Saturday, January 14, 2012

வெல்லட்டும் வீர விளையாட்டு...: உரத்த சிந்தனை- எல்.முருகராஜ்

இயற்கை இன்னல்கள் யாவற்றையும் தாங்கிக் கொண்டு, ஆண்டு முழுவதும் வயல்களில் உழைக்கும் உழவனின் பெருமையையும், விவசாயத்தின் மகத்துவத்தையும், உலகிற்கு பறைசாற்றும் திருநாளே பொங்கல் தினம். பொங்கல் நாளையொட்டி, தென் மாவட்டங்களில் நடத்தப்படுவதே ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு, நம் மக்களின் உணர்வோடு கலந்துவிட்ட விஷயம்; ஊரோடு ஒன்றிவிட்ட கலாசாரம். காலம் காலமாக நண்பர்கள், உறவினர்கள் பார்த்து மகிழ நடத்தப்பட்டு வந்த இந்த வீர விளையாட்டு, வெளிநாட்டுக்காரர்களை சந்தோஷப்படுத்த, கண்காட்சி போல நடத்தப்பட்டதை அடுத்து, இப்போது பல சங்கடங்களை அனுபவித்து வருகிறது. காளையின் கொம்புகளைக் கண்டு அஞ்சுபவனை, மறுபிறப்பிலும் மகளிர் விரும்பமாட்டார்கள் என்ற அர்த்தத்துடன், "கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள் துல்லிச்சுட்டு வேண்டும்' என்று, கலித்தொகை காலந்தொட்டு, பெருமையுடன் பேசப்பட்ட, பாடப்பட்ட ஜல்லிக்கட்டை, சில ஆண்டுகள் நடத்தவே முடியாமல் போனது.


கலித்தொகையில் ஆரம்பித்து, "எழுந்தது துகள்; ஏற்றனர் மார்பு; கவிழ்ந்தன மருப்பு; கலங்கினர் பலர்' என, "முல்லைக்கலி'யில் காவியமாகி, ராஜம் அய்யரின், "கமலாம்பாள்' சரித்திர நாவலாகி, கு.ப.ராஜகோபாலனின், "வீரம்மாளின் காளை'யில் அற்புத படைப்பாகி, சி.சு.செல்லப்பாவின், "வாடிவாசலில்' 1959ம் ஆண்டிலேயே அற்புதமாக பதிவான வீரமிது. அலங்காநல்லூர், பாலமேடு, சிறாவயல், புதுக்கோட்டை, கொடிக்குளம், வேந்தன்பட்டி, அவனியாபுரம், மேட்டுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில், ஏதோ ஒன்றை பறிகொடுத்த சோகத்தில், ஜல்லிகட்டு வீரர்கள் உள்ளனர். கடுமையான முயற்சிக்குப் பிறகு, அரசு வழிகாட்டுதலின்படி, கடந்த வருடம் வரை ஜல்லிக்கட்டு நடந்தது. காட்டாற்று வெள்ளம் போல, ஒரு வரைமுறை இல்லாமல் நடந்த ஜல்லிக்கட்டிற்கும், இந்த வழிகாட்டுதல் தேவைப்பட்டது. "நாலு பேருக்கு மேல் சூழ்ந்து மாடு பிடிக்கக் கூடாது; மாடுகளின் கொம்புகளிலோ, உடம்பிலோ எண்ணெய் தேய்க்கக் கூடாது; ஊக்க மருந்து கொடுக்கக் கூடாது; விலங்குகள் நல வாரியத்திற்கு தகவல் தந்து, வாரியத்தின் பிரதிநிதிகளை பார்வையாளர் பகுதியில் உட்கார வைக்க வேண்டும். "கால்நடை மருத்துவர் சான்றிதழ் தந்த மாடுகளே களத்தில் இறக்கப்பட வேண்டும்; பார்வையாளர்களுக்கு பாதுகாப்பாக, இரண்டு அடுக்கு பாதுகாப்பு வளையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். மாடுகள் மற்றும் வீரர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும்' என்பது போன்ற, ஏற்கக்கூடிய விஷயங்களைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நன்றாகத் தான் போய்க்கொண்டு இருந்தது.


இந்த வருடத்திற்கான ஜல்லிக்கட்டிற்கு, வீரர்களும், மாடுகளும் தயாரான நிலையில், மத்திய அரசின் வனத் துறை, திடீரென ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்துள்ளது. சிங்கம், புலி, கரடி, சிறுத்தை போன்ற வன விலங்குகளின் பட்டியலில், காளைகளையும் சேர்த்துள்ளார் மத்திய அமைச்சர். அமைச்சரின் இந்த உத்தரவுப்படி, காளைகளைப் பிடிப்பதோ, அடைத்து வைப்பதோ, வேடிக்கை காட்ட பயன்படுத்துவதோ கூடாது. மீறினால், கோடிக்கணக்கில் அபராதம் என்றும், உத்தரவு கடுமையாக சொல்கிறது. கேரளாவில், அடிக்கடி யானைகளை வைத்து நடக்கும் விழாக்களில் ஏற்படும் விபத்துகளை விட, தமிழகத்தில் காளைகளை வைத்து நடத்தும் விழாக்களில் குறைவு தான். ஆனால், யானைகளை விட்டுவிட்டு, மாடுகளை தடை செய்துள்ளது, குறிப்பாக ஜல்லிக்கட்டை குறிவைத்தே போடப்பட்ட உத்தரவு போல உள்ளது என்பது தான், தமிழ்நாடு வீர விளையாட்டு பேரவையினரின் ஆதங்கம். முனியாண்டி, முத்தாலம்மன், காளியம்மன் என்று, அந்தந்த கிராம தெய்வங்களை வணங்கி, மண்ணின் நன்மைக்காகவும், மக்களின் மேன்மைக்காகவும், ஒரு வழிபாடு போல நடத்தப்படுவதே இந்த ஜல்லிக்கட்டு.


இது, வெறும் வீர விளையாட்டு மட்டுமல்ல, தமிழர்களின் ரத்தத்தோடு கலந்து விட்ட வீரம், உற்சாகம், பண்பாடு என, இறந்த ஜல்லிக்கட்டு காளை ஒன்றின் நினைவாக, அதன் உருவத்தை சிலை வடிவத்தில் வைத்து வழிபடும் பொந்துகம்பட்டி கிராமத்தினர், ஆவேசத்துடன் குறிப்பிடுகின்றனர். இதில், 20 அடி நீள கயிற்றில் கட்டப்படும் காளையின் கொம்பில், முடிச்சுப் போட்டு தொங்கவிடப்படும் பணத்தை, நேருக்கு நேர் சென்று, நின்று, வென்று எடுக்கும் மஞ்சுவிரட்டு எனும் விளையாட்டும், சேர்ந்து அடிபட்டு போனது. அந்தக் காலத்தில் புழக்கத்தில் இருந்த சல்லிக்காசை, மாட்டின் கொம்பில் கட்டிவிடுவர். அந்த காசை எடுப்பதற்காக நடத்தப்பட்ட விளையாட்டு என்பதால், சல்லிக்காசுக்கான விளையாட்டு, கொஞ்சம் கொஞ்சமாக மருவி, ஜல்லிக்கட்டு விளையாட்டாகி விட்டதாக, ஆய்வாளர்களால் கருதப்படும் இந்த விளையாட்டு, இப்போது அதே பாணியில், சல்லிக்காசிற்கும் பெறாத விளையாட்டாகிவிடுமோ என்பது தான் பலருக்கும் அச்சம் தருவதாக உள்ளது. உச்சத்தில் யானைகள் மீது பாசம் கொண்டவர்கள் இருக்கும் போது, காளைகள் மீது பாசம் கொண்டவர்கள் இல்லாமல் போனது துரதிருஷ்டமே. எப்போதும் எதுவும் பேசாத நடிகையும், எம்.பி.,யுமான ஹேமமாலினி கேட்டுக் கொண்டதற்கிணங்க, அதிரடி உத்தரவு போட்ட அமைச்சர், தமிழக அரசை கலந்து பேசியிருக்கலாம் அல்லது குறைந்தபட்சமாக மக்களவையிலாவது தெரிவித்திருக்கலாம். அப்படியில்லாமல், எடுத்த எடுப்பிலேயே, சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலில், நன்றாக நடந்து கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டை தடை செய்யச் சொன்னது, எந்த விதத்திலும் நியாயமாகப் படவில்லை.


ஜல்லிக்கட்டிற்கு பெயர் பெற்ற அலங்காநல்லூர் கிராமத்து பெரியவர் ஒருவரிடம் பேசுகையில், கண்ணிலும் ஒளி பிறக்க, வார்த்தையில் பொறி பறக்க, தான் ஒரு காளையை மடக்கிய கதையை, படு சுவாரசியமாக, உடல் அங்க அசைவுடன் கூறினார். அப்படி கூறியவர், தான் மாடு பிடித்ததற்கு சாட்சி என்று, தனது சட்டையைத் தூக்கி, இடுப்பில் உள்ள தழும்பை பெருமையுடன் சுட்டிக் காட்டினார். ""இது புதுக்கோட்டை காளையைப் பிடிக்கும் போது, கொம்பு பட்ட வடு. காயம்பட்ட போதும் நான் விடலையே, மாட்டை அணைஞ்சுட்டு தானே களத்தைவிட்டு வெளியேறினேன்'' என்கிறார், தன் நரைத்த மீசையை முறுக்கியபடி. இது போல, இங்குள்ள ஒவ்வொரு பெரியவர்களிடமும் ஒரு ஜல்லிக்கட்டு கதை இருக்கிறது. ஒரு வீரத்தழும்பு இருக்கிறது. சிலரிடம் காளையே இருக்கிறது. காளையை தங்களது உயிராக வளர்க்கின்றனர். பச்சரிசி சாப்பாடு, தினசரி ஆற்றுக் குளியல், ஓட்டம், சீற்றம், பாய்ச்சல் என, வருடத்தின் ஒரு நாள் திருவிழாவிற்காக காளையை, கொஞ்சம் கொஞ்சமாய் தயார் செய்கின்றனர். வீரர்களிடம் பிடிபடாமல் வெற்றி பெற்ற நிலையில், அந்த காளை, தன் உரிமையாளருக்கும், தன்னை வளர்த்த வீட்டிற்கும், அதையும் தாண்டி, தனது ஊருக்கே பெருமை தேடித்தரும் செல்வமாகவும், செல்லமாகவும் மாறுகிறது.


ஒவ்வொரு ஊரிலும் இந்த ஜல்லிக்கட்டு, ஒருவித சிறப்புடன் நடைபெறுகிறது. அலங்காநல்லூரிலும், பாலமேட்டிலும், அவனியாபுரத்திலும் வாடிவாசல் என்றழைக்கப்படும் ஒரு சிறிய வாசல் வழியாக மாடுகள், ஒன்றன் பின், ஒன்றாக அவிழ்த்து விடப்படும். பல காளைகள் பாயும், சில காளைகள் பறக்கும். சில காளைகள் வீரர்களை பறக்கவிடும். சில காளைகள் நின்று விளையாடும். இப்படி, ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்படும். காளைகள் அடுத்து என்ன செய்யுமோ, எப்படி பாயுமோ என்ற நிலையில் நடக்கும் அந்த ஒவ்வொரு நிமிடங்களும், வீரர்களுக்கு மட்டுமல்ல, பார்வையாளர்களுக்கும், "திரில்லான' நிமிடங்களே. காரைக்குடி பக்கம் உள்ள சிராவயல் பகுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டின் போது, ஒரே நேரத்தில் அனைத்து காளைகளையும் அவிழ்த்து விடுவர். மைதானத்தினுள் அவரவர் சக்திக்கேற்ப காணப்படும் காளைகளுடன், தங்களது வீரத்தை வெளிப்படுத்துவர்.


எப்படிப் பார்த்தாலும், வீரம் கொப்பளிக்க, விவேகம் பீறிட, ஊற்றெடுக்கும் உற்சாகத்துடன், மண்டியிடாத வீரத்துடன், ஜல்லிக்கட்டு விளையாட்டில் பெரும் ஈடுபாட்டுடன் கலந்து கொள்ளும் தமிழர்களின் எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும், கலாசாரத்திற்கும் விதிக்கப்பட்ட தடையாகத் தான் இதை கருத முடிந்ததே தவிர, ஜல்லிக்கட்டிற்கு விதித்த தடையாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. கடைசியாக, இப்போது வழக்கு விசாரணை முடிந்து, வரையறுக்கப்பட்ட விதிகளின்படி, ஜல்லிக்கட்டை சந்தோஷமாக நடத்தலாம் என்று, கோர்ட் சொல்லிவிட்டது. கிட்டத்தட்ட வாடிவாசலில் வென்ற மகிழ்ச்சியுடன், ஜல்லிக்கட்டு களங்கள் தயாராகி வருகின்றன. விதிகளுக்கு உட்பட்டு, ஜல்லிக்கட்டு எனும், நமது வீர விளையாட்டை, நல்லபடியாக நடத்திக் காட்டுவதில் தான், இந்த வீர விளையாட்டை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல முடியும். Email: murugaraj2006@gmail.com

நன்றி
http://www.dinamalar.com/News_detail.asp?Id=385915

No comments: