Sunday, January 1, 2012

போராட்டங்களால் உருவாகும் புதிய அடையாளம்!

மாலதி மைத்ரிFirst Published : 02 Jan 2012 01:59:34 AM IST

அராபிய வசந்தம் தொடங்கிய ஓராண்டுக்குள் பல கண்டங்களின் பூகோள அரசியலை மக்கள் போராட்டங்கள் மாற்றிக் கொண்டிருக்கின்றன. சென்ற ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி டுனீசியாவின் அதிபர் பென் அலியை எதிர்த்துத் தொடங்கப்பட்ட இப்போராட்டம் டுனீசியாவைக் கடந்து எகிப்து, லிபியா, ஏமன், சிரியா, பக்ரைன், அல்ஜீரியா, மொராக்கோ, லெபனான், குவைத், சூடான் மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட ஆசிய, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வரை தொடர்ந்து சென்றது.

இப்போராட்டங்கள் அராபிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கத் தடையாக இருக்கும் அரசுகளைத் தூக்கி எறிய மேற்குலகம் மற்றும் அமெரிக்க அரசுகள் செய்யும் சதியென அரசியல் விமர்சகர்களால் சொல்லப்படுகிறது. என்றாலும் அராபிய வசந்தத்தின் நீட்சியாகவே அமெரிக்காவில் செப்டம்பர் 17-ல் தொடங்கிய வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றும் போராட்டமும் பார்க்கப்படுகிறது.

மக்கள் லட்சக்கணக்கில் நேரடியாக அரசியல் மாற்றத்தையோ மறுக்கப்பட்ட ஜனநாயக உரிமைகளையோ கேட்டு வீதிக்கு வருவதைக் காட்சி ஊடகங்களிலும் தினச்செய்தித்தாள்களிலும் திரைப்படங்கள் மற்றும் மகாதொடர்களின் விளம்பர இடைவேளைகளுக்கிடையே கண்ணுற்ற தமிழ்ப் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் உளவியல் ரீதியாக சில மாற்றங்கள் உருவாகியுள்ளன.
அராபிய தேசங்களில் பெண்களுக்குச் சுதந்திரமே இல்லை, பெண்கள் பர்தா போட்டுக்கொண்டு வெளிஉலகமே தெரியாமல் வாழ்கிறார்கள், பெண்களுக்குப் பேச்சுரிமை கிடையாது, படிக்க முடியாது, வேலை பார்க்க முடியாது என்கிறார்கள். ஆனால், லட்சக்கணக்கில் முஸ்லிம் பெண்கள் தெருவில் வந்து நீதி கேட்டுப் போராடியது எங்களைச் சிந்திக்கத் தூண்டியது என்கின்றனர்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூன்று பேரின் தூக்குத் தண்டனையை நீக்கக் கோரி ஆகஸ்டு 26-ம் தேதி உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கிய அங்கயர்கண்ணி, வடிவாம்பாள் மற்றும் சுஜாதாவின் போராட்டத்துக்கு ஆதரவு தரவந்த கல்லூரி மாணவர்களிடம் இந்த எழுச்சியைக் காண முடிந்தது.

ஈழத்தில் 3 லட்சம் தமிழர்களையும் தமிழகத்தில் 600 மீனவர்களையும் நம் காலத்திலேயே சிங்கள இனவெறிக்குப் பலிகொடுத்தபோது என்ன செய்து கொண்டிருந்தோம் என்பது தமிழ் இளைஞர்களின் முக்கிய கேள்வியாயிற்று. நம் அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் இவற்றுக்காக என்ன செய்தார்கள் என்னும் கேள்வியும் எழுந்தது.

சேது கால்வாய்த் திட்டம் வந்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று மீனவர்கள் தொடர்ந்து போராடியபோது 2005-ல் திமுக அரசு திட்டத்தைச் செயல்படுத்தியே தீருவோம் என்று உறுதி காட்டியது. பாட்டாளி மக்களுக்கான கட்சிகள் என்று கூறிக்கொள்ளும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் எந்த விளக்கமும் அற்று சேதுகால்வாய்த் திட்டம் வந்தால் தமிழகம் சொர்க்கமாகிவிடுமென பொய்களைப் பரப்பிக் கொண்டிருந்தன. ராமர் பாலம் பிரச்னையால் சேதுகால்வாய்த் திட்டம் எளிதாக முடக்கப்பட்டது, வங்கக்கடலில் 4,000 கோடி ரூபாய்க்கு மேல் அளந்து கொட்டிவிட்டு கோப்புகள் மூடப்பட்டன. கூடங்குளம் அணுமின் திட்டத்திலும் இதே இழிவான நிலைப்பாடுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு.

1989-லிருந்து தொடர்ந்து கூடங்குளம் அணுமின் திட்டத்தை எதிர்த்துப் போராடிவரும் மீனவ மக்களையும் இயக்கங்களையும் புறக்கணித்துவிட்டு அணுமின் திட்டத்தைச் செயல்படுத்தியே தீருவோம் என மத்திய அரசு தன் வேலைகளைத் தொடர்ந்தது.
காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்றவற்றிலிருந்து தண்ணீர் பெறுவதில் கடந்த முப்பது ஆண்டுகளாகத் தமிழக மக்கள் வஞ்சிக்கப்பட்டனர். நமது நியாயமான உரிமைகளைக்கூட தமிழகத்தை ஆண்ட திமுக மற்றும் அதிமுக அரசுகள் இதுவரை போராடிப் பெற்றுத் தரவில்லை என்ற கோபம் முழுவடிவம் பெறத் தொடங்கியுள்ளது.

செம்மொழி குடும்ப மாநாடுகள் நடத்தி ஆண்ட இனம் எமது என்று பெருமை பேசிக் கொள்கிறோம். ஆனால், தமிழகத்தைத் தாண்டி பிற மாநிலத்தவர் நம்மை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்பதைத்தான் நதிநீர்ப் பிரச்னைகள் உணர்த்துகின்றன. ஒவ்வோராண்டும் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய நீரைப் பிற மாநிலங்களிடமிருந்து முற்றாக நம்மால் பெற முடிந்ததில்லை. ஆனால், தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை விவசாயத்துக்குக்கூடப் பயன்படுத்தாமல் மின்பற்றாக்குறையைத் தாங்கிக்கொண்டு அண்டை மாநிலங்களுக்குப் பங்குவைத்துக் கொண்டிருக்கிறோம். தமிழக ஆட்சியாளர்களின் மக்கள்விரோதக் கொள்கைத்திட்டங்களால் விவசாயம் மற்றும் கைத்தொழில்கள் அழிந்து பஞ்சம் பிழைக்கக் கூலிகளாக அண்டை மாநிலங்களுக்குச் சென்ற தமிழர்கள் தொடர்ந்து அவமானப்படுத்தப்படுவதும் தாக்கப்படுவதும் தமிழர்களின் மறதியைக் கடந்து வெளித்தெரியத் தொடங்கியுள்ளன.

வரலாறு காணாத ஊழல், ஏகபோக குடும்ப அரசியல், காட்சி-செய்தி ஊடகங்கள், தொழில் முதலீடுகள், வர்த்தக நிறுவனங்கள் என எல்லாவற்றிலும் ஒரு குடும்பத்தின் ஆதிக்கம், தமிழகமெங்கும் அரசியல்வாதிகளால் கொள்ளையடித்துக் குவிக்கப்பட்ட சொத்துகள், ஈழவிடுதலைப் போருக்கு ஆட்சியாளர்கள் தங்கள் பதவி சுகத்துக்காக இழைத்த அவமானகரமான துரோகம் என நீண்டு செல்கிறது தமிழக மக்களின் துயரக் கணக்குகள். திரைப்படங்களும், கிரிக்கெட்டும், தொலைக்காட்சியும் தவிர வேறெதுவும் தமிழர்களுக்குத் தேவையில்லை என்று முடிவுகட்டினர் ஆட்சியாளர்கள்.

இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உள்துறை அமைச்சகத்தால் மூன்றுபேரின் தூக்குத் தண்டனை உறுதிசெய்யப்பட்டபோது தமிழ் உணர்வாளர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து எழுச்சியுடன் போராட்டங்களை நடத்தத் தொடங்கினர். தமிழர்கள் மூன்றுபேரின் தூக்குத் தண்டனையை நீக்கக்கோரி மூன்று பெண் வழக்கறிஞர்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழகமெங்கும் இளைஞர்கள் கிளர்ந்தெழுந்தனர். ஈழப் படுகொலையின்போது தமிழர்கள் இதுபோன்ற எழுச்சியை, எதிர்ப்பைக் காட்டியிருந்தால் இழப்புகள் குறைந்திருக்குமோ எனத் தோன்றியது.

ஜப்பான் புகுஷிமா பகுதியின் அணுஉலைகள் வெடித்துச் சிதறியபோது தங்கள் வீட்டை, உடைமைகளை, நிலத்தை, கடற்கரையைவிட்டு 16 லட்சம் மக்கள் வெளியேறியதை ஊடகங்கள் வழியாகத் தமிழக மக்கள் கண்டனர். நிலம், நீர், காற்று, கடல் அனைத்தும் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டது, அப்பகுதி தண்ணீர், பால், மீன், பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்கள் அனைத்தும் மக்கள் பயன்படுத்த முடியாமல் பாழானது, 16 லட்சம் பேரில் எத்தனை லட்சம் பேர் கதிர்வீச்சு மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர் என்ற கணக்கை அரசு இதுவரை வெளியிடாதது என ஒவ்வொன்றும் தமிழகக் கடலோர மக்களின் மனங்களில் அச்சத்தையும் மற்றொரு வகையில் தெளிவையும் உருவாக்கின. ஆகஸ்டு மாதம் நடத்தப்பட்ட கூடங்குளம் அணுஉலைகளின் சோதனை ஓட்டத்தில் எழுந்த பேரோசை, அணுஉலை நிர்வாகம் வெளியிட்ட விபத்துகால ஒத்திகை குறித்த அறிவிப்பு இரண்டும் கூடங்குளம் சுற்றுப்புறக் கிராம மக்களின் அச்சத்தை உறுதிப்படுத்தின.
ஊர்மக்கள் ஆயிரக்கணக்கில் தன்னெழுச்சியாக மாதா கோயிலின் முன் திரண்டு கூடங்குளம் அணுஉலையை மூடுவதற்கான போராட்டத்தை ஆகஸ்டு-16ம் தேதி தொடங்கவேண்டும் என முடிவெடுத்தனர். இந்தப் போராட்டம் தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலேயே முன்னோடித்தன்மை கொண்டது.

செப்டம்பர் 11-ல் இடிந்தகரையில் ஒருநாள் அடையாள உண்ணாநிலைப் போராட்டமாகத் தொடங்கிய மக்கள் போராட்டம் கூடங்குளம் அணுஉலைகளை மூடும்வரை தொடரும் வலிமையுடன் இப்போது முன் சென்றுகொண்டிருக்கிறது. இந்தப் போராட்டம் வெறும் உணர்வெழுச்சியின் அடிப்படையில் நடந்து கொண்டிருக்கவில்லை, அறிவுப்பூர்வமான அரசியல் தெளிவுடன் மக்களால் நடத்தப்படுகிறது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வயது பாகுபாடின்றி சிறுவர்கள் முதல் முதிய பெண்கள் வரை அணுஉலைகளின் ஆபத்தைப் பற்றி அறிவியல்பூர்வமாகப் பேசுகின்றனர். அணுக்கழிவுகளால் உண்டாகும் சுற்றுச்சூழல் கேடு, நோய், கதிரியக்கப் பொருள்களால் தங்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாவது என்பவை குறித்து மிகுந்த அக்கறையும் கவலையும் அவர்களின் பேச்சில் வெளிப்படுகிறது.

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் மற்றும் தமிழர்கள் மூன்றுபேரின் தூக்குத் தண்டனையை நீக்கக் கோரும் போராட்டம் என இரண்டு போராட்டங்களை விலகி நின்று பார்த்துக் கொண்டிருந்த தமிழகத்தின் சில பகுதி மக்களின் அரசியல் உணர்வுக்கும் சோதனை தரும் வகையில் வந்து சேர்ந்தது முல்லைப் பெரியாறு அணை பிரச்னை.

வழக்கம்போல் தமிழக அரசியல் கட்சிகள் அறிக்கைவிட்டு விட்டு அமைதி காத்துவிடுவர், தமிழர்கள் கூடங்குளத்தை மறந்துவிட்டு முல்லைப் பெரியாறுக்கு போராட வந்துவிடுவர், ஒருவாரம் கழித்து மீண்டும் வழக்கம்போல் திரைப்படம்-தொலைக்காட்சி பார்க்கப் போய்விடுவார்கள் என்ற தேசிய சக்திகளின் கணக்கை தமிழர்கள் இப்பொழுது பொய்யாக்கியிருக்கிறார்கள்.
முல்லைப் பெரியாறு அணையை தமிழகத்திடம் இருந்து பறிக்க கேரளக் கட்சிகள் செய்யும் சதிச்செயல்கள் தமிழக மக்களை பல காலத்துக்குப் பிறகு ஒன்றுபடுத்தியுள்ளதுடன் போராடவும் தூண்டியுள்ளது. இந்தித் திணிப்பு எதிர்ப்புக்குப் பிறகு தமிழக மக்களின் இந்த மூன்று போராட்டங்களும் தமிழ் அடையாளம் சார்ந்த வாழ்வுரிமை மற்றும் வாழ்வாதாரத்துக்கான பேரெழுச்சி என்ற வகையில் மிகவும் வரலாற்று முக்கியத்துவம் கொண்டது.

அரசியல் கட்சிகளின் அழைப்புக்கு மக்கள் ஓடிவந்த நிலைமாறி மக்கள் களத்தில் முன்செல்ல அனைத்துக் கட்சிகளும் அவர்கள் பின் செல்லவேண்டிய நிலையை அடைந்துள்ளன. இன்னும் தமிழகத்தில் தீண்டாமை நடைமுறையில் உள்ளது என்பதற்காக வெட்கப்படும், இனி தமிழகத்தில் தீண்டாமை இல்லை என்ற நிலையை உருவாக்க நினைக்கும் இளைஞர்களின் கையில் இன்றுள்ள போராட்டங்கள் சென்று சேரும் எனில், தமிழகத்தின் அரசியல் எதிர்காலம் மட்டுமன்றி, பண்பாட்டு எதிர்காலமும் ஒளிபொருந்தியதாக அமையும் என்று நம்பலாம். அதற்கு முன்னோட்டமாக இன்று நடக்கும் இந்த மூன்று போராட்டங்களும் அமைந்துள்ளன.

நன்றி தினமணி 2.1.2012

http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial%20Articles&artid=531414&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D

No comments: