதியில் தான் வாழ்கை போய்க் கொண்டிருக்கிறது.. 4 வருடத்துக்கு ஒரு முறை காசுக்கு வாக்கு விற்பது அல்லது போன அரசின் மீதிருக்கும் அதிருப்தியை பதிவு செய்ய இன்னொரு மோசமான கட்சியை அரசுக் கட்டிலில் ஏற்றுவது , திரைப்பட நாயகனுக்கு கட் அவுட் வைப்பது, அவனுக்காக அலகு குத்துவது, மண் சோறு சாப்பிடுவது...இத்யாதி...இத்யாதி...!!

விதி விலக்காக ஏதாவது சமூகத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்து இந்த வட்டத்தை விட்டு வெளியில் வந்த இளைஞர்களுக்கும் போராட்ட வடிவத்தின் குழப்ப நிலையில், மனதுக்கு பிடித்த ஒரு அரசியல்வாதி அல்லது நடிகன் பின்னால் ஊர்வலம் போவதும், உண்ணாவிரதமிருப்பதுமாய் தனது போராட்டத்தை நடத்த முற்படுகிறார்களே தவிர தங்களை வழிகாட்டும் நபர் பாரிய உரிமைப் போராட்டத்தை எடுத்து நடத்தும் வலுவுடையவரா என்ற சிந்திப்பு இவர்களிடம் இருப்பதாய் தெரியவில்லை. எப்படியாவது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர அந்த தம்முடைய வீணாக்கப்பட்ட சக்தியினால் நல்ல விடியல் வருமா என்று அவர்கள் நினைத்துப் பார்ப்பதாக நான் நினைக்கவில்லை... அப்படி நினைத்திருந்தால் இப்போது இன்றைய நிலையில் எந்த அரசியல்வாதியும் தலைவர்களாக இருக்க மாட்டார்கள். //

இந்திய தமிழர்களின் குடும்ப அமைப்பு, போராட்டம் பற்றிய அச்சம் காரணமாகவே பலரும் தங்களது உணர்வை வெளிப்படுத்தவும் மறுக்கிறார்கள். இதற்கு இன்னொரு காரணம் தலைவர்கள் மீதான அவநம்பிக்கை. எந்தவொரு தலைவரும் இதுவரை கொள்கை பிடிப்போடு இருந்தது கிடையாது. எனவே மக்கள் அவர்களை நம்ப தயாராக இருப்பதில்லை. அதோடு சாதிப் பிரச்சனையும் பெரும் பிரச்சனையாக உள்ளது. தனித் தமிழகத்திற்கு முதலில் சாதிப் பிரச்சனையை வெல்ல வேண்டும். ஆனால் இந்த பிரச்சனையை போக்குவது பற்றி இதுவரை எந்த தலைவரும் சிந்திக்கக் கூட இல்லை.

அடுத்த நடவடிக்கை குழம்பிய மனநிலையில் உள்ள இளைஞர்களிடம் தெளிவை ஏற்படுத்துவது. இது போராட்டம் முறை பற்றிய தெளிவு. அரசியல் பற்றிய தெளிவு ஏற்படவேண்டும். இன்று அரசியல் என்பது தமிழகத்தில் உள்ள அதிமுக, திமுக அரசியல்தான் என்ற தவறான எண்ணம் உள்ளது. இதற்கு காரணம் தமிழக மக்களுக்கு அரசியல் பற்றிய தெளிவின்மையே. இதனை தெளிவு படுத்தினால் மக்களின் மனநிலை மாறும் அவர்கள் ஒன்று சேர்வார்கள். மக்களே பெரும் ஆயுதமாக திரள்வர் அதனை எந்த ஆயுதத்தாலும் அழிக்க முடியாது.


//இப்போதிருக்கும் அரசியல்வாதிகளை (வேதனையாகத் தான் இருக்கிறது சொல்வதற்கு ஆனால் என் மனதில் இருக்கும் அபிப்பிராயத்தை மறைக்க விரும்பவில்லை..) பார்க்கிலும் பாலியல் தொழிலாளிகள் மேலானவர்கள் என்பது என் கருத்து. திரையில் நன்றாக நடிக்க வராத நடிகன் கூட அரசியலில் குதித்ததும் அற்புதமாக நடிக்கிறான்...அடுக்கு மொழியில்வசனம் பேசுகிறான். சாதாரண வாழ்வில் நேர்மையாக் இருக்கும் மனிதன் கூட தமிழகத்தின் அரசியல் சகதியில் கால் வைத்தால் கொலைக்கும் அஞ்சாத பாதகனாகிவிடுவான்..அப்பேற்பட்ட அரசியல் விபச்சாரிகளை தலைவர்களாக பின் பற்றும் எந்த இளைஞனாலும் தன்னுடைய சரியான உணர்வுகளுக்கான தகுந்த போராட்ட வடிவமோ, விடிவோ கிடைக்கப் போவதில்லை.

பிரபாகரனுக்கு நிகரான தலைவன் வந்தால் கூட இந்தியாவில் தனித்தமிழ் நாட்டுக்கான போராட்டம் சரியாக நடத்தப்படுமா என்பது கேள்விக்குறியே....ஏனெனில் ஈழத்தின் போராட்டத்தையே ஒடுக்கிய இந்திய அரசு தன் சொந்த தேசத்தில் அப்படியொரு போராட்டம் தொடங்கப் போகிறது என்ற உடனேயே முளையிலேயே கிள்ளி எறிந்துவிடும்...இந்தியாவால் அது சாத்தியமே...உண்மையா இல்லையா?? அதுமட்டுமல்ல பிரபாகரனின் போராட்ட வடிவத்தை வழி நடத்த தற்போதைய நிலையில் நிகரான தலைமை எங்கேயுமே இல்லை..தவிர ஆயுதப் போராட்டத்தில் உயிர்களைப்பறி கொடுக்க இன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் எந்த இளைஞனும் விரும்புவான் என்று நான் நினைக்கவில்லை விதிவிலக்காக சில செங்கொடிகள் , சில முத்துக் குமாரர்களைத் தவிர..அவர்கள் மட்டும் போதுமா...நாடு பெறுவதற்கு??

அரசியல் ரீதியில் பேச்சு வார்த்தை மூலம் இந்தியா தன்னைத் தானே துண்டாக்கிக் கொள்ளுமா என்ன?? //


இப்போதுள்ள அரசியல்வாதிகள் சூழ்நிலையால் அரசியல்வாதிகள் ஆனவர்கள். வேறு மாற்று இல்லாத காரணத்தால் மக்கள் இவர்களை தேர்ந்தெடுத்து வருகின்றனர். இவர்களை மக்கள் நம்பாத நிலையில் இவர்கள் இல்லாத நிலை ஏற்படும். அது தனித் தமிழ் நாட்டிற்கு வழிவகுக்கும்.

நிச்சயம் பிரபாகரனின் வழியில் சென்றால் இந்தியாவிடமிருந்து சுதந்திரம் பெற முடியாது. ஆனால் காந்தியின் வழியில் சென்றால் இந்தியாவால் தமிழக சுதந்திரத்தை தடுக்க முடியாது. தமிழ்நாட்டின் சுதந்திரத்திற்கு பெரிய போராட்டங்களோ, உயிர்ப்பலிகளோ தேவையில்லை. மக்களின் ஒருமித்த ஆதரவு இருந்தால்போதும். மக்களை அலைக்கழிக்காமல் மாபெரும் போராட்டங்களை நடத்திக் காட்டலாம்.

நிச்சயமாக இந்தியா தானாக தமிழ் நாட்டிற்கு சுதந்திரம் அளிக்க முன் வராது. ஆனால் அது அந்த நிலைக்குத் தள்ளப்படலாம். இன்று காஷ்மீர், பஞ்சாப், வட கிழக்கு மாநிலங்கள் மனதில் தாங்கள் இந்தியர் என்ற எண்ணம் இல்லை. அவர்கள் தாங்கள் விரும்பாவிட்டாலும் கட்டாயத்தின் காரணமாக இந்தியாவுடன் இருந்து வருகின்றனர்.

ஒருவேளை சோவியத் யூனியனில் ஏற்பட்டது போன்ற நிலை இந்தியாவில் ஏற்பட்டால் இந்த மாநிலங்கள் தமிழ் நாட்டுடன் தாங்களாகவே சுதந்திரத்தை அறிவித்துக் கொள்ளலாம். அப்போது இந்தியாவால் ஒன்றும் செய்ய இயலாது. அதற்கு முன்னதாக தமிழ் தேசியவாதிகள் தனிநாட்டை உருவாக்கத் தேவையான அளவுக்கு தங்களை வளர்த்துக்கொள்ள கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அவர்கள் அந்த தகுதியை பெற்ற பின்னர் வெறுமனே காத்திருந்தால்போதும் இந்தியா சுதந்திரத்தை தந்துவிடும். ஏனெனில் இந்தியாவை உடைக்க இந்தியர்கள் கனகச்சிதமாக செயல்பட்டு வருகின்றனர்.

சகோதரிக்கு எந்தவித கேள்விகளையும் தாராளமாக கேளுங்கள், பதில் சொல்கிறேன்.

No comments: