Friday, March 23, 2012

தமிழ்த்தேசிய அரசியலமைப்புச் சட்டம் - சில கருத்துக்கள்

நட்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தோழர் தேவன் அவர்களுக்கு அன்பு வணக்கம்!

கடந்த ஆண்டு திசம்பர்த் திங்களில் 'தமிழ்த்தேசிய அரசியலமைப்புச் சட்டம் - முன்னோட்டம்' என்ற பெயரில் நீங்கள் வரைந்த அற்புதமான கட்டுரை ஒன்றை எனக்கு அனுப்பிக் கருத்து கேட்டிருந்தீர்கள்.

நான் அதை அப்பொழுது உடனே பார்க்கவில்லை. ஒரு திங்கள் கழித்துதான் பார்த்தேன். பார்த்தவுடன் உங்களுக்குப் பதில் அனுப்பினேன், தனிப்பட்ட வேலைகள் கொஞ்சம் இருப்பதால் தற்பொழுது உடனடியாக இது பற்றிக் கருத்து தெரிவிக்க இயலாது என்று. நீங்களும், நேரம் எடுத்துக் கொண்டு பொறுமையாகப் பதில் அனுப்பினால் போதும் என்றீர்கள். இதோ இப்பொழுதுதான் என்னால் எழுத இயன்றது.

அதன் பிறகு கூட சில இணையப் பதிவுகளை நான் எழுதினேன் என்றாலும் அவை அப்பொழுதைய துரிதத் தேவை கருதித்தான். அப்படியானால் எனக்குப் பதிலளிப்பது உனக்குத் துரிதமானதாகத் தோன்றவில்லையா எனக் கேட்காதீர்கள். இதற்குத் துரிதமாகப் பதிலளிக்க நான் விரும்பவில்லை என்பதே உண்மை! மாறாக இது பொறுமையாக ஆராய்ந்து பதிலளிக்க வேண்டிய கட்டுரை என்று நான் கருதினேன். அதனால்தான் பதிலளிக்க இவ்......வளவு தாமதம்! அதற்காக என்னைப் பொறுத்தருள்க!!

இனி என் கருத்துகள்..........

இப்படி ஒரு கட்டுரை எழுதியதற்காக முதலில் என் உளமார்ந்த பாராட்டுகள் மற்றும் நன்றிகள்! ஏனெனில் தனித்தமிழ்நாடு கோரிக்கை என்பது வெறும் மிகையுணர்வாளர்கள் சிலரின் உணர்ச்சி மேலீட்டால் அவ்வப்பொழுது எழுப்பப்படும் கோரிக்கை என்பதை மாற்றி அஃது ஒரு கருத்தாழம் மிக்க, ஆழ்ந்த சிந்தனையின் அடிப்படையில் முன்வைக்கப்படும் அறிவுப்பூர்வமான வாதம் என்பதை இப்படிப்பட்ட ஆழமான விரிவான பதிவுகள் மூலம்தான் நாம் நிரூபிக்க முடியும். அவ்வகையில் இப்படி ஒரு கட்டுரையை நீங்கள் எழுதியிருப்பது சிறப்பான முயற்சி!

தமிழ்த் தேசியம் என்றால் என்ன? என்ற தலைப்பின் கீழ் நீங்கள் எடுத்த எடுப்பிலேயே முற்காலத்தில் இந்தியா 56 தனிநாடுகளாக விளங்கியதைச் சுட்டிக் காட்டியது அருமை! இது மிகவும் தலையாய குறிப்பு (பாயின்ட்). நான் இப்படி ஒரு கட்டுரையை எழுதுவதாக இருந்தால் என்னுடைய முதல் குறிப்பும் இதுவாகத்தான் இருக்கும். ஏனெனில் என்னதான் வரலாற்றுப் பாடங்களில் பிள்ளைப் பருவத்திலேயே நாம் இதைப் படித்திருந்தாலும், சிறு குழந்தை முதலே பாரத நாடு பழம்பெரும் நாடு, வேற்றுமையில் ஒற்றுமை போன்ற சொற்களின் மூலம் இந்தியா என்பது நாடாகத் தோன்றிய காலம் முதலே ஒரே நாடாகத்தான் இருந்து வந்திருக்கிறது என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை நம் உள்ளங்களில் விதைத்து விட்டார்கள். அதனால்தான் தமிழர்களுக்கு இவ்வளவு பெரிய துரோகத்தை இந்தியா செய்த பின்பும் நம் மக்கள் தனித்தமிழ்நாடு பற்றிப் பேசினால் அதை ஏதோ பெரிய நாட்டுத் துரோகம் போல் பார்க்கிறார்கள். நாம் பிறந்ததே இந்தியர்களாகத்தானே அப்புறம் எப்படி நாம் இன்று திடீரென இந்த ஒரு நிகழ்ச்சிக்காக இத்தனை ஆயிரம் ஆண்டுக்கால இந்திய அடையாளத்தைத் துறந்து விட முடியும் எனக் கேட்கிறார்கள். ஆகவே இவர்களிடம் தனித்தமிழ்நாடு குறித்துப் பேச்சைத் தொடங்கினாலே முதலில் நாம் தொன்று தொட்டே இந்தியர்களாக இல்லை; இந்தியர் எனும் அடையாளமே இடைக்காலத்தில் ஏற்பட்டதுதான்; அதற்கு முன் பல்லாயிரம் ஆண்டுகளாக நம் இன அடையாளம்தான் நம்முடைய பன்னாட்டு அடையாளமாக இருந்தது என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்லிவிட வேண்டியது இன்றியமையாதது! அதை நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டு அடித்திருக்கிறீர்கள்!!

ஆனால் விடுதலை பெற்றது முதலே இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிராகத்தான் செயல்பட்டு வருகிறது எனக் கூறி இந்தியாவின் அப்படிப்பட்ட செயல்களைப் பட்டியலிட்ட நீங்கள் ஓரிடத்தில் ஒரு சிறு தவறு செய்து விட்டீர்கள். அங்கே காவிரித் தண்ணீரை பெற்றுத் தர இயலாமை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இறுதிப் பகுதியிலும் ஓரிடத்தில் இதே போலத்தான் குறிப்பிட்டுள்ளீர்கள். அது தவறான சொல்லாட்சி. காவிரித் தண்ணீரை பெற்றுத் தராமை என்றுதான் இருக்க வேண்டும்.

அதே போல் தமிழ்த்தேசியம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்னவாக இருக்கும்? எனும் தலைப்பில் நீங்கள் எழுதும்பொழுது தனித்தமிழ்நாட்டுடனான இந்தியாவின், இந்திய மாநிலங்களின் உறவு பற்றி மிகவும் கவலைப்பட்டிருக்கிறீர்கள். அது தேவையில்லாதது. நீங்களே அந்தப் பத்தியின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளது போல் இன்று உலகமே ஒரு சிற்றூராகச் சுருங்கி விட்டது. ஒவ்வொரு நாடும் பல்வேறு தேவைகளுக்காகப் பிற நாடுகளைச் சார்ந்துதான் இன்று இயங்க வேண்டியுள்ளது. அப்படியிருக்கும்பொழுது ஏற்கனவே 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே நாடாக இணைந்திருந்து ஒருவரையொருவர் சார்ந்து வாழ்ந்த நாம் பிரிந்து போனாலும் ஒருவரையொருவர் சார்ந்துதான் இயங்குவோம் என்பதில் ஐயம் தேவையில்லை. கேரளத்தை நாம் தண்ணீருக்காக நம்பியிருக்கிறோம் எனில் அவர்கள் நம்மை உணவுப்பொருட்களுக்காக நம்பி இருக்கிறார்கள். இன்று ஒரே நாடாக இருக்கும்பொழுது வேண்டுமானால் அவர்கள் தண்ணீர் தராவிட்டாலும் நாட்டு ஒருமைப்பாட்டை முன்னிட்டு நாம் உணவுப்பொருளை அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கலாம். ஆனால் தனிநாடாகப் பிரிந்து விட்டால் நாம் அப்படி எதற்காகவும் எவனுக்காகவும் அஞ்ச வேண்டியதில்லை. எனவே நாம் தண்ணீர் தராவிட்டால் அவர்கள் நமக்கு உணவு தர மாட்டார்கள் எனும் அச்சம் அவர்களுக்கு ஏற்படும். அதனால் அண்டை மாநிலங்களிலிருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீர் முதலான அனைத்துப் பொருட்களும் தனிநாடான பின் தங்கு தடையில்லாமல் தொடர்ந்து கிடைக்கவே செய்யும் எனபதை விட அப்பொழுதுதான் இப்பொழுதை விட நமக்கு வர வேண்டியவை சரியாக வந்து சேரும் என்பது உறுதி. இதை நான் சொல்லவில்லை, 'தென்றல்' திரைப்படத்தில் தமிழ்ப்பற்று மிக்க இயக்குநர் உயர்திரு.தங்கர்பச்சான் அவர்கள் கூறுகிறார்.

அடுத்து சாதி ஒழிப்பு பற்றி நீங்கள் கூறும்பொழுது, சாதிகளை ஒழிக்கத் தேவையில்லை. மாறாக சாதி ஏற்றத்தாழ்வுகளைக் களைந்தால் போதும் என்றும், சாதி இல்லாமல் வாழ முன்வருபவரைச் சமுதாயத்தில் சிறப்புத் தகுதியுடையவராக ஏற்பதன் மூலம் சமநிலைச் சமுதாயம் -அதாவது சாதி இல்லாச் சமுதாயம்- உருவாக்க வழி காணலாம் என்றும் கூறியுள்ளீர்கள். இதை என்னால் ஒப்புக் கொள்ள... இல்லை இல்லை சகிக்க முடியவில்லை நண்பரே!

ஈழப் பிரச்சினை இன்றுவரை தீராமலிருப்பது முதற்கொண்டு தமிழ் இனத்தின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் ஒற்றுமையின்மை. அந்த ஒற்றுமையின்மைக்குக் காரணமே நாம் சாதிவாரியாகப் பிரிந்து கிடப்பதுதான். சமயப் பிரச்சினை கூட இங்கு பெரிதில்லை ஐயா. சாதிப் பிரச்சினைதான் தமிழ்நாட்டின் மிகப்பெரிய பிரச்சினை. சமயச் சண்டைகளை விடச் சாதிச் சண்டைகளால் உடைந்த மண்டைகள்தாம் இங்கு மிகுதி! காலம் காலமாக, அந்தணர்கள் தமிழ்நாட்டுக்குள் வருவதற்கு முன்பிருந்தே இங்கு சாதிகள் இருந்திருக்கின்றன எனவும் இன்றளவும் சாதிதான் இங்கு அடிப்படைச் சமுதாயக் கட்டமைப்பாக இருக்கிறது எனவும் நீங்கள் கூறுவது உண்மைதான். அதற்காக நம் கனவு நாடான தனித்தமிழ்நாட்டிலும் அது தொடர வேண்டிய கட்டாயம் இருக்கிறதா என்ன? சாதியை ஒழிப்பதில் இப்படிப்பட்ட மென்மைப் போக்கு உதவாது நண்பரே! ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து சாதி அமைப்பை ஏற்றுக் கொள்ளலாம் என்கிறீர்களே, முற்காலத் தமிழ்நாட்டில் வேண்டுமானால் சாதிக் கட்டமைப்பு அப்படி இருந்திருக்கலாம். ஆனால் இன்று சாதியின் அடிப்படைக் கட்டமைப்பே ஏற்றத்தாழ்வுதான். அஃது இல்லாத சாதிக் கட்டமைப்பை மக்களால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது! ஒரு காலத்தில் பாலாக இருந்தது என்பதற்காக இன்றைக்கு அது நஞ்சாக மாறிய பின்னும் அதை அருந்த வேண்டுமா என்ன? அல்லது நஞ்சை நீக்கி விட்டு மீண்டும் அதைப் பாலாக மாற்றுவது என்பதுதான் நடக்கிற காரியமா? அப்படியே அது நடக்கிற காரியம் எனினும் அது தேவையா? புதியதோர் உலகம் செய்ய முடிவெடுத்த பின் பழைய உலகத்தின் சமுதாயக் கட்டமைப்புகள் எதற்கு? தூக்கித் எறிவோம்! புத்துலகின் சமூகக் கட்டமைப்பும் புதிதாகப் புதுமையானதாக அமையட்டுமே!

அப்படியானால் சாதியை எப்படி ஒழிக்க வேண்டும் என்கிறாய் எனக் கேட்கிறீர்களா? எனக்கு அதைப் பற்றி முன்பு எதுவும் யோசனை இருந்ததாக நினைவில்லை. ஆனால் நீங்கள் சாதி இல்லாமல் வாழ முன்வருபவரைச் சமுதாயத்தில் சிறப்புத் தகுதியுடையவராக ஏற்பதன் மூலம் சாதி இல்லாச் சமுதாயம் உருவாக்கலாம் என்றீர்களே? அதையே மாற்றிச் சிந்தித்தால்...? அதாவது சாதியை முற்றிலும் தடை செய்து, அனைவரும் ஒரே இனம் -தமிழினம்- என அறிவித்துச், சாதி எனும் பேச்சை எடுத்தாலே கடுமையான தண்டனை வழங்கினால்...? சிந்தித்துப் பாருங்கள்! சாதியே இருக்காது இல்லையா?

இவை எல்லாவற்றையும் விட உங்கள் கட்டுரையில் எனக்கு மிகுந்த கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது உங்கள் மொழிக் கொள்கைதான்! அனைத்துப் பாடங்களும் தமிழ் வழியில் கற்பிக்கப்படும் என்பது வரை சரி. ஆனால் அதன் பின் ஆங்கிலம் கட்டாய மொழிப் பாடமாகவும், பிற இந்திய மொழிகள் விருப்பப் பாடமாகவும் இருக்கும் என்பதுதான் அதிர்ச்சியளிக்கிறது!

இப்படித்தான் எல்லா இனத்தவருக்கும் சம வாய்ப்பு, சமத் தகுதி, சமமான பிரதிநிதித்துவம் என்று கூறி இந்தியா ஒரே நாடாக ஆக்கப்பட்டது. ஆனால் நடந்தது என்ன?... நீங்கள் அறியாததா? அப்படியொரு நிலை நாளைக்குத் தனித்தமிழ்நாட்டிலும் ஏற்பட வேண்டுமா? நாம் இப்பொழுது பேசிக் கொண்டிருப்பது தமிழருக்கான ஒரு தனிநாட்டை உருவாக்குவதற்கா அல்லது இன்னோர் இந்தியாவை உருவாக்குவதற்கா? வேண்டா நண்பரே வேண்டா! எல்லாரையும் திருப்திப்படுத்த முயன்று கடைசியில் யாருக்குமே தனிப் பிரதிநிதித்துவம் இல்லாமல் ஆக்கும் இன்னோர் இந்தியா வேண்டவே வேண்டா!!

என்னைப் பொறுத்தவரை, தனித்தமிழ்நாடு என்பது முழுக்க முழுக்கத் தமிழை மட்டுமே கொண்டதாகத்தான் இருக்க வேண்டும்! அதாவது இரசியா போல, சீனம் போல. அப்படி இருந்தால் உலகின் புதிய கண்டுபிடிப்புகள், புதுப்புனைவுகள், முன்னேற்ற வழிமுறைகள் போன்றவையெல்லாம் நமக்கு எப்படித் தெரிய வரும்? நாம் எப்படி முன்னேற முடியும் என நினைக்காதீர்கள்! ஏன் இரசியாவும் சீனமும் முன்னேறாமலா போய்விட்டன?

இன்று உலக மொழிகளில் எந்த முக்கிய நூல் வெளிவந்தாலும் அது மிகச் சில நாட்களுக்குள் சீனத்தில் மொழிபெயர்க்கப்பட்டு விடுகிறது. இதையும் நான் சொல்லவில்லை, அண்மையில் சீனத்துக்குச் சென்று வந்த சென்னைப் பலகலைக்கழகத் துணைவேந்தர் திரு.ஜி.திருவாசகம் அவர்கள் கூறுகிறார். தாய்மொழி மட்டுமே தெரிந்த மக்கள் வாழும் இரசியா, சீனம் போன்ற நாடுகளில், உலகில் எந்தப் புதிய கண்டுபிடிப்பு வந்தாலும் உடனுக்குடன் அவர்கள் தாய்மொழியில் அது புதுப்புனையப்பட்டு விடுகிறது. அது மட்டுமா? இன்று சந்தையில் நீங்கள் எந்தப் பொருளை வேண்டுமானாலும் வாங்கிப் பாருங்கள், அது ஒரு மார்க்கர் பென்னாக இருந்தாலும் சரி, பென் டிரைவாக இருந்தாலும் சரி எல்லாப் பொருட்களிலும் முதன்மையாக ஐந்து மொழிகளில் அவற்றுக்கான பயனர் குறிப்புகள் எழுதப்பட்டிருக்கின்றன. அவை ஆங்கிலம், பிரெஞ்சு, யேர்மன், இரசியம், சீனம் ஆகியவை. இதற்குக் காரணம் இந்த நாடுகள் அவர்களின் தாய்மொழிக்கு முதன்மை தருவதால் இல்லை. தாய்மொழி தவிர வேறெதையும் அவர்கள் அறிந்து கொள்ளாமல் இருப்பதால்தான்.

ஆம் நண்பரே! நீங்கள் உங்கள் மக்களுக்கு உலகின் எல்லா மொழிகளையும் கற்பித்துக் கொண்டிருந்தால் உலகம் எந்தச் சேவையையும் உங்கள் மொழியில் வழங்க முன்வராது. நீங்கள்தான் உலகின் எல்லா மொழிகளிலிருந்தும் புதியவற்றையெல்லாம் உங்கள் மொழிக்கு மொழிபெயர்த்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கும். மாறாக நீங்கள் உங்கள் மொழியைத் தவிர வேறெந்த மொழியும் உங்கள் நாட்டுக்குள் வராமல் வைத்திருந்தால் உலகமே உங்கள் மொழியில் உங்களைத் தொடர்பு கொள்ள முன்வரும். உங்களுக்காக உலகமே மொழிபெயர்க்கும்! எது நமக்கு இலாபம்? சிந்தியுங்கள்!

அடுத்ததாக, படையமைப்பு பற்றிக் கூறும்பொழுது, தனித்தமிழ்நாட்டின் படை தாக்குதல் படையாக இல்லாமல் பாதுகாப்பை உறுதி செய்யும் படையாக இருக்கும் என்கிறீர்கள். படிப்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால் உலக நாடுகளின் படைகளெல்லாம் தாக்குதல் படையாக இருக்கும்பொழுது நம் படை மட்டும் வெறும் பாதுகாப்பை உறுதி செய்யும் படையாக இருத்தல் இயலுமா என்பது என் ஐயம். "என் ஆயுதம் எது என்பதை நான் தீர்மானிப்பதில்லை, என் எதிரிதான்" எனும் புகழ்பெற்ற பொன்மொழி இங்கு நாம் நினைவுகூரத்தக்கது!

தேர்தல் முறை பற்றிச் சொல்லும்பொழுது மின்னணுத் தேர்தல் முறை பற்றி விளக்கியுள்ளீர்கள். அந்த அளவுக்கு அறிவியல் இன்று வளர்ந்திருக்கிறதா என்பது என் முதல் கேள்வி. மேலும் நாடாளுமன்றத்தில், தலைமையமைச்சர் அளித்த வாக்கையே தவறாகக் காட்டும் இந்த மின்னணுப் பொறிகளை நம்பி ஒரு நாட்டின் தேர்தலை நடத்தலாமா என்பது என் இரண்டாவது கேள்வி! பார்க்க: இந்தியாவின் மின்னணு வாக்குப்பொறிகள் பற்றி ஓர் அதிர்ச்சிக் கட்டுரை (http://nerudal.com/nerudal.26767.html - கீழே இணைக்கப்பட்டுள்ளது).


அடுத்ததாக, ஆட்சி முறை பற்றிக் கூறும் இடத்தில் தலைமையமைச்சராகப் போட்டியிட்டுத் தோற்றவர் துணைத் தலைமையமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் எனவும், எதிர்க்கட்சியினரோடும் அமைச்சரவையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளீர்கள்!! இதனால் அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைத்துப், போட்டி உளப்பான்மை ஒழிந்து அரசியலாளர்கள் ஒருவரை மற்றவர் எதிரியாக நினைப்பது மாறும் எனும் நல்லெண்ணத்தில் நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் அப்படி நடக்கும் என எனக்குத் தோன்றவில்லை நண்பரே!

நாட்டின் தலையெழுத்தையே தீர்மானிக்கும் இடத்தில், நாட்டில் நடக்கும் அனைத்துக்கும் பொறுப்பேற்க வேண்டிய பதவியில் இருக்கும் தலைமையமைச்சர் தன்னிடம் தோற்றவரைத் தனக்கு அடுத்த பதவியில் வைத்துக் கொள்வது என்பது தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொள்வது போல் ஆகாதா? ஏனெனில் வென்றவருக்குப் பெருந்தன்மை வரலாம். ஆனால் தோற்றவருக்கு எப்பொழுதும் அந்த வலி இருக்கும். அவர் இவருடன் ஒழுங்காக ஒத்துழைக்க மாட்டார். எப்படியாவது அவர் பெயரைக் கெடுத்து அடுத்த தேர்தலில் தலைமையமைச்சர் பதவியைக் கைப்பற்ற முடியுமா என்றுதான் பார்ப்பார்.

எதிர்க்கட்சியினரோடு அமைச்சரவையைப் பகிர்ந்து கொள்வதிலும் இதே சிக்கல்தான். தலைமையமைச்சர் மற்றும் முதலமைச்சர் பதவிக்கு அடுத்த பதவி அமைச்சர் பதவி. அரசின் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டியவர்களே இவர்கள்தான். இப்பேர்ப்பட்ட பதவியை எதிர்க்கட்சியினருக்கும் கொடுத்தால் அவர்கள் அரசின் திட்டங்களை முறையாகச் செயல்படுத்துவார்களா? இன்றைய ஆட்சியின் குறைகளைச் சுட்டிக் காட்டி மீண்டும் தாங்கள் ஆட்சியைக் கைப்பற்றுவதுதான் அரசியலாளர்களின் அடிப்படை வியூகமே. அதை விட்டுக் கொடுக்கும் வகையில் ஆட்சியின் நல்ல திட்டங்கள் நல்லபடியே மக்களுக்குப் போய்ச் சேர்ந்து இன்றைய ஆட்சிக்கு நல்ல பெயர் ஏற்படுவதற்குத் தாங்களே காரணமாக இருக்க விரும்புவார்களா? மாட்டார்கள் நண்பரே! மாறாக அமைச்சர் பதவியையும் ஏற்றுக் கொண்டு ஆட்சியின் திட்டங்கள் மக்களுக்குப் போய்ச் சேர விடாமல் தடுத்து ஆளுங்கட்சிக்குக் கெட்ட பெயர் உண்டாக்கத்தான் பார்ப்பார்கள்!

அப்படியே ஒருவேளை எதிர்க்கட்சியினரின் அமைச்சர்கள் நல்லவர்களாக இருந்தாலும், அவர்கள் என்னதான் இன்றைய அரசாங்கத்தின் அமைச்சர்களாக இருந்தாலும் அவர்கள் தலைவர் அவர்களுடைய கட்சியின் தலைவர்தான் இல்லையா? எனவே அவர்கள் அரசாங்கத்தின் ஆணைகளைச் செயல்படுத்துவதா அல்லது தங்கள் தலைவரின் ஆணைகளைச் செயல்படுத்துவதா எனக் குழம்பிப் போவார்கள். இப்படித் தேர்தலில் வென்ற, தோற்ற இரு கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்களிப்பதால் இரண்டு கட்சிகளுக்குமிடையில் அதிகாரப் போட்டி ஏற்படும். நிர்வாகத்தில் குழப்பம் ஏற்படும். ஒரே ஆள் ஒரே சமயத்தில் பத்து விதமான சமையல் செய்யலாம். ஆனால் ஒரே சமையலை ஒரே நேரத்தில் பத்து பேர் சேர்ந்து செய்தால் அதை வாயிலேயே வைக்க முடியாது!

இதே தலைப்பில் இன்னோரிடத்தில் நீங்கள் நீதித்துறையின் ஆணையைச் செயல்படுத்தாவிட்டால் நாடாளுமன்றம் கலைய வேண்டும் எனக் கூறியிருக்கிறீர்கள். நியாயமான சிந்தனை! ஆனால் அப்படித் தன்னைத் தானே தண்டித்துக் கொள்ள ஆட்சியாளர்கள் முன்வருவார்களா? எனவே தன் ஆணையைக் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் நிறைவேற்றாவிட்டால் அந்த நாடாளுமன்றத்தைக் கலைக்க நீதித்துறைக்கு அதிகாரம் இருக்க வேண்டும்!

மேலும் தலைமையமைச்சர் முதற்கொண்டு மக்கள் பிரதிநிதி யாராக இருந்தாலும், அவர் பதவியில் தொடர அவருக்கு வாக்களித்தவர்களில் பாதிப் பேர் எதிர்ப்புத் தெரிவித்தால் அவர் தானாகப் பதவி விலக வேண்டும் எனவும் இல்லாவிட்டால் விலக்கப்படுவார் எனவும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இஃது ஏற்கனவே உள்ள நடைமுறைதான். இதற்கு மாறாக ஒரு புதிய யோசனையை நான் சொல்ல விரும்புகிறேன்.

நான் பரிந்துரைக்கும் சட்டத்தின்படி, அரசுப் பதவியிலுள்ள ஒருவர் மீது குற்றச்சாட்டு எழுந்தால், அவர் தான் குற்றமற்றவர் என நிரூபிக்கும் வரை பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும். அப்படித் தானாக விலகாவிடில் மேலதிகாரத்தில் உள்ளவர் அவரை விலக்க வேண்டும். இவை இரண்டிலொன்று குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் நடக்காவிட்டால் நீதித்துறை தானாக முன்வந்து அவரைப் பதவி விலக்க வேண்டும். நீதித்துறையும் குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குள் தன் கடமையைச் செய்யத் தவறினால் பொதுமக்களில் யார் வேண்டுமானாலும் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுத்து அன்னாரைப் பதவி விலக்க வலியுறுத்தலாம். அப்படிப் பொதுமக்களில் யாராவது கோரினால் அன்னார் மீது குற்றச்சாட்டு எழுந்திருப்பது உண்மையாகவும் இருந்தால் நீதிமன்றம் கண்டிப்பாக அவரைப் பதவி விலக்கியாக வேண்டும். ஒருவேளை பொதுமக்களும் தன் கடமையிலிருந்து தவறிப் பின்னாளில் அன்னார் மீது குற்றச்சாட்டு நிரூபணமானால் குற்றம் செய்த நாள் முதல் நிரூபணம் ஆன நாள் வரையான அவரது பதவிக்காலம் செல்லாது. அந்தக் காலக்கட்டத்தில் அவர் இட்ட எந்த ஆணையும் எந்த அரசு நடவடிக்கையும் செல்லாது. தவிர பதவி விலகத் தவறியதற்கான ஒரு தனித் தண்டனையை அவரும், அவரைப் பதவி விலக்கத் தவறியதற்கான தண்டனையை அவருக்கு மேலதிகாரியும், அந்த வட்டாரத்துக்குட்பட்ட நீதிபதியும் அனுபவிக்க வேண்டும்! இஃது உச்சநீதிமன்றத்துக்கும் பொருந்தும்!! ஆம்! நீதி என்பது அனைவருக்கும் பொதுவானதாகத்தான் இருக்க வேண்டும் நீதித்துறை உட்பட!!!

இதே போல் தனிநபர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தால் குற்றம் நிரூபணமாகும் வரை அவரைச் சிறையில் அடைக்க முடியாது எனச் சட்டம் கொண்டு வர வேண்டும். தேவைப்பட்டால் எத்தனை முறை வேண்டுமானாலும் காவல்துறை அவரை நேரில் அணுகியோ காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றோ விசாரிக்கட்டும். ஆனால் நாட்கணக்கில் விசாரணைக் கைதி எனும் பெயரில் அவரைச் சிறையில் அடைத்து வைக்க முடியக் கூடாது. ஆனால் குற்றம் நிரூபணம் ஆகி விட்டால் குற்றமிழைத்த நாள் முதல் நிரூபணம் நாள் வரையான காலக்கட்டத்துக்கும் சேர்த்து அவர் சிறையில் இருக்க வேண்டும். இதனால் 'விசாரணைக் கைதி' எனும் பெயரில் வாழ்நாளில் பெரும்பகுதியைச் சிறையிலேயே கழிக்க வேண்டிய அவல நிலை யாருக்கும் நேராமல் தடுக்கலாம். ஆனால் இஃது அரசியல், சமூக, பொருளாதாரச் செல்வாக்குடையவர்களுக்குப் பொருந்தாது. காரணம், அவர்கள் வெளியில் வந்தால் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்திச் சான்றுகளைக் கலைத்து விடக்கூடும் என்பதால். தவிரவும் பெரிய மனிதர்கள் எந்தக் காலத்தில் நீண்ட நாட்களுக்கு விசாரணைக் கைதியாக இருந்தார்கள்? பெரும் வழக்கறிஞர்களின் துணையோடு எப்படியும் அவர்கள் பிணையில் வெளிவந்து விட முடியும். ஆனால் சாமானியர்கள்தாம் எப்பொழுதும் விசாரணைக் கைதியாக வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள். இந்தச் சட்டம் அந்தக் கொடுமையைத் தடுக்கும்.

அடுத்ததாக, வாய்தா மேல் வாய்தாவும், மேல்முறையீட்டுக்கு மேல் மேல்முறையீடும் போட்டுத் தண்டனையை முடிந்த வரை தள்ளிப் போடுவது பெரிய மனிதர்களுக்கு இன்று வழக்கமாகி விட்டது. அதைத் தடுக்கும் வகையில், குற்றம் புரிந்தவர் வழக்கு முடியும் வரை தேர்தலில் நிற்கவோ, அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கவோ முடியாமல் தடை செய்ய வேண்டும். மேலும் அரசு ஏலங்களை எடுப்பது அரசு டெண்டர்களை எடுப்பது என வணிகரீதியான எந்தத் தொடர்பையும் அவர்கள் அரசுடன் வைத்துக் கொள்ள முடியாமலும் -குறைந்தது அரசு விழாக்களில் கலந்து கொள்ளவும், மக்கள் பிரதிநிதிகள், உயர்நிலை அரசு ஊழியர்கள் போன்றோரைத் தொடர்பு கொள்ளவும் கூட முடியாமல்- தடை செய்ய வேண்டும். பெரிய மனிதர்களின் இரு கண்களான அரசியல், வணிகம் ஆகிய இரண்டையும் வழக்கு முடியும் வரை இப்படிக் கட்டி விட்டால் "எப்பொழுதடா வழக்கு முடியும்? பேசாமல் தண்டனையை அனுபவித்து விட்டு மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம்" என அவர்களே எதிர்பார்க்கத் தொடங்கி விடுவார்கள். வழக்கைத் தாமதப்படுத்த மாட்டார்கள்.

அடுத்து, பொதுமக்களுக்கான அரசியல் ஈடுபாடு என்ற பத்தியில் நீங்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் எனப் பல விதங்களில் வலியுறுத்தியிருக்கிறீர்கள். வாக்களிக்காதவர்களுக்கு ஒரு கடுமையான தண்டனையையும் அறிவித்திருக்கிறீர்கள். இவற்றை நான் பெரிதும் வரவேற்கிறேன்! ஒருவர் வாக்களிக்கத் தவறுவதால் சமுதாயத்திலும் தனிநபர் வாழ்விலும் ஏற்படும் கடுமையான விளைவுகளை நானும் நன்கறிவேன்.

ஆனால் வாக்களிக்காமையைத் தடுக்க இப்படிக் கடுமையான சட்டதிட்டங்களை வகுத்த நீங்கள், மக்கள் வாக்களிக்காமல் இருப்பதற்கான காரணங்களைச் சரிப்படுத்த எதையும் அறிவிக்காதது எனக்கு ஏமாற்றத்தை அளித்தது.

படித்தவர்கள்தாம் பெரும்பாலும் வாக்களிக்காமல் இருக்கிறார்கள். அதற்குக் காரணம் அரசியலாளர்கள் பலர் நல்லவர்களாக இல்லை; நல்ல அரசியலாளர்களாக இருக்கும் சிலரும் மக்களை ஆளும் அளவுக்கு வல்லவர்களாக இல்லை என்னும் எண்ணம்தான். இஃது உண்மையும் கூட என்பது என் கருத்து. உங்களை நானறிந்த வகையில் இதுதான் உங்கள் கருத்தும் கூட என நம்புகிறேன்!

ஆனால் இதையே காரணமாக வைத்துப் பெரும்பாலோர் தேர்தலைப் புறக்கணிப்பதால் ஏற்படும் மோசமான விளைவுகளை (மிக... மிக... மிகத்) தாமதமாக உணர்ந்துதான் இந்திய நடுவணரசு அண்மையில் 49~ஓ என்றொரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்தது. இதை நாம் நம் தனித்தமிழ்நாட்டிலும் கொண்டு வருதல் வேண்டும்.

ஆனால் 'யாருக்குமே வாக்களிக்க விரும்பவில்லை' என வாக்களிக்க இந்தியா கொணர்ந்த 49~ஓ சட்டத்தில் பல ஓட்டைகள் இருக்கின்றன வழக்கம் போல. அவற்றை நாம் நம் நாட்டில் தவிர்க்க வேண்டும்.

முதலாவதாக, 49~ஓ-வுக்கு வாக்களிப்பதற்கென இங்கே தனிப் படிவம் கொடுக்கப்படுகிறது. இதனால் நேரம் வீணாவதோடு இந்த வாக்கைச் செலுத்துபவர்களைக் கட்சிக் குண்டர்கள் தனியாக அடையாளம் கண்டு கொண்டு உதைக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. எனவே இதை நாம் மாற்றி 'யாருக்குமே வாக்களிக்க விரும்பவில்லை' என வாக்களிப்பதற்கென்று ஒரு தனிச் சின்னத்தை ஒதுக்க வேண்டும்.

இரண்டாவதாக, எத்தனை பேர் 49~ஓ-வுக்கு வாக்களித்தாலும் அதைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை எனும் நடைமுறை இங்கே கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் நாம் அந்த வாக்குகளையும் கணக்கில் சேர்த்துக் கொள்ளும் விதமாக இந்தச் சட்டத்தை இயற்ற வேண்டும். அஃது எப்படியெனில்,'யாருக்குமே வாக்களிக்க விரும்பவில்லை' என்பதே பெரும்பாலோர் வாக்காக இருந்தால் அந்தத் தேர்தலில் யாருமே வெல்லவில்லை என அறிவித்து அடுத்த தேர்தல் காலம் வரும் வரை குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். நிற்க! குடியரசுத்தலைவர் பதவி பற்றி இக்கட்டுரையில் நீங்கள் எங்கும் பேசவில்லை. இதிலிருந்து அந்தப் பதவியை ஒழித்து விட நீங்கள் விரும்புவது புரிகிறது. அது வெறும் அலங்காரப் பதவிதான். பிரித்தானியச் சட்டத்தில், அந்த நாட்டு அரசியல் சூழ்நிலைக்கேற்ப அவர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த அந்தப் பதவியை அந்நாட்டுச் சட்டத்தில் இடம்பெற்றிருந்த ஒரே காரணத்துக்காக இந்திய அரசியல் சட்டத்தை வடிவமைத்த மேதைகள் (!) தாங்களும் அப்படியே தத்தெடுத்துக் கொண்டார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஆனால் தனித்தமிழ்நாட்டுச் சட்டத்தில் அந்தப் பதவிக்கு இப்படியொரு இன்றியமையாத் தேவை இருப்பதால் நாம் அந்தப் பதவியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது என் கருத்து.

