Sunday, January 15, 2012

சீமான் முத்துராமலிங்கத் தேவரை புகழ்ந்து பேசுவதில் என்ன தவறு?


தலைப்பு தமிழ் தேசியவாதிகள் எதிர்நோக்கும் சாதீய சவால்கள்

அல்லது

தமிழ் தேசியவாதிகள் சாதி அரசியல் நடத்த வேண்டும்இந்த கட்டுரைக்கு வைக்க வேண்டிய தலைப்பு இதுவே. ஆனால் ஒரு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக, தேவர் பற்றி நிலவும் தவறான கருத்துக்களை தெளிவு படுத்தப்பட வேண்டும் என்பதற்காக இந்த தலைப்பை இட்டுள்ளேன். அனைத்து சாதியினரும், சாதி பற்றிய ஒரு தெளிவான நிலையை அடைய வேண்டும், மோதல் போக்கை பின்பற்றுவதால் யாருக்கும் லாபம் இல்லை என்பதை வலியுறுத்தி இந்த கட்டுரையை எழுதியுள்ளேன்.என் ஊர்

ஒரு சுய விளக்கத்துடன் இந்த கட்டுரையை ஆரம்பிக்கிறேன். எனது ஊர் தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், தேவதானப்பட்டி கிராமம். இது இந்த வட்டத்தில் சாதி மோதல்களுக்கு பெயர் பெற்ற ஊர். இந்த ஊரின் மக்கள் தொகையில் தோராயமாக 30% பறையர், 30 % முஸ்லீம்கள் மீதியுள்ள பிள்ளைமார், நாடார், செட்டியார், ஆசாரி, சேர்வை 40 %. இந்த 40%-ல் இடம் பெறுபவர்கள்தான் பிரான்மலைக் கள்ளர். அதாவது பறையர்கள் 3000 வீடு என்றால் கள்ளர்கள் 500 வீடு என்று ஒப்பிடலாம் (காரணத்தை பின்னால் காணலாம்).


கொடைக்கானல் அடிவாரத்தில் அமைந்த அழகிய கிராமமான எங்கள் ஊருக்கு வடக்கே மஞ்சளாறு அணை உள்ளது. எனவே ஊரின் வடக்கு மேற்கு பகுதியில் கொடைக்கானல் மலைகளும், வடக்கு - கிழக்குப் பகுதியில் விவசாயம், மேய்ச்சல் நிலங்களும் உள்ளன. தென்னந்தோப்புகள், வாழைத் தோட்டங்கள், கரும்பு வயல்கள், நெல் வயல்களுக்கு பின்னணில் குறுக்கு மலை (வத்தலக்குண்டுவிலிருந்து செல்லும் மலை) அமைந்துள்ள அழகும் வட மேற்கில் அமைந்துள்ள பாலமலையும், அதிலிருந்து இறங்கும் வட்டாறு, இருட்டாறு, மூலையாறு, தலையாறு அருவியும் கண்கொள்ளாக் காட்சியாக அமையும். இந்த ஆறுகள் கீழே மஞ்சளாறு அணையில் இணைகின்றன. அணையிலிருந்து சில கிமீ தொலைவில் நதிக்கரையில் அமைந்துள்ளது ஸ்ரீ மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில்.


ஊரில் தெற்குபுறத்தில் முக்கியச் சாலையை ஒட்டி அமைந்துள்ளது பறையர் வசிக்கும் பகுதி. வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது கள்ளர் வசிக்கும் பகுதி. விவசாய நிலம், மேய்ச்சல் நிலம் வடக்குப் பகுதியில் இருப்பதால் பறையர்கள் தினமும் இந்த பகுதியைத்தான் கடந்து செல்லவேண்டும். அதேவேளையில் முக்கிய சாலை, ஊரின் எல்லையில் உள்ள திரையரங்கு ஆகியவை பறையர் பகுதியை ஒட்டி உள்ளது. எனவே இரு தரப்பினரும் தங்களது தேவைகளுக்காக மற்றவர்களின் பகுதிக்கு சென்றே ஆகவேண்டும். இதுதான் பிரச்சனையே. ஏதாவது ஒரு உப்புச் சப்பில்லாத காரணத்திற்காகக் கூட இரு தரப்பினரும் மோதிக் கொள்வார்கள். இதனால் பெரியகுளம் வட்டத்தில் சாதிச் சண்டைக்கு பெயர் பெற்ற ஊராக தேவதானப்பட்டி இருந்து வருகிறது. தற்போது அந்த அளவு மோதல்கள் இல்லை. தனிப்பட்ட நபர்களின் சாதிப் பிரச்சனை ஆக்கக் கூடாது என்ற ஒப்பந்தத்திற்கு இருதரப்பினரும் வந்துள்ளனர். இருந்தாலும் இருதரப்பினருக்கும் இடையே இனம் புரியாத பகை இருந்து வருகிறது.நான் வளர்ந்த சூழல்

கள்ளர் சாதியில் பிறந்த நான் சீர்மரபினரான (குற்றப் பரம்பரை) கள்ளர்களுக்கு என்றே வெள்ளையர்களால் கட்டப்பட்ட கள்ளர் தொடக்கப்பள்ளியில் கல்வி கற்றேன். அதன் பின் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் படித்து, உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தேன். பள்ளி, கல்லூரியில் தேவர் இனத்தை சேர்ந்த ஆசிரியர்களின் வழிகாட்டலில் படித்த எனக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மீது இயல்பாகவே பெருமதிப்பு ஏற்பட்டது. பின்னாளில் அவரது வாழ்க்கை வரலாறை படித்தபோது பெரும் ஆச்சரியமும் பரவசமும் அடைந்தேன். அவர் மீது குத்தப்பட்ட சாதி முத்திரை அவரை தேர்தலில் வெல்ல முடியாத காங்கிரஸ் கட்சி செய்த சதி என்பதை உணர்ந்துகொண்டேன்.


எனக்குள் சிறுவயதிலேயே தீண்டாமை எதிர்ப்பு, சாதி - மத எதிர்ப்பு என்ற கருத்துக்கள் என்னுள் ஊறிவிட்டன. இது போன்ற சாதி மோதல்கள் வேண்டாதவை என்று சக நண்பர்களுடன் வாதம் செய்திருக்கிறேன். எனக்கு எல்லா சாதிகளும், தலைவர்களும் ஒன்றே. யாரையும் குறைத்தோ உயர்த்தியோ கருதுவதில்லை. தற்போது பெரும்பாலும் தலித் பத்திரிகை, இணையங்களில் தேவரைப் பற்றி கடுமையாக விமரிசிக்கப்படுகிறது. அவர் ஒரு கொலைகாரன் என்றும் சாதி வெறியன் என்றும் அவர் தேவரினத்தை தவறான வழியில் அழைத்துச் சென்றவர் என்றும் வசை பாடப்படுகிறது. இது போன்ற செயல்கள் தேவர் சாதியினரிடையே வெறுப்புணர்வை வளர்க்குமே தவிர வேறு பலனைத் தராது.


இந்த நிலையில் அன்மையில் சீமான் மீது வைக்கப்பட்ட குற்றச் சாட்டில் அவர் தேவரை புகழ்ந்து பேசுவதாக கூறப்பட்டது. இதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில், அவர் தேவர் அமைப்பினர் நடத்திய கூட்டத்தில் கூட தேவரைப் பற்றி புகழ்ந்து பேசவில்லை என்று அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. சீமான் தேவரை பாராட்டிப் பேசியதில் என்ன தவறு உள்ளது என்ற கேள்வியை நான் கேட்கிறேன்.

தேவர் தென்னாட்டில் காங்கிரஸ் கட்சி வளர பாடுபட்டு “காங்கிரஸை காத்தான்” என்று போற்றப்பட்டவர் ஆவார். மதுரை மில் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை பெறப் போராடியவர் ஆவார். உழுதவர்களே நிலத்தைப் பெற உதவியவர். குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்துப் போராடியவர். இந்திய அடிமை விலங்கை உடைக்க ஆயுதப் போராட்டமே சிறந்தது என்று கருதி இந்திய தேசிய ராணுவத்திற்கு ஆயிரக்கணக்கான வீரர்களை அனுப்பி வைத்தவர். இந்தியா ஐரோப்பிய-அமெரிக்க நாடுகளை தவிர்த்து சீனா-ஜப்பான், ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளுடன் உறவுகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னார். இலங்கை தமிழர்கள் பிரச்சனையை உடனடியாக மத்திய அரசு தலையிட்டு தீர்த்து வைக்காவிட்டால் பெருந்துயரில் முடியும் என்று சொன்னார். அவர் சொன்ன அத்தனை அரசியல் கருத்துக்களும் இன்றும் பொருந்துவதாக உள்ள. ஆருடங்கள் இன்றும் பலித்து வருகின்றன.

அத்தகைய மாபெரும் தலைவரை சீமான் போற்றுவதில் தவறில்லை. அதோடு சீமானோ மற்ற தமிழ்தேசிய தலைவர்களோ தங்களது இலக்கை அடைய சாதி அரசியலை கைக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறேன்.


தமிழ்தேசியமும் சாதி அணுகலும்


தற்போது ஈழ - தமிழக அரசியல் நிலையை கண்டு வெதும்பியுள்ள அனைவரும் விரும்பக்கூடிய ஒரு தலைவராக எழும்பி இருப்பவர்தான் சீமான். தமிழ்தேசியம் பேசுபவர்களில் அதிக கூட்டம் கூடுவது இவருக்கு மட்டுமே. இவருக்கு கூடும் கூட்டம் பல ஆண்டுகளாக அரசியல் நடத்தி வருபவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. சாதி வேறுபாட்டை கடந்து ஒன்றுபடுங்கள் என்று அவர் அழைக்கும் விதம் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் விரும்பத் தக்கதாகவே உள்ளது. ஏனெனில் சாதி, தமிழின வளர்ச்சிக்கு ஒரு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது என்று கற்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சாதிக் கட்சி வளர்ப்போரும் பாரம்பரிய முறையில் இந்திய - திராவிட கட்சி நடத்துவோரும் அவர் மீது காட்டமாகவே உள்ளனர். அவரைப் பற்றி பல பொய் பரப்புரைகள் செய்யப்படுகின்றன என்பது தெளிவாக தெரிகிறது.


பொதுவாகவே தமிழர்களுக்கு ஒருவர் பொது வாழ்க்கைக்கு வருகிறார் என்றால், முதலில் அவர் என்ன சாதி என்று கண்டு பிடிக்காவிட்டால் தூக்கம் வராது. அவ்வாறு கண்டுபிடிக்கப்படும் உண்மை, கிராமங்கள் வரை பரவி விடுகிறது. உதாரணமாக தேவர் பகுதிகளில் நடிகர்கள் கார்த்திக், எஸ்ஜே சூர்யா, தலித் பகுதிகளில் பிரசாந்த், விக்ரம், கோவை பகுதியில் சத்யராஜ் போன்றோருக்கு ரசிகர் மன்றங்கள் திறக்கப்பட்டிருப்பதை காணலாம். ஆனால் இவர்களால் இன்னமும் சீமான் என்ன சாதி என்ற முடிவுக்கு வர முடியவில்லை. அவரும் தான் இன்ன சாதி என்று இன்னமும் அறிவிக்கவில்லை.

இந்த நிலையில், தலித் இளைஞர்களிடையே இவர் தேவர் என்று பரப்புரை செய்யப்படுகிறது. இதனை உறுதி செய்வது போல அவர் சில திரைப்படங்களில் தேவரைப் பாராட்டுவது போல நடித்துள்ளார். சிலர் அவர் நாடார் என்று கூறுகின்றனர். (இவர் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.) இது நமக்குத் தேவையில்லாத விஷயமாகவும் ஆனால் அவர்களுக்கு முக்கியமான விஷயமாகவும் உள்ளது. பிரச்சனை என்னவென்றால், அவர் தேவராக இருப்பது உண்மை என்றால் தலித்களால் அவர் பின்னால் திரள முடியாது. அவர் தேவராக இல்லாமல் வேறு சாதியை சேர்ந்தவராக இருந்தால் அந்த சாதியை விரும்பாதவர்களால் அவர் பின்னால் திரள முடியாது. அப்படி இருக்கும்போது தமிழ் தேசியம் எவ்வாறு சாத்தியமாகும்? தமிழ் தேசியம் என்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கானது. இதனை எந்தவொரு சாதியின் ஆதரவு இல்லாமலோ அல்லது ஒருசில சாதிகளின் ஆதரவை மட்டுமே வைத்துக் கொண்டோ அமைக்க முடியாது என்பதே உண்மை.


அப்படியானால் தமிழ் தேசியம் பேசும் சீமானோ அல்லது வேறு எந்த தலைவருமோ அனைத்துச் சாதியினரையும் தன்பக்கம் இழுக்க வேண்டும். அதற்காக அவர் எல்லா சாதி தலைவர்களையும் உயர்த்திப் பேசுவதில் தவறில்லை, அந்த சாதிகள் தொடர்பான விழாக்களில் கலந்துகொள்வதும் தவறில்லை. ஏனெனில், அம்பேத்கரை குறைக் கூறிக் கொண்டு எப்படி ஒரு தலித்தை தன் பக்கம் இழுக்க முடியாதோ அதேபோல தேவரை குறை கூறிக் கொண்டு முக்குலத்தோரை அவர் தன் பக்கம் இழுக்க முடியாது. ஒரு சில தலைவர்களை மட்டும் பாராட்டிப் பேசி விட்டு மற்ற சாதியினரை திருப்திபடுத்த முடியாது. அதேவேளையில் தமிழ் தேசியத்திற்கு சாதி வேறுபாடுகளை மறப்பவர்கள் மட்டும் ஆதரவு தெரிவித்தால் போதாது. சாதியில் நம்பிக்கை வைத்திருப்போரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.


சாதி என்ற சமூக கட்டமைப்பு


தமிழகத்தில் இன்று வரை சாதிபேதமில்லா சமதர்ம சமுதாயம் என்பது உதட்டளவில் உள்ளது. எல்லாருக்குமே உள்ளுக்குள் தான் இன்ன சாதி என்ற உணர்வு ஆழமாக பதிந்துள்ளது. இது உயர்ந்த சாதி - தாழ்ந்த சாதி என்ற வேறுபாடு இல்லாமல் எல்லாரிடமும் நிறைவாக சாதிப் பற்று உள்ளது. தொழில் அடிப்படையில் தோன்றிய சாதி, மனு தர்மத்தால் பிரித்தாளப்பட்டு, ஆங்கிலேய பொருளாதார கொள்கைகளால் வஞ்சிக்கப்பட்டு இன்று எப்போதும் வெடிக்கும் எரிமலையாக உள்ளது. சாதியின் தோற்றம் பற்றி அறிய விரும்புவோர் விக்கிபீடியாவில் (http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF) படித்து தெரிந்துகொள்ளலாம்.


சாதி பல்வேறு விரும்பாத விளைவுகளை கொண்டிருந்தாலும் அது சமுதாயத்தின் வலுவான அடிப்படை கட்டமைப்பாக உள்ளது என்பதே உண்மை. ஒருவர் தனது வாழ்வின் முக்கிய கட்டங்களான திருமணம், குழந்தை பிறப்பு, சாவு என பல நிகழ்வுகளுக்கும் சாதியையே சார்ந்துள்ளார். சாதி நல்லதோர் சமுதாய அமைப்பாகவும் உள்ளது. இதனால் பெரும்பாலானோரால் சாதியை ஒதுக்கி வைக்க முடிவதில்லை. எனவே அதனை ஒழிப்போம் என்று சொல்வதைவிட அதில் உள்ள குறைபாடுகளை, கருத்து வேறுபாடுகளை களைவோம் என்று சொன்னால் அல்லது களைந்தாலே போதும். அதனை ஒழிப்போம் என்று சொன்னாலும் அதனை ஒவ்வொரு சாதியினருமே தங்களுக்கு எதிரானதாக எடுத்துக் கொள்வர். எனவே தற்போதைய நிலையில் சாதி பாகுபாடை மறந்து வாருங்கள் என்று மட்டுமே சீமானால் கூற முடியும்.


சாதி வேறு பாட்டை மறந்து வாருங்கள் என்று குரல் கொடுத்தாலும் இவர் சாதி அமைப்புகளுடன் இணைந்தே செயல்படுகிறார் என்று ஒரு குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. குறிப்பாக தலித் அமைப்புகள் இவர் தங்களை கூட்டம் கூட்ட மட்டும் பயன்படுத்திக் கொள்வதாகவும் தங்களது (பரமக்குடி) பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றன. அதாவது முதலில் எங்கள் பிரச்சனைகளை தீருங்கள், அதன் பின்னர் ஈழ விடுதலை பற்றி பேசுவோம் என்ற கருத்து அவர்களிடையே பரப்பப்பட்டு வருகிறது. அப்படியானால் இவர் எந்த நிலையில் பிரச்சாரம் செய்ய வேண்டும்? சாதியை ஒழிப்போம் வாருங்கள் என்று குரல் கொடுக்க வேண்டுமா? அல்லது எல்லாச் சாதிகளும் வாருங்கள் என்று அழைக்க வேண்டுமா? சாதியை ஒழிப்போம் என்றால் யாரும் அவர் பின்னால் போக மாட்டார்கள்.


தமிழ் தேசியவாதிகள் செய்ய வேண்டியவை


தீண்டாமை பற்றி பேசுவோர் ஒரு பிரச்சனை ஏற்படும்போது மட்டுமே அது பற்றி கூக்குரலிடுகின்றனர். அதன் பின் அதை சௌகரியமாக மறந்து விடுகின்றனர். ஒரு நிகழ்வுக்கு முன் பின் நிகழ்வுகள் காரணமாக அமைகின்றன. அவற்றை களைந்தாலே பெரும்பாலான பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுவிடும். உதாரணமாக குரு பூஜைகளுக்கு செல்லும் இரு தரப்பினருமே மாற்றுச் சாதிகளுக்கு வெறுப்பேற்றும் வகையில் நடந்துகொள்கின்றனர். அதனை தடுக்க எந்தவொரு அமைப்புமே ஆக்கப் பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை.


உதாரணமாக இருதரப்பிலும் உள்ள படித்தவர்களை கொண்ட நல்லிணக்க குழுக்களை அமைத்து குரு பூஜைகளுக்கு செல்லும் வழிகளை கண்காணிக்கலாம். அப்போது சில்லறைகள் செய்யும் சேஷ்டைகளை சுட்டிக் காட்டி தடுக்கலாம். தீண்டாமை உள்ள ஊர்களின் பட்டியலை தயார் செய்து அங்குள்ள பெரியவர்களை அழைத்துப் பேசலாம். அதைவிடுத்து ஆதிக்க சாதி, சாதி வெறியர் என்று சொல்லிக் கொண்டு தீண்டாமையை ஒழிக்க முயன்றால் அதனை என்றைக்கும் ஒழிக்க முடியாது. ஆதிக்க சாதியினருடன் இணைந்து, அவர்களின் ஆதரவோடு செயல்பட்டால்த்தான் இந்த பிரச்சனையை ஒழிக்க முடியும். அதற்காக ஆதிக்க சாதியினருக்கு அடிபணிந்து செல்லவோ, அடங்கி இருக்கவோ தேவையில்லை. பிரச்சனைகளை நியாயமாக பேசினால் யாரும் ஏற்றுக் கொள்வார்கள். இதையெல்லாம் செய்யும்போதுதான் அனைத்து சாதியினரின் ஆதரவையும் பெற முடியும்.


இது பிராமணர் எதிர்ப்புக்கும் பொருந்தும். தற்போதைய நிலையில் பிராமணர் - இந்து எதிர்ப்பும் பொருத்தமில்லாதது. ஒரு சிலர் பிராமணர்கள் தமிழருக்கு எதிராக நடந்து கொண்டாலும் பெரும்பாலான பிராமணர்கள் - இந்துக்கள் அவ்வாறு இருப்பதில்லை. தலித்களின் தலைவியாக கருதப்படும் மாயாவதி உத்தர பிரதேசத்தில் பிராமணருடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அதேபோல தமிழகத்தில் உள்ள அனைத்து சாதியினரும் தங்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும். அப்போதுதான் ஒரு சிறந்த தமிழ் சமுதாயம் உருவாகும்.


சாதி அரசியல் செய்ய வேண்டும்


இதற்காக தமிழ்தேசியவாதிகள் எதிரிகளை வீழ்த்தும் அரசியல் ஆயுதமாக சாதி அரசியலை கையிலெடுக்க வேண்டும். ஒரு அரசியல்வாதி தன் எதிரியை வீழ்த்த அத்தனை தந்திரங்களையும் கையாள வேண்டும். அதுவே அவர் தன் மக்களுக்குச் செய்யும் தொண்டு. அந்த வகையில் திராவிடக் கட்சிகள் இன்று வரை தங்களது சுயநலத்திற்காக சாதி அரசியலை உருவாக்கி அதனை அழிக்க முடியாத அளவிற்கு வளர்த்து விட்டுள்ளன. இவர்கள் சாதி ஒழிப்பு பற்றி பேசிக்கொண்டு அதனை வளர்த்து அதில் குளிர் காய்ந்து வருகின்றனர். அறிஞர்களும் பெயரளவு மேடையில் பேசுகின்றனர். பின்னர் வீட்டில் மறந்து விடுகின்றனர் அல்லது கண்டுகொள்வதில்லை. இதற்கு இன்னொரு காரணமும் உண்டு அந்த கருத்தை வீட்டிலும் பேசினால் தங்களது சாதியினர் தங்களை ஒதுக்கி விடுவர் என்ற அச்சமே.


இவர்கள் சாதி அரசியலை தங்களது சுயநலத்திற்காக பயன்படுத்தினார்கள் என்றால், தமிழினத்தின் எதிர்கால நலன் கருதி தமிழ்தேசியவாதிகள் தங்களது நல்ல நோக்கத்திற்காக, இந்திய - திராவிட ஆதிக்க சக்திகளை வீழ்த்த, சாதி அரசியலை கையிலெடுக்க வேண்டும். தங்கள் இலக்கை அடைந்த பின் சாதிச் சமநிலையை ஏற்படுத்த வேண்டும். மக்கள் மனதளவில் அனைவரும் சமம் என்ற நிலைக்கு வரவேண்டும். அதன் பின்புதான் சாதி சமுதாய வேறுபாடற்ற நிலையை ஏற்படுத்த முடியும். மனநிலை தொடர்பான இந்த பிரச்சனையை வெறும் சட்டத்தை வைத்துக் கொண்டு மட்டும் கட்டுப்படுத்திவிட முடியாது. சாதி உணர்வு மறைந்த பின்னரும் குழு உணர்வுகள் ஏற்படலாம். ஆனால் அந்த குழுக்களால் சாதியால் ஏற்படுவது போல பெரிய அளவில் வன்மம், விரோதம் ஏற்படாது.


சாதிப் பிரச்சனை கடந்த நானூறு ஆண்டுகளில் தமிழ் சமுதாயத்தில் ஆழமாக பதிந்து, முற்றி பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த பிரச்சனையை யாரும் தனிமனிதராகவோ, அல்லது ஒரு தனி அமைப்பாகவோ நின்று ஒருநாள் இரவில் தீர்த்துவிட முடியாது. இதற்கு ஒரு நீண்ட காலத் திட்டத்தை உருவாக்கி அனைவரின் ஒத்துழைப்போடு நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக முதலில் அனைவரும் சமம் என்ற கருத்தை உருவாக்க வேண்டும். தீண்டாமை உள்ள ஊர்களை கண்டறிந்து அங்குள்ள இரு தரப்பினரையும் அழைத்துப்பேச வேண்டும். அதையும் ஒரே பேச்சு வார்த்தையில் முடித்து விடமுடியாது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இந்த பிரச்சனையை தீர்க்க ஆதிக்க சாதிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகள் ஆகிய இரு தரப்புமே இணைந்தே செயல்பட வேண்டும். பேச்சு வார்த்தைகளின் மூலம் இந்த பிரச்சனையை போக்கலாம் என்பதற்கு உதாரணம்தான் அண்மையில் முடிக்கப்பட்ட உத்தரப்புரம் பிரச்சனை.


தலைவர்களை பழிப்பதால் பயனில்லை

இதற்கு மாறாக ஒரு மாற்றுச் சாதியை, அதன் தலைவரை திட்டுவது அல்லது இகழ்வதால் அந்த சாதி குறைந்துவிடவோ, அதன் தலைவர் குறைந்து விடவோ போவதில்லை. இவ்வாறு பேசுவதன் மூலம் எந்த சாதியும், தலைவரும் உயர்ந்து விடவும் முடியாது. இந்த நிலையில் ஏதாவது ஒரு சாதியை, அதன் தலைவரை புகழ்ந்து பேசாமல் விட்டுவிட்டாலும் அந்த சாதியை, அதன் தலைவரை புறக்கணிப்பதாகவே அந்த சாதியினரால் கருதப்படும். எனவே சீமான் போன்றோர் அனைத்து சாதிகளையும் தங்களுடன் அரவணைத்துச் செல்லவேண்டும். இன்னும் சுருக்கமாக சொல்லப்போனால் திராவிட அரசியல்வாதிகள் எவ்வாறு சாதி அரசியல் செய்கிறார்களோ அதுபோல இவர்களும் சாதி அரசியல் செய்ய வேண்டும். அவர்கள் சுயநலத்திற்காக சாதி அரசியல் செய்தால் இவர் தமிழினத்தின் பொது நலனிற்காக சாதி அரசியல் செய்ய வேண்டும். இன்று வலிமையான அரசியல் சக்தியாக உள்ள தேவர் சாதியினரை அவர் ஒதுக்க முடியாது, ஒதுக்கவும் கூடாது.


ஹிட்லருடன் சண்டையிடும்போது அவனை வெல்ல சர்ச்சிலுக்கு அவன் செய்யும் அனைத்து தந்திரங்களையும் செய்ய வேண்டியதாயிற்று. ஹிட்லர் அவற்றை தன்னுடைய தீய நோக்களுக்காக செய்தான். ஆனால் சர்ச்சில் அவற்றை நல்ல நோக்கங்களுக்காக செய்தார். இதைப் போலவே சீமானும் சாதி அரசியலை பக்குவமாக பொதுநலன் கருதி செய்ய வேண்டும். அப்போதுதான் அவர் சாதி வெறி மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களை கடந்து தமிழ் தேசியத்தை நோக்கிச் செல்ல முடியும். இல்லையென்றால் அவர்கள் சீமான் மீது இல்லாத குற்றங்களை சுமத்தி வீழ்த்த வலை பின்னுவர்.


அனைத்து சாதியினரிடமும் தங்களது கடந்த காலம், கடந்த காலத் தலைவர்கள், நிகழ்காலம், எதிர்காலத்தில் போய்ச் சேரவேண்டிய இலக்கு போன்ற விஷயங்களில் தெளிவான நிலை ஏற்பட வேண்டும். தலைவர்களை பொதுவான தலைவர்களாக கருத வேண்டும். அதுவே தமிழ் தேசியத்திற்கு சிறந்த சூழலாக அமையும்.


எனது கேள்வி என்னவென்றால்

1. தந்தை பெரியாரை, கர்ம வீரர் காமராஜரை, தாத்தா ரெட்டைமலை சீனிவாசனை புகழ்ந்து பேசும்போது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை புகழ்ந்து பேசுவதில் என்ன தவறு?

2. காங்கிரஸ் கட்சியிலிருந்த தேவர் அக்கட்சியிலிருந்து வெளியேறி சுபாஷ் சந்திர போஸின் கட்சியில் இணைந்ததால் காங்கிரஸ் மறைமுகமாக அவரை குறிவைத்தது. அதன் காரணமாகவே சாதிக் கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டு, அவர் மீது பொய் வழக்கும் போடப்பட்டது. அதனால்தான் தலித்களுக்கும் தேவர்களுக்கும் (பள்ளர்கள் - மறவர்கள்) இடையே மோதல் போக்கு உருவானது.

3. தேவர் செய்த குற்றம் என்ன? எதற்காக அவரை ஒதுக்க வேண்டும்?

4. இம்மானுவேல் சேகரனின் கொலைக் குற்றத்தில் கைது செய்யப்பட்டாலும் அவர் குற்றமற்றவர் என்றே நீதிமன்றம் தீர்ப்பளித்து அவரை விடுதலை செய்தது.

5. அவர் காமராஜரை கடுமையாக விமரிசித்ததற்கும் காரணம் காமராஜர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார் என்பதற்காகவே. அவர் நாடார் சமூகத்தை சேர்ந்தவர் என்பதற்காக அல்ல.

6. உண்மையில் அவர் ஒரு குற்றவாளியாக, கொலைகாரராக இருந்தால் ஏன் திராவிடக் கட்சிகள் அவரை பாராட்ட வேண்டும்?

7. அவர்கள் வாக்கு வங்கிக்காகத்தான் அவரை பாராட்டிப் பேசுகின்றனர் என்றால் மாற்று சாதி வாக்கு வங்கிகளைச் சேர்ந்த சாதித் தலைவர்களை ஏன் பாராட்டிப் பேசுவதில்லை?

8. ஒரு பெரும்பான்மையான சாதியின் தலைவரை ஏன் ஒரு அரசியல் தலைவர் ஒதுக்க வேண்டும்?

9. அவரை குறைத்துப் பேசும் மாற்று சாதியினர் எவ்வாறு தேவர் இனம் தங்கள் பின்னால் வரவேண்டும் என்று எதிர்பார்க்க முடியும்?


இந்த கேள்விகளுக்கு ஆரோக்கியமான, கண்ணியமான விவாதங்களை, கருத்துக்களை வரவேற்கிறேன்.


கீழே மதுரையில் தேவர் ஜெயந்தி நூற்றாண்டு விழாவில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பற்றி வைகோ பேசிய காணொளிகளின் சுட்டிகளை இணைத்துள்ளேன். நேரமிருந்தால் அவற்றையும் பாருங்கள்.1. http://www.youtube.com/watch?v=Si---T7v6ww&feature=related


2. http://www.youtube.com/watch?v=fG6vuKEKdw4


3. http://www.youtube.com/watch?v=n-ai_ghWv5M


4. http://www.youtube.com/watch?v=aCEWsEbXmDw&feature=related


5. http://www.youtube.com/watch?v=lA8Y9TUVHqE&feature=related


6. http://www.youtube.com/watch?v=sYj8bQL0vG4&feature=related


7. http://www.youtube.com/watch?v=PoJZ7te_-XY&feature=related

நன்றி - அதீதம்
http://www.atheetham.com/story/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81


9 comments:

நான் என்பது எனது எண்ணங்களே... said...

அருமையான பதிவு அண்ணன்....

நான் என்பது எனது எண்ணங்களே... said...

அருமையான பதிவு அண்ணன்....

Anonymous said...

nalla pathivu

stanleyabrahamgp said...

னீங்கள் குறிப்பிட்ட திருக்குறள் பற்றிய பதிவை , தேடியபோது...இந்த பதிவை வாசிக்க நேர்ந்தது. மிக நல்ல பதிவு. எந்த ஜாதியினரும் இந்த பதிவை புறந்தள்ள முடியாது என நான் கருதுகிறேன். சரி. இந்த தேவர் ஜாதியினர், தங்களது செய்கைகளால்...தேவரை மாற்று ஜாதியினர் வெறுக்குமாறு, தேவரின் சிலையை சேதப்படுத்துமாறும் செய்கிண்றனனர். தேவர் வழி தோன்றல்கள், அவரை பின்பற்றுபவர்கள் எப்படி இருக்கவேண்டும், யார் தேவர் ஜாதி, அவர் எப்படி வாழ வேண்டும்....என்பன பற்றி ஒரு பதிவை போடுவது இந்த காலத்துக்கு மிக பொருந்தும்.அது மாதிரியான ஒரு கட்டுரை வெளியிட கேட்டுகொள்கிறேன். நன்றி

Sen Tel said...

நல்ல பதிவுகள் நன்றிகள்

athi arvind said...

சிந்தனையை தூண்டும் பதிவு

bala murugan said...

Super

bala murugan said...

Arumai

குமரிவேந்தன் said...

உண்மையை விளக்கும் பதிவு...