Sunday, January 15, 2012

ஒபாமாவிற்கு மஹிந்தருடன் டீல் வைப்பது சுலபமாக இருப்பதால்.....


I am sorry,I cannot do anything because....

தற்போதைய உலக ஓட்டத்தினைப் பார்த்து தமிழர்கள் நினைத்தனர் மஹிந்தரை சர்வதேசம் விடாது இறுக்கிப் பிடிக்கும் ஆகவே சர்வதேசத்துடன் சேர்ந்து நாங்களும் ஓடி தக்க நேரத்தில் சில விடயங்களை சாதிப்போம் என்று. ஆனால் ஒபாமாவின் ஓட்டமோ வித்தியாசமானது.

ஏன் ஒபாமா மட்டும் அல்ல ஏனைய நாடுகளும் தான். அராபிய நாடுகளில் செய்வதனைப்போல ஆசிய நாடுகளில் அமெரிக்கா ஒன்றும் செய்ய முடியாது.அதற்கான காலம் முற்றுபெற்றதாகவே அண்மைய நிகழ்வுகள் காட்டுகின்றன. அமெரிக்கா நேரடியாகவோ அன்றி, மறைமுகமாகவோ அதாவது ஐக்கிய நாடுகள் சபை ஊடகவோ ஆசிய நாடுகளில் நடவடிக்கை எடுப்பது என்பது அது ஒரு கடினமான பாதையாகவே கருதுகின்றது. மேற்குலகின் பொருளாதார நெருக்கடிகள் இந்த கடின பாதைகளை தேர்வு செய்ய இனி அனுமதிக்கப் போவதில்லை. ஆகவே தமது இலக்கை எட்ட எது இலகுவான பாதையோ அதாவது பொருட்செலவில்லாத பாதையினையே தேர்ந்தெடுக்கும்.

இந்த வகையில் பராக் ஒபாமா அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவேண்டும் அதில் வெல்லவேண்டும் என்றால் அமெரிக்காவிற்கு தலையிடிகளை குறைக்கும் டீல்களையே செய்வார். என்பது எல்லோருக்கும் புரிந்துவருகின்ற பார்வையாக இருக்கின்றது. ஆகவே ஆசியாவில் எதைச் செய்தாலும் இப்போதைக்கு இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் நலன்களை மீறி அல்லது அவர்களின் ஆலோசனைகளை மீறியதாக அமெரிக்கா எதனையும் செய்ய மாட்டாது. ஆகவே இருக்கின்ற அரசுகளுடன் அவர்களுக்கு சில சலுகைகளைக் கொடுத்து தமது நலன்களை எப்படி அடையலாம் என்பதே ஒபாமாவின் டீல். இந்த டீல்களுக்குள் மூன்றாம் தரப்பின் பிரச்சினைகள், மனித உரிமைகள், உட்பட எந்தவொரு சர்வதேச நடைமுறைகளும் இருக்காது.

மறைமுகமாக கூறப்போனால் எந்த பிசாசுகளுடனும் ஒபாமா நிர்வாகம் தமது நாட்டிற்காக டீல் பேசும் நிலையிலேயே இருக்கின்றது. இதற்குள் மஹிந்த என்ற பிசாசும் உள்ளடங்கும். அல் கைதாவுடன் பேசுகிறது ஒபாமா நிர்வாகம், தனது எதிரிகளுடன் பேசுகின்றது, பர்மாவில் அரசியல் அணுகுமுறையில் மாற்றம், ஏன் வடகொரியாவுடனும் பேச ஒபாமா தயங்கமாட்டார். இப்போதைக்கு ஈரான் நாடே ஒரே ஒரு எதிரி என்பதால் அதனை மட்டும் வேறு மாதிரி கவனித்துக்கொண்டு மற்றவர்களுடன் சல்லாபம்தான்.

இந்த சூழலில் தமிழர்களின் பிரச்சினையும் அடிபட்டுப்போகலாம். அதற்கு எடுத்துக்காட்டாக மஹிந்தருக்கு அமெரிக்கா (ஒபாமா) வழங்கிய ராஜ தந்திர சிறப்புரிமையினை கூறலாம்.அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போர்க்குற்ற வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ராஜதந்திர சிறப்புரிமை உள்ளதாக ஒபாமா அமெரிக்க அரசாங்கம் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

காசிப்பிள்ளை மனோகரன் மற்றும் இருவரால் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட போர்க்குற்ற வழக்கிலேயே, இலங்கை அதிபருக்கு ராஜதந்திர சிறப்புரிமை உள்ளதென ஒபாமா நிர்வாகம் கூறியுள்ளது.

அமெரிக்க ராஜாங்கத் திணைக் களத்தின் நீதித் திணைக்கள சட்ட ஆலோசகர் ஹரோல்ட் ஹோ இந்த போர்க்குற்ற வழக்கில் இருந்து விலக்குப் பெறுவதற்கு இலங்கை அதிபருக்கு ராஜதந்திர சிறப்புரிமை உள்ளதாக கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்துக்குப் பரிந்துரைத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்து வரும் கொலம்பியா மாவட்ட நீதிபதி கொலீன் கொல்லர் கொட்டேலி, இந்த விவகாரத்தில் ராஜாங்கத் திணைக்களத்தின் பரிந்துரைகளை ஜனவரி 13ம் நாளுக்குள் தெரியப்படுத்துமாறு கேட்டிருந்தார்.

இந்தநிலையில் கடந்த வெள்ளியன்று அமெரிக்க நீதித் நீதித் திணைக்களத்தின் உதவி சட்டமா அதிபர் ரொனி வெஸ்ட் மற்றும் பிரதி கிளை பணிப்பாளர் வின்ஸ் எம்.காலர்வே ஆகியோர் இலங்கை அதிபருக்குள்ள ராஜதந்திர சிறப்புரிமை குறித்த பரிந்துரைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இதையடுத்து நீதிபதி கொட்டேலி, இந்தப் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டு இலங்கை அதிபருக்கு எதிரான இந்த வழக்கை தள்ளுபடி செய்யலாம் என்று நீதிமன்ற வட்டாரங்கள் கூறியுள்ளன.

அமெரிக்கா மட்டும் அல்ல ஐகிய நாடுகளிலும் இதே கதைதான் நடக்கும் ஆக மஹிந்தரை மிரட்ட மட்டுமே தமிழர்கள் பிரச்சினை தேவையே தவிர தமிழர்களுக்கான உரிமையில் உள்ள அக்கறை என்பது பூச்சியம்தான்.

எதிர்காலத்தில் தமிழர்களின் வாக்குகளை ஓரளவு நம்பி இருக்கின்ற நாடுகள் சில தமிழர் உரிமைகள் பற்றி பேசுவார்கள். ஏனையோர் எல்லோரும் மஹிந்தவுடன் வியாபாரம் செய்து கொண்டு இருப்பார்கள்.

சர்வதேசத்திற்கு என்ன தேவை?

வட்டிக்கு கடன் கொடுக்க கூடியதாக இருக்கவேண்டும்

கொடுத்த கடனை அறவிடக்கூடியதாக இருக்கவேண்டும்.

வியாபாரத்தினை தங்கு தடை இன்றி செய்யக்கூடியதாக இருக்கவேண்டும்.

தமது நாட்டு மக்கள் பிரச்சினை இன்றி மலிவாக சுற்றுலா சென்று வரக்கூடியதாக இருக்கவேண்டும்.

தாம் விதிக்கின்ற சில சட்டங்களுக்கு இலங்கை தீவிரவாதப் பிரச்சினையை காரணம் காட்டக்கூடாது (இப்போதுதான் அதுபற்றி கூறமுடியாதே)

மேற்குலகின் கடற்போக்குவரத்தான இந்து சமுத்திர பிராந்தியம் அமைதியாக இருகவேண்டும்.

ஆக மொத்தத்தில் விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் முடக்கபட்டதால் சர்வதேசத்திற்கு இவை அனைத்தும் சுமுகமாக நடக்க கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே சிங்களம் ஏமாற்றுக்காரர் என்றால் மேற்குலகம் மகா ஏமாற்றுக்காரர் என்றே கூறலாம்.

இந்த மகா ஏமாற்றுக்காரர்களுடன் டீல் பேச எம்மிடம் என்ன உள்ளது? ஒன்று மட்டும் இருந்தது அதாவது மிகப்பெரிய ஆயுத இயக்கமும் அதன் கீழான ஒரு நடைமுறை அரசாங்கம் இருந்தது. அதுதான் சிங்களத்துடன் என்றாலும் சரி சர்வதேசத்துடன் என்றாலும் சரி பேசுவதற்கு அதுவே அடிப்படையாக இருந்தது. ஆனால் இப்போ எதுவுமே இல்லை.

ஒசாமா கொல்லப்பட்டபின்னரும் ஏன் ஒபாமா அல் கைதாவுடன் பேசுகிறார். காரணம் எங்காவது சில நேரம் கண்ணிவெடியை வைத்து விடுவார்கள் என்பதுதான். அல்லது ஏதாவது ஒரு சக்தி அல் கைதாவை பயன்படுத்தி என்றோ ஒரு நாள் அமெரிக்காவிற்கு குடைச்சல் கொடுக்கலாம் என்பதுதான்.

தமிழர்களைப் பொறுத்தவரை சிங்களமும் சரி, சர்வதேசமும் சரி எல்லாமே முடிந்து விட்டது. இனி மீண்டும் தலையெடுக்காமல் எப்படி பார்ப்பது என்பதுதான் அவர்களின் இலக்கு. அதற்காக சிங்களம் என்ன செய்கின்றது என்றால் வடக்கு கிழக்கை சிங்கள மயமாக்கிவிடுவோம் பிரச்சினை தீரும் என நினைக்கின்றது. சர்வதேசம் என்ன நினைக்கின்றது என்றால் ஏதாவது ஒரு தீர்வினை கொடுத்து ஆயுதப் போராட்டம் ஒன்று இப்போதைக்கு வராமல் பார்த்துக்கொள்ளலாம் என்று. ஆனால் தமிழர்கள் என்ன நினைக்கின்றார்கள்? ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி நினைத்துக்கொண்டு செயல்படுகின்றார்கள்.

எதிர்காலம் போட்டிமயமானது, சர்வதேசத்துடன் என்றாலும் சரி, சிங்களத்துடன் என்றாலும் சரி எமது உரிமை பற்றி பேசுவதற்கு எம்மிடம் என்ன இருக்கின்றது? அவர்கள் எதற்காக எம்முடன் பேசவேண்டும் என்பதற்கு ஒரு காரணி இருக்க வேண்டும். (அதனைத்தான் தலைவர் உருவாக்கினார்) அந்தக்காரணி வெறும் மனித உரிமையாகவோ,இனவிடுதலை என்ற கருப்பொருளாக மட்டும் இருப்பதில் பயனில்லை. மாறாக இவற்றை அடையும் ஓர் சக்தி, பலம் எம்மிடம் உருவாகவேண்டும் அந்த சக்தியை தாமும் பயன்படுத்தலாம் என்ற எண்ணம் மேற்குலகிற்கு வரும்போதுதான் எமக்கான ஓர் இடம் அங்கு இருக்கும்.

அது ஜனநாயக சக்தி என்றால், மக்கள் எழுச்சி என்றால் தற்போதைய உலக சூழலில் தமிழ் நாட்டுத் தமிழர்களும் ஒன்றாக குரல் கொடுக்கவேண்டும், மக்கள் எழுச்சி என்றால் அவர்களும் அதாவது எட்டுக்கோடி மக்களும் எழவேண்டும்; நடக்குமா? யாரால் எப்போது அதனைச்செய்ய முடியும்? அதற்கான காலம் இதுதான், இப்போதுதான்; ஏனென்றால் இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்று சேர்ந்துள்ள சூழலில் இதுதான் தருணம். அனால் அது நடப்பதற்கான சூழல் அரிதாகவே காணப்படுகின்றது.

கடந்த காலம் கஸ்டமானது, கசப்பானது, பேரழிவினைக் கொண்டது என நாம் எதிர்கால சந்ததிக்கு பயத்தினை ஏற்படுத்த வேண்டாம், பீதியினை கிளப்ப வேண்டாம். கடந்த காலத்தினை மீட்டிப்பார்த்து சரி செய்து கொண்டு அதனை பின்பற்றவேண்டிய கால நேரம் வரலாம். சாமி எதற்கும் பதில் சொல்ல மாட்டார், எதையும் உடனே கையில் கொடுக்கவும் மாட்டார் ஆனால் மீண்டும் மீண்டும் அந்த சாமியிடம்தான் போகின்றோம் ஏன்? வேறு வழி இல்லை. அப்படித்தான் எமது உரிமை போராட்டத்திலும் வேறு வழி இல்லாவிடில் பல வருட அனுபவங்களைக்கொண்ட வழிகளை பயன்படுத்த வேண்டிய சூழல் என்றோ ஒரு நாள் வரும்.

இந்தியா, சீனா, சிங்களத்தினை பயன்படுத்துவது போல ஒபாமாவும் அவர்களை பயன்படுத்தலாம், ஏன் ஐரோப்பிய ஒன்றியமும் பயன்படுத்தலாம், பான் கி மூனும் டீல் பேசலாம். அதற்காக அவர்களை எதிர்த்து எப்படி போராட முடியும், இறைஞ்ச முடியும்?

நன்றி - ஈழநாதம்
http://www.eelanatham.net/story/%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D

No comments:

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...