Thursday, May 3, 2012

தமிழர் அரசியலின் சாபம்


யமுனா ராஜேந்திரன்


  உணர்ச்சி அரசியலும், முற்றிலும் பிறரைச் சார்ந்திருத்தலும், மறுதலையில் விரக்தி அரசியல் பேசுதலும் என இந்த மூன்றும் தான் தமிழர் அரசியலின் மீது படிந்திருக்கிற சாபம். தேர்தல் முறைமைக்குள் முழுக்க மூழ்கிய அண்ணாதுரை அவர்கள் முன்னெடுத்த தமிழக திராவிட அரசியலும், திராவிட தேசிய அரசியலின் அரசியல் பிரச்சார வடிவத்தை அவ்வாறே ஏற்றுக் கொண்ட ஈழ தேசிய அரசியலும், உணர்ச்சி அரசியலின் ஒரே அச்சிலான வார்ப்புக்கள்தான்.   திராவிட அரசியலுக்கும் சரி, ஈழ தேசிய அரசியலுக்கும் சரி, பொருளாதாரப் பார்வை என்பது இல்லை என்பது கா.சிவத்தம்பி போன்ற கோட்பாட்டாளர்களின் விமர்சனம். இந்த இல்லைகளில் முக்கியமானது, திராவிட அரசியலுக்கும் சரி, ஈழ தேசிய அரசியலுக்கும் சரி சர்வதேசிய அரசியல் குறித்த நிதானமான பார்வைகள் என்றும் இருந்ததில்லை என்பதுதான்.  

ஏன் தமிழக-ஈழ தமிழ் தேசிய அரசியல் இவ்வாறு இருக்கிறது? தமக்கென ஏன் அது சர்வதேசிய அரசியல் பகுப்பாய்வுகளைக் கொண்டிருக்கவில்லை? இந்தப் பார்வையைப் பெறவெண்டுமானால் தம்மை முன்னிறுத்திய, தாம் செயல்பட நேர்ந்த சமூகத்தின் ஜனநாயகமயமாக்கலை முன்நிறுத்திய சொந்த அரசியல் செயல்பாடுகள் இதற்கு வேண்டும்.   இந்தியாவை முழுக்க நம்புவது, மறுதலையில் வெறுப்பது. அமெரிக்காவை முழுக்க நம்புவது, மறுதலையில் அமெரிக்காவினால் ஒன்றும் ஆகாது என நிராகரிப்பது எனும் நிலைபாடு ஏன் வருகிறதுதன்னுடைய சமூகத்திலுள்ள தோழமைச் சக்திகளை இனம் கண்டு, தமது சமூகத்தை ஜனநாயகமயப்படுத்த முடியாமல் இருப்பதற்கான இடர்களை இனம் கண்டு, ஓரு கூட்டுமனநிலை கொண்ட அரசியல் தலைமையை தமிழ் தேசிய அரசியல் ஒரு போதும் அவாவி நிற்கவில்லை. ஆயுதமேந்திய அரசியலின் போதும், இப்போது அதன் பின்னான காலத்திலும் தமிழ் தேசியத் தலைமையினது பண்பு என்பது குறுங்குழுத் தன்மையும், அதிகாரத்தை ஒரு சில நபர்களிடம் குவித்துக் கொள்கிற ஜனநாயகமற்ற தன்மையையும்தான் கொண்டிருந்து வருகிறது.

ஈழத் தமிழ் அரசியல் என்பது ஜனநாயக மயப்படுத்தப்படவில்லை. ஜனநாயக மயப்படுத்தல் என்பது ஒரு சமூகத்தின் மக்கள் திரளுடன் உயிரூக்கமுள்ள உறவைப் பேணுவதால் உருவாவது. வர்க்கம், சாதியம்,பெண்ணொடுக்குமுறை, இதுவன்றி இலங்கும் படிநிலை ஒடுக்குமுறைகளை இனம் கண்டு உரையாடலின் வழி அதனைக் களைவதனால் உருவாகுவதுதான் ஜனநாயக மயயப்படுத்துதல் எனும் செயல்போக்கு. ஆயுதமுனையில் தேர்ச்சி பெற்றவர்கள், சட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களின் மேதமைகளை வெகுமக்கள் கீழ்நிலையிலிருந்து ஏற்றுக் கொள்ள வேண்டும் எனும் மேல்தட்டு மனோநிலைதான் தமிழ் தேசிய அரசியலின் பண்பாக இருந்து வந்திருக்கிறது.   இவர்கள் அரசுகள், உள்நாட்டு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், வெளிநாட்டு அரசுத் தலைவர்கள் இவர்களோடு பேசுவதன் மூலம் மட்டுமே பிரச்சினைகளைத் தீர்க்கமுடியும் என மேடையில் நின்று கீழிருக்கும் மக்களுக்குச் சொல்கிறார்கள். ஆட்சியாளர்களுக்கு மக்கள் திரளினால் உருவாக்கப்படும் நெருக்கடிகளை இவர்கள் ஒருபோதும் கவனம் கொள்வதில்லை. அரசியல் என்பதனை அலுவலக நிர்வாகம் என்பது போல அறுதியில் இவர்கள் குறுக்கி விடுகிறார்கள்.  

இந்த மனநிலையில் இருந்துதான் இவர்கள் முழுமையாக இந்தியாவை, அமெரிக்காவை நம்புவது, அல்லது வெறுப்பது எனும் நிலைபாட்டுக்கு வருகிறார்கள்.  அரசியல் சமவேளையில் இரு முகம் கொண்டது. தமது சொந்த நிலத்தின் மக்கள் திரளுடனான உயிரூக்கமுள்ள தொடர்பிலும் பகிர்விலும் உருவாவது. அதே வேளை வெளிச்சக்திகள் குறித்த பகுப்பாய்வு உடனான நகர்வுகளிலும் உருவாகி வருவது. இன்றைய தமிழ்தேசிய அரசியலில் அரசியல் தீர்வும் மனித உரிமைகட்குப் பொறுப்புக் கூறுதல் தொடர்பான வலியுறுத்தலும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டது. இது இரண்டு தொடர்பாகவும் ஒரு அரசியல் தலைமை வெகுமக்களுடன் ஊடாட்டம் கொணடிருக்க வேண்டும். நடந்தது என்ன என்பதனைப் பொதுமக்களைச் சந்தித்து விளக்க வேண்டும். சாத்தியம் சாத்தியமின்மைகள் குறித்து அவர்களுக்கு விளக்கப்பட வேண்டும்.   யதார்த்த அரசியல் குறித்த அறிதல் என்பது வெகுமக்களிடம் உருவாக்கப்பட வேண்டும்.  

தலைமையை நம்புங்கள். தலைவர்களை நம்புங்கள். இதனது தொடர்ச்சியாக இப்போது இந்தியாவை நம்புங்கள் அல்லது அமெரிக்காவை நம்புங்கள் என அதீத நம்பிக்கைளை உருவாக்குதல் அரசியல் உணர்வை அல்ல, மாறாக பக்தி மார்க்கத்தையே உருவாக்கும். ஐம்பதாண்டு கால தமிழ் தேசிய அரசியல் என்பது ஈழத்தமிழர்களை அரசியல் பிரக்ஞை பெற்ற வெகுமக்கள் திரளாக உருவாக்கவில்லை. மாறாக, நம்பிக்கை வைக்கும், தவறினால் விரக்தியில் வீழும் தன்னிலைகளையே உருவாக்கி இருக்கிறது.  இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டும, ஊர்வலம் போகும் மனிதர்களுக்கும், இதனை விமர்சிக்கும் போக்கில் இந்தியாவினால், அமெரிக்காவினால் ஏதும் ஆகாது என இன்னொரு தீவிர எல்லைக்குச் செல்லும் மனிதருக்கும் குணரீதியில் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டுமே சர்வதேசீய அரசியல் குறித்த நிதானமற்ற பார்வையிலிருந்து வருவதாகும்.   அரசியலை வெறுமனே ஊடகம் மூலமே அறிந்து, ஊடகம் மூலமே வாழ்ந்து, ஊடகம் மூலமே கடந்து போகும் மனநிலையிலிருந்து வருவதாகும். வெகுமக்களுடன எந்தப் பகிர்தலும் ஊடாட்டமும் அற்ற தமிழ் அரசியலின் தன்மையே இத்தகைய மனநிலையின் ஊற்றுக் கண். 

சர்வதேசிய அரசியலை நாம் எப்படி மதிப்பிடலாம்? சாத்தியமேயில்லை என நினைத்த இந்தியாவின் அரசியல் மாற்றம் எவ்வாறு நேர்ந்தது? இது மொன்னை மாற்றம் என்பவர்களுடன் பேசுவதற்கு ஏதுமில்லை. இந்த மாற்றம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இந்திய அரசுடன் பேசியதால் நேர்ந்தது இல்லை. கருணாநிதி, ஜெயலலிதா பெரிய மனது வைத்ததால் நேர்ந்தது இல்லை. தமிழக மக்கள் பெருமளவில் இப்பிரச்சினையை வைத்து மன்மோகனுக்கு, கருணாநிதிக்கு. ஜெயலிதாவுக்கு அரசியல் அதிகாரம் இல்லாது செய்வார்கள் என்பதனை அவர்கள் அறிந்திருந்தார்கள். அவர்களது வாழ்வுக்கு அதிகாரம் இல்லாது அர்த்தம் இல்லை. இதுதான் நேர்ந்த மாற்றத்துக்கான அடிப்படை.   வெகுமக்கள் திரளுக்குள் இந்த மாற்றம் உருவாகுவதற்கு அங்கு இடைவிடாத இயக்கத்தினை பல்வேறு இயக்கத்தினர் மேற்கொண்டனர். மக்கள் திரளால் நேரந்த மாற்றமேயல்லாது இது வெள்ளைக் காலர் அரசியல்வாதிகளினால் உருவான மாற்றம் இல்லை.  இந்தியாவில் நேர்ந்த மாற்றம் இத்தகையது என்றால், அமெரிக்கா இந்த நிலைபாடு எடுக்க காரணம் என்ன? அமெரிக்கா தனது புவியியல், பொருளியல் நலன்களுக்காக உலகின் பொருண்மையான நெருக்கடிகளை உபயோகித்துத் தனது பொறியமைப்பை விரிக்கும்.  

இலங்கையைப் பொருத்து பொருண்மையