Wednesday, January 11, 2012

5 தலைமுறைகளுக்குப் பின் தமிழ்நாடு? கற்பனையா? . . . .

நண்பன் கிருஷின் வற்புறுத்தலால் இந்தியா செல்லும் சுற்றுப் பயணத்திற்கு சம்மதித்தான் மூர். அவர்களது குடும்பம் அமெரிக்காவில் குடியேறி நான்கைந்து தலைமுறைகளைக் கடந்துவிட்டது. தாத்தா என்றால் அத்தனை பிரியம் மூருக்கு. அவர் இறந்து பல வருடங்கள் கடந்துவிட்டாலும், இப்போது இந்திய சுற்றுப் பயணத்திற்கு சம்மதித்தது கூட தாத்தா பாசத்தால் தான். ஒரு தடவையாவது இந்தியாவையும் குறிப்பாக தமிழகத்தையும் தனது மூதாதையர்கள் வாழ்ந்த ஊர்களையும் பார்க்கவேண்டும் என ஆசைப்பட்டார். அவரால் ஆசைதான் பட முடிந்ததே தவிர, அதை செயல்படுத்த முடியவில்லை. எனவே அவர் ஆசைப்பட்டு, செல்ல முடியாத ஒரு இடத்திற்கு தான் போகப் போகிறோம் என நினைத்து சந்தோஷப்பட்டான் மூர்.

பயணத்திற்குத் தேவையானவற்றை எடுத்துவைக்கும்போது தாத்தவுடைய "டூரிஸ்ட் ப்லேசஸ் இன் இண்டியா" புத்தகதையும் எடுத்துக் கொண்டான். லீவ் அப்ரூவாகி, டிக்கெட் புக் செய்து, ஒருவழியாக இந்தியா வந்தே விட்டார்கள் இருவரும். டெல்லி விமான நிலையத்தில் இறங்கிய அந்த நொடி தாத்தவைத்தான் நினைத்துக் கொண்டான் மூர்.

வடஇந்தியாவில் பல இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு டெல்லியில் டெண்ட் அடித்தார்கள். ஓரிரு நாட்களில் தென்னிந்தியா செல்ல திட்டமிட்டார்கள்.

"மூர், கண்டிப்பா ஆந்திரா போகணும். அங்க திருப்பதின்னு ஒரு பில்க்ரிமேஜ் சென்டர் இருக்காம். அங்கே லட்டுன்னு ஒன்னு தருவாங்களாம். செம டேஸ்ட்டா இருக்கும்னு எங்க தாத்தா சொல்லியிருக்கார். முந்தியெல்லாம் அங்க வர்ற எல்லாருக்கும் 2 லட்டு குடுப்பாங்கன்னு எங்க தாத்தாவுக்கு அவங்க தாத்தா சொல்லியிருக்காராம். இப்போ அங்க வர்ற லோக்கல் பீப்பிளுக்கு லட்டே கிடையாதாம். ஒன்லி எக்ஸ்போர்ட் மட்டும் பண்றாங்களாம். பட், ஃபாரினர்ஸ் கோட்டா-ல நமக்கு குடுப்பாங்க. ஒரு பாஸ்போர்ட்டுக்கு 1 லட்டு", என்றான் கிருஷ்.

மூருக்கு லட்டின் மீது எல்லாம் ஆர்வம் அதிகமில்லை. அவனது எண்ணமெல்லாம் தமிழ்நாட்டுக்குப் போக வேண்டும் என்பதே. "சரி. போகலாம். அதை முடிச்சுட்டு கண்டிப்பா தமிழ்நாட்டுக்கு ஒரு விசிட் போடணும்" என்றான். "ஒன்னு பண்ணலாம். ரிட்டன் டிக்கெட் மும்பை-ல இருந்து போட்டிருக்கோம். ஸோ "கேப் காமரின்" (Cape Comorin) போயிட்டு, அங்க இருந்து ஒவ்வொரு இடமா பாத்துக்கிட்டே வந்து, திருப்பதியும் பாப்போம். அப்பறம், மஹாராஷ்டிரா வழியா மும்பை வந்துடுவோம்" என்றான் கிருஷ்.

ஓ.கே. தாத்தா புக்-ல பாத்தேன். மதுரைன்னு ஒரு ப்லேஸ் இருக்கு. அங்க இருந்து கேப் காமரின் பக்கத்துல தான். நான் அந்த மதுரைக்கு ப்ளைட் டைமிங் பாக்கறேன் என்றான். இன்டர்நெட்டில் எவ்வளவு தேடியும் அவனால் மதுரை செல்லும் ப்ளைட்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியாக ஒரு ஏர்-லைன்ஸ் நிறுவனத்தின் கால்-சென்டர் நம்பரைத் தொடர்பு கொண்டான்.

பதிவு செய்யப்பட்ட கம்ப்யூட்டர் குரல் பேசியது. "தேங்க்ஸ் ஃபார் யூசிங் அவர் கால்-சென்டர் சர்வீஸ். வாட் இன்பர்மேஷன் டூ யூ நீட்?" என்று கேட்டது. ஐ நீட் ஃப்ளைட் டைமிங்ஸ் ஃப்ரம் டெல்லி டூ மதுரை? என்றான். "சாரி நோ ஸச் டெஸ்டினேஷன்" (அப்படி ஒரு இடம் இல்லை) என்று பதில் வந்தது. வாய்ஸ் ரெக்கனைஸ் சிஸ்டம் சரியில்லையோ என நினைத்து மீண்டும், ஐ ரிப்பீட், ஃப்ளைட் டைமிங்ஸ் ஃப்ரம் டெல்லி டூ மதுரை என்றான். "சாரி நோ ஸச் டெஸ்டினேஷன்". அதே பதில். மே ஐ ஸ்பீக் டூ ஏஜன்ட்? என்றான். வழக்கம் போல "ப்ளீஸ் வெயிட். யுவர் கால் வில் பீ ஆன்ஸர்டு ஷார்ட்லி" என பதில் வந்தது. சில நிமிடக் காத்திருப்புக்குப் பின், ஒரு பெண் குரல் "ஹலோ திஸ் இஸ் அஷ்வினி குப்தா. ஹவ் குட் ஐ ஹெல்ப் யூ?" என்றது.

ஹை, திஸ் இஸ் மூர். டெல்லி டூ மதுரை ஃப்ளைட் டைமிங்ஸ் வேண்டும் என்றான். கம்ப்யூட்டர் சொன்ன அதே பதில் தான் வந்தது. அந்த விமான நிலையத்தின் குறியீடு (Airport Code) தெரியுமா எனக் கேட்டாள். IXM என்றான் மூர். அந்த விமான நிலையத்தின் பெயர் "மதுரனந்தபுரம்" எனக் கூறி, அங்கு செல்லும் விமானங்களின் நேரத்தையும் சொன்னாள்.

"நோ. அந்த ஊரின் பெயர் மதுரை தான்" என்றான் மூர். "நீங்கள் சொல்லும் அந்த ஊர் திருச்சினஹள்ளிக்கு பக்கத்தில் உள்ளது தானே?" எனக் கேட்டாள். திருச்சினஹள்ளி-யா? அது திருச்சிராப்பள்ளி (அ) திருச்சி தானே? ஏன் இப்படி எல்லா ஊர் பெயர்களையும் மாற்றிச் சொல்லிக் குழப்புகிறீர்கள்? ஐ வில் ரிப்போர்ட் திஸ் டூ யுவர் ஹையர் அஃபிஷியல்ஸ் என்றான். "நீங்கள் தான் சார் குழம்பியுள்ளீர்கள். வேண்டுமானால் இப்போதுள்ள மேப் (வரைபடம்) எடுத்துப் பாருங்கள் என்றாள்.

உடனே லேப்-டாப்பினான். அவள் சொன்னபடி தான் கொடுத்திருந்தார்கள். மூர் இப்போது தான் குழம்ப ஆரம்பித்தான். மீண்டும் "மதுரை" எனத் தேடினான். விக்கிபீடியாவில் "மதுரனந்தபுரம்" குறித்த பக்கங்கள் வந்தது. அதில் மதுரனந்தபுரத்தின் பெயர், சில நூற்றாண்டுகளுக்கு முன்பு மதுரை என இருந்தது எனக் குறிப்பிட்டிருந்தார்கள்.

அப்போது தான் அவன் கவனித்தான், "மதுரனந்தபுரம், கேரளா God's Own Country" எனக் கொடுத்திருந்தது அதிர்ச்சியாக இருந்தது. இந்திய வரைபடத்தை முழுமையாக டவுன்லோடினான். தமிழ்நாடு என்ற ஒன்றே இல்லை. தென்னிந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மட்டுமே இருந்தது. "வாட்ட்ட்??? திஸ் இஸ் அன்பீலவபிள்" என தனக்குத் தானே கூறிக் கொண்டான்.

தாத்தாவின் புத்தகத்திலிருந்த மேப்பையும் இதையும் ஒப்பிட்டுப் பார்த்தான். கேரளா எல்லை மிகப் பெரியதாகி இருந்தது இப்போதிருக்கும் மேப்பில். பழைய மேப்பில் இருந்த மதுரை, தேனி, கம்பம், கூடலூர் போன்ற ஊர்கள், இப்போது மதுரனந்தபுரம், தேனீக்கரா, கம்பத்துப்புழா, கூடக்கரா எனப் பெயர் பெற்று, கேரள மாநிலமாக இருந்தது. முக்கியமாக எந்தெந்த கிராமங்கள் "பட்டி"யில் முடிந்தோ, அந்த ஊர் பெயர்கள் கண்டிப்பாக மாற்றப்பட்டிருந்தன.

கொஞ்சம் மேலே வந்தால், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் எல்லாம், திருச்சினஹள்ளி, தஞ்சனஹள்ளி என்ற பெயர்களுடன் கர்நாடக மாநிலமாக இருந்தது. தமிழகத்தின் தலைநகரமாக இருந்த சென்னை சென்ஹராபாத் என்றும், வேலூர், வேலுவாடா என்ற பெயர்களுடன் ஆந்திர எல்லைக்குள் இருந்தது.

எந்தந்த மாநிலங்களில் இருந்து தண்ணீர் பெறப்பட்டதோ, அந்த தண்ணீரைப் பயன்படுத்திய தமிழகப் பகுதிகள் அந்தந்த மாநிலங்களுடன் இணைக்கப்பட்டிருந்தன. அந்த அடிப்படையில் தான் ஒப்பந்தங்களே போடப்பட்டிருந்தன. 999 வருடங்களுக்கு. இந்தத் தகவல்களை கூகிள் ஆர்கைவிலிருந்து(Archive) தெரிந்துகொண்டான். அங்கு வாழ்ந்து வந்த தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறினர். அல்லது வெளியேற்றப்பட்டனர் என்ற தகவல் ஆர்கைவிலிருந்து டெலீட்டப்பட்டது அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

சரி. நம் மூதாதையர்கள் வாழ்ந்த ஊரின் பெயர் தான் மாறியிருக்கிறதே தவிர, ஊர் இருக்கிறது. அதையாவது போய்ப் பார்க்க வேண்டும் என நினைத்தான்.

"ஹலோ Mr.மூர், ஆர் யூ ஹியரிங் மீ?" எனக் கேட்டாள் அஷ்வினி. அப்போது தான் அவனுக்கு அந்த ஞாபகமே வந்தது. "யா. சாரி. வேறு ஏதோ நினைத்துக் கொண்டிருந்தேன். குட் யூ ப்ளாக் 2 டிக்கெட்ஸ் டூ மதுரனந்தபுரம்?" என்றான்.

"யுவர் பாஸ்போர்ட் நம்பர் ப்ளீஸ்" என்றாள். சொன்னான்.

கம்ப்யூட்டரில் தகவல்களைப் பார்த்தபடியே, சாரி சார். யுவர் ஃபேமிலி நேம் இஸ் நாட் "நாயர்". உங்கள் முழுப் பெயர் "மூர்த்தி அதியமான்" என உள்ளது. நீங்கள் தமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கிறேன். அது தமிழர்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதி. நீங்கள் அங்கு செல்ல முடியாது. வீ இண்டியன்ஸ் ஆர் அல்சோ நாட் பெர்மிட்டட் டு டாக் வித் ஸச் பீப்பிள், எனக் கூறி இணைப்பைத் துண்டித்துவிட்டாள்.

தங்கள் இனம் புலம் பெயர்ந்ததற்கான காரணம் கொஞ்சம் புரிந்தது போல இருந்தது அவனுக்கு...

நன்றி-
தமிழ் தாயகத்திற்காக
கரு. விக்னேஷ் ஜானகிராம்

No comments: