Thursday, April 26, 2012

யார் இந்த மாவோ போராளிகள்? எதற்கு இந்த போராட்டம் ? இவர்களுக்கு என்ன பலம் இருக்கிறது?

யார் இந்த மாவோ போராளிகள்? எதற்காக இந்த போராட்டம்? இவர்களுக்கு என்ன பலம் இருக்கிறது ? "மண்ணை குடைந்து வெட்டி எடுக்கும் தங்கம் யாருக்கு? மலையை குடைந்து வெட்டி எடுக்கும் தாது யாருக்கு? இந்த மண்ணோடு வாழ்வோம்! மண் இல்லை என்றால் சாவோம்! " - " பச்சை வேட்டை" பாடல் இரண்டு வருடம் முன், மத்திய அரசு கூறியது: "நீங்கள் ஒரு நாள் ஆயுதங்களை கீழே போட்டால், நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார்" , அதற்கு மாவோயிஸ்டுகள் கூறிய பதில் : "நாங்கள் ஒரு வாரம் ஆயுதங்களை கீழே போட தயார்; நீங்கள் ஒரு வாரம் ஆயுதங்களை கீழே போட தயாரா?" மத்திய அரசு மௌனம் சாதித்தது. ஏனென்றால், மத்திய அரசின் குரல்வளையை பிடித்து தொங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரு முதலாளிகள்,தண்டகாரண்யா மலையை குடைந்து எடுக்கும் தனிமங்கள் மூலமாக வரப்போகும் கொள்ளை லாபத்தை விரைவில் காண பேராவலுடன் இருக்கின்றார்கள்.

 இந்திய அரசாங்கத்துக்கு மக்கள் முக்கியம் இல்லை; தனிமம் நிறைந்த மலையை குடைந்து சுரங்கம் தோண்டும் பெருமுதலாளிகள் போடும் பிச்சைதான் முக்கியம். அதை எதிர்த்து நிற்கும் மாவோயிஸ்ட், பழங்குடியினர் என்றென்றும் அரசின் எதிரியே! தண்டகாரண்யா மலை, காடுகளை அழித்து சுரங்கம் தோண்ட ரவுடிகளையும், ரத்தம்குடிப்பவரையும், காவல்துறையையும், இராணுவத்தையும் அனுப்பி அங்குள்ள பழங்குடியினரை அப்புறப்படுத்த எத்த்னை லட்சம் இராணுவ வீரனின் உயிரை கொடுக்கவும், பழங்குடியினர், மாவோயிஸ்டுகள் உயிரை வாங்கவும் அரசு தயாராக இருக்கின்றது. பழங்குடியினரின் இருப்பிடத்தை, அராஜகமாக தட்டிப்பறிக்கும் இந்திய அரசு, இந்திய இராணுவம், உலக முதலாளிகள் பழங்குடியினரின் எதிரிகளே! இந்திய அரசு தண்டகாரண்யா பகுதியில் காடு மலைகளை அழித்து சுரங்கம் தோண்டுவதற்காக பழங்குடியினரில் வீடுகளுக்கு தீ வைத்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி முகாம்களுக்கு அனுப்ப ஆரம்பிக்கும்வரை, அந்த பகுதியில் வெறும் 5,000 முதல் 10,000 மாவோயிஸ்டுகள்தான் இருந்தார்கள். இந்திய அரசின் இராணுவ கொடுங்கோளர்களை , அட்டகாசங்களை பார்த்தபிறகு, பழங்குடியினர் தானாகவே முன்வந்து பலர் மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தனர். இப்போது மாவோயிஸ்ட் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்திய இராணுவம் நுழைய முடியாத அந்த காடுகளுக்கும் அவர்கள் விவசாயம் செய்கின்றார்கள்; சிறுவர்கள் கல்வி கற்கின்றார்கள்; நடனம், பாட்டு என்ற கலைக்குழு இயங்குகின்றது; அடிப்படை தேவையிலான மருத்துவ வசதி கிடைக்கின்றது; இவற்றோடு ஒவ்வொரு நொடியும் இந்திய இராணுவத்தை எதிர்க்கும் துணிவுகொண்ட படை வீரர்கள் பயிற்சி பெறுகின்றார்கள்.

 சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் ஒரு மனிதகுல போராட்டத்தை பற்றி உயர்வாக எழுத தோன்றவில்லையென்றாலும் பரவாயில்லை; போராட்டங்களை கொச்சை படுத்தாமல் இருந்தால் நல்லது. அவர்கள் எப்படி, போராடும் மக்கள் "எந்த வழியில் போராட வேண்டும்" என்று வகுப்பெடுக்கும் அன்பர்கள், போராட்ட களத்தை ஒருமுறையேனும் சென்றுபார்த்து உணர்ந்து எழுதினால், வாசகர்களாகிய எங்களுக்கு தெளிவான உண்மை புரியும். பசப்பல் வார்த்தைகள் போட்டு எதையோ எழுதவேண்டும் என்பதற்காக எழுதும் சிலரை வரலாறு தோண்டி எடுத்து தூக்கில்போடும். "மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, பேச்சுவார்த்தைக்கு வருவது நல்லது" என்று எழுதும் சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள்... "இந்திய குடிமக்கள் மீது தாக்குதல் நடத்தும், இந்திய இராணுவத்தை மக்கள் மத்தியில் இருந்து திரும்ப பெறுவது பற்றி வலியுறுத்தி எழுதும் துணிவு ஏன் பெறவில்லை?" ஊடகங்கள் திட்டமிட்டே மாவோயிஸ்டுகள் மீதான வெறுப்பை மக்கள் மனதில் வளர்த்து வருவது இயல்பானது. அவைகளுக்கு பண முதலாளியின் எச்சில் சோற்றின்மீது அலாதி பிரியம். ஆனால், சமூக ஆர்வலர்கள், பேச்சாளர்கள், பகுத்தறிவாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் என்று தன்னை பறைசாற்றிக்கொள்பவர்கள் கூட "ஒரு இந்திய நில, இன அழிப்பை" கண்டும் காணாமல் இருப்பது வேதனை. அப்படியே எழுதினாலும் அரசின் பக்கம் சற்று தேன் தொட்டு எழுதுவது எதனாலோ? "மாவோயிஸ்டுகள் கோரிக்கை நியாயமானது; ஆனால், அவர்கள் ஆயுத பாதை ஜனநாயகத்திற்கு எதிரானது" என்று குறிப்பிடாமல் எழுதுவதில்லை. தன் வீட்டை கொளுத்தி, தாயை மிதித்து, தந்தையை கொலை செய்து, தங்கையை வன்புணர்ச்சி செய்து, தன்னை ஒன்றும் செய்யாமல் மறந்து விட்டு செல்லும் மனித மிருகங்கள் சென்ற பிறகு, ஓ வென்று கதறி அழுது, உற்றார் உறவினர் முன் சோகம் காட்டி, பின்னொரு நாளில் "கலர்புல் எதிர்கால வாழ்க்கை" கனவு காணும் நடுத்தர, மேல்தட்டு மக்கள் இல்லை பழங்குடியினர்."உயிர் போனாலும் பரவாயில்லை என்று வில்லேந்தி, ஆய்தமேந்தி, போராடும் உணர்வாளர்கள். நிலத்தடி நீரை பாக்கெட் போட்டு விற்றாலும், பாட்டிலில் விற்றாலும், நஞ்சுப்பொருள் கலந்து "பெப்சி, கோக்" ஆக விற்றாலும், ஏன் குழாய் வழியாக அளந்து விற்றாலும், காசு கொடுத்து வாங்கி குடிக்கும் நம் போன்று மானமற்றவர்கள் இல்லை அவர்கள். "இது எங்கள் தண்ணீர், நதி, குளம்" என்று உரக்கக்கூறும் சாதாரண மனிதர்கள்; டிவி சீரியலிலும், சினிமாவிலும் மயக்கம் கொண்டு கதாநாயகன், கதாநாயகி கனவு கண்டு வாழ்க்கையை வீணக்கும் வீணர்கள் இல்லை இவர்கள்; மலையின், காட்டின் அழகை ரசிக்கும் பிள்ளை உள்ளம் கொண்ட குழந்தைகள் அவர்கள். இப்படிப்பட்ட நல்லுள்ளம் படைத்த மனிதநேயத்தை காத்து நிற்கும் மக்களை உயர்வாக எழும் "பேனா மை" இல்லையா எழுத்தாளர்களிடம். ஆளும் கட்சி எம் எல் ஏ வை கடத்தியபோது மத்திய அரசின் பிரதிநிதிகள் கூற்று : "நமக்கு ஒரு எம். எல். ஏ வின் உயிர் முக்கியமில்லை; ஆனால், மாவோயிஸ்டுகளுக்கு அவர்கள் தோழர்கள் விடுதலை முக்கியம்; ஆகையால், இந்த "டீல் ஈக்வல் " இல்லை. " என்று வெளிப்படையாக ஊடகங்களில் சொல்லியது. மாவோயிஸ்டுகள் மக்கள் நீதிமன்றம் மூலமாக விசாரித்து அவரை நிபந்தனையோடு விடுதலை செய்தது. இப்படிப்பட்ட அரசின் அலட்சியபோக்கை கண்டிக்கும் எழுத்து ஏன் எழுத்தாளர்களுக்கு வரவில்லை? இப்போது மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட, தமிழகத்தை சேர்ந்த அதிகாரியின் விடுதலையை ஆதரிக்கும் தமிழர்கள், அவர் உயிர் காக்க ஆர்பாட்டமோ, போராட்டமோ நடத்த திட்டமிட்டிருக்கின்றார்கள். ஊடகங்கள் அவரின் வீட்டையும், ஊரையும், உறவையும் சுற்றி வந்து உணர்வலையை தூண்ட முயற்சிக்கின்றது. சாதாரண மக்களுக்கு ஒன்று தெரியவில்லை, "அந்த அதிகாரி உயிர் மத்திய அரசின் கையில் அல்லது மாவோயிஸ்டுகளின் மக்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பில் இருக்கின்றது" என்பது. உண்மையறிந்த பத்திரிக்கையாளர்கள், பேச்சாளர்கள் நாக்கு என்ன வறண்டுவிட்டதா, மாவோயிஸ்டுகளின் நேர்மை பற்றி பேசும் போது. கடத்தப்பட்ட தமிழகத்தை சேர்ந்த அதிகாரியின் விடுதலையை ஆதரிக்கும் தமிழர்கள், "இந்திய அரசால் வீடு கொளுத்தப்பட்டு, ஊர் உறவின்றி காட்டில் திரியும் பழங்குடியினர்" விடுதலையையும் சேர்த்தே ஆதரிக்க வேண்டும். இந்த இரண்டு விடுதலையும் பெரும்பாலான இந்திய மக்கள் ஆதரிக்காதவரை, இந்திய அரசு அசைந்து கொடுக்காது; கடத்தப்படும் தனிமனிதர்களுக்கு ஆதரவாக பேசுவதில் சுகம் காணும் சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் தெரிந்து கொள்க! "நீங்கள் மறைமுகமாக வாசகர் மனதில், ஒரு மக்கள் போராட்டத்தை எதிர்க்கும் நஞ்சை விதைக்கின்றீர்கள்!" சமூக அவலங்களை சந்து பொந்திலெல்லாம் நுழைந்து செய்தி திரட்டி எழுதும் கடமை பத்திரிக்கையாளர்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் இருக்கின்றது என்பதை உணர்ந்து, எழுதினால் உண்மை நிலையை எழுத வேண்டும்; அல்லது எழுதாமல் ஒதுங்கிவிடவேண்டும். அரைகுறையான தகவல்களை வாசகர்களாகிய எங்களை குழப்புகின்றது. என்பதை புரிந்து எழுதுங்கள்! "நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டுமென்பதை நம் எதிரிகளே தீர்மானிக்கின்றார்கள்" - மாவோ நன்றி : ஆனந்தி தங்கம் http://www.newsalai.com/2012/04/blog-post_408.html#.T5mHT4qeTKQ.facebook

3 comments:

பரிதி.முத்துராசன் said...

நண்பரே உமது இந்த பதிவு அருமை நிறைய உண்மைகளை சொல்கிறது

Unknown said...

அருமை அண்ணன்.

Unknown said...

அருமை அண்ணன்.