Wednesday, February 29, 2012

நதியின் பிழையன்று...

இந்திய நதிகள் இணைப்பு குறித்து ஆலோசனை வழங்க, 2002-ம் ஆண்டு அன்றைய பிரதமர் வாஜ்பாய் ஏற்படுத்திய குழு தனது அறிக்கையை அரசுக்கு அளித்தது. தென்னிந்திய நதிகள் இணைப்பு மற்றும் வடஇந்திய நதிகள் இணைப்பு என்று இரு வகையாகப் பிரித்துச் செயல்படுத்தலாம் என்று ஆலோசனை வழங்கியது. எந்தெந்த நதிகளை எவ்வாறு, எந்தெந்த நதிகளுடன் இணைத்து, இந்தியா முழுவதிலும் நீர்வளத்தைப் பெருக்க முடியும் என்றும் விரிவான அறிக்கை தந்தது இக்குழு.

ஆனாலும் கடந்த பத்து ஆண்டுகளாக இதைப் பற்றி எதிர்க்கட்சிகள் மட்டுமே பேசுகின்றன. இதை அமலாக்குவதற்கான எந்த முயற்சியும் மத்திய அரசால் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில்தான், காலக்கெடு நிர்ணயித்து திட்டத்தை நிறைவேற்றுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளது உச்ச நீதிமன்றம். இதைச் செயல்படுத்துவதற்கான உயர்நிலைக் குழு ஒன்றையும் அறிவித்துள்ளது. இந்திய நதிகளை இணைப்பது என்பது இன்றைய அரசியல் சூழலில் சாத்தியமானதா என்பதும், அப்படியே சாத்தியப்பட்டாலும் அதன் பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்பதும் யோசனைக்குரியவை.

நதிகளை இணைக்க குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் கோடி செலவாகும் என்பதால்தான் இக்கனவு நனவாகக் காலதாமதம் ஆகின்றது என்கின்ற வாதம் மேம்போக்கானது. இத்திட்டத்துக்குப் பணம் தடையில்லை. மாநில அரசுகளும், மக்களின் அச்ச உணர்வில் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளும்தான் மிகப்பெரும் தடை. இது சாதாரண மக்களுக்கே தெரிந்திருக்குமென்றால், நீதிமன்றத்துக்கு ஓரளவு உண்மை புரிந்திருக்கவே செய்யும்.

இரு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பிரச்னைகள் முடிவுக்கு வராத, வரமுடியாத பிரச்னையாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதைத்தான் காவிரி மற்றும் முல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழகம் நேர்கொள்ளும் உண்மை. இதே நிலை ஆந்திரத்தில் கிருஷ்ணா நிதிநீர்ப் பிரச்னையில் இருக்கிறது. கங்கை, யமுனை நதியிலும் இந்தச் சிக்கல்கள் இருக்கின்றன. நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னையில், மத்திய கூட்டணியில் அங்கம் வகிக்கும் இரண்டு கட்சிகள் பதவியில் இருக்கும் மாநிலங்களாக இருந்தாலும்கூடத் தீர்வு காண இயலவில்லை என்பதுதான் நிலைமை.

நதிநீர்ப் பிரச்னைகளைப் பொறுத்தவரையில், மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தையும் மத்திய அரசையும் துச்சமாக மதிக்கின்ற போக்கும் தலையெடுக்கத் தொடங்கிவிட்டது. அதற்கு முக்கியமான காரணம் பலமான மத்திய அரசும், ஒட்டுமொத்த இந்தியாவிலும் செல்வாக்குள்ள மத்திய அரசின் தலைமையும், அரசியல் லாப நஷ்டங்களை மீறிய தேசியப் பார்வையும் இல்லாமல் இருப்பதுதான்.

நதிகளைத் தேசியமயமாக்கி, நதிநீர் முழுவதும் இந்திய நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் வந்தால் மட்டுமே நதிகள் இணைப்பு என்பது சாத்தியமாகும். ஆனால், நதிகள் மீதான தங்கள் உரிமையை மாநில அரசுகள் விட்டுக்கொடுக்குமா? இதில் எந்தவொரு மாநிலத்தையும் தனித்துச் சொல்ல வேண்டியதில்லை. நதிகள் உள்ள எல்லா மாநிலங்களும், "தனக்கு மிஞ்சினால் தானம்' என்ற நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளன.

அடிப்படையில், நதிகளை இணைக்கும் திட்டம் என்பது வெள்ள கால மிகை நீர் வீணாகக் கடலில் சென்று கலக்காதபடிக்கு, பல இடங்களுக்கும் வாய்க்கால் மூலம் பிரித்து எடுத்துச் செல்லுதல் என்பதுதான். வாய்க்கால் அமைப்பதைவிட, மற்ற சிறு நதிகளுக்கு மடைமாற்றி விடுவதுதான் நதிகள் இணைப்புத் திட்டம்.

இது உண்மையில் நதிகளின் மிகைநீர்ப் பயன்பாட்டுத் திட்டம். இத்திட்டம் அமலுக்கு வந்தால் ஏதோ இணைக்கப்பட்ட நதிகளுக்கு இடையே 365 நாளும் வாய்க்காலில் தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கும் என்பதுபோன்ற ஒரு தோற்றமயக்கம் பலரிடமும் உள்ளது. அதுவல்ல நிஜம். முக்கிய நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு, மிகையாக ஓடிக்கொண்டிருக்கும்போது அதைத் திசை திருப்பி, வேறு இடங்களுக்குக் கொண்டுபோய்ச் சேமித்துப் பயன்படுத்துவதுதான் இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கம்.

மிகையாக ஓடிவரும் நீர்தான் மற்ற நதிகளுக்குத் திருப்பப்படும் என்று புரிய வைத்தாலும், நதிகளில் வழக்கமாக வரும் நீரின் அளவே குறைந்துகொண்டு வருகிறது என்பதால்தான் மாநில அரசுகள் இத்திட்டத்தில் சுணக்கம் காட்டுகின்றன. ஒரே மாநிலத்தில் உள்ள இரு நதிகளை இணைப்பதும்கூட, எடுத்துக்காட்டாக காவிரி - தாமிரபரணி இணைப்பு, சாத்தியமாகவில்லை.

கிளை நதிகளின் நீரை, பல்வேறு பாசனத் திட்டங்களுக்காக சிற்றணைகள் மூலம் தடுத்து எடுத்துக்கொண்டுவிடுவது காலப்போக்கில் அதிகரித்துள்ளதே தவிர, குறையவில்லை. முக்கிய நதிகளுக்குத் தண்ணீர் வரத்து குறைந்துபோனதற்கு இது ஒரு முக்கிய காரணம். காவிரியின் கிளை நதிகளிலிருந்து பல திட்டங்களுக்காகத் தண்ணீரை எடுத்துக்கொண்ட பிறகு, எப்படி காவிரியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடும்? காவிரி- தாமிரபரணி இணைப்பை இரு ஆயக்கட்டுதாரர்களும் ஒப்புக்கொள்வார்களா?

இந்த நிலையில், நதிநீரை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் விதமாகவும், குடிநீர் மற்றும் பாசன நீர் பயன்பாட்டைக் கட்டணமாக்கும் விதமாகவும் நடுவண் அரசு நீர்க்கொள்கை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

நதிகளை இணைத்து நீர்வளத்தை அனைத்து மக்களுக்கும் உரித்தாக்க வேண்டும் என்கின்ற கனவை ஒருபக்கம் காட்டுகிறார்கள். இன்னொரு பக்கம், நதிநீரை விலைபேசும் நீர்க்கொள்கை காலத்தின் கட்டாயம் என்ற கருத்தைப் பரப்புகிறார்கள். நதிகளோ நாளுக்குநாள் மெலிந்துபோய் வெறும் கழிவுநீர்க் கால்வாய்களாக மாறி வருகின்றன. நதிகளைத் தேசியமயமாக்காமல் ஒன்றும் செய்ய முடியாது. இந்நிலையில், இந்திய நதிகள் இணைப்பு எந்த அளவுக்குச் சாத்தியம்?

நாம் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில், நமது பிரச்னைகள் எல்லாமே மாநிலப் பிரச்னைகள். ஆனால், அதன் தீர்வோ தேசியத் தீர்வாக இருக்கிறது. இதை மாநிலங்களும் அரசியல் கட்சிகளும் புரிந்துகொள்ளாதவரையில் நதிநீர்ப் பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்படப் போவதில்லை!

நன்றி -
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=559305&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

No comments:

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...