Saturday, February 4, 2012

பென்னி குக்கிற்கு மணிமண்டபம் கட்டுவது ஏமாற்றுவேலை

தேவன்


முல்லைப் பெரியாறு பிரச்சனை தலை தூக்கியதுமே தமிழர்களுக்கு அதனை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் பென்னி குக்கின் பெருமை புலப்பட ஆரம்பித்து விட்டது. அவரது வரலாறு மறுபரிசீலனை செய்யப்பட்டது. அவரது அருமை-பெருமை புலப்பட்டது. அவர் அந்த அணையை கட்ட செய்த தியாகம் தெரியவந்தது. அவருக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அவருக்கு பொங்கல் விழா நடத்தப்ட்டது. தேனி மாவட்டத்தில் அவருக்கு யாராவது கோவில் கட்டினாலும் ஆச்சரியமில்லை. பென்னி குக் விஷயத்தில் ஓரளவு விழித்துக் கொண்ட தமிழ் சமூகமே நன்றி. உமது தூக்கமும் விழிப்பும் எத்தனை மேலோட்டமாக உள்ளது என்பதை உணர்த்த விரும்பும் நோக்கத்தில் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.முல்லைப் பெரியாறு போராட்டம் அரசியல் பின்புலம் இல்லாத போராட்டமாக தலையெடுத்தது. இது ஒரு செயற்கையான போராட்டம் அல்ல. இந்த எழுச்சி எல்லாருக்குமே ஆச்சரியத்தை கொடுத்தது. சொந்த மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் பன்னீர்செல்வம் மீது மக்கள் செருப்பை வீசினர். இது ஆட்சியில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. எனவே அவர்களின் உணர்ச்சியை சாந்தப்படுத்தும் விதத்தில் பசியால் அழுகின்ற பிள்ளைக்கு மிட்டாய் வாங்கிக் கொடுப்பதைப் போல தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா ரூ. 1 கோடி செலவில் பென்னி குக்கிற்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்துள்ளார். மேலோட்டமாக இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே. எனவேதான் சரத் குமார், வைகோ போன்றோர் இதனை வரவேற்று முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.ஆனால் இது சரியா என்று ஆராய்ந்து பார்க்கிறபோது இது ஒரு ஏமாற்று வேலை என்றே தெரிகிறது. ஈழப்படுகொலைகள் சேனல் 4-ல் ஒளிபரப்பப் பட்டபோது ஜெயலலிதா தமிழக சட்ட மன்றத்தில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார். ஆனால் மத்திய அரசு அந்த தீர்மானத்தை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டது. அதற்கு பின் என்ன ஆச்சு? மாநில அரசு என்ன செய்ய வேண்டும்? தங்களது தீர்மானம் அவமதிக்கப்பட்டதே அதற்கு ஏதாவது செய்ய முடியுமா? பரிகாரம் உண்டா? இதைப் பற்றியெல்லாம் சிந்திக்கப்படவும் இல்லை. கவலைப்படவும் இல்லை. ஏனெனில் அது ஒப்புக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானம். அது ஒரு நாடகம் என்று எல்லாருக்குமே தெரியும். அதனால்தான் மற்ற கட்சிகள் கூட அதனை கண்டு கொள்ளவில்லை.தீர்மானம் அவமதிக்கப்பட்டால் என்ன செய்வது?தீர்மானம் அவமதிக்கப்பட்டதும் மாநில அரசு என்ன செய்திருக்க வேண்டும்? மத்திய அரசுக்கு ஒரு காலக் கெடு கொடுத்து மீண்டும் ஒரு தீர்மானம் நிறைவேற்றி இருக்க வேண்டும். அதாவது போர்க்குற்றமோ, பொருளாதார தடையோ தேவையில்லை, குறைந்தபட்சம் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிக்க வேண்டும். அந்த தீர்மானத்தையும் மத்திய அரசு குப்பை தொட்டியில் போட்டிருக்கும். அப்போது இலங்கைக்கு உதவி செய்வது குறித்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடக் கோரி மீண்டும் இன்னொரு தீர்மானம் போட்டிருக்கலாம். அதற்கும் பதில் இல்லாத பட்சத்தில் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றலாம். அதாவது மத்திய அரசு மீது தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற தீர்மானத்தை நிறைவேற்றலாம். அதென்ன நம்பிக்கையில்லா தீர்மானம்? அதனால் மத்திய அரசு கவிழ்ந்து விடுமா? இல்லை. ஆனால் மத்திய அரசு மீது மாநில மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை தெளிவாக்கும். அது மத்திய அரசை யோசிக்க வைக்கும். மாநில அரசு மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். ஆனால் ஜெயலலிதா மத்திய அரசுடன் மோதிக்கொள்ள மாட்டார். அவருக்கு அவரது பதவிதான் முக்கியம். தமிழக மக்கள் முக்கியமல்ல.ஏனெனில் அவருக்கும் தமிழ் மக்களுக்கும் சம்பந்தமில்லை. அவருக்கு தமிழகத்தில் யாராவது ஒரு உறவுக்காரர் இருக்கிறாரா என்பதே சந்தேகம்தான். தமிழகம் அவருக்கும் பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையாக இருந்தது. அது இப்போது பணத்தோடு அதிகாரத்தையும் கொடுத்துள்ளது. தமிழ் மக்களாவது, உணர்வாவது? அவர் மட்டும் ம்ம்ம்... என்றால் தமிழகமே அவரது காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கும். பின் அவர் எதற்காக எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டும்? எனவேதான் ஈழத்தமிழருக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் என்று கூறி ஈழத்தாய் என்று பெயர் பெற்ற தமிழக முதல்வர் அதன் பின் அதனை வசதியாக மறந்து விட்டார். அப்படி ஒரு தீர்மானத்தை புறக்கணித்தால் என்ன செய்ய வேண்டும் என்று கூட அவரிடம் திட்டம் இல்லை. ஏனெனில் அது ஒரு கண்துடைப்பு தீர்மானம். அதேபோல பென்னி குக்கிற்கு ஜெயலலிதா மணிமண்டபம் கட்டாவிட்டாலும் யாரும் கேட்கப் போவதில்லை. அடுத்த தேர்தலுக்கு முன்பாக அடிக்கல் நாட்டலாம். அதன் பின் அதனை வசதியாக மறந்து விடலாம். அதற்கு முன்பே மக்கள் அதனை மறந்து விடுவார்கள்.அப்படியானால் பென்னி குக்கிற்கு எப்படி நன்றி தெரிவிக்கலாம்?பென்னி குக் என்ற ஒரு ஆங்கிலேய பொறியாளர் தான் தமிழ் மக்கள் மீது கொண்டிருந்த மனிதாபம் காரணமாக தனது சொத்தை விற்று அணை கட்டியபோது, தமிழக மக்களின் ஆதரவைப் பெற்ற தலைவி என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய முடியும்? ஏன் ஜெயலலிதா அந்த அணையை மீண்டும் புதிதாக கட்டக் கூடாது? அப்படி கட்டி அந்த அணைக்கு பென்னி குக் அணை என்று பெயரிட்டால் அதுவே அவரது நோக்கத்திற்கு நாம் மதிப்பளிப்பதாக அமையும். அதைவிடுத்து அவருக்கு மணிமண்டபம் கட்டுவோம் என்பது நமது இயலாமையையும், ஏமாற்று வேலையையுமே காட்டுவதாக அமையும். பென்னி குக்கை இன்றும் நமக்கு நினைவுறுத்துவது எது? முல்லைப் பெரியாறு அணை. அது பென்னி குக் தமிழ் மக்களின் மீது கொண்டிருந்த அன்புக்கும் அனுதாபத்திற்கும் அவரது உன்னத நோக்கத்திற்கும் உதாரணமாக உள்ளது. அவருக்கு நாம் மதிப்பளிப்பதாக இருந்தால் நாம் அவரது நோக்கத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். அதை எப்படி செய்வது?கேரள அரசியல்வாதிகளின் வாதத்தை முறியடித்து அம்மாநில மக்களின் அச்சத்தை போக்கலாம். அதற்கு முன்பாக கேரள அரசியல்வாதிகளின் வாதத்தை முறியடிக்க வேண்டும். அதாவது அணை பலவீனமாக உள்ளது, நாங்கள் புதிய அணை கட்டி தமிழகத்திற்கு தண்ணீர் தருகிறோம் என்ற வாதத்தை முறியடிக்க, அணை பலவீனமாக இருந்தால் அதனை நாங்களே இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய அணையை கட்டுவோம் என்று அறிவிக்க வேண்டும். இதன் மூலம் கேரள அரசியல்வாதிகளின் பொய் பிரச்சாரம் அடிபடும். இரண்டாவதாக கேரள மக்களின் அச்சத்தை நாம் போக்குவதாகவும் அவர்களின் பாதுகாப்பு மீது நாம் அக்கறை கொண்டவர்களாகவும் நம்மை காட்டும். இன்னும் ஒரு துணிச்சலான முயற்சியாக அணை பலவீனமாக இல்லாவிட்டாலும் கூட முழு அளவு தண்ணீரை நிரப்புவதற்காக அணையை புதிதாக கட்டித் தருகிறோம் என்பதை தமிழக அரசு அறிவிக்கலாம்.அணை பலவீனமாக உள்ளது என்பவர்களால், புதிய அணையை நாங்களே அதே இடத்தில் கட்டிக் கொள்கிறோம் என்பதற்கு மறுப்பு தெரிவிக்க இயலாது. அதற்கு அவர்கள் ஒப்புக் கொள்ளும்போது அவர்களிடம் மத்திய அரசின் முன்னிலையில் புதிய ஒப்பந்தம் போட வேண்டும். அதாவது மத்திய அரசுக் குழு ஒன்று அணையை ஆராய்ந்து இறுதி அறிக்கை தரவேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில் அணை பலவீனமாக இருந்தால் புதிய அணை கட்டப்படும் என்று ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் கேரளா அணை கட்டுமானப் பணியை பார்வையிடலாம், ஆனால் எந்தகாரணத்தைக் கொண்டும் அணைக் கட்டும் பணியில் குறுக்கிடக்கூடாது என்ற வாக்குறுதியையும் பெற வேண்டும். இதன் மூலம் இந்த விஷயத்தில் தலையிட முடியாது என்று கூறிவரும் மத்திய அரசும் தமிழக அரசின் வாதத்தை ஏற்கும் நிலைக்கு தள்ளப்படும். அப்போது அந்த அணையை கட்டுவதற்கான நிதியை மத்திய அரசிடமிருந்து பெறுவது எளிதாகிவிடும். மத்திய அரசு தானே முன்வந்து நிதி தரும் நிலைக்கு தள்ளப்படும். ஒருவேளை மத்திய அரசு நிதி தர தாமதம் செய்தாலும் கூட மாநில அரசு மற்ற நிதி ஆதாரங்களை தேட வேண்டும்.இதுபோன்ற ஒப்பந்தம் போடப்பட்ட பின் புதிய அணை கட்டப்பட்டால் அணையின் முழுக் கொள்ளளவான 152 அடி வரை தண்ணீரை நிரப்பலாம். இதனால் ராமநாதபுரம் மாவட்டமும் நீர்வளம் பெறும். இதுவே அந்த ஆங்கில பொறியாளனுக்கு நாம் செலுத்தும் நன்றியாக அமையும்.


எல்லை உரிமையை மீட்டல்

ஜெயலலிதா தமிழக வரலாற்றில் நீங்காத இடம் பெற நினைத்தால் தமிழகத்தின் எல்லையை மீண்டும் வரையறை செய்ய கோரிக்கை விடுக்கலாம். அவர் தமிழகத்திற்கு சொந்தமான தேவிகுளம், பீர்மேடு, உடும்பன்சோலை பகுதிகளை (http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=18048...) கோரிப் பெற முயற்சி செய்ய வேண்டும். அவ்வாறு கோரிப் பெற்றால் முல்லைப் பெரியாறு அணையும் தமிழகத்திற்குள் வந்துவிடும். குறைந்தபட்சம் அவற்றை கோரி ஒரு தீர்மானத்தையாவது நிறைவேற்ற வேண்டும். அதுவே அவர் தமிழ் மக்கள் தன்னை முதல்வராக தேர்ந்தெடுத்ததற்கு செய்யும் நன்றி ஆகும். இதையெல்லாம் செய்யாவிட்டால் தமிழக மக்கள் தங்கள் உரிமைகள், உணர்வுகளை மதிக்கும் ஒரு தலைவரை முதலமைச்சராக தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்கள் உரிமைகளுக்காக மற்றவர்களை கெஞ்சாமல் இருக்கலாம்.

நன்றி - http://www.atheetham.com/story/penny

No comments:

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...