Monday, January 30, 2012

குடியரசு கொண்டாடுவோம்

அந்த மூவர்ணமும் ஒரு அசோக சக்கரமும்
=======================================

நம் கொடிக்கு
அறுபத்தேழு ஆண்டாக
கெட்டிச்சாயம் தான்.
சாயம் போனது
ஜனநாயகத்துக்கு தான்.

"லொக் லொக்" லோக் பால்
===========================
லோக் பால் வந்தால்
தேனும் பாலும் ஓடுமா?
கங்கைக்குள்ளும்
ஆயிரம் கூவங்கள்.
இன்று புத்தன் இருந்தால்
கேட்டு இருப்பான்....
"லஞ்சமே கொடுக்காத
வீட்டில் இருந்து
அரைப்ப‌டி
க‌டுகு கொண்டுவாருங்க‌ள்."

இந்தியா..பாகிஸ்தான்
====================

வெள்ளையன் பிரித்துத்தந்தான்.
அதனால்
இன்றும் இந்திய இதயத்தின்
ஆரிக்கிள் வென்டிரிக்கிளில்
ரத்தம் குடிக்கும்
காஷ்மீர் ஆப்பிள்க‌ள் தான்.

அலங்கார வண்டிகள்
=====================

உண்மை வண்டி ஒடிந்து நிற்க‌
பொம்மை வண்டிகள்
ஆயிரம் ஊர்வலம்.
முப்படைகள் மீசையை
முறுக்கி விட்டுக்கொள்ளட்டும்
ஆட்சேபணையில்லை...ஒரு
முல்லையாற்றுக்கு முன்னால் இவை
முனை ம‌ழுங்கிப்போவ‌தென்ன‌!

ந‌திகளை இணைக்க‌ப்போகிறோம்
என்று
அதோ ஒரு அல‌ங்கார‌வ‌ண்டி
ஊர்ந்து வ‌ந்து கொண்டிருக்கிற‌து.
ஆம்.
அது எல்லா மாநிலங்களின்
அரசியல் சாக்கடை நதிகள் எல்லாம்
ஒரே நதியாய்!


ம‌ரியாதை
=========
இந்திய அன்னையின் முகத்தில்
ஊழல்
காறி உமிழ்ந்தது.
அதற்கு மரியாதை செலுத்தவா
இந்த பீரங்கிகளும் இங்கு
குண்டுகள் உமிழ்ந்தன?

வாகா
==========
விறைத்த சல்யூட்டுகளுடன்
பூட்ஸ்கால்கள் ஓங்கி மிதிக்க‌...அடியில்
இந்தியிலும் உருதுவிலும்
இந்திய‌த்தாயின் க‌ண்ணீர்த்துளிக‌ள்.

இல‌வ‌ச‌ங்க‌ள்.
============
வெள்ளைக்கார‌ன்
அன்றே தெரிந்து கொண்டான்.
"இல‌வ‌ச‌ங்க‌ள்" தான்
இங்கே ஆட்சி செய்யும் என்று.
அத‌னால்
"இல‌வ‌ச‌மாய்"த் த‌ந்தான் இந்த‌ சுத‌ந்திர‌ம்.


இன்னும் தோண்டுங்கள்
========================
மசூதிக்கு அடியில் ஒரு கோவில்
கோவிலுக்கு அடியில்
இன்னோரு கோவில்.
அதற்கும் அடியில்
ஒரு நாகரிகம் தோன்றியதன்
எலும்புக்கூடுகள்.
இன்னும் தோண்டுங்கள்
கூச்சல்கள்
கூப்பாடுகள்
கேட்கிறதா அந்த‌
கொலவெரி...
கூப்பிட்டு விருந்து கொடுங்கள்.
அமைதி எனும்
ஃபாசில்கள் கிடைக்கும் வரை....

சொற்பொழிவு
=============
புள்ளிவிவரத்தில் பசித்து
புள்ளிவிவரத்தையே புசித்து
புள்ளிவிவ‌ர‌த்தைப்ப‌டித்து
ஏதாவது ஒரு
இருபத்திமூன்றாம் நூற்றாண்டுக்குள்
வறுமையை ஒழிப்போம் என்று
இலக்கு குறிப்போம்.


க‌ருப்புப்ப‌ண‌ம்
============

சுவிஸ் பேங்கில் ப‌ண‌ம்
க‌ண‌க்கில் வெள்ளைய‌டிக்காத‌ ப‌ண‌ம்.
நம் நாட்டு ஊழலின்
ஆயுதக்கிடங்கு இந்த பேங்கு தான்.
க‌ருப்புப்ப‌ண‌ம்
காவி நிற‌த்தில் கூட‌ இருக்க‌லாம்.
உல‌கமெங்கும்.
இவ‌ர்க‌ளின்
க‌ண்ணுக்குத்தெரியாத‌
செக்கு புத்த‌க‌த்தில் தான்
ந‌ம் அர‌சிய‌ல் ச‌ட்ட‌ புத்த‌க‌ங்க‌ளும்
ஆன்மீக‌ வேத‌ புத்த‌க‌ங்க‌ளும்
அச்சிட‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌.

இல‌ங்கைக்கு இந்திய‌ தூதுவ‌ர்க‌ள்
==============================

வ‌ட்ட‌மேஜையை
சுற்றி சுற்றி வ‌ர‌
வெள்ளைக்கால‌ர் அதிகாரிக‌ள்.
ஆயிர‌க்க‌ண‌க்கில்
த‌மிழ‌ர்க‌ள் ப‌டுகொலை!
அது ப‌ற்றி க‌ண‌க்கு எடுக்க‌
அந்த‌ காக்கா குருவிக‌ளை
அழைத்திருக்கிறார்க‌ள்.
பாவ‌ம்.
ராஜ‌ப‌க்ஷேக்க‌ள் அமைதியாக தூங்க‌ட்டும்.
ஃபைல் குறிப்புக‌ளில்
இந்த‌ அமைதி காக்கும் ர‌க‌சிய‌ம்
ப‌த்திர‌மாக‌
பாதுகாக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.


கோட்டை ர‌க‌சிய‌ம்.
==================

புதிய‌ ச‌ட்ட‌ச‌பை க‌ட்டிட‌த்தில்
ஒரு புதிய‌ ம‌ருத்துவ‌ ம‌னை.
அறிஞ‌ர் அண்ணா நூல‌த்தில்
குழ‌ந்தைக‌ள் ம‌ருத்துவ‌ ம‌னை.
த‌மிழ‌க‌த்தின்
ம‌ன‌ ந‌ல‌ ம‌ருத்துவ‌ ம‌னையை
எங்கே வைப்ப‌து?
கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு
நெய்க்கு அலைவ‌தா?
இருக்க‌வே இருக்கிற‌து
செயிண்ட் ஜார்ஜ் கோட்டை!

ஒரு உர‌த்த‌ சிந்த‌னை!
====================

அவ‌ர்க‌ள் ஒரு மாட்டுத்தாவ‌ணியை
ம‌துரையில்
ம‌த்திய‌ பேருந்து நிலைய‌ம் ஆக்கினார்க‌ள்.
சென்னையில்
ஏன் உல‌க‌த் த‌மிழ் செம்மொழிப்பூங்காவை
ஒரு மாட்டுத்தாவ‌ணி ஆக்க‌க்கூடாது?

கூட‌ங்குள‌ம் அணு உலை
=======================

எருமை மாடுக‌ள் கூட‌
செல்ஃப்போன்க‌ளில்
"கொல‌வெரி" கேட்கும் நாடு இது.
இதை "இருட்டு இந்தியா"
ஆக்க‌வும் த‌ய‌ங்காத‌
ம‌ந்தைக‌ளின்
ச‌ந்தை இரைச்ச‌ல்க‌ளில்
மாட்டுச்சாண‌மே மிச்ச‌ம்.

நன்றி - ருத்ரா (இ.பரமசிவன்)
பண்புடம் குழுமம்

No comments:

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...