Sunday, April 8, 2012

முட்டாள்தனம்...

மாவோயிஸ்டுகள் முன்வைத்த கோரிக்கைகள் பலவற்றை ஒடிசா மாநில அரசு ஒப்புக்கொண்டுள்ள நிலையில், கடத்தப்பட்டு இன்னும் மாவோயிஸ்ட் பிடியில் பிணைக் கைதியாக உள்ள இத்தாலியர் விடுவிக்கப்படவுள்ளார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் தங்கள் கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களை விடுவிக்கவும், அவர்கள் மீதான வழக்குகளை அரசு விலக்கிக் கொள்ளவும், அரசு அதிகாரிகளைக் கடத்திச் செல்வதுதான் இதுநாள் வரை நடைபெற்று வந்தது. இப்போதுதான் வெளிநாட்டவரைக் கடத்திச் சென்று பிணைக் கைதிகளாக வைத்திருக்கும் புதிய உத்தியைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

மாவோயிஸ்டுகள் "ஆளுகை'க்கு உள்பட்ட செம்புலப் பகுதியில் அரசுப் பணிக்காகச் செல்லும் அதிகாரிகள் கடத்தப்படும்போது அவர்களை மீட்பதற்காக மாவோயிஸ்டுகளின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்து ஏற்பதற்கும், வெளிநாட்டு அரசின் பிரதிநிதி என்கின்ற அடையாளம் இல்லாத சாதாரண சுற்றுலாப் பயணிக்காக, அதிலும் தடை செய்யப்பட்ட பகுதி என்று அறிவித்திருந்தும் அதை சட்டைசெய்யாமல் அங்கே சென்ற இரு வெளிநாட்டவரின் பொறுப்பின்மைக்காக, 27 கைதிகளை - இதில் 8 பேர் தீவிர மாவோயிஸ்டுகள் - விடுவிப்பது என்பது அரசின் நடவடிக்கைக்கு எத்தகைய குந்தகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

பண்டமாற்று முறையில்கூட, ஒரு பொருளின் மதிப்புக்கேற்ற இன்னொரு பொருள்தான் விலையாகக் கொடுக்கப்படும். இந்த இத்தாலியர்கள் இருவரும் யார்? இவர்களது பின்னணிதான் என்ன? சுற்றுலாப் பயணிகள் போகத் தடை செய்யப்பட்ட பகுதிக்கு இவர்கள் போக வேண்டிய அவசியம் என்ன? இவர்கள் பழங்குடியினருக்குச் சேவை செய்ய வந்தவர்களும் அல்ல! அப்படியானால், இவர்கள் இந்தக் கடத்தல் நாடகத்துக்குத் துணை போவதற்காகவே உள்நோக்கத்துடன் வந்த மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கலாமா? விடுதலை செய்யப்படவுள்ள 27 பேரைப் பிடிக்க இந்தியக் காவல்துறையும் ராணுவமும் சிந்திய ரத்தத்துக்கு விலை இந்த சாதாரண, வெட்டியாக வந்த வெளிநாட்டவர்களா?

பழங்குடியின மக்கள் காலாகாலமாக நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்த வனப்பகுதிகளை அழித்து, அவர்களை அங்கிருந்து விரட்டி, கனிமங்களை வெட்டி எடுத்து லாபம் கொழிப்பதற்காகத் தனியார் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கும் தவறான கொள்கைகளை நமது மத்திய, மாநில அரசுகள் கடைப்பிடிக்கின்றன என்பதுதான் நமது கருத்தும். சுற்றுச்சூழலைப் பாதிப்பதுடன் நமது கனிமவளங்களும் கொள்ளைபோகும் போக்கை நாட்டுப்பற்றும், வருங்காலத்தில் அக்கறையும் உள்ள எவருமே ஏற்றுக் கொள்ள முடியாதுதான். இதெல்லாம் புரியாமல் இல்லை.

ஆனால், பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக இருக்கும் எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகா போன்றவர்களையும் ஏன் மாவோயிஸ்டுகள் கடத்த வேண்டும்? நவரங்கபூரில் சில மாதங்களுக்கு முன்பு பழங்குடியினருக்கு நிலப்பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் எம்எல்ஏ ஜகபந்து மஜ்ஜி என்பவரை அவர்கள் சுட்டுக் கொன்றது ஏன்? பழங்குடியினருக்கு ஆதரவாகத் தங்களைத் தவிர, யார் வந்தாலும் அவர்களைப் போட்டியாகக் கருதுவதும், அரசின் நல்ல நடவடிக்கைகளைக்கூடத் தடுத்துவிடப் பார்ப்பதும் ஏன்?

மாவோயிஸ்டுகளின் மிகப் பெரும் ஆயுதக் கிடங்கு அண்மையில் ஒடிசாவின் தெற்கே, ஆந்திர மாநில எல்லையை ஒட்டிய பகுதியில் ராணுவத்தால் கண்டறியப்பட்டுக் கையகப்படுத்தப்பட்டது. இந்திய ராணுவத்துடன்கூட இல்லாத அதிநவீன ஆயுதங்கள் மாவோயிஸ்டுகளுக்கு எங்கிருந்து, எப்படி, யாரால் வழங்கப்பட்டது என்கிற புதிருக்கு இன்றுவரை விடை காணப்படவில்லை. இந்த ஆயுதங்களைத் தயாரிக்க, விலைக்கு வாங்க மாவோயிஸ்டுகள் பல கோடி ரூபாய் செலவிட்டிருக்க வேண்டும். இந்தப் பணம் எங்கேயிருந்து இவர்களுக்குக் கிடைக்கிறது? சீனா நிதியுதவி செய்யவில்லை என்று மாவோயிஸ்டுகள் கூறுகின்றனர். சீனாவும் இவர்கள் தங்களை மாவோயிஸ்ட் என்று அழைத்துக் கொள்வதே அபத்தம் என்று கருதுவதாக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் தெரிவிக்கிறார். இதற்கான பணத்தை நிச்சயமாக, மாவோயிஸ்டுகள் ஆளுகைக்கு உள்பட்ட, பழங்குடி மக்கள் கொடுத்திருக்க முடியாது. அப்படியானால் இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது?

ஒன்று, இந்தியாவின் சான்றாண்மைக்கும், ஒற்றுமைக்கும் எதிரான ஏதோ ஓர் அன்னிய சக்தி மாவோயிஸ்டுகளை ஊக்குவிக்கிறது அல்லது மாவோயிஸ்டுகள் இருக்கும் பகுதிகளில் கனிமங்களை வெட்டியெடுக்க அரசிடம் அனுமதி பெற்றுள்ள நிறுவனங்களுடன் தொழில்போட்டியில் உள்ள உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் ஏதாவது இதன் பின்னணியில் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் மாவோயிஸ்டுகள் இந்த அளவுக்கு, ராணுவத்துக்கு இணையாக ஆயுதங்களை வாங்கவும் சேமித்து வைக்கவும் இயலாது.

பழங்குடியினரிடையே சால்வா ஜுடும் (மக்கள் காவல்படை) அமைத்த நடவடிக்கையை உயர் நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்ததால் அரசு அதனைக் கைவிட்டது. ஆனால், பழங்குடியினர் அரசுக்கு ஆதரவாகப் பேசினாலும், அரசின் நலத்திட்டங்களைப் பெற முயன்றாலும் மாவோயிஸ்டுகளின் கட்டப்பஞ்சாயத்தில் கடும் தண்டனை கிடைக்கிறது என்கிறார்களே, அது ஏன்? பழங்குடியினருக்கு எந்தவித நன்மையும் செய்து தரப்படக் கூடாது என்று தடையாக நிற்பது என்ன நியாயம்?

மாவோயிஸ்டுகளின் நோக்கம் பழங்குடியினரின் உரிமைகளைக் காப்பாற்றுவதா இல்லை, இந்திய அரசின் மேலாண்மையை எதிர்த்து அரசுக்கு எதிரான போரை மறைமுகமாகத் தொடுப்பதா என்கிற சந்தேகத்தை மாவோயிஸ்டுகளின் நடவடிக்கைகள் ஏற்படுத்தி வருகின்றன.

எச்சரிக்கைகளை மீறி மாவோயிஸ்டுகள் இருக்கும் பகுதியில் நுழைந்த இத்தாலிய சுற்றுப்பயணிகளுக்காக இந்திய அரசு மாவோயிஸ்டுகளின் முன்னால் மண்டியிட்டு அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதைவிடக் கேவலம் வேறு எதுவும் இருக்க முடியாது. முதுகெலும்பில்லாதவர்களுக்கு வாக்களித்து அரியணை ஏற்றியதற்கான தண்டனையை நாம் அனுபவித்துத்தானே தீர வேண்டும், என் செய்ய?

நன்றி - தினமணி

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=579211&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

No comments: