Thursday, February 23, 2012

நவீன ராமன்

இரவு மணி ஏழு ,21 பிப்ரவரி 2012 அன்று கார் விழுப்புரம் தாண்டி தேசிய நெடுஞ்சாலையில் 120 கி மீ வேகத்தில் கடந்து கொண்டிருந்த போது அரசூர் நாலு முட்டு ரோடு அருகாமையில் காரின் என்ஜின் தடதடவென சத்தம் .,

முகப்பை (BONNET) தூக்கி பார்த்தால் என்ஜின் VALVE ஒன்றில் லேசாக புகை வந்து கொண்டு இருந்தது . ஒரு முக்கிய அலுவல் காரணமாக மதுரை மறு நாள் காலை இருந்து ஆக வேண்டிய கட்டாயம் எனக்கு .

ஒரு டயர் பழுது சரி செய்யும் சிறிய கடை முன் நிறுத்தி , எனது ஓட்டுனரை அழைத்து , மெக்கானிக் யாராவது இருந்தால் கூப்பிடுங்கள் என்று சொல்லி கொண்டு இருக்கும் போது என்ன விஷயம் என்று ஒரு பெரியவர் கேட்க .அவரிடம் உரையாடிய ரெண்டு மணி நேர நேரத்தின் தொகுப்பு உங்களுக்காக :

விவசாயம் எப்படி போகுது ஐயா ?
பெரியவர் : 20 ஏக்கர் கரும்பு போட்டுருக்கேன் ., டன்னுக்கு 2700 வருது .. 10 ஏக்கர் உளுந்து போட்டுருக்கேன்...

முதலுக்கு வருமானம் வருதா ஐயா ?
பெரியவர் : கரண்ட் ரொம்ப கஷ்டங்க ..பத்து மணி நேரம் தான் வருது ...எதோ பிழைப்பு ஓடுது .,முத்த பையன் எஞ்சினியர் படிச்சி விவசாயம் பாக்க மாட்டேன் சொல்லிட்டு சென்னைக்கு போய்ட்டான் ., ரெண்டாவது மகன் ஒத்தாசை செய்றான் ..முன்ன மாதிரி விவசாயம் பாக்க முடியல ,ஆன எங்கப்பா விவசாயம் மட்டும் செய்யாம விட்டுறாதன்னு சொல்லிட்டு போயிட்டார். வருஷம் 40 ஓடி போச்சு , எனக்கு கொடுத்த நிலத்த வச்சு நானும் காலத்தை ஒட்டிட்டேன். .,என்ன கஷ்டம் வந்தாலும் , நான் சாகுற வரையில் விவசாயம் நிலம் விற்க மாட்டேன் ., 120 ஏக்கரில் விவசாயம் பார்த்த குடும்பம் இப்போ 30 ஏக்கரா சுருங்கி போச்சு , இந்த வருஷம் கடன் நிலுவை வேறு 165000 /- ரூ ஆகி விட்டது .

கரண்ட் இல்லாத அம்மாவசை இருட்டில் .,அந்த நெடுஞ்சாலையில் அவ்வப்போது விரைந்து செல்லும் வாகனங்கள் ஒளியில் அவர் முகம் பார்த்த போது கவலை ரேகைகள் ., ஏராளமான சுருக்கங்கள் ., அவர் பேச பேச விவசாயத்தின் வலிகள் புரிய ஆரம்பித்தது . மனதும் கனத்தது .

இதற்குள் அந்த கிராம மெகானிக் இலகுவாக VALVEவை கழற்றி ., நூல் சுற்றி மிக நுண்ணிய துளை வழியே அதை நாசுக்காக பொருத்தி என்ஜின் புகையும் ., சத்தத்தையும் அடியோடு நிறுத்தி இருந்தார் .அந்த அம்மாவாசை இருட்டில் முன்று அலைபேசி ஒளி உதவியோடு முடித்து இருந்தார். அவர் பெயர் கேட்டேன் பாஷா என்றார் ., எவ்வளவு உங்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற போது அவர் சொன்ன விலை எனக்கு உண்மையிலே தூக்கி வாரி போட்டது .சென்னையில் இந்த வேலை செய்து இருந்தால் என்ன கேட்பார்களோ அதில் பத்தில் ஒரு பங்கையே அவர் கேட்டார் .

நன்றி சொல்லி விட்டு அந்த இருட்டில் விடை பெற்ற போது அந்த முதியவர் சொன்னார். தம்பி பாத்து பத்திரமா போய் வாங்க ., காலம் கெட்டு கெடக்கு., எங்கப்பன் சுடலையன் உங்களுக்கு துணை இருப்பான்.

தமிழக கிராமத்து மக்கள் எளிமை தானே ஒரு மனிதரை மேலாடை தவிர்க்க வைத்து மகத்மாவாய் , உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது! எனது தேசத்து இருதயம் கிராமத்தில் இருக்கிறது என்று அவர் சொன்ன வாக்கியம் மனதில் வந்து போனது.

இந்த அம்மாவசை ரெண்டு மணி நேரம் இருட்டு எனக்கு பல புத்தகம் சொல்லி தராத அனுபவங்கள் தந்தது . கார் இப்போது இருட்டை கிழித்து வேகமாக கிளம்பியது ., நான் தலை திருப்பி பார்கிறேன்.

அந்த சிறிய கடையும் , "மடப்பட்டு" கிராமமும் .,மனிதர்களும் இருளில் மறைய ஆரம்பித்தர்கள் . ஆனால் எப்பாடு பட்டாலும் தந்தை சொல்லை காக்கும் இந்த 67 வயது நவீன "ராமனும்" , ஆபத்து நேரத்திலும் காசு சம்பாதிக்க மனது வைக்காத இந்த 27 வயது பாஷாவும் மிக உயர்வாய் ., முப்பொழுதும் மனதில் நிஜங்களாக .....

நன்றி - ச. வெ. ரா முகநூலில்

No comments:

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...