Sunday, February 26, 2012

தீர்ப்புதான் பலன்!

யோகா குரு ராம்தேவ் புதுதில்லி, ராம்லீலா மைதானத்தில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்துக்கான அனுமதியை ரத்துசெய்து, நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த ஆதரவாளர்களைத் தாக்கிய தில்லி போலீஸின் செயலைக் கடுமையாகக் கண்டித்துள்ள உச்ச நீதிமன்றம், போராட்டம் நடத்திய பாபா ராம்தேவையும் பொறுப்பாக்கியுள்ளது. 2011, ஜூன் 4-ம் தேதி நள்ளிரவு, போராட்டப் பந்தலுக்குள் நுழைந்த போலீஸôர் எவ்விதமாக நடந்துகொண்டார்கள் என்பது உலகமே அறியும். உறங்கிக்கொண்டிருந்த ஆதரவாளர்கள் மீது தடியடி நடத்தி, கண்ணீர்ப் புகை வீசினர். பலரைக் கைது செய்தனர். பலரை காயப்படுத்தினர். இதில் காயமடைந்தவர் இறக்கவும் நேரிட்டது.

போராட்டம் நடத்தியவர்கள் அரசியல்வாதிகள் அல்லர். இவர்களில் பலர், சமூகத்தில் உயர்வான இடத்தையும் பதவிகளையும் வசதிகளையும் பெற்றவர்கள். ஆனால் அத்தகையவர்களிடமும் கடுமையான தாக்குதலை நடத்தியது தில்லி போலீஸ். வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணத்தை உடனடியாக இந்தியாவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ராம்தேவ் அறிவித்த நாள் முதலாகவே, அவரைச் சமாதானம் செய்யும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டது.

அமைச்சர்கள் கபில் சிபல், பிரணாப் முகர்ஜி, சிதம்பரம் என்று பலரும் அவரை சமரசம் செய்ய முயன்றனர். அதற்கு ராம்தேவ் உடன்படவில்லை. அந்தத் தோல்வியினால் மத்திய அரசுக்கு ஏற்பட்டகோபம்தான், போலீஸின் அத்துமீறலாக மாறியது. உண்மையான குற்றவாளி மத்திய அரசும் அமைச்சர்களும்தான். இருப்பினும், முனை மழுங்குவதும் முறிபடுவதும் எப்போதும் அம்புகள்தாமே!தில்லி போலீஸார் மீது நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளதற்கு முக்கிய காரணம், அன்றைய இரவு தடியடி நடத்திய போலீஸôர் மீது சிலர் செங்கற்களை வீச, போலீஸாரும் பதிலடியாக செங்கற்களை எடுத்து வீசியது சிசிடிவி-யில் பதிவாகியிருப்பதுதான். சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியவர்களே அதனை மீறுவதா? ஒரு போராட்டத்துக்கான அனுமதி திடீரென ரத்து செய்யப்பட்டால், கூடியவர்கள் கலைந்து செல்வதற்கு உரிய காலஅவகாசம் தரவேண்டாமா? அனுமதியை ரத்து செய்ததில் காவல்துறை தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டு, அடிப்படை உரிமைக்கு எதிராகச் செயல்பட்டுள்ளது என்பதும் நீதிமன்றத்தின் கடுமைக்குக் காரணம்.

இந்தச் சம்பவத்துக்கு, போலீஸôரை மட்டுமன்றி, யோகா குரு தலையிலும் ஒரு குட்டு வைத்துள்ள நீதிபதிகள், இழப்பீட்டில் 25 விழுக்காடு தொகையை ராம்தேவ் ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அனுமதி ரத்து செய்யப்பட்டுவிட்டது என்று தெரிந்தவுடன், ராம்தேவ் தனது ஆதரவாளர்களைக் கலைந்துசெல்லும்படி கேட்டுக்கொண்டிருக்க வேண்டும். அதைச் செய்யாததுதான் ராம்தேவ் செய்த தவறு என்கின்றது நீதிமன்றம்.

தீர்ப்பின் இந்தப் பகுதிக்கு, எதிர்க்கட்சிகளிடையே ஆட்சேபம் இருக்கிறது. அமைதியான முறையில் போராட்டம் நடத்திய யோகா குரு ராம்தேவ் ஏன் இழப்பீட்டில் 25 விழுக்காட்டை ஏற்க வேண்டும் என்ற கேள்வி நியாயமானதாகவே தோன்றும். போராட்டம் அறவழியில் நடைபெற்றது என்றாலும்கூட, அதைத் தலைமையேற்று நடத்திய யோகா குருதேவ், அறவழியில் நிற்கவில்லை. அறவழியில் அவருக்கு நம்பிக்கை இருந்திருந்தால், தன்னைக் கைது செய்ய போலீஸôர் வந்தபோது, சல்வார் கம்மீஸ் அணிந்து தப்பிச் சென்றிருக்கமாட்டார். மாறாக, மேடையிலேயே முதல்நபராகக் கைதாகியிருப்பார். கைதாக விருப்பம் இருப்போர் தவிர, மற்றவர்கள் அமைதியாக வீடு திரும்புங்கள் என்று அறிவுறுத்தியிருப்பார். அதுதான் காந்தியின் வழி. அங்கே ஆதரவாளர்களின் அதிருப்தியும், கோபமும் இருந்திருக்கும். ஆனால், வன்முறை நிகழ்ந்திருக்காது. ஆனால், அதைச் செய்யத் தவறிவிட்டார் ராம்தேவ். ஓர் அறவழிப் போராட்டத் தலைவர் நடந்துகொள்ள வேண்டிய விதத்தில் அவர், அந்த இடத்தில் அன்றைய தினத்தில், நடந்துகொள்ளவில்லை. ஆகவே, அவரையும் நீதிமன்றம் பொறுப்பாக்குவதில் நியாயம் இருக்கிறது.

அமைதியான முறையில் போராட்டம் நடத்துவோருக்கு எதிராக இந்தத் தீர்ப்பு அமைந்துவிடும் என்று எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். இந்தத் தீர்ப்பை எதிர்மறையாகப் பார்க்க வேண்டியதில்லை. போராட்டத்துக்கு அறைகூவல் விடுக்கும் ஒரு தலைவர், தன் சொல்லுக்கு கூட்டம் கட்டுப்படும் என்று தெரிந்திருந்தும், கூட்டத்தின் கொந்தளிப்பைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதும், தான் மட்டும் கைதாகாமல் பாதுகாப்பாக வெளியேறுவதும் வன்முறைக்கு வித்திடும் குற்றச்செயல் என்பதைத்தான் இந்தத் தீர்ப்பு வலியுறுத்துகிறது.கட்சிகள் நடத்தும் கடையடைப்பு, வேலைநிறுத்தம், பேரணியின்போது ஏற்படும் வன்முறையால் சேதமடையும் பொதுச்சொத்துக்கு, அழைப்புவிடுத்த கட்சி/ அமைப்புதான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஏற்கெனவே தமிழகத்தில் ஒரு சட்டம் (கிடப்பில்?) இருக்கிறது.

இச்சட்டம் எவ்வாறு கட்சிகளைப் பொறுப்பேற்கச் செய்கின்றதோ, அதேபோன்று உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, போராட்டம் நடத்தும் தலைவர்களின் பொறுப்பை வரையறுக்கிறது.காவல்துறையைக் கண்டித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். அதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பதவி உயர்வோ, விருதுகளோ பாதிக்கப்படப் போவதில்லை. இழப்பீட்டுத் தொகையை மக்களின் வரிப்பணத்திலிருந்துதான் அரசு கொடுக்குமே தவிர, அவர்களுக்கு என்ன நஷ்டம்?

வெளிநாட்டிலுள்ள கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவரக் கோரித்தான் உண்ணாவிரதம் நடத்த முற்பட்டார் யோகா குரு ராம்தேவ். அவர் எழுப்பிய கோரிக்கைக்கு இன்றுவரை பதில் கிடைத்தபாடில்லை. நல்லதொரு நோக்கத்துக்காக உண்ணாவிரதம் இருந்ததில் அவர் கண்ட பலன் உச்ச நீதிமன்றத் தீர்ப்புதான்.

நன்றி-
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=558420&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

No comments:

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...