Wednesday, May 30, 2012

தேவை தமிழர்களுக்கான குறைந்தபட்ச பொதுத் திட்டம்முன்னுரை
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடத்தப்பட்டு மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டன. ஒரு பக்கம் உலகம் முழுவதும் தமிழர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்த மறுபக்கம் சிங்களவர் வெற்றி விழா கொண்டாடுகின்றனர். இதே நேரத்தில்தான் இந்தியாவை ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைத்து மூன்றாண்டு நிறைவு விழாவை கொண்டாடுகிறது. இந்த அரசு ஆட்சிக் கட்டிலில் ஏறுவதற்கு முந்தைய பொதுத் தேர்தலுக்குள் தமிழர்களை கொன்று குவிக்க சொல்லி டெல்லி உத்தரவிட்டது.

இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆயுதம், ராணுவம், உளவுத் தகவல் கொடுத்து குறிப்பிட்ட தேதிக்குள் தமிழர்களை கொன்று குவிக்க உத்தர விடுகிறது. கள்ள மௌனம் காத்து வரும் இந்தியா தொடர்ந்து சர்வதேச அளவில் இனப்படுகொலை செய்த இலங்கைக்கு உதவி வருகிறது. இந்தியா இந்த நிலையை மாற்றிக் கொள்ளுமா? தமிழர்களின் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமா? என்பது சந்தேகமே. தனது சொந்த தேசிய இனங்களைப் பற்றியே அறியாத இந்திய தலைவர்கள் பல்வேறு கால கட்டங்களில் தோல்வி பெறும் வெளியுறவுக் கொள்கையை பின்பற்றி வந்துள்ளனர். இந்த தோல்விகளை மறைக்க மேலும் மேலும் தவறுகளை செய்து வருகின்றனர். இதில் அதிகமாக பாதிக்கப்பட்டது தமிழ் மக்களாக உள்ளனர்.  

ஈழப்போருக்கு முன்னதாக இலங்கைக்கு ஆயுதம் கொடுக்கக் கூடாது என்று தீர்மானம் போட்ட பாஜகவின் மக்களவை தலைவர் சுஷ்மா சுவராஜ் இன்று யாரும் ஈழம் கேட்கவில்லை என்று அறிவித்துள்ளார். இந்த நிலையில் இந்தியக் கூட்டாட்சியின் ஒவ்வொரு பகுதியையும் சேர்ந்த மக்களின் நலன்களை பாதுகாக்கக் கூடிய ஒரு நம்பிக்கையான இந்திய தலைவர் இருப்பதாக கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
தமிழக தலைவர்களை பொறுத்தவரை அவர்கள் இந்திய அரசியலால் உருவாக்கப்பட்ட தலைவர்களாக உள்ளனர். அதிகாரம் ஒன்றையே குறிக்கோளாக கொண்ட இவர்களுக்கு மக்கள் நலனில் சிறிதும் அக்கறையில்லை. இவர்கள் பெருந்தொழில் நிறுவனங்களைப் போன்ற தனிநபர் துதிபாடும், பண அரசியலை நடத்தி வருகின்றனர். அதேவேளையில் மக்கள் நலனில் அக்கறை கொண்ட தலைவர்களால் அதிகாரத்தை பெற முடியவில்லை. ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை நடைபெற்றபோது தமிழ் மக்களாலும் தமிழக தலைவர்களாலும் அதனை வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது. இந்தியாவில் தமிழர்கள் பெரும் அரசியல் சக்தியாக இருந்தும் கூட ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை தடுக்க முடியாது போனது தமிழர்களின் அரசியல் தோல்வியாகவே உள்ளது. இந்த இனப்படுகொலை தமிழகத்தில் பெரும் அரசியல் மாற்ற சிந்தனைகளை தூண்டியுள்ளது.

ஈழ இனப்படுகொலைக்கு துணைபோனதன் காரணமாக, தமிழர்களின் தனிப்பெரும் தலைவராக கருதப்பட்டு வந்த கலைஞர் கருணாநிதியை இனத்துரோகி என்ற பட்டத்தை பெற்றுள்ளார். படுகொலையின்போது எதையும் செய்ய முடியாது, செய்ய விரும்பாது இருந்த திமுக தலைவர் கருணாநிதி, அவரது வாரிசுகள், கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகம், வரலாறு காணாத ஊழல், நில அபகரிப்பு போன்ற பல காரணங்கள், சிறுபான்மை அரசு அமைத்திருந்த திமுகவை எதிர்க்கட்சிக்கும் கீழான நிலைக்கு தள்ளியுள்ளன. இதற்காக மக்கள் அனைவரும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை மனதார விரும்பி தேர்ந்தெடுத்தனர் என்று அர்த்தமில்லை. ஈழப் படுகொலையின்போது ஜெயலலிதா ஆட்சியில் இருந்திருந்தாலும் அவரும் கருணாநிதி போலத்தான் நடந்திருப்பார். அவர் ஆட்சியில் இல்லாத காரணத்தால் அவர் அதுபோன்ற ஒரு துரோகி பட்டத்திலிருந்து தப்பிவிட்டார்.    

கடந்த சட்ட மன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதற்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானின் பிரச்சாரமும் ஒரு காரணமாக அமைந்தது. ஈழ இனப்படுகொலையால் கொதித்துப் போன இளைஞர்கள் சாதிமத வேறுபாடின்றி சீமானின் பின்னால் திரண்டு நின்றனர். அதே நேரத்தில் தேர்தலுக்கு முன்பு கருணாநிதிக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்த சீமான் தேர்தலுக்குப் பின்னர் அமைதியாகி விட்டார். இதனால் இவர் ஜெயலலிதாவின் ஆதரவாளர் அல்லது அவருக்கு பயந்தவர் என்று திமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் மக்கள், தமிழ் தேசியம் பற்றியும் தனித் தமிழ் நாடு பற்றியும் கருத்தளவில் பேச ஆரம்பித்துள்ளனர். திமுக தலைவர் இனப்படுகொலைக்கு துணை போனதன் காரணமாக திராவிட கருத்துக்களையே தூக்கி எறிந்துவிட வேண்டும் என்று இவர்கள் சொல்லி வருகின்றனர். இதற்கு காரணம் திராவிடம் என்று சொல்லி தமிழர்கள் தென்னாடு முழுவதையும் சகோதரர்களாக பார்க்க, தென்னாட்டு மாநிலங்கள் முழுவதும் தமிழரின் நலன்களை பறித்து வருகின்றன என்பதே. எனவே திராவிடம் என்ற கருத்தே பொய்யானது என்று சொல்லும் இவர்கள் தமிழ் நாட்டை தனி நாடாக ஆக்குவதே தமிழரின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு என்று சொல்லி வருகின்றனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் திக முதலான பெரியார் கொள்கையில் ஊறியவர்கள் தனித் தமிழ் நாட்டைப் பற்றி பேசியதே பெரியார்தான் என்று சொல்லி திராவிடம் என்ற வார்த்தையே தமிழ் மக்களுக்காக பயன்படுத்தப்பட்ட ஒன்றுதான் என்று சொல்கின்றனர்.

அதேபோல தமிழ் தேசியவாதிகளுக்கு தலித்களும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதற்கு காரணம் தமிழ்தேசியம் பேசுபவர்கள் சாதியை ஒழிக்கலாம் என்பதே. தமிழ்தேசியவாதிகள் பேசும் சாதி ஒழிப்பு பொய்யானது என்று கூறும் இவர்கள், முதலில் தலித்கள், ஓங்கிய (ஆதிக்க) சாதிகளுக்கு சமநிலையை அடைந்த பின் சாதியை ஒழிக்கலாம் என்று சொல்கின்றனர். தற்போது இணையங்களில் நடைபெறும் வாத பிரதி வாதங்களை பார்க்கும்போது திமுகவினர் - ஜெயலலிதாவையும், சீமானையும், தமிழ் தேசியவாதிகளையும் திட்ட, தமிழ் தேசியவாதிகள் - காங்கிரஸையும், திமுகவையும், ஜெயலலிதாவையும், வைகோவையும் திட்ட, வைகோ ஆதரவாளர்கள் - சீமான், திமுக, காங்கிரஸ் ஆதரவாளர்களை திட்ட, தலித்கள், பெரியார், பொது உடமைவாதிகள் – பிராமணர்கள், இந்துக்கள், ஆதிக்க சாதிகள், சீமான், ஜெயலலிதா ஆதரவாளர்கள் என திட்ட ஒரு வகையான சந்தைக் கூச்சல் போன்ற நிலை உள்ளது.
இந்த நிலையில், தமிழர்கள் தங்கள் அரசியல் இலக்கை எட்ட ஒரு ஒருமித்த கருத்தை இலக்காக நிர்ணயித்து அதனை அடைய முயலவேண்டும். அது வெறும் உணர்ச்சி – கற்பனை அடிப்படையிலான ஒன்றாக இல்லாமல், யதார்த்தமான, சாத்தியக் கூறுகளை கொண்டதாக இருக்க வேண்டும். அதற்காக தமிழர்கள் அனைவரும் அடைய விரும்பும் குறைந்தபட்ச இலக்குகளை கொண்ட, அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையிலான ஒரு குறைந்தபட்ச பொதுத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

ஈழப்போருக்குப் பின்னர் இலங்கை அரசாங்கம் ஏதாவது கற்றுக்கொண்டதோ இல்லையோ, தமிழ் மக்கள் நிச்சயம் பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். உலக அளவில் தமிழர்கள் அடக்குமுறைக்கு ஆளாகும்போது அதனை தட்டிக் கேட்க, தகுந்த சர்வதேச அமைப்புகளிடம் முறையிட்டு நீதி கிடைக்கச் செய்ய, தமிழர்கள் தங்களை எவ்வாறு உருவாக்கிக் கொள்வது? அதற்கு முன்னதாக தமிழகத்தில் நிலவும் அரசியல் நிலவரம், தமிழர்களின் அரசியல் வளர்ச்சி, எதிர்கால அரசியல் என்று பரிசீலித்துப் பார்க்கும் நோக்கத்தில் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

ரசிகர் மன்றங்களும் ரசிகர்களும்

தமிழர்கள் பொதுவாக எப்போதுமே கவர்ச்சிகரமான, மேலேட்டமான, பொய்யான விஷயங்களில் ஆர்வம் கொண்டவர்காளாக இருக்கிறார்கள். உதாரணமாக திரைப்பட நடிகர்களின் ரசிகர்களை கூறலாம். திரையுலகின் ஆரம்ப காலங்களில் நடிகர்கள் பி.யூ. சின்னப்பா – எம்.கே. தியாகராஜ பாகவதரின் ரசிகர்கள் மோதிக்கொண்டனர். (http://www.lakshmansruthi.com/legends/puc.asp) அதன்பின் எம்ஜிஆர் – சிவாஜி ரசிகர்கள் மோதிக் கொண்டார்கள். அதேபோல கமல்ஹாசன் – ரஜினிகாந்த் ரசிகர்களும் தற்போது விஜய் – அஜீத் ரசிகர்கள் மோதிக் கொள்கிறார்கள். இந்த ரசிகர்களுக்கு இவர்களின் உலகம்தான் பெரிது. இவர்கள் திரைத் துறையின் ரகசியங்களை அறியாதவர்கள். திரையுலகின் பின்னணி என்ன? அதில் எவ்வளவு பணம் புரளுகிறது? தேவையான இதர திறமைகள் என்ன? ஒரு தனிப்பட்ட மனிதரின் திறமையால் ஒரு திரைப்படம் உருவாகிறதா? அதில் ஒரு நடிகரின் பங்கு என்ன? என்பது போன்ற ரகசியங்களை அறிந்தால் ரசிகர் மன்றம் என்ற ஒன்று தேவையா? நாம் நமது ரசிப்புத் தன்மையை எதற்காக யாருக்கும் அடகு வைக்க வேண்டும்? என்பது போன்ற கேள்விகள் எழலாம்.

நடிகர்கள் நிச்சயமாக கலைச் சேவை செய்கிறார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் அவர்கள் சேவையாக மட்டுமே அதைச் செய்து விடவில்லையே? அப்படி இருக்கும்போது எதற்காக ஒரு ரசிகர் தனது கலா ரசனைக்காக மற்றொருவருடன் மோதிக் கொள்ள வேண்டும்? ஆனால் இதுபோன்ற ரசிகர் கூட்டத்தினர்தான் தமிழக அரசியலையும் திரைத்துறையையும் பிரிக்க முடியாத ஒன்றாக்கியுள்ளனர். இந்த நம்பிக்கையில்தான் நடிகர்கள் அரசியலில் ஈடுபடுகின்றனர். உதாரணத்திற்கு நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தை ஆரம்பித்துள்ளார். விஜய் அரசியலுக்கு வருவது தவிர்க்க முடியாதது என்று அவரது தந்தை இயக்குனர் சந்திரசேகர் அறிவித்துள்ளார்.

நடிகர் விஜய்க்கு அரசியலின் அடிப்படை என்ன வென்று தெரியுமா? (இது எல்லா நடிகர்களுக்கும் பொருந்தும்) இவருடைய கொள்கை என்ன? தமிழ் மக்களின் பொது பிரச்சனைகளை பற்றிய கருத்து என்ன? மக்கள் சேவை என்ன? மக்களை சந்திக்க தயாரா? அரசியலில் இறங்கித்தான் சேவை செய்ய வேண்டுமா? தனது புகழை - செல்வாக்கை பயன்படுத்தி பல்வேறு சேவைகளை, சாதனைகளை செய்து காட்டலாமே? ஏதாவது ஒரு கிராமத்தை தத்து எடுத்து அந்த கிராமத்தை முன்னேற்றி காட்டலாமே? அதன்பின் அரசியலுக்கு வரலாமே? இதையெல்லாம் விஜய் ரசிகர்களும் மற்ற நடிகர்களின் ரசிகர்களும் தங்களை தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகள். ரசிகர் என்பது ஒருவகையிலான உளவியல் பணிவு நிலை என்றே சொல்லலாம். இந்த மனநிலையே அந்நியர்கள் நம்மை ஆள்வதையும் ஏற்றுக்கொள்ளச் செய்வதாக உள்ளது.  

இவர்களைப் பற்றி ஏன் பேச வேண்டியுள்ளது? என்றால் இவர்கள்தான் எதிர்கால தமிழர்கள். இவர்கள்தான் எதிர்கால தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதாரத்தை நிர்ணயிக்க உள்ளவர்கள். எனவே ரசிகர்கள் தாங்கள் எந்த நடிகருக்கான ரசிகர்களாக இருக்கிறோம் என்பதை பொருட்படுத்தாமல் தங்களின் தேவை என்ன? சமுதாயத்தின் தேவை என்ன? நம்மால் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமை என்ன? என்ற தீர்மானத்திற்கு வரவேண்டும். இவர்கள் ரசிகர் மன்றங்களை கலைக்கவோ அல்லது தங்கள் அபிமான நடிகர்களை வெறுக்கவோ தேவையில்லை. தங்கள் ரசிகர் மன்றங்களைக் கொண்டே நாட்டு மக்கள் மீதும் கவனம் செலுத்தலாம். நாட்டு மக்களுக்காக பாடுபடலாம். அது போன்ற கருத்தொற்றுமை அனைத்து ரசிகர்கள் இடையே ஏற்பட வேண்டும். இவர்கள் எதிர்கால தமிழர்களின் அரசியல், சமூக நலனை கருத்தில் கொண்டு கற்பனையான உலகிலிருந்து உண்மையான உலகுக்கு வந்து அரசியல் அக்கறையுடன் கருத்தொற்றுமையை ஏற்படுத்த வேண்டும்.

கட்சி விசுவாசிகள்

என்னை பொறுத்தவரை ரசிகர் மன்றங்களுக்கும் அரசியல் கட்சி விசுவாசிகளுக்கும் வித்தியாசம் இல்லை என்றே சொல்வேன். இவர்கள் முன்னாள் ரசிகர்களாக இருந்த காரணத்தினாலோ என்னவோ அரசியலிலும் அதேபோல நடந்து கொள்கின்றனர். கட்சித் தொண்டர்கள் என்பவர் யார்? அவர்களும் பொதுமக்களின் ஒரு பகுதிதானே? பொது மக்களின் நலனில் அவர்களுக்கு அக்கறை இருக்க வேண்டும் அல்லவா? அதற்காகத்தானே அவர்கள் அரசியல் கட்சிகளில் இருக்கிறார்கள் அல்லது இருக்க வேண்டும்?
இதற்கெல்லாம் மேலாக ஒரு ஜனநாயக நாட்டில் கட்சித் தொண்டர்கள் எப்படி இருக்க வேண்டும்? அவர்கள் ஒரு கட்சியில் உறுப்பினர்களாக இருந்தாலும், மாற்றுக் கட்சிகள் மட்டுமல்லாமல் தங்கள் கட்சியின் நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்து வரவேண்டும். கண்மூடித்தனமாக தனது கட்சியின் தலைவருக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது.

ஆனால் என்ன நடக்கிறது? கருணாநிதியை யாராவது ஏதாவது சொல்லிவிட்டால், அவர் ஜெயலலிதாவிற்கு வால் பிடிப்பவர் என்று கருணாநிதியின் விசுவாசிகள் சொல்கிறார்கள். இதே நிலைதான் அதிமுகவிலும். ஜெயலலிதாவை யாராவது ஏதாவது சொல்லிவிட்டால் அவர் கருணாநிதியின் கட்சிக்காரர் என்று முடிவு செய்து விடுகிறார்கள். ஆக இந்த இரு தரப்பினரும் ஒரே நிலையில்தான் உள்ளனர். அதாவது தங்கள் தலைவர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டை யாரும் பரிசீலிக்கத் தயாரில்லை. ஆனால் பதிலுக்கு அவர்கள் மீது குற்றம் சாட்டுவதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர். இதனை ஒவ்வொரு கட்சியில் இருப்பவர்களும் புரிந்துகொண்டு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அரசியல் கட்சித் தொண்டர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்? என்று தமிழர்களிடையே கருத்தொற்றுமை ஏற்பட வேண்டும்.

தீண்டாமை - சாதி வேறுபாடு

தமிழர்களிடையே உள்ள ஒற்றுமையின்மையே அவர்களை பலவீனப்படுத்தியுள்ளது. அதற்கு அடிப்படை காரணம் சாதி வேறுபாடே. இந்த வேறுபாடு ஒவ்வொரு சமூகத்தினரிடையேயும் நம்பிக்கையின்மை, அளவுகடந்த வெறுப்பு, காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பண்டைக் காலத்தில் இந்த அளவு வேறுபாடு இருந்ததா என்று பார்த்தால் இல்லை என்றே சொல்லலாம். அப்படி இருந்த சமூகம் எப்படி வேறுபாடு மிகுந்த ஒன்றாக மாறியது?

அன்னிய ஆட்சியாளர்களின் சுரண்டலில் இந்த சமூக கட்டமைப்பின் ஒழுங்கு நிலைகுலைந்தது. அந்நிய ஆட்சியாளர்கள் வந்த பிறகே சாதிகளின் சமூக கட்டமைப்பு - வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டது. அதன் பின்பே சாதிகளிடையே வேறுபாடு அதிகரித்தது. அந்த வேறுபாடு இன்று கொலை வெறியாக மாறியுள்ளது. பொது மேடையில் பேசிய சட்ட மன்ற உறுப்பினரும் வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு கலப்புத் திருமணம் செய்பவர்களை வெட்டிக் கொல்லுங்கள் என்று பேசியுள்ளார். இது தமிழன் சமூக நீதியில், நாகரீகத்தில் எந்தளவு முன்னேறி இருக்கிறான் என்பதை காட்டுகிறது.

தமிழ் இனம் ஒரு பழம்பெரும் பெருமை படைத்தது என்பது உண்மையானால் அது ஒரு மேம்பட்ட சமூகத்தையும் சிறந்த அரசியலையும் உருவாக்கிய இனமாக இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய நிலை அப்படி இல்லையே? வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற தமிழன் எவ்வாறு தன் சக இனத்தவரை தீண்டாமையால் ஒதுக்க முடியும்? யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்ன தமிழன் எவ்வாறு தன் சக தமிழினத்தை வந்தேறி என்ற பெயரில் வேறுபடுத்தி பார்ப்பான்? பசுவிற்காக தன் மகனை தேர்க்காலால் ஏற்றிய பெருமை கொண்ட தமிழினம் எவ்வாறு தன் குடும்பத்திற்காக தன் இனத்தையே பலிகொடுக்கும் அரசியலை உருவாக்கியது?

அரசியல் தலைவர்களும், எழுத்தாளர்களும் சாதி பற்றியும் சாதி ஒழிப்பு பற்றியும் ஒரு தெளிவில்லாத நிலையிலேயே உள்ளனர். அவர்கள் பேசும் சாதி ஒழிப்பு கற்பனையான - பிரச்சனை அடிப்படையிலான, ஒன்றாகவே உள்ளது. நகர்ப்புற சமூக - பொருளாதார கட்டமைப்பு சாதியை ஒழித்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தற்போதைய சூழலில் கிராமப்புற சாதி ஒழிப்பு பற்றி ஆழமாக திட்டமிட்டு சமூக ஆதரவோடு செயல்பட வேண்டும்.  

சாதி வாரி கணக்கெடுப்பிற்கு யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே? பலருக்கும் பல காரணங்களால் சாதி தேவைப்படுகிறது. ஒரு காலத்தில் சமூக அடையாளமாக இருந்த சாதி இன்று அதிகாரத்திற்கான படிக்கட்டாக – வன்முறையின் அடையாளமாக உள்ளது. இதனை உருவாக்கிய பெருமை நமது மாண்புமிகு அரசியல்வாதிகளுக்கும் உள்ளது. சாதி ஒழிப்பு என்று வரும்போது இதற்கு அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பல சாதியினரும் தங்கள் சாதி அமைப்பை தக்க வைத்துக் கொள்ள விரும்புகின்றனர். அதேவேளையில் தலித்கள், சாதி ஒழிப்பு என்ற பெயரில் தங்களுக்கு கிடைக்கும் உரிமைகள் பறிக்கப்பட்டு விடுமோ என்று அஞ்சுகின்றனர். தமிழ்தேசியம் பேசுவோர் தனிநாடு என்ற பெயரில் ஆட்சி அதிகாரத்தை ஓங்கிய சாதிகளிடம் ஒப்படைத்து விடுவர் என்று இவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இவர்கள், இந்தியா சாதியை ஒழிக்கிறதோ இல்லையோ இந்தியாவில் இருப்பதே தலித்களுக்கு பாதுகாப்பு என்று கருதுகின்றனர்.
தனித் தமிழ்நாடு என்பது எந்தவொரு சாதியையும் ஒதுக்கியதாகவோ சில சாதிகளை மட்டும் கொண்டதாகவோ அமைக்கப்பட முடியாது. எனவே தனித் தமிழ் நாடு கருத்தை முன்வைப்போர் அனைத்து சாதிகளின் ஒருமித்த கருத்தை, ஆதரவை, நம்பிக்கையைப் பெற்றுச் செயல்பட வேண்டும். அதன் பின் சாதி பற்றிய ஒரு பொதுத் தீர்மானத்திற்கு வந்து அதன்படி செயல்பட வேண்டும்.  

அதேபோல அரசாங்கம் வழங்கும் இடஒதுக்கீடு - சலுகை எத்தகையதாக இருக்க வேண்டும்? அது சாதி அடிப்படையில் இருக்க வேண்டுமா? அல்லது பொருளாதார அடிப்படையில் இருக்க வேண்டுமா? இந்த இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? சலுகைகளுக்கு ஒரு கால வரம்பு இருக்க வேண்டுமா அல்லது வேண்டாமா? எத்தகைய மக்கள் எத்தகைய முன்னேற்றம் அடையவேண்டும் என்று அனைத்து சமுதாய மக்களிடையே ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும்.

யதார்த்தத்தில் தமிழகத்தில் பெரும்பான்மை மக்கள் ஓங்கிய சாதியை சேர்ந்தவர்களாகவும் சாதியை விரும்புபவர்களாகவே உள்ளனர். இவர்கள் மனம் மாறுகிறார்களோ அல்லது சட்டத்தால் மாற்றப்படுகிறார்களா என்பதை பொருட்படுத்தாமல் இவர்களின் ஒத்துழைப்போடுதான் சாதி வேற்றுமையை வேரறுக்க முடியும் என்பது உண்மை. முதலில் கருத்தளவில் இவர்களை சாதியை பற்றிய அளவுகோலை மாற்றச் செய்ய வேண்டும். அதற்கு அந்த சாதிகளை சேர்ந்தோரையும் உள்ளடக்கிய திட்டம் வகுக்கப்பட வேண்டும்.

எனவே ஒரு நாகரீகமான தமிழ் சமுதாயம் தனது எதிர்காலத்திற்காக என்ன விதமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும்? அதில் சாதி அமைப்பு இருக்க வேண்டுமா? இருக்க வேண்டாமா? தீண்டாமை இருக்க வேண்டுமா? ஒழிக்கப்பட வேண்டுமா? என்ற ஒரு பொதுவான முடிவுக்கு வரவேண்டும். உதாரணமாக சாதி வேறுபாடு இருக்கலாம், ஆனால் சாதி வெறி இருக்கக் கூடாது. தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும். அதற்கான செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும். அந்த திட்டத்தை கிராம மக்களின் மனதில் படியச் செய்யவேண்டும். அதற்கான திட்டம் என்ன? என்பவை பற்றி ஒருமித்த கருத்தை அடைய வேண்டும்.

கல்வி

கல்வி விஷயத்திலும் தமிழர்கள் ஒரு போலியான மனநிலையில் உள்ளனர். அதாவது ஆங்கில கல்வி பயின்றால்தான் அது தரமான கல்வியாக இருக்கும் என்ற கருத்தில் உள்ளனர். ஆங்கிலம்தான் பணம் சம்பாதிக்கும் மொழி, தமிழ் பிழைப்புக்கு உதவாத மொழி என்று நம்புகின்றனர். இதனால் இன்று கல்வி வியாபாரமாகியுள்ள சூழல் ஏற்பட்டு தாய் மொழியை அறியாத ஒரு சமூகமும் உருவாகி வருகிறது. உலகில் தாய்மொழியில் கல்வி பயில்வோர் உயர்ந்த நிலையை அடைந்துள்ளதை கவனிக்க வேண்டும்.
அதற்காக ஆங்கில மொழியின் அவசியத்தை மறுக்க வேண்டும் என்பதில்லை. அதேபோல கல்வியை ஆங்கில மொழியிலேயே கற்க வேண்டும் என்பதும் இல்லை. தேவையான ஒரு மொழியை ஒரு ஆண்டுக்குள் கற்றுவிடலாம். தக்க பயிற்சியும் வழிகாட்டுதலும் இருந்தால் ஒரு ஆண்டுக்குள் ஒரு மொழியில் சிறந்த மொழிப் புலமையை பெற்றுவிடலாம். ஆங்கில மொழிப் புலமைக்காக கல்வி முழுவதையும் ஆங்கிலத்தில் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை.

தாய்மொழிக் கல்வி என்பது நமது வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டது. பொதுவாக ஆங்கில மொழியில் கல்வி பயிலும் மக்களுக்கு நம் மக்களின் வாழ்க்கை முறையில் உள்ள முக்கியத்துவம் புரிவதில்லை. அவை சர்வசாதாரணமாக தோன்றுகின்றன. இதுவே இன்று தமிழகத்தில் விவாகரத்துக்களும், முதியோர் கைவிடப்படுவது பெருகி வரவும் மறைமுக காரணமாக உள்ளது. இந்த பாதிப்புகள் ஒரு குடும்ப அளவில் இருந்தால் அது அந்த குடும்பத்தைத்தான் பாதிக்கும். இதே பாதிப்பு ஒரு நாட்டின் அளவில் இருந்தால் அது அந்த நாட்டையே பாதிக்கும்.

இது போன்ற ஒரு சமூகத்தை உருவாக்கினால் அது எந்த அளவு பயன் தரத்தக்கது என்று நாம்தான் முடிவு செய்ய வேண்டும். எனவே நமது கல்வி எப்படி இருக்க வேண்டும் என்பதை அனைத்து தரப்பினரும் முடிவு செய்ய வேண்டும். அதுவே ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதாக அமையும்.  

இடஒதுக்கீடு

தமிழ் தேசியத்திற்கு தலித்கள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு காரணம் இட ஒதுக்கீடு சாதியின் பெயரில் வழங்கப்படுவதே ஆகும். இட ஒதுக்கீடு என்பது அவசியமானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அது சாதி அடிப்படையில் வழங்கப்படும்போது அது சாதியை வளர்க்க மறைமுக காரணமாக உள்ளது என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தற்போது இட ஒதுக்கீடும் சாதியும் பின்னிப் பிணைந்தவையாக உள்ளன. (http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=18970:-6&catid=1454:2012&Itemid=694) ஒருபுறம் தீண்டாமையை ஒழிக்க வலியுறுத்தும் இந்திய அரசாங்கம் மறுபுறம் சாதியை வளர்க்கத் தேவையான அனைத்தையும் செய்து வருகிறது.   

சாதியை ஒழித்துவிட்டால் இட ஒதுக்கீடு எப்படி கிடைக்கும்? என்ற கேள்வியை தலித்கள் எழுப்புகின்றனர். அதேபோல பல நூற்றாண்டுகளாக அடக்குமுறைக்குள்ளான தலித்களுக்கு பல தலைமுறைகளுக்கு இட ஒதுக்கீடு பெற வேண்டும் என்று சொல்கின்றனர். அப்படி என்றால் தமிழ்தேசியத்தில் தலித்களுக்கும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் என்னவிதமான சலுகைகளை எவ்வாறு ஒதுக்குவது என்று தமிழ் தேசியவாதிகள் விவரித்து கூற வேண்டும். சாதியை ஒழிப்பது என்றால் அது எப்படி? அவ்வாறு ஒழிக்கப்பட்டால் தாழ்த்தப்பட்ட மக்கள் எவ்வாறு முன்னேற்றப்படுவர் என்பதையும் விவரிக்க வேண்டும்.
அதேபோல தமிழ்தேசியம் என்ற ஒன்று உருவானால் அதில் தங்களது நிலை எப்படி இருக்க வேண்டும், தாங்கள் எதிர்பார்ப்பது என்ன? என்பது போன்ற விஷயங்கள் குறித்து தலித்கள் தங்களுக்குள் ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டும். மேலும் தனியார் அதிகரித்து வரும் இந்த காலத்தில் இட ஒதுக்கீட்டை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு சமூகத்தை முன்னேற்றி விட முடியுமா? பலதுறை பயிற்சி, திறன், அறிவு வழங்கப்பட வேண்டாமா? அந்த சமூகத்திற்கு இதர இனங்களுடன் சமமாக போட்டியிட்டு வெல்லும் திறமையை உருவாக்க வேண்டாமா? என்பது பற்றி சிந்திக்க வேண்டும். எனவே இட ஒதுக்கீடு பற்றி அனைத்து தமிழ் மக்களும் ஒரு கருத்தொற்றுமையை அடைய வேண்டும்.

அறிவுசார் அரசியல்

பொதுவாகவே அரசியல் சாக்கடை, அரசியல்வாதிகள் சாக்கடை புழுக்கள் என்ற கருத்து எல்லார் மனதிலும் உள்ளது. நடப்பு அரசியலை பார்க்கும்போது இது உண்மையாகவும் தோன்றலாம். ஆனால் உண்மையில் பண்டைக்கால கொடுங்கோன்மை அரசியல்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய ஜனநாயக ஆட்சி முறை எவ்வளவோ சிறந்தது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். ஆனால் ஜனநாயத்தில் மக்களின் பங்கேற்பு அவசியமானது. அரசியல் சாக்கடை என்று கருதும் மக்கள் எவ்வாறு அதில் ஈடுபடுவர்? அதோடு அரசியல் ஒரு நிச்சயமான, நம்பகமான, லாபகரமான தொழில் அல்ல என்ற கருத்தும் உள்ளது. தற்போதைய அரசியல்வாதிகளுக்கு கிடைக்கும் அதிகாரம், சலுகைகளை ஒப்பிட்டால் இது எவ்வளவு தவறானது என்று நாம் புரிந்துகொள்ளலாம். அடிப்படையிலேயே அரசியல் பற்றிய அக்கறை இல்லாமையே நம்மை இந்த மோசமான அரசியல் சூழலுக்கு அழைத்து வந்துள்ளது.   

உண்மையில் அரசியலுக்கு தேவையானவர்கள் சுயநலமற்ற சேவை மனப்பான்மை கொண்ட உத்தமர்களே. ஆனால் அதுபோன்ற ஆட்கள் கிடைப்பார்களா என்பதே நமக்கு சந்தேகமாக உள்ளது. நம்முடைய பலவீனங்களை அளவுகோலாகக் கொண்டே நாம் அரசியலை முடிவுசெய்து அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்கிறோம். அதனால் அவர்கள் நமது பலவீனங்களைவிட மோசமான பலவீனம் கொண்ட அரசியல்வாதிகளாக உள்ளனர். நாம் சுதந்திரமாக சிந்திக்கும் மக்கள் என்றால் ஆயிரத்திற்கும் இரண்டாயிரத்திற்கும் சில இலவசங்களுக்கும் வாக்களிப்போமா?  

இதுவரை தமிழர்கள் செய்து வரும் அரசியல் அறிவு சார்ந்த அரசியல்தானா என்று நாம் பரிசீலனை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதாவது அறிஞர் பெருமக்கள் எந்த அளவு அரசியலில் ஈடுபட்டார்கள்? என்றால் அது கேள்விக்குறியே. ஆனால் ஒரு நாட்டில் அரசியலில் ஈடுபட வேண்டியவர்களில் முதன்மையானவர்கள் அறிஞர் பெருமக்களே. அவர்களே அரசியலுக்கான திட்டத்தை வகுத்து தந்து வழி நடத்த வேண்டும்.   

பொதுவாக படித்த தமிழ் மக்கள், நமக்கெதுக்கு அரசியல்? நாம் நமது பிழைப்பை பார்ப்போம் என்று தங்களது வேலைகளை பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அவர்கள் பொருள் சேர்க்க புறப்பட்டதால், படிக்காதவர்கள் அல்லது சமூக அக்கறை இல்லாதவர்கள் அரசியலைக் கைப்பற்றிக் கொண்டனர். இவர்களால் உணர்வை காட்ட வேண்டிய, உரிமையை காக்க வேண்டிய, அதிகாரத்தை பயன்படுத்த வேண்டிய நேரத்தில் உணர்வை காட்டமுடியாத, உரிமையை காக்க முடியாத, அதிகாரத்தை பயன்படுத்த முடியாத பிண்டங்களாக இருக்கவே முடிந்தது. தற்போதுள்ள இழிவான அரசியல் சூழலுக்கு வழிவகுத்ததும் இதுவே. எனவே இந்த நிலையை மாற்ற படித்தவர்கள், சமூக அக்கறை கொண்டவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும். இயக்குனர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், சிந்தனையாளர்கள், சமூக சேவகர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள் அச்சமில்லாமல் துணிந்து மக்கள் விரோத அரசுகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். முடிந்தவரை தங்கள் செல்வாக்கை அரசியலுக்காக பயன்படுத்த வேண்டும். படித்தவர்களுக்கு, சேவை செய்து வருபவர்கள் அரசியலில் ஈடுபட முன்வரவேண்டும், சமுதாயம் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். குறிப்பாக அரசியலில் ஈடுபடுவோருக்கு சில தகுதிகளை வரையறை செய்வது பற்றி கருத்தொற்றுமை ஏற்பட வேண்டும்.   

ஜனநாயகம் இல்லா அரசியல் கட்சிகள்

அடுத்ததாக நாம் யோசிக்க வேண்டிய விஷயம் நமது அரசியல் கட்சிகள் பற்றியது. நமது அரசியல் கட்சிகள் எந்த அளவு ஜனநாயக முறைப்படி நடந்துகொள்கின்றன என்பதை பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. அரசியல் கட்சிகள் என்பவை மக்களுக்கானவை. இந்த கட்சிகள் மக்களின் சொத்தாகும். ஆனால் கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ் போன்றோர் அரசியல் கட்சிகளை தங்கள் குடும்ப சொத்தாக, தங்கள் தனிச் சொத்தாக பாவித்து வருகின்றனர். எனவே இந்த கட்சிகளில் எந்தவித ஜனநாயக முறையும் பின்பற்றப்படுவதில்லை.

தமிழர்கள் சிறந்த அரசியலை பெற வேண்டும் என்றால், அரசியல் கட்சிகள் ஜனநாயக முறையில் வெளிப்படையாக நடந்துகொள்ள வேண்டும். ஜனநாயக முறை இல்லாத காரணத்தால், ஒரு கட்சியில் தலைவர் இல்லாத அல்லது இறந்து விட்ட நிலையில் அங்கு குழப்பமான நிலை ஏற்படுகிறது. இதற்கு உதாரணமாக எம்ஜிஆர் இறந்தபின் ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலையை கூறலாம். எனவே ஒரு கட்சியின் கட்டமைப்பில் இந்த தலைவருக்குப் பின் இவர்தான் தலைவராக இருப்பார். மற்றவர்கள் இந்த இந்த பதவிகளில் இருப்பர் என்பவை முன்னதாகவே முடிவு செய்யப்பட்டதாக, தேர்தெடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். பதவிக் காலமும் வரையறுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

ஆனால் முக்கிய கட்சிகளான அதிமுக, திமுக ஆகிய கட்சிகளில் இது போன்ற நிலை இல்லை. ஜெயலலிதாவுக்கு அடுத்த தலைவர் யார் என்பது இப்போது யாருக்கும் தெரியாது. ஆனால் திமுகவில் அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்பது அவருக்கு மறைமுகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக முறையில்தான் ஸ்டாலின் அடுத்த தலைவர் ஆக்கப்பட்டாரா என்றும் சொல்ல முடியாது. இதே நிலையில்தான் பாமகவும் உள்ளது. இவ்வாறு ஜனநாயக முறை தவறி நடக்கும் கட்சிகளால் எவ்வாறு மக்களுக்காக மற்ற கட்சிகளுடன் இணைந்து ஜனநாயக முறைப்படி நடந்துகொள்ள முடியும்?
இதையே அதிமுக, திமுக கட்சிகள் நிரூபித்து வருகின்றன. இந்த கட்சிகளால் மக்களின் நலனுக்காக ஒருபோதும் ஒன்று சேர முடியாது. இந்த கட்சிகளின் நோக்கம் ஒன்றுதான். அது அதிகாரம். அதை பெற்றபின் எப்படி வேண்டுமானாலும் ஆடலாம் என்ற துணிச்சல் வெளிப்படையாக தெரிகிறது.
இந்த கட்சிகள்தான் நம்மை சிறந்த எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்லக் கூடிய கட்சிகளா? இந்த நிலையை மாற்றிக்கொள்ள அரசியல்கள் கட்சிகள் முன் வரவேண்டும். அல்லது மக்கள் இக்கட்சிகளை அந்த நிலைக்கு தள்ள வேண்டும். எதிர்க்கட்சிகளை எதிரி கட்சிகளாக பாவிக்கும் மனநிலை மாறி அவை மாற்றுக் கட்சிகளாக கருதப்படும் நிலை வரவேண்டும். அதுவே மக்களுக்கு நன்மை பயப்பதாகும். இவ்வாறு ஜனநாயகம் தவறும் கட்சிகளை மக்கள் வெறுத்து ஒதுக்க வேண்டும். அரசியல் கட்சிகள் இப்படித்தான் செயல்பட வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் கருத்தொற்றுமையை அடைய வேண்டும்.

திராவிடம்

கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னது போல ஈழ இனப் படுகொலையால் கொதித்துப் போய் உள்ளவர்கள் திராவிடம் என்ற சொல்லையே வெறுக்கின்றனர். அவர்கள், திராவிடம் என்பது போலியானது, அதனை பேசியவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றி விட்டனர் என்று குற்றம் சாட்டுகின்றனர் (http://www.thamizharkalam.org/Thamizhagaththai%20cheerazhiththadhu%20thiraavidamae%20thani.html). இதையே அதிமுகவும் திமுகவும் போட்டி போட்டு நிரூபித்து வருகின்றன. இவர்கள் பெரியார் கூறிய திராவிடத்தை விட்டு வெகுதூரம் விலகி வந்துவிட்டனர். இதே காரணங்களால்தான் பெரியார் கூறிய மற்ற கருத்துக்களான சாதி ஒழிப்பு, கலப்புத் திருமணம் போன்ற கருத்துக்களும் அடிபட்டு போய்விட்டன.

அரசியல் அதிகாரத்திற்காக பெரியாரை கைவிட்ட திமுக தலைவர் மஞ்சள் துண்டை போட்டுக் கொண்டு அமர்ந்து கொண்டிருக்கிறார். அதிமுக, பிராமணரான ஜெயலலிதாவை தலைவியாகக் கொண்டு செயல்படுகிறது. இதுபோன்ற தலைவர்களால்தான் திராவிடம் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இதை பெரியார் வழியில் வருவதாக கூறிக்கொள்பவர்கள் ஏற்க மறுக்கின்றனர். அதேவேளையில் ஆட்சி அதிகாரத்திற்காக கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்த பெரியாரால் மேற்படி கட்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. மாறாக இந்த கட்சிகள் பெரியார் சொன்ன சீர்திருத்தங்களுக்கு எதிராக சாதியை வளர்ப்பதில் ஈடுபட்டு வருகின்றன.

இதே காரணங்களால்தான் தமிழ்தேசியம் பேசுவோருக்கு இடையேயும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. அதாவது சீமான் ஆதரவாளர்களுக்கும், வைகோ தலைமையிலான மதிமுகவினருக்கும் இதர பெரியார் கொள்கையாளர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழலில் திராவிடம் என்ற கருத்து தேவைதானா என்ற கேள்வியும் எழுகிறது. தற்போதைய சூழலுக்காக திராவிட கருத்தை ஒட்டுமொத்தமாக விலக்கிவிட வேண்டுமா? அல்லது அப்படியே முன்னெடுத்துச் செல்லலாமா? என்பது போன்ற விஷயங்களில் தமிழர்கள் ஒருமித்த கருத்தை அடைய வேண்டும்.

கடவுள் மறுப்பு

தமிழ்தேசியம் பேசுவோர் எடுத்துச் செல்ல விரும்பும் கருத்துகளில் ஒன்று கடவுள் மறுப்பு. இதற்கு காரணம் கடவுளை மறுத்தால் மதம் மறுக்கப்படும், அதன் மூலம் இந்து மதத்தின் சாதி கட்டமைப்பு ஒழிக்கப்பட்டுவிடும் என்பதே. ஆனால் கடவுள் மறுப்பு மூலம் சாதியை ஒழிக்க முடியுமா என்றால் முடியாது என்றே தோன்றுகிறது. அதேபோல சாதி வேறுபாட்டை போலவே மத வேறுபாட்டையும் பார்க்க வேண்டுமா? என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும். தற்போது தமிழர்கள் பின்பற்றி வரும் இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்கள் ஆதியில் தமிழர்களால் பின்பற்றப்படாத மதங்களே. எனவே தமிழர்கள் தொடர்ந்து இந்த மதங்களை பின்பற்றலாமா? அல்லது வேண்டாமா? அல்லது தமிழர்களுக்கு மதம் ஒரு பொருட்டு இல்லையா? என்பது போன்ற விஷயங்களை தமிழறிஞர்களும் மத அறிஞர்களும் கலந்துபேசி கருத்தொற்றுமையை எட்ட வேண்டும்.

வந்தேறிகள்

தமிழ்தேசியவாதிகள் பேசும் மற்றொரு கருத்து வந்தேறிகளை துரத்த வேண்டும் என்பது. பல்வேறு காரணங்களால் தற்போது வட மாநில மக்கள் தமிழகத்தில் குடியேறி வருகின்றனர். இவர்கள் தமிழர்களின் பொருளாதார வாழ்வாதாரங்களை ஆக்கிரமித்து வருகின்றனர். எனவே இவர்களை துரத்த வேண்டும் என்று இவர்கள் சொல்கின்றனர். இவ்வாறு பிரிக்க ஆரம்பித்தால் தமிழகத்தில் வாழும் பெரும்பான்மையான இனமான நாயக்கர்களையும் பிரிக்க வேண்டியிருக்கும். இவர்கள் தமிழகத்திற்கு வந்து சில நூற்றாண்டுகளாக ஆகிவிட்ட நிலையில் தமிழர்களோடு தமிழர்களாக வாழ்ந்து வரும் இவர்களை வந்தேறி என்று சொல்லி பிரிக்க முடியுமா? என்பதை யோசிக்க வேண்டும். அதேபோல கவுண்டர்களையும், நாடார்களையும் கூட வந்தேறிகள் என்று சொல்ல முடியுமா? கர்நாடக - கேரளப் பகுதியிலிருந்து வந்தாலும் இவர்கள் இன்று தமிழர்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.

ஒரு நிலப்பகுதியில் பல தலைமுறைகளாக, அந்நிலத்தின் மொழிபேசி வாழும் வேற்று இனத்தவரையும் அந்த மண்ணின் இனமாகவே கருத வேண்டும். அந்த அடிப்படையில் நாயக்கர்களை, கவுண்டர்களை, நாடார்களை வேற்று இனமாக கருத முடியாது. அரசியல் அதிகாரத்தை கையில் எடுப்பதுடன் வந்தேறிகளை துரத்துவதை முடிச்சுப் போடக்கூடாது.         

யதார்த்தமாக சிந்தித்துப் பார்த்தால் இது சாத்தியமில்லை என்றே சொல்லலாம். ஒரு நாடு, நகரம், எல்லை என்று பார்க்கும்போது மாற்று இன மக்கள் மற்றொரு நாட்டில், நகரத்தில், எல்லையில் வசிப்பது இயல்பே. எனவே வந்தேறிகள் யார்? எந்த தேதியிலிருந்து வருபவர்கள் வந்தேறிகள் எனப்படுவர்? என்பதை வரையறை செய்ய வேண்டும். புதிதாக  வருபவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவும் எதற்காக என்றால் எதிர்காலத்தில் மாற்று இனங்கள் வந்து ஆக்கிரமிக்காமல் இருக்கவே தவிர முழுக்க முழுக்க வரவிடாமல் தடுக்க அல்ல. எனவே வந்தேறிகள் என்ற கருத்து, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழரை பின்னோக்கி அழைத்துச் செல்வதாக அமையும். இது பற்றிய கருத்தொற்றுமையும் தேவை.  

பொதுவுடமை – முதலாளித்துவம்

தமிழ்தேசியம் பேசும் பலரும் பொதுவுடமையை ஆதரிப்பவையாக உள்ளனர். பெ. மணியரசன் தலைமையிலான தமிழ்தேசிய பொதுவுடமை கட்சி தனித் தமிழ் நாட்டுக் கொள்கையை கொண்டு செயல்பட்டு வருகிறது (http://tamizhdesiyam.blogspot.in/ ). இக்கட்சி அதற்கான அரசியலமைப்பு கொள்கைகளையும் உருவாக்கி அது பற்றி பிரச்சாரம் செய்து வருகிறது. தமிழ்தேசியம் பேசும் அனைவரிடமும் இதை காண முடிகிறது. ஆனால் தமிழர்கள் பொதுவுடமையை விரும்புகிறார்களா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.

தற்போதைய சூழலில் தமிழகத்தில் எப்படியும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறி நிலவுவது கண்கூடாக தெரிகிறது. தமிழகத்தில் அவ்வப்போது நடைபெறும் சீட்டுபண மோசடி, பணத்தை இரட்டிப்பாக்குவதாக கூறி மோசடி, இன்னும் பணம் தொடர்பான பல்வேறு மோசடிகள், கொள்ளைகள் நடைபெறுவது தமிழர்கள் பணம் மீது கொண்டுள்ள கண்மூடித்தனமான மோகத்தையே காட்டுகிறது. இதற்கு தூபம் போடும் கோடீஸ்வரன் போன்ற பண ஆசையை தூண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் இதற்கு எடுத்துக் காட்டாக சொல்லலாம்.

இவ்வாறான மனநிலையில் உள்ள மக்கள் பொது உடமையை எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள்? எனவே பொதுவுடமை தேவை என்றால் அது எந்த அளவில் தேவை? முதலாளித்துவம் ஒழிக்கப்பட வேண்டும் என்றால் அது எந்த அளவில் ஒழிக்கப்பட வேண்டும்? என்பது பற்றி தமிழர்கள் ஒருமித்த கருத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போது பெரும்பாலான ஜனநாயக நாடுகளில் பெருமுதலாளிகள் தங்கள் செல்வாக்கால் அரசாங்கத்தை கட்டுப்படுத்தும் நிலையில் உள்ளனர். இந்த நிலையில்தான் முதலாளித்துவத்தை ஒழிக்க வேண்டும் என்பது என் கருத்து.

நம் நாட்டில் பொது நிறுவனங்கள் எந்த லட்சணத்தில் இயங்குகின்றன என்பது கண்கூடு. எனவே இந்த இடத்தில் பொது உடமையை ஒழிக்க வேண்டும். முதலாளிகள் லாபத்தை இலக்காக கொண்டு செயல்படுகின்றனர். எனவே அரசு சேவை செய்ய வேண்டிய துறைகளில், தனியார் சேவையை மட்டும் இலக்காக கொண்டு இயங்குவது கட்டாயமாக்கப்பட வேண்டும். உதாரணமாக லாபம் தரும் வழித்தடத்தில் ஒரு பேரூந்தை இயக்கும் ஒரு முதலாளி சேவைக்காக லாபம் கிடைக்காத ஒரு வழித்தடத்தில் ஒரு பேரூந்தை இயக்க வேண்டும். அதற்கு சம்மதித்தால்தான் அவருக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். எனவே முதலாளித்துவம் - பொதுவுடமையை எந்த அளவில் எடுத்துக் கொள்வது என்பது பற்றி தமிழர்கள் மத்தியில் கருத்தொற்றுமை ஏற்பட வேண்டும்.     

மாநில உரிமைகள் - போராட்டங்கள்

பல்வேறு பிரச்சனைகளுக்காக தமிழர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஒருபுறம் மூவர் விடுதலை, மறுபுறம் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை என தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். இந்த போராட்டங்கள் தமிழர்களின் கவனத்தை திசை திருப்புவதாக உள்ளன. எனவே போராடுபவர்கள் ஒருபுறம் போராடிக் கொண்டிருந்தாலும் மறுபுறம் உரிமைகளை மீட்பதற்கான அறிவுப்பூர்வமான நீண்ட காலத்திட்டங்களை உருவாக்கி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த இரண்டும் ஒன்றையொன்று கட்டுப்படுத்தக் கூடாது. எனவே போராட்டங்களை நடத்துவது மற்றும் அறிவுப் பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பது பற்றி தமிழர்களிடையே கருத்தொற்றுமை ஏற்பட வேண்டும்.

மாநில உரிமைகளை பெறுவதில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் தெளிவான முடிவுக்கு வர வேண்டும். பொதுவாக மாநில உரிமைகள் பற்றி எந்த கட்சியும் உண்மையான அக்கறை கொண்டு பேசுவதில்லை. அப்படி அக்கறை கொண்டிருந்தால் அவர்கள் மாற்றுக் கட்சிகளுடன் இணைந்து அதனை சாதித்து காட்டி இருப்பார்கள். நம்ம ஊர் கட்சிகள் கூட்டணி அமைத்தாலும் அதிலும் ராஜதந்திரத்தை கடைப்பிடிப்பார்கள். அதாவது கூட்டணி கட்சி ஒரு கூட்டத்தை நடத்தினால் அந்த கூட்டணியில் உள்ள மற்ற கட்சித் தலைவர் தானும் கட்சி பொறுப்பாளர்கள் இருவரை மட்டும் அழைத்துச் செல்வார். தொண்டர்கள் வரக் கூடாது என்று மறைமுக உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கும். இப்படி இருந்தால் அந்த கூட்டம் எப்படி வெற்றி பெறும்?

எனவே மாநில உரிமைகள் எவை? அவற்றில் நாம் என்ன நிலை எடுக்க வேண்டும்? அவற்றை எப்படி மீட்க வேண்டும்? அதற்கான திட்டங்கள் என்ன? என்பது பற்றி தமிழர்கள் தங்களுக்குள் கருத்தொற்றுமை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவே தமிழர்களின் எதிர்கால நலனை பாதுகாப்பதாக அமையும்.    

இந்திய அரசியல்

தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசியல் இந்திய அரசியலின் தொடர்ச்சி என்றே சொல்ல்லாம். ஒட்டு மொத்த இந்தியாவில், எப்படி வேண்டுமானாலும் ஊழல் செய்யலாம், மாட்டிக் கொண்டால் பார்த்துக் கொள்ளலாம் என்ற ஒரு துணிச்சல் அரசியல் நடத்தப்படுகிறது. மாட்டிக்கொண்டவர்கள் கெட்டவர்களாகவும் மாட்டாதவர்கள் நல்லவர்களாகவும் உள்ளனர். இவர்கள், அரசியலுக்காக அனைத்து நெறிமுறைகளையும் தூக்கி எறிந்து விட்டு அதிகாரம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றனர். அதிகார துஷ்பிரயோகத்திற்கு மது, மாது, பணம், பதவி, நிலம் என்ற பாகுபாடில்லாமல் எதையும் பரிமாறிக் கொள்கின்றனர். இவர்கள் பணத்தை கொண்டே அரசியலில் வெற்றி பெற்று விடலாம் என்று ஆழமாக நம்புகின்றனர். இந்த அரசியல்தான் தமிழகத்திலும் எதிரொலித்து வருகிறது. இதன் காரணமாகவே கருணாநிதியும் (குடும்பத்தினர்), ஜெயலலிதாவும் (கூட்டத்தினர்) ஏகப்பட்ட வழக்குகளில் சிக்கி தவிக்கின்றனர். அதிலிருந்து தப்பிக்க தமிழ் மக்களின் அதிகாரத்தை பலி கொடுத்து வருகின்றனர். 
இந்த நிலையை மாற்ற வேண்டும் என்றால் கருத்தளவில், மேற்கூறிய பல விஷயங்களில் தமிழர்கள் இந்தியா அரசியலுக்கு முரணாக செயல்பட வேண்டியிருக்கலாம் அல்லது இந்திய அளவில் மாற்றத்தை கொண்டு வந்தால்தான் நமது இலக்கை அடைய முடியும் என்ற நிலைக்கு தள்ளப்படலாம். இந்த விஷயம் குறித்தும் தமிழ் மக்கள் கருத்தொற்றுமை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.  

இறையாண்மை

ஈழ இனப்படுகொலைக்குப் பின்னர் தமிழகத்தில் அதிகம் பேசப்படும் ஒரு அரசியல் வார்த்தை இறையாண்மை.  தமிழ் தேசியம் பேசுவோர் இந்திய தேசத்தின் இறையாண்மைக்கு எதிராக பேசினர் என்று செல்லி சிறையில் அடைக்கப்பட்டனர். எனவே இந்த இறையாண்மை என்றால் என்ன? என்பது பற்றி நாம் நமக்கிடையே தெளிவு படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். இறையாண்மை என்பது மக்களை ஆட்சி செய்ய அரசாங்கத்திற்கு உள்ள அதிகாரம். பண்டைக் காலத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் இந்த அதிகாரத்தை இறைவன் தங்களுக்கு கொடுத்ததாக சொல்லிக்கொண்டனர். தங்களை இறைவனின் நேரடி வாரிசு என்றும் சொல்லிக் கொண்டனர். இதனால் அட்டூழியங்களையும் செய்தனர்.   

பண்டைய தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் எந்த அரசுக்கும் கட்டுப்படாமல் தனி இறையாண்மையுடன் ஆட்சி செய்து வந்தனர். அந்நியர்கள் படை எடுத்து அவர்களின் இறையாண்மையை கைப்பற்றிக் கொண்டனர். வெள்ளையர்கள் அவர்களிடமிருந்து இறையாண்மையை கைப்பற்றினர். வெள்ளையர் ஆட்சி காலத்தில் இந்தியா ஒரு நாடு என்பது போன்ற மாயை ஏற்பட்டது. தமிழக தலைவர்கள் இந்திய அரசியல்வாதிகளிடம் நம்பிக்கை வைத்தனர். வெள்ளையர்கள் நாட்டை விட்டு வெளியேறும்போது அந்த இறையாண்மையை இந்திய அரசியல்வாதிகளிடம் ஒப்படைத்துச் சென்றனர். அந்த இறையாண்மையை வைத்திருக்கும் இந்திய அரசுதான் ஈழத்தில் தமிழர்களை கொல்ல திட்டம் வகுத்து ஆயுதம் கொடுத்து ஆளும் கொடுத்து உதவியது.

ஒரு ஒருங்கிணைந்த நாட்டிற்குள் இறையாண்மை பற்றி கேள்வி எழுப்பக் கூடாது என்பது சரியே. ஆனால் அந்த இறையாண்மையே ஒரு மக்களின் உரிமையை பறிப்பதாக, மக்களை அழிப்பதாக இருந்தால் என்ன செய்யலாம்? ஜனநாயக நாடுகளில் இறையாண்மை அதிகாரத்தை யாருக்கு யார் கொடுப்பது?
ஜனநாயக நாடுகளில் உச்ச அதிகாரம் படைத்தவர்கள் மக்களே. எனவே ஒரு நாட்டின் மக்களே அந்த நாட்டின் அரசாங்கத்திற்கு இறையாண்மையை கொடுப்பவர்கள். ஒரு நாட்டை, அரசாங்கத்தை, அந்நாட்டின் ஒரு பகுதி மக்கள் விரும்பவில்லை என்றால் அவர்கள் தாங்கள் கொடுத்துள்ள இறையாண்மை திரும்ப பெறுவது பற்றி பரிசீலனை செய்யலாம். அந்த நாடு, அந்த அரசாங்கம் தொடர்ந்து அப்பகுதி மக்களின் நலனிற்கு எதிராக செயல்பட்டால் அந்த இறையாண்மையை திருப்பி பெறுவது பற்றி பரிசீலிப்பதில் அல்லது திரும்ப பெறுவதில் எந்த தவறும் இல்லை. கூட்டாட்சி நாடுகள் கூட்டாட்சியில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் விருப்பப்பட்டால் தனியே பிரிந்து செல்லும் அதிகாரத்தை தரவேண்டும். அதுவே உண்மையான கூட்டாட்சி தத்துவம்.

எனவே தமிழர்கள் தங்கள் இறையாண்மை திருப்பி பெறுவது பற்றியும் ஒரு ஒருமித்த கருத்தை பெற வேண்டும். தாங்கள் தொடர்ந்து இந்திய அரசாங்கத்தின் கீழாக இருந்து வரவேண்டுமா? அல்லது பாகிஸ்தான் போல தங்கள் இறையாண்மையை பிரித்து வாங்கி தனிநாட்டை உருவாக்க வேண்டுமா? என்பது பற்றிய கருத்தொற்றுமையை ஏற்படுத்த வேண்டும்.   

தனி நாடு  . முடிவுரை

மலையகத் தமிழர்களை திருப்பி பெற ஒப்புக்கொண்டு அவர்களை கைவிட்டது, கச்சத் தீவை தாரை வார்த்தது, காவேரி நீர் பங்கீட்டில் அநீதி, முல்லைப் பெரியாறு நீர் பங்கீட்டில் அநீதி, கூடங்குளத்தில் பலவந்தமாக அணு உலையை திணிப்பது போன்ற மத்திய அரசின் தொடர்ச்சியான துரோகத்தை அடுத்து தமிழகத்தில் ஒருசாரர் தனி நாடு பற்றி பேச ஆரம்பித்துள்ளனர். இதில் வைகோ, தா. பாண்டியன், பெ. மணியரசன், தமிழர் களம் அரிமாவளவன் போன்றோர் அடங்குவர். ஆனால் பெரும்பான்மை மக்கள் இன்னமும் இந்திய தேசியத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் தமிழக அரசியல் தலைவர்களின் நடத்தையை கொண்டே தனிநாட்டு கோரிக்கையை மதிப்பிடுகின்றனர். அதேவேளையில் அவர்கள் இந்திய தேசத்தை வழிநடத்தும் தலைவர்கள் தமிழகத் தலைவர்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதை மறந்து விடுகின்றனர். இந்த விஷயத்தில் அவர்கள் தங்கள் அனுபவத்தை அடிப்படையாக கொண்டு கணிக்கின்றனர். எனவே தொடர்ந்து இந்திய தேசத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

ஆனால் அவர்கள், எந்த இந்திய தலைவரால் தமிழர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க முடியும்? என்ற கேள்வியை சௌகரியமாக மறந்து விடுகின்றனர். அப்படியானால் தற்போதுள்ள தமிழக தலைவர்கள் போன்ற தலைவர்களை ஆட்சிக்கு வரவிடாமல் செய்ய என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்பது போன்றவற்றை முன் கூட்டியே தீர்மானிக்க வேண்டும். அனைவரும் ஏற்கும் வகையில் ஒரு மாதிரி அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும் (http://perumalthevan.blogspot.in/2011/12/blog-post_18.html). அதன் அடிப்படையில் முன்னோக்கிச் செல்ல வேண்டும். காஷ்மீரில் ஹூரியத் மாநாட்டுக் கட்சிகள் தனி நாடு பெறும் தீர்மானத்தின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. ஆனால் இந்திய அரசு அந்த மாநிலத்திற்கு கூடுதலான நிதியுதவியை வழங்கி அவர்களை தாஜா செய்ய முயன்று வருகிறது.   

தமிழர்களுக்கு எதிராக இந்திய தேசத்தின் துரோகம் தொடருமா? அப்படி தொடர்ந்தால் அதை எவ்வாறு தடுப்பது? அல்லது தனிநாடுதான் தீர்வா? என்பது பற்றி தமிழர்கள் தங்களுக்குள் ஒரு கருத்தொற்றுமையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்திய தேசத்துடன் தொடர்ந்து இருக்க, இந்திய தேசத் தலைவர்கள் என்ன செய்ய வேண்டும்? அவற்றை எவ்வாறு செய்ய வைப்பது? அல்லது தேசத்தை விட்டு பிரிவதாக இருந்தால் அதற்கான திட்டம் என்ன? அதை எவ்வாறு அடைவது? என்பது போன்ற கருத்துக்களை தமிழர்கள் தங்களுக்குள் தெளிவாக கலந்துபேசி கருத்தொற்றுமையை அடைய வேண்டும்.
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

Monday, May 28, 2012


அடுத்தவரின் குறைகளை சொல்லிக் கொண்டிருப்பதை விட நாம் நமது திறன், சேவை, சாதனைகளை செய்து காட்டினால் பலரும் நம்மை வரவேற்பர். குறைசொல்பவர்களை பெரும்பாலும் யாரும் விரும்புவதில்லை. 

Tuesday, May 15, 2012

தமிழ் குடியரசு நாடு!

தனித்தமிழ்நாடு என்ற ஒன்று தற்சமயம் அமைவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை. அந்தக் கொள்கையை, அந்த திட்டத்தை மக்களிடம் எடுத்துச் சென்று, அதை புரியவைத்து, அதற்கான அத்தியாவசிய தேவையை உணர்த்தி பொதுமக்கள் ஆதரவுடன் அதற்கான போராட்டத்தில் இறங்குவதற்கான தலைமையோ, இயக்கமோ தற்சமயம் தமிழகத்தில் ஒன்றுகூட கிடையாது. ஒரு விஷயத்தை நாம் உறுதியாக நம்பலாம். ஓட்டரசியலில் இருக்கும் கட்சிகள் தமிழ்தேசியக்கொள்கையை சூடுபறக்கும் உரைகளுக்காக பயன்படுத்திக் கொள்வார்களேயொழிய அதற்கான செயல்களில் இறங்கமாட்டார்கள். ஏனெனில் இறங்கினால் எக்கச்சக்கமாக இழக்கத் தயாராக இருக்கவேண்டும். தமிழ்நாட்டிலேயே ஒரு வரலாற்று உதாரணம் உண்டு. அதன் பெயர் திமுக! திமுக என்ற கட்சி ஒரே இரவில் அம்பாரி ஏறவில்லை. காங்கிரஸ் என்னும், இந்தியநாட்டின் சுதந்திரத்துக்கு ஒட்டுமொத்த காப்புரிமை வாங்கிவைத்திருந்த மக்கள் செல்வாக்கில் மூழ்கித்திளைத்த மிகப்பெரும் கட்சியை விழவைக்க திமுகவும், திமுக கொள்கையை ஏற்றுக்கொண்ட பொதுமக்களும் இழந்தது ஏராளம், இழந்த உயிர்களின் எண்ணிக்கை ஏராளம்! அப்படி உயிரைக்கொடுத்து போராடி ஓங்கி அடித்த அடிதான் இன்றுவரை காங்கிரஸை தமிழகத்தில் எழமுடியாமல் வைத்திருக்கிறது. ஒரு கட்சியை ஒழிக்கவே இப்படியென்றால் இந்தியா என்ற மிகப்பெரும் நாட்டில் இருந்து ஒரு பகுதியை பிரிக்க என்னவெல்லாம் செய்யவேண்டியதிருக்கும்? எப்படியெல்லாம் போராடவேண்டியிருக்கும்? ஆனால் இன்று தமிழ்தேசியம், தமிழ்தேசியம் என கூக்குரல் இட்டு நரம்பு புடைக்க கத்துபவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? ஒரு புல்லைக் கூட பிடிங்கிப் போடவில்லை!

மேலும் தற்சமயம் தமிழ்தேசியக் கொள்கையைக் கையில் எடுத்திருக்கும் பெரும்பான்மைக் கூட்டத்தினர் ஆதிக்கசாதிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவமும், உருது பேசுகிறவனை விரட்டுவோம், தெலுகு பேசும் அருந்ததியினரை விரட்டுவோம் என்ற அவர்களின் பகிரங்கமான நாஜித்தனமான அறிவிப்புகளும் தமிழ்தேசியம் என்ற கொள்கையின் மீதே ஒரு கறையை படிவித்திருக்கிறது! இவர்களின் இத்தகைய செயல்கள் இந்திய தேசியமே பரவாயில்லை என்ற ஒரு மனநிலையைதான் தமிழ்ப்பொதுமக்களிடம் உண்டாக்குமேயொழிய தமிழ்தேசிய போராட்டத்துக்கு உதவக்கூடிய எந்த ஒரு ஆக்கபூர்வமான மனநிலையையும் உருவாக்காது, உருவாக்கவில்லை!

ஆனால் இந்த குழப்பங்களையெல்லாம் கவனித்துக்கொண்டிருக்கும் மக்கள், ஒன்றை நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். தனித்தமிழ்நாடு கோரிக்கை என்பது பிரிவினைக்கொள்கை அல்ல! இருப்பதை முன்பு இருந்தது போலவே மாற்றி அமைப்பது. இந்தியா என்பது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக 'ஒரே' நாடு கிடையாது. வெள்ளைக்காரர்கள் தங்கள் தனித்தனி காலனிகளை (colony) நிர்வாக வசதிக்காக ஒரே பெரிய காலனியாக ஆக்கினார்கள், அந்த பெரிய காலனிதான் இந்தியா! உலகில் ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டின் தேசிய இனம் மட்டுமே பிரதான குடிமக்களாக வாழும்போது, தங்களைத் தாங்களே ஆளும் போது, இந்தியாவில் மட்டும் ஏராளமான தேசிய இனங்கள் அடித்துப்பிடித்துக்கொண்டு கூட்டுக்குடும்பமாக வசிக்கும், வசிக்கமுயற்சிக்கும் ரகசியம் இதுதான்! தமிழ்நாடு என்ற ஆங்கிலேயனின் காலனி, இந்தியா என்ற கட்டியமைக்கப்பட்ட ஒரு நாட்டின் (மாநிலமாக) காலனியாக இப்போது இருக்கிறது. அதனால் 'பிரிவினை' என்பது தமிழ்தேசியத்தை வர்ணிக்கும் சரியான வார்த்தை அல்ல. உரிமை என்பதே சரி!

ஒரு அமெரிக்கனால் ஈராக்கியனுக்கு பிரச்சினை வரும், ஒரு ஆங்கிலேயனால் அரேபியனுக்கு பிரச்சினை வரும், ஆனால் இந்தியாவில் மட்டும் இந்தியனால் இந்தியனுக்கே பிரச்சினை வருகிறதே, இதைப் பற்றி சிந்தித்திருக்கிறோமோ! என்னதான் "வேற்றுமையில் ஒற்றுமை" என சிறுவயதில் இருந்தே மூளைச்சலவை செய்யப்பட்டாலும் வளர வளர அது மாயை என்பதை புரிந்துகொள்கிறோமா இல்லையா? க்ரிக்கெட் மேட்சைத்தவிர வேறு எதிலாவது இந்தியர்களாக ஒருமித்த கருத்துடையவர்களாக இருக்கிறோமா? அட அதையெல்லாம் விடுங்கள். நான் இந்தியன் என மார்தட்டும் தமிழர்கள் எத்தனை பேருக்கு இந்திய தேசியகீதத்தின் அர்த்தம் தெரியும்?

ஒரு நாய்க்குக்கூட பூனை தன்மேல் ஆதிக்கம் செலுத்துவது பிடிக்காது எனும்போது மனித இனம் எப்படி வேறு தேசிய இனம் தன்மேல் ஆதிக்கம் செலுத்துவதை ஏற்றுக்கொள்ளும்? இந்தியாவெங்கும் சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே அமைதி இல்லாமல் ஒவ்வொரு தேசிய இனமும் உள்நாட்டுப் பிரச்சினைகளைக் கிளப்பிக்கொண்டும், அடக்குமுறைகளுக்கு எதிரான உரிமைப்போராட்டத்தில் ஈடுபட்டும், இந்திய ராணுவத்தை எதிர்ப்பதும் நடந்து வருவது இதனால் தான்! இந்திய ராணுவத்தை இந்தியர்களே எதிர்க்கிறார்கள் என்றால் நாம் ஒன்றுக்கொன்று ஒவ்வாத பொருட்களை வலுக்கட்டாயமாக ஒன்றாக வைத்திருக்கிறோம் என பொருள். இந்திய தேசிய கட்டமைப்பின் வேரில் இருக்கும் இந்த ஒவ்வாமைப் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் உள்நாட்டுப் பிரச்சினைகளை சரிசெய்ய முனைவது வேரை விட்டுவிட்டு இலைக்கு தண்ணீர் ஊற்றுவது போலாகும்.

தமிழர்களில் பலருக்கே தனித்தமிழ்நாடு கேலியாகவும், சாத்தியமில்லாததாகவும் தான் தற்சமயம் தெரிகிறது. அவர்களுடன் நான் முற்றிலும் உடன்படுகிறேன். தற்கால சூழ்நிலை அப்படி! அவர்களின் சந்தேகமும், கேலியும் நியாயம் தான்! அவர்களுக்காகவே இந்தப் பதிவு. தமிழ்நாடு மட்டுமல்ல கிழக்கிந்தியா, காஷ்மீர் என இந்தியா பல இடங்களில் வருங்காலத்தில் உடையத்தான் போகிறது. எத்தனை நாள் தான் ஒரு போலிக்கட்டமைப்பு தாங்கும்? எத்தனைநாள்தான் மணல்வீட்டை கான்க்ரீட் வீடு என ஏமாற்ற முடியும்? ஆனால் நம்மை ஏமாற்றிக்கொண்டிருப்பவர்கள் இந்த ஏமாற்றுவேலையால் பலன் அடைபவர்கள் என்பதையும் நாம் உணரவேண்டும். ஒரு அட்டைப்பெட்டிக்குள் ஒன்றுக்கொன்று சேராத பொருட்களை என்னதான் இறுக்கமாக அடைத்து, இரும்புக்கயிற்றை வைத்து கட்டினாலும் காலப்போக்கில் அட்டைப்பெட்டி பிரச்சினை தாங்கமால் கிழியத்தான் செய்யும். இயற்கையும், விஞ்ஞானமும் அதைத்தான் சொல்கிறது.

ஆனால் அதேநேரம் ஒரு விஷயத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெரியார் இந்தியவிடுதலையை எதிர்த்ததற்கான காரணம், அதிகாரம் வெள்ளைக்காரனிடத்தில் இருந்து இங்கு உயர்பதவிகளில் இருக்கும் உயர்சாதிக்காரர்களிடம் மாறத்தான் போகிறதேயொழிய அது உண்மையான விடுதலையாக இருக்க முடியாது என்ற புரிதல் அவர்க்கு இருந்ததால் தான். அவர் நினைத்தது போலவேதான் நடந்தது என்பதை இன்றும் நாம் கண்கூடாகப்பார்க்கிறோம். வரலாறு இப்படி இருக்கும்போது சாதி என்ற ஒன்றை முற்றிலும், வேரோடு அழிக்காமல் ஒரு உண்மையான விடுதலையை நாம் அடைய முடியாது! அப்படி அடைந்தால் அது மீண்டும் அதிகாரமாற்றமாகவே தான் இருக்குமேயொழிய அதன் பேர் விடுதலை அல்ல! அதனால் தான் தனித்தமிழ்நாட்டின் மேல் எதிமறையான தாக்கத்தை உண்டுசெய்யும் தற்கால சாதிய-போலித்தமிழ்தேசியவாதிகளை நாம் மிகக்கடுமையாக எதிர்க்கவேண்டியுள்ளது.
தனித்தமிழ்நாடுக்கான போராட்டம் வெளிப்படையாக, கொள்கைரீதியாக உருவெடுத்து இன்னும் தெருவுக்கு வரவில்லை. ஆனால் அதற்கான விதை இந்திய அரசாங்கத்தாலேயே ஒவ்வொரு அலுவலகத்திலும், ஒவ்வொரு காவிரியிலும், ஒவ்வொரு ராணுவ-வன்புணர்விலும், ராணுவத்தால் கொல்லப்படும் ஒவ்வொரு அப்பாவியின் உடல் மீதும், அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் தேசிய இனங்கள், ஆதிவாசிகள், பூர்வகுடிகளின் அன்றாட வாழ்க்கையின் மீதும் தூவப்பட்டுக் கொண்டிருக்கிறது. எல்லா தேசிய இனங்களும் தங்கள் உரிமைக்கான போராட்டத்தை அதிதீவிரமாக முன்னெடுக்கும் போது தமிழ்தேசிய இனத்திற்கான போராட்டம் தவிர்க்க முடியாததாகிவிடும்!

கொஞ்சம் பொறுமையாய் இப்போதைக்கு இந்தியனாகவே இருங்கள். இப்போதோ, நெருங்கிவரும் வருங்காலத்திலோ இல்லையென்றாலும் கூட என்றாவது ஒருநாள் நீங்களும் நானும் புதைக்கப்பட்டிருக்கும் இடம் இந்தியமண்ணாக இல்லாமல் தமிழ் குடியரசு நாட்டின் மண்ணாக இருக்கலாம், இருக்கும்!

courtesy:
http://donashok.blogspot.com/2012/05/blog-post_15.html

Thursday, May 10, 2012

இந்தியாவும் ஈழமும்!


கே.எஸ்.இராதாகிருஷ்ணன்,

இந்தியா,தமிழீழம் வரைபடம்
ஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன. அதை வரலாற்று ரீதியாக அணுகிப் பார்த்தால் உண்மைகள் புலப்படும். இலங்கையில் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக அவர்களது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு இனிமேல் சகவாழ்வு முடியாது தனிவாழ்வுதான் என்ற நிலையில்தான் ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையை அங்குள்ள தமிழர்கள் எழுப்பினர்.
லெமோரியா கண்டம் அழிந்த பின் தமிழர்களின் பூர்வீக மண்ணாக இலங்கை இருந்தது என்றும் சிங்களர்கள்தான் குடியேறியவர்கள் என்று கேம்பிரிட்ஜ் ஆராய்ச்சியாளர் பால்பெய்ரிங் குறிப்பிடுகிறார். ஐரோப்பியர் தங்கள் காலனிகளாக நாடுகளைப் பிடிக்கப் பல்வேறு திசையை நோக்கி ஸ்பெயினிலிருந்தும் போர்ச்சுகல்லில் இருந்தும் புறப்பட்டது வரலாற்றுச் செய்தி. வாஸ்கோடகாமா 1495-இல் இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ள கள்ளிக்கோட்டையில் இறங்கி அதன்பின் 1519-இல் இலங்கைக்குப் போனார். அங்கு அப்போது தமிழ் மன்னன் சங்கிலியன் ஆட்சி நடந்தது. வாஸ்கோடகாமா இறங்கியவுடன் அங்கு வியாபார ரீதியாகப் பணிகள் செய்ய உரிய அனுமதியும் அந்தத் தமிழ் மன்னன்தான் வழங்கினார் என்பது சரித்திர உண்மை.
இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவார்கள் என்ற கதைபோலப் போர்ச்சுகீசியர்கள் சிங்களர்களுடன் இணைந்து தமிழருடைய ஆட்சியை வீழ்த்தினார்கள். இந்தக் கலகம் ஏற்பட்டபோதுதான் தஞ்சையை ஆண்ட ரகுநாத மன்னன் சங்கிலி மன்னனுக்குத் துணையாக ஒரு படையை அனுப்பிப் போர்ச்சுகீசியர்கள் மற்றும் சிங்களருடைய தாக்குதலை முறியடிக்க உதவினான்.
யாழ்ப்பாணத்தின் ஆண்ட சங்கிலி மன்னன்
அவரது மகன் இரண்டாம் சங்கிலி மன்னனை அவருடைய உடன்பிறந்த சகோதரர் மூலம் சதி செய்து கைது செய்து தமிழ் மன்னனுடைய ஆளுமையை மழுங்கடித்தனர். அந்த மன்னனைக் கொழும்புக்கு அழைத்துச் சென்று தங்களது ஆட்சிக்கு உள்பட்டிருந்த கோவாவுக்கு இழுத்துவந்து தூக்கிலிட்டார்கள் போர்ச்சுகீசியர்கள்.
ஐம்பது ஆண்டுகாலம் இலங்கையில் கோலோச்சிய போர்ச்சுகீசியர்களைத் தொடர்ந்து டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என்று இலங்கையில் நுழைந்தனர். 1833-இல் தமிழர் பகுதியும் சிங்களர் பகுதியும் சேர்த்து ஆங்கிலேயருடைய ஆளுமையான நாடாக மாறியது.
சோல்பரி பிரபு மற்றும் டட்லி சேனாநாயக்க
1933-இல் இங்கிலாந்திலிருந்து வந்த சோல்பரி பிரபு ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி இலங்கைத் தீவு என்று அறிவிக்கிறார். அப்போது தமிழர்கள் தங்களுக்கு நியாயமும் சம உரிமையும் கிடைக்கும் என்று நம்பினர். ஆனால், அதற்கு மாறாக 1948 டிசம்பர் 12-ஆம் தேதி குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்தது மட்டுமல்லாமல் இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்கள் பத்து லட்சம் பேரின் குடியுரிமை பறிக்கப்பட்டது. தோட்டத் தொழிலாளர்கள் என்பவர்கள் இந்தியாவிலிருந்து ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் தேயிலைத் தோட்டங்களில் வேலைக்கு அழைத்துச் சென்றவர்கள் ஆவார்கள். அவர்கள் அந்த மண்ணைத் தமிழகத்திலிருந்துபோய் வளப்படுத்தி தேயிலைத் தோட்டங்கள், ரப்பர் தோட்டங்களைக் கடும் உழைப்பால் உருவாக்கியதற்கு அளிக்கப்பட்ட வெகுமதிதான் பத்து லட்சம் தமிழர்களின் குடியுரிமை ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டது.
1956-இல் சிங்கள மொழிதான் ஆட்சி மொழி, புத்தம் தான் ஆட்சி மதம் என்ற நிலை ஏற்பட்டது. இருப்பினும், தந்தை செல்வா விட்டுக்கொடுத்து 1957-இல் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு பண்டாரநாயகாவுடன் ஓர் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டார்.
அதில் தமிழர்களுக்குக் குறைந்தபட்ச அதிகாரமும் உரிமைகளும் வழங்க வேண்டும் என்பதுதான் அதில் குறிப்பிடப்பட்டது. அதை புத்த பிட்சுகளும் எதிர்த்தனர். அந்த ஒப்பந்தமும் பரிசீலிக்காமல் குப்பைத்தொட்டிக்குப் போனது.
சத்யாகிரக போராட்டத்தில் தந்தை செல்வா
இருப்பினும் செல்வா சமாதானம், காந்தியம் என்ற நிலையில் திரும்பவும் 1965-ல் அன்றைய அதிபர் சேனநாயகாவுடன் ஓர் உடன்பாடுக்கு முன்வந்தார். அந்த உடன்பாட்டு ஒப்பந்தத்தில் மாகாணக் கவுன்சில்கள் ஏற்படுத்தி அதிகாரங்களை ஒதுக்கி தமிழர்கள் உரிமை பாதுகாக்கப்படும் என்ற நிலையில் செல்வாவும் சேனநாயகாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதையும் புத்த பிட்சுகள் எதிர்த்தனர். அதனால் அந்த ஒப்பந்தமும் கிடப்பில் போடப்பட்டு தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இதையொட்டி தமிழர்கள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இதனால் கடுமையாகக் காவல்துறையினரால் தாக்கப்பட்டனர். நாடாளுமன்றத்திலும் உரிமைக்குரல் எழுப்பினர்.
இந்தக் கொடுமைக்கு இடையில் தமிழர் பகுதியில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் சிங்களர்கள் குடியேற்றப்பட்டனர். வடபகுதியில் சிங்களர்கள் இல்லாத இடத்தில் 1948-லிருந்து இன்று வரை 33 சதவிகிதம் சிங்களவர்கள் தமிழர்கள் பகுதியில் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். பாலஸ்தீனத்தில் மேற்குக் கரையில் யூதர்கள் குடியேறியதைக் கண்டிப்பவர்கள் ஈழத்தில் சிங்களவர்கள் குடியேறியதைக் கண்டிக்காதது மட்டுமல்லாமல் அதை இந்தியா உள்ளிட்ட நாடுகளே பார்த்தும் பார்க்காமல் இருப்பதுதான் வேதனை.
தமிழ் மாணவர்கள் 50 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். ஆனால், சிங்கள மாணவர்கள் வெறும் 29 மதிப்பெண்கள் எடுத்தால் போதும். வேலைவாய்ப்பிலும், ராணுவத்திலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர். தேவாலயங்களும், கோயில்களும் தாக்கப்பட்டன. நல்லூர் கோயில் அருகே பல சமயங்களில் தாக்குதல் நடந்தன. அதற்குப் பிறகு செஞ்சோலைச் சம்பவம். இப்படி எல்லையற்ற அத்துமீறல்களும் கொடூரங்களும் முள்ளிவாய்க்கால்வரை நடந்ததை யாரும் மறுக்க முடியாது.
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் முதல் பகுதி
இப்படியெல்லாம் நடக்கும் என்றுதான் தந்தை செல்வா 1976, மே 24-ஆம் தேதி வட்டுக்கோட்டையில் கூடிய தமிழர் விடுதலை முன்னணியின் கூட்டத்தில், இனிமேல் தனி வாழ்வுதான். ஈழம்தான் என்று முடிவெடுத்து அதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தார். அந்தத் தீர்மானம் அங்குள்ள தமிழர்களுடைய வரலாற்று ஆவணமாக இன்னும் திகழ்கின்றது. இதை வைத்துக்கொண்டு 1975-இல் நடந்த இடைத்தேர்தல்களிலும் ஈழம்தான் முக்கியப் பிரச்னையாகக் கொண்டு வாக்காளர்களிடம் சென்றபோது 78.4 சதவிகிதம் பேர் செல்வாவின் ஈழத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
11 பேர் நாடாளுமன்றத்துக்குச் சென்றபோது மதச்சார்பற்ற தனி ஈழம் தங்களுக்கு வேண்டும் என்று தன்னுடைய உரிமைக் குரலைத் தெளிவாகப் பதிவு செய்துவிட்டு வெளியே வந்து செல்வா மக்களைச் சந்தித்தார். யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் சிங்கள ராணுவம் உள்ளே புகுந்து தாக்கி ஒன்பது தமிழர்கள் சுட்டு சாகடிக்கப்பட்டனர். இதையெல்லாம் பார்த்துப் பொறுக்க முடியாமல்தான் தமிழ் இளைஞர்கள் 1972-இல் புதிய புலிகள் என்ற இயக்கத்தை பிரபாகரன் தலைமையில் தொடங்கினர். 10 இலக்கத்துக்குக் குறைவான உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த இயக்கம் ஆல விருட்சமாக வளர்ந்து உலகத்தின் கவனத்தை ஈர்த்தது.
1983-இல் இனப்படுகொலை நடக்கும்போது அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அதைப் பொறுக்க முடியாமல் அது இனப்படுகொலைதான் என்று நாடாளுமன்றத்திலேயே சொன்னார்.
மனித உரிமைகளைப் பேசிய உலக சமுதாயம் இந்தக் கொடுமையினைத் தடுக்க வரவில்லை. கிழக்கு வங்கத்தில் பிரச்னை வரும்போது தலையிட்டோம். பாலஸ்தீனிலும், கிழக்கு தைமூரிலும் குரல் கொடுத்தோம். ஐரோப்பாவில் பல நாடுகள் இனரீதியாகப் பிரிந்ததை ஆதரித்தோம். யூகோஸ்லோவோகியா இனரீதியாகப் பிரிந்தது. சூடான் பிரிந்தது. இம்மாதிரி பிரிந்த நாடுகளுக்குக் காரணங்கள் இருந்ததைப்போல ஈழம் பிரிந்து செல்லவும் காரணங்கள் உண்டு. அப்படியிருந்தும் இன்னும் அதற்கான வழிவகை தெரியவில்லை.
ஈழம் அமைந்தால் இந்தியாவுக்குப் பாதுகாப்பாக நட்பு நாடாக அமையும். அண்ணல் மகாத்மா காந்தி குறிப்பிட்டதுபோல இந்தியாவின் மகளாக ஈழம் இருக்கும். அங்குள்ள தமிழர்கள் வீட்டில் தமிழ் பக்தி இலக்கியங்களான தேவாரம், திருவாசகம், தமிழில் விவிலியம் இருக்கும். காந்தி, நேதாஜி, போஸ் போன்றவர்களுடைய படங்களையும் காணலாம். அந்த அளவில் இந்தியத் தலைவர்களை அங்குள்ள தமிழர்கள் அன்பு காட்டி நேசித்தார்கள்.
இந்தியா, சீனா போர் நடக்கும்போது இந்தியாவுக்கு ஆதரவாகத் தமிழர்கள் வீர சிங்க அரங்கத்தில் கூட்டம் நடத்தியதும்; தந்தை செல்வா, போர் நிதியாக தமிழர் பகுதியிலிருந்து சேகரித்து இந்தியாவுக்கு அனுப்பியதும் எல்லாம் வரலாற்றுச் செய்திகள் மட்டுமல்ல; நமது நாட்டை ஈழத் தமிழர்கள் எவ்வளவு பாசத்துடன் பார்த்தார்கள் என்பதை உணர்த்துபவை.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி
வங்க தேசப் பிரச்னையில் இந்தியாவையும் இந்திரா காந்தியையும் ஆதரித்து இலங்கை நாடாளுமன்றத்தில் மனப்பூர்வமாகக் குரல் கொடுத்தார்கள் தமிழ் உறுப்பினர்கள். ஆனால், சிங்கள அதிகார வர்க்கம் இந்தியா, சீனா போரிலும், இந்தியா பாகிஸ்தான் போரிலும் இந்தியாவுக்கு எதிராக நிலைப்பாடு எடுத்தது. வங்க தேசம் பிரியும்போது பாகிஸ்தான் விமானங்கள் இந்தியா வழியாகச் செல்ல முடியாமல் இருந்தபோது இலங்கை வழியாகச் செல்ல அனுமதியும் தந்தது சிங்கள அரசு. எவ்வளவோ உதவிகள் இலங்கைக்கு நாம் செய்தாலும் நன்றி கெட்டத்தனத்துடன்தான் சிங்கள அரசியல் தலைவர்களும், அதிகாரவர்க்கத்தினரும் நடந்து கொண்டார்கள்.
இதுமட்டுமல்லாமல் இந்தியாவின் பாதுகாப்பு குறித்தும் இங்கே நாம் பார்க்க வேண்டும். தெற்கே இந்தியப் பெருங்கடலில் உள்ள டீக்கோகர்சியாவில் 1974-75-இல் அமெரிக்கா ராணுவத் தளம் அமைக்க முயன்றபோது இந்திரா காந்தி கண்டித்து உலக நாடுகளுடைய ஆதரவைக் கொண்டு அது தடுக்கப்பட்டது. அமெரிக்கா அதன் பிறகும் விடாமல் இலங்கையில் உள்ள தமிழர் பகுதியில் உள்ள திரிகோணமலை துறைமுகத்தில் வாய்ஸ் ஆப் அமெரிக்காவுடைய ராடர்களை அமைக்கவும், எண்ணெய் கிடங்குகளை அமைக்கவும் ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் நடத்தியபோது இந்தியாவின் கடுமையான எதிர்ப்பின் விளைவாக அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.
இன்றைக்கு இந்தியாவைச் சுற்றியுள்ள, பாகிஸ்தான், சீனா, வங்கதேசம், மியான்மர் ஆகியவற்றுடன் நமக்கு சுமுக உறவு இல்லை. இந்தச் சூழலில் நம்மைச் சுற்றியுள்ள நாடுகளோடு சீனா நட்பு பாராட்டி இந்தியாவுக்கு எதிராகத் திருப்பி வருகிறது. இப்போது சீனாவின் ஆதிக்கம் இந்தியப் பெருங்கடலிலும் அதிகரித்துக்கொண்டு வருகிறது. தனது கடற்படைத் தளங்களை அமைப்பது அணுஉலைகளை நிறுவ உதவி செய்வது, ராணுவத் தளவாடங்களைக் கொடுப்பது என்று இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளோடு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் தென்மேற்குப் பகுதியில் பத்தாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அடுத்த 15 ஆண்டுகளில் பாலிமெட்டாலிக் பணியில் ஈடுபடும் என்று சொல்கிறார்கள். செஷல்ஸ் தீவிலும் சீனா ராணுவத் தளம் அமைத்துள்ளது.
சீனா இராணுவத்துடன் கொலைவெறியன் கோத்பாய
சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப்பின் தன்னுடைய ஆளுமையைக் காக்க சீனா முயன்று வருகிறது. இந்தியாவோடு பகைமை உணர்வை மனதில் கொண்டு சீனா, இலங்கையைத் தனது நட்பு நாடாக வைத்துக்கொண்டு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆர்வம் காட்டி வருகிறது. ராணுவத் தளவாடங்கள், கெம்பன்கோட்டா துறைமுகத்தை அமைத்துக் கொடுத்து சீனாவின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது என்று அதன் முயற்சிகள் தொடர்கின்றன. கச்சத்தீவில்கூட சீனர்களின் நடமாட்டம் இருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. இலங்கையைச் சுற்றி சீனக் கப்பல் படைகள் வருவதும் போவதும் இந்தியாவின் எல்லைப்பக்கத்தில் அந்தக் கப்பல்கள் ஊடுருவதும் இந்தியாவின் நலனுக்கும் பாதுகாப்புக்கு உகந்ததே அல்ல. எனவே, இந்தியா ஒரு தெளிவான தொலைநோக்குப் பார்வையோடு ஈழப் பிரச்னையில் முடிவுகள் எடுப்பது காலத்தின் கட்டாயம்.
ஈழப் போராட்ட வரலாறு, அதில் உள்ள நியாயங்கள், இந்தியப் பெருங்கடலில் வல்லரசுகளின் ஆதிக்கம், இலங்கை இந்தியா மீது மறைமுகமாகக் கொண்டுள்ள பகைமை போக்கு இதையெல்லாம் பரிசீலிக்க வேண்டிய விஷயங்கள் ஆகும். நாம் எவ்வளவுதான் இலங்கைக்கு உதவினாலும் அவை யாவும் தமிழர்களுக்குச் சென்றடைவது இல்லை.
தமிழீழ விடுதலை ஒன்றே வழி
தமிழ்மொழியைப் பாதுகாத்து ஆட்சிமொழியாக அறிவிப்பது, வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல் நடத்துவது போன்ற உறுதிமொழிகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிப்பதாக இந்திய அரசிடம் வாக்குறுதி கொடுத்த ராஜபட்ச இப்போது பல்டி அடித்துவிட்டார். இந்தியா வழங்கிய 500 கோடி ரூபாய்க்கு மேலான தொகையைக் கொண்டு அங்குள்ள தமிழர்களுக்கு வீடுகள் கட்டித் தருவதாகச் சொன்ன வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
இந்தியா கொடுத்த அனைத்து உதவிகளையும் சிங்களப் பகுதியில் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பயணங்கள், அங்கு சென்ற நாடாளுமன்றக் குழுவின் பயணங்களும் ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கை தருவதாக அமையவில்லை.
இந்திய மண்ணில் உள்ள நாம் அனைவரும் இந்தப் பிரச்னையின் நீள அகலத்தை அறிந்து கடந்தகால வரலாற்றை மனதில்கொண்டு பார்த்தால் அங்குள்ள தமிழர்களுக்கு ஈழம்தான் தீர்வு என்ற விடை நமக்குக் கிடைக்கும்.
ஈழம் அமைந்தால் இந்தியாவுக்குப் பாதுகாப்பாக நட்பு நாடாக அமையும். அண்ணல் மகாத்மா காந்தி குறிப்பிட்டதுபோல
இந்தியாவின் மகளாக ஈழம் இருக்கும். அங்குள்ள தமிழர்கள் வீட்டில் தமிழ் பக்தி இலக்கியங்களான தேவாரம், திருவாசகம்,
தமிழில் விவிலியம் இருக்கும். காந்தி, நேதாஜி, போஸ் போன்றவர்களுடைய படங்களையும் காணலாம்.
நன்றி – தினமணி

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...