இப்படியொரு சட்டம் இயற்றப்பட்டால் அஃது அரசியலாளர்களுக்கு மரண அடியாக இருக்கும்! அரசியலாளர்கள் இன்று இவ்வளவு துணிச்சலாக ஊழல் செய்யக் காரணமே எப்படியிருந்தாலும் இந்த மக்கள் நம்மில் ஒருவருக்குத்தான் வாக்களித்தாக வேண்டும் என்னும் மிதப்புதான். இன்றைய ஆட்சியாளன் 1000 கோடிக்கு ஊழல் புரிகிறான் என அவனுடைய எதிர்க்கட்சியை ஆட்சியில் அமர்த்தினால் அவன் 2000 கோடிக்கு ஊழல் புரிகிறான். இதனால் மக்கள் இந்த 2000 கோடி ஊழலாளனை விட அந்த 1000 கோடி ஊழலாளனே மேல் என மீண்டும் அவனைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவனோ இந்த முறை இரண்டாமவனையும் விஞ்சுகிறான். மக்கள் உடனே அடுத்த தேர்தலில் இரண்டாமவனைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவனோ இந்த முறையும் அடுத்தவனை விஞ்............ போதும்!

இஃது அப்படியே நச்சுச் சுழலாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் யார் நல்லவர் எனப் பார்த்துத் தேர்ந்தெடுப்பது போய் இருப்பதில் யார் தேவலாம் எனப் பார்த்து வாக்களிக்க வேண்டிய கட்டாயத்தில் தற்பொழுதைய மக்கள் இருக்கிறார்கள். இதை நிறுத்த இப்படியொரு சட்டம் இன்றியமையாதது. இதனால் எவ்வளவு தவறு செய்தாலும் இருப்பவர்களுள் ஒருவரைத்தான் தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்னும் கட்டாயம் மக்களுக்கு இருந்தது போய் யாருமே சரியில்லாவிட்டால் அனைவரையுமே புறக்கணித்து மக்கள் குடியரசுத்தலைவர் ஆட்சியைக் கொண்டு வந்து விடுவார்கள் என்னும் அச்சம் அரசியலாளர்களுக்கு ஏற்படும். எதிர்க்கட்சியினனை விடத் தான் தேவலாம் எனக் காட்டிக் கொண்டாலே தேர்தலில் வெல்ல முடியும் என்பது மாறி எதிர்க்கட்சியினனை விடத் தான் சிறந்தவன் எனக் காட்டிக் கொண்டால்தான் வெல்ல இயலும் எனும் கட்டாயம் அரசியலாளர்களுக்கு ஏற்படும். இதனால் அரசியலாளர்களுக்கிடையிலான போட்டி இப்பொழுதைப் போல் எதிர்மறையானதாக இல்லாமல் நேர்மறையானதாக மாறும்!

அடுத்ததாக, அரசியலாளர்களுக்கான தகுதிகள் பட்டியலில் தேர்தலில் போட்டியிடுபவர் வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருவாய் உடையவராக இருக்க வேண்டும் என்கிறீர்கள். இஃது ஏனென்று எனக்குப் புரியவில்லை. ஏன் பணக்காரராக இருந்தால் அவர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி மேலும் பணம் ஈட்ட விரும்ப மாட்டார் என நினைக்கிறீர்களா? அப்படிப் பார்த்தால் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஊழலை எப்பொழுதோ நிறுத்தியிருக்க வேண்டுமே? சரி, அவர்களாவது தொடக்கத்தில் ஏழ்மையில் வாடியவர்கள் எனலாம். ஆனால் தலைமுறை தலைமுறையாகக் கோடிகளில் புரளும் நேரு குடும்பத்தினர் மட்டும் என்ன ஒழுங்கு? இராஜீவ் காந்தி போபர்சு ஊழல் புரியவில்லையா அல்லது இப்பொழுது சோனியா காந்திதான் ஊழல் பணத்தில் கும்மாளமடிக்கவில்லையா?

அதே நேரம் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தும், கோடிக்கணக்காகச் செல்வம் ஈட்டக் கூடிய பதவிகளை வகித்தும் கடைசி வரை நேர்மையாகத் திகழ்ந்த எத்தனையோ பேரை நாம் பார்த்திருக்கிறோம். காமராசர், கக்கன் என அந்தக் காலத்து மனிதர்களை மட்டும் நான் குறிப்பிடவில்லை முன்னாள் தலைமையமைச்சர் வாஜ்பாய், தோழரென அனைவராலும் அன்பொழுக அழைக்கப்படும் தலைவர் நல்லக்கண்ணு என இப்பொழுதும் அப்பேர்ப்பட்டவர்கள் இருக்கிறார்கள் இல்லையா? அதே பட்டியலின் தொடக்கத்தில் நீங்களே குறிப்பிட்டுள்ளது போல் பொதுவாழ்வுக்கு வருவதற்கான முதன்மைத் தகுதிகள் நேர்மையும் சேவை உளப்பாங்கும்தான்.

அரசியல் கட்சிக்கான தகுதிகளில் போதிய வாக்குகள் பெறாத கட்சிகள், கட்சி எனும் தகுதியை இழக்கும் என்று சொல்லியிருக்கிறீர்கள். நல்லவர், கெட்டவர் யாரெனப் பார்த்து வாக்களிக்கும் அளவுக்குக் கூட விழிப்புணர்வில்லாத இந்நாட்டில் 'இந்த' மக்களின் ஆதரவைப் பெறாத ஒரே காரணத்துக்காக ஒரு கட்சியின் அங்கீகாரத்தைப் பறிக்கலாமா?

இஃது ஏற்கனவே நாம் விவாதித்ததுதான்! "தமிழ்த்தேசியம் பேசும் தலைவர்கள் மக்களிடம் போதுமான ஆதரவு பெறாதிருப்பதே பெரும் குறை" என்றீர்கள் நீங்கள். அப்பொழுதும் நான் இதே போல் அதை மறுத்தேன். அது பெரும் விவாதமாகத் 'தோழமை'யில் நீண்டது. ஆனால் இறுதியில் நீங்கள் எனக்குப் புரிய வைத்தீர்கள். நானும் ஒப்புக் கொண்டேன்.

அப்படியிருக்க இப்பொழுது நான் மீண்டும் அதே போன்ற உங்களுடைய இன்னொரு கருத்தை மறுக்கிறேன் எனில் காரணம், அதற்கும் இதற்கும் ஒரு பெரும் வேறுபாடு உள்ளது. அப்பொழுது நீங்கள் போதுமான மக்களாதரவு பெறாதிருப்பது தலைவர்களுக்கான தகுதிக் குறைவு என்றுதான் கூறினீர்கள். எனவே மற்ற எல்லாத் தகுதிகளும் உடைய தலைவர் ஒருவர் இந்த ஒரு குறையை மட்டும் சரிப்படுத்திக் கொண்டால் அவரைத் தலைவராக ஏற்றுக் கொள்ளலாம் என்ற உட்பொருள் அதில் பொதிந்திருந்தது. ஆனால் இப்பொழுது நீங்கள் மக்களாதரவு எனும் ஒரு தகுதி இல்லையென்றாலே அந்தக் கட்சியின் அங்கீகாரத்தைப் பறிக்க வேண்டும் என்கிறீர்கள். இது, நேர்மை, உண்மை, சேவை உளப்பான்மை, நிர்வாகத் திறமை, தமிழ்ப்பற்று, மக்கள் நேசம் என மற்ற எல்லாத் தகுதிகளும் இருந்தாலும் மக்களாதரவு எனும் ஒரு தகுதி இல்லாவிட்டால் அந்தக் கட்சி தேவையில்லை எனக் கூறுவதாக உள்ளது. அதனால்தான் இதை நான் மறுக்கிறேன். இது நியாயமா நண்பரே?

இந்தப் பட்டியலில் இரண்டாவதாக அரசியல் கட்சிகள் வருமான வரி செலுத்த வேண்டும் என்று இருக்கிறது. பணக்காரர்கள் வருமான வரியிலிருந்து தப்பிப்பதற்காகப் பேருக்கு ஓர் அரசியல் கட்சியோ அறக்கட்டளையோ தொடங்குவது இன்று வாடிக்கையாகி விட்டது. இதை முறியடிப்பதற்காகத்தான் நீங்கள் இந்த யோசனையை முன்வைக்கிறீர்கள் என்பது புரிகிறது. ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது.

எனக்குத் தெரிந்து உலகிலேயே மிகப்பெரிய செலவு வைக்கும் விவகாரம் தேர்தல் பிரச்சாரம். அதை எதிர்கொள்ளக் கட்சிகளுக்குக் கோடி கோடியாகப் பணம் தேவைப்படுகிறது. வருமான வரி விதித்தால் அவர்களால் எப்படி அந்தத் தேர்தல் செலவைச் சமாளிக்க முடியும் எனும் கேள்வி எழுகிறது. ஒருவேளை கொஞ்சமாக வரி விதித்தாலும் இப்படியொரு பிரம்மாண்டச் செலவு இருக்கும்பொழுது அவர்கள் அந்தக் கொஞ்சம் வரியையும் ஒழுங்காகக் கட்டுவார்களா என்பதும் கேள்விக்குறியே.

அது மட்டுமில்லை; பொதுவாகப் பலரும் சேவை உளப்பான்மையோடுதான் தொடக்கத்தில் அரசியலுக்குள் அடி வைக்கிறார்கள். அவர்கள் கெட்டுப் போவதே இந்தத் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஆகும் செலவால்தான். தேர்தல் என வரும்பொழுது திடீரெனக் கோடிக்கணக்கில் பணம் தேவைப்படுவதால் முறைகேடான வழிகளிலோ முறைகேடான மனிதர்களிடமிருந்தோ பணத்தைத் திரட்டி அதைச் சமாளிக்கிறார்கள் புதிதாக அரசியலுக்கு வருபவர்கள். இதனால் மக்கள் சேவைக்கென வந்தவர்கள் இந்தக் கட்டத்தில் பணத்தை முதலீடு செய்த வணிகர்களாக மாறுகிறார்கள். முதலீடு செய்த பணத்தைத் திரும்ப எடுக்க வேண்டி ஊழல் புரிய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்கள். வணிகர்களாக இருந்தவர்கள் இந்தக் கட்டத்தில் குற்றவாளிகளாக மாறுகிறார்கள்.

இப்படி, அரசியலாளர்களை ஊழலாளர்களாக மாற்றுவதே இந்தத் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஆகும் செலவுதான். எனவே இதைக் குறைத்து விட்டாலே கட்சிகள் கோடிக்கணக்கில் பணத்தைச் சேர்க்க மாட்டார்கள். அப்படிச் சேர்ந்திருந்தாலும் அதை முறைப்படி மக்களுக்குச் செலவு செய்ய முன்வருவார்கள், அப்படி மக்கள் பணத்தை அவர்கள் முறையாக மக்களுக்குச் செலவு செய்தாலே கட்சிக்கு வருவாய் வரி விதிக்க வேண்டிய தேவை இருக்காது. இதைக் குறைக்க நடவடிக்கை வேண்டும் என்று பலரும் பல்லாண்டுகளாகக் கூறிக் கொண்டு (மட்டுமே) இருக்கிறார்கள். அதற்கு என்னிடம் ஒரு யோசனை இருக்கிறது.

அதாவது தேர்தலின்பொழுது தேர்தல் ஆணையமே ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடுபவர்கள் பற்றிய விவரங்களை முழுமையான ஒரு கையேடாகத் தயாரித்து பதிவு அஞ்சல் வழியே வீட்டுக்கு வீடு விநியோகித்து விட வேண்டும். இதற்காகும் செலவைத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் அனைத்தும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அஞ்சல் சேவை நாட்டின் மூலை முடுக்கு வரை பரவியிருப்பதால் இஃது ஒவ்வொரு குடிமகனு(ளு)க்கும் கண்டிப்பாகச் சென்று சேரும் என்பது உறுதி. எனவே இதைத் தவிர வேறெந்தத் தேர்தல் பிரச்சாரத்தையும் கட்சிகள் மேற்கொள்ளக் கூடாது எனத் தடை செய்ய வேண்டும். வேண்டுமானால் தங்கள் கட்சி / வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதனால் மக்கள் அடையக் கூடிய நன்மைகள் பற்றிய விவரங்களைக் கட்சிகள் இந்தக் கையேட்டுடனே இணைத்து அனுப்ப அனுமதிக்கலாம்.

இதனால் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஆகும் பல்லாயிரக்கணக்கான கோடி பணத்தை மிச்சப்படுத்தலாம். பணம் படைத்தவரைத்தான் வேட்பாளராக நிறுத்த வேண்டும் எனும் கட்டாயம் கட்சிகளுக்கு இல்லாமல் போகும். மக்களுக்குச் சேவை புரியும் மனம் இருக்கும் யார் வேண்டுமானாலும் -ஏழைகள் கூடத்- தேர்தலில் நிற்கலாம் எனும் நிலை வரும். முதலீடு செய்த பணத்தைத் திரும்பப் பெறுவதற்காகவாவது ஊழல் செய்தாக வேண்டும் எனும் கட்டாயம் ஒழியும். சுருங்கச் சொன்னால், நல்லவர்கள் அரசியலுக்கு வர, அரசியலுக்கு வந்த நல்லவர்கள் நல்லவர்களாகவே நீடிக்க இந்தச் சட்டம் உதவும்.

இதையும் மீறி, தேர்தல் செலவும்தான் இல்லையே என இதையே ஒரு இலாபமாகக் கருதி மக்கள் பணத்துக்கு விருப்பப்பட்டோ தங்கள் பணத்தை வருமான வரியிலிருந்து மிச்சம் பிடிக்க விரும்பியோ யாராவது கட்சி தொடங்க முயன்றால் கண்டிப்பாகக் கட்சிகளுக்கும் வருமான வரி விதிக்க வேண்டியதுதான்!

எல்லாற்றுக்கும் இறுதியாக, ஆனால் இவை எல்லாவற்றையும் விட உறுதியாக நான் மறுப்பு தெரிவிக்க விரும்புவது உங்கள் கடைசித் தலைப்புக்குதான்.

ஆம்! இந்தியா என்னதான் நீங்கள் சொல்கிறபடியெல்லாம் இறங்கி வருவதாயிருந்தாலும் சரி, தனித்தமிழ்நாடு கோரிக்கையைக் கைவிடுவது பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியாது! பதினோராயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தொல்குடிகள் நாம். இதில் கடந்த ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை அதாவது ஏறத்தாழ 10,500 ஆண்டுகளாகத் தனிநாடாகக் கோலோச்சியவர்கள் நாம். ஒரு தனிநாடாக இயங்குவதற்குண்டான அனைத்துத் தகுதிகளும் உரிமைகளும் நமக்கு இருக்கின்றன. அப்படி இருந்தும் நாம் இப்படி இந்தியா எனும் ஒரு நாட்டின் பகுதியாகச் சுருக்கிக் கொள்ள ஒப்புக் கொண்டதற்குக் காரணம், இந்த -அதாவது இந்திய- நாட்டு மக்கள் மீதான சகோதர வாஞ்சை! விடுதலை பெற்றுக் கொடுத்தவரிடமிருந்த நன்றி!

ஆனால் எப்பொழுது அதுவே நம் பன்னாட்டுப் பிரதிநிதித்துவத்தைப் பாதித்து நம் இனத்தின் அழிவுக்கே காரணமாகி விட்டதோ இனியும் நாம் தாமதிக்கக் கூடாது. இனிமேல் இந்தியா நமக்கு எவ்.........வளவுதான் நன்மைகள் செய்வதாக இருந்தாலும், எவ்.........வளவுதான் உரிமைகள் தருவதாக இருந்தாலும் நாம் இனி இந்நாட்டின் பகுதியாக இருத்தல் நல்லதில்லை! ஏனெனில் இப்பொழுது வேண்டுமானால் நாம் தனிநாடாகப் பிரிந்து போகாமலிருப்பதற்காக இந்தியா நீங்கள் கோரும் இந்தக் கோரிக்கைகளையெல்லாம் நிறைவேற்றலாம். ஆனால் அடுத்த சில ஆண்டுகளுக்குப் பின்போ அல்லது சில நூற்றாண்டுகளுக்குப் பின்போ மீண்டும் இந்தியா இதே போன்ற துரோகத்தைச் செய்தால் நாம் என்ன செய்வது? அப்பொழுது மறுபடியும் தனித்தமிழ்நாடு, அது, இது எனத் தொடக்கத்திலிருந்து தொடங்க வேண்டியதுதான். எதற்கு இந்த ரிஸ்க்? அடுத்தவர் ஆட்சியில் வாழ்வது என்றைக்கு இருந்தாலும் ஆபத்துதான். வேண்டா! நம்மை நாமே ஆள்வோம்! நாமார்க்கும் குடியல்லோம்!!!

என்னடா இவன்? மதித்துக் கருத்துக் கேட்டால் எல்லாவற்றையும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறானே என நினைக்காதீர்கள்! என் கருத்தைச் சொன்னேன் அவ்வளவுதான். அதிலும் மேலே இருப்பவற்றில் சில கருத்துகள்தாம் எதிர்க் கருத்துகள்; பெரும்பாலானவை தங்கள் கருத்தை வரவேற்று அவற்றை மேலும் கூர் தீட்டத் தெரிவிக்கப்பட்ட யோசனைகள்தாம். நீங்கள் ஏதும் தவறாக நினைக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

இவை தவிர உங்கள் கட்டுரையின் மற்ற பரிந்துரைகள் எல்லாமும் எனக்குப் பிடித்தமானவையே! குறிப்பாக, அந்தணர்கள் பற்றிய உங்கள் நிலைப்பாடு எனக்குப் பிடித்திருந்தது. அவர்கள் பற்றிய என்னுடைய நிலைப்பாடும் அதுதான். அவர்கள் நம் தனித்தமிழ்நாட்டை ஏற்று நம்மோடு வாழ வருவதாயிருந்தால் வரட்டும். அல்லது நம்முடைய இந்த அன்புள்ளத்தைப் புரிந்து கொள்ளாமல் ஒருங்கிணைந்த இந்தியாதான் தங்கள் நாடு என நினைப்பதாயிருந்தால் அங்கேயே போகட்டும். ஆனால் ஒன்று; அவர்களுக்காகத் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியையும் விட்டுக் கொடுக்க முடியாது. அதே நேரம், இந்தியா தமிழர்களுக்கு மட்டுமில்லாமல் எல்லாத் தேசிய இனங்களுக்கும் அவரவர் நாட்டைத் திருப்பிக் கொடுப்பது என வந்தால், அப்பொழுது சமசுக்கிருததுக்கென்றும் ஒரு தனி நாடு கொடுக்க வேண்டும். பிறப்பால் அந்தணர்களாகவும் ஓரளவாவது சமசுகிருதம் தெரிந்தவர்களாகவும் இருப்பவர்கள் அந்த நாட்டில் வாழத் தகுதியுடையவர்கள் எனலாம். அப்படியொரு நாடு ஒதுக்கும்பொழுது அதற்கு எல்லா மாநிலங்களும் கொஞ்சம் மண் வழங்குதல் வேண்டும். தமிழ்நாடு உட்பட!

இதே போல் உங்கள் மின் கொள்கை அபாரம்! காவல்துறை வடிவமைப்பு பற்றிய உங்கள் பரிந்துரை மிகவும் புதுமை! பொய் சொல்லும் அரசியலாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனும் உங்கள் கருத்து அருமை! அதே போல் பொய் சொல்லும் குடிமக்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது என் வெகுநாளைய கனவுச் சட்டம்! முதலாளித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சுதந்திர வணிகம், முதலாளிகளின் சமூகப் பொறுப்பை அதிகரித்தல் போன்ற உங்கள் பொருளாதாரக் கொள்கைகளையும் வரவேற்கிறேன்.

என்னை மதித்துக் கருத்துக் கேட்டமைக்கு மிக்க நன்றி!

வணக்கம்!

என்றும் நட்புடன்:
--இ.பு.ஞானப்பிரகாசன்


நாள்: 22.03.2012.

1 comment:

இ.பு. ஞானப்பிரகாசன் said...

என் கருத்தைக் கேட்டது மட்டுமின்றி, அதை மதித்து உங்கள் வலைப்பூவிலும் வெளியிட்டிருப்பது கண்டு பூரிக்கிறேன்! மிக்க நன்றி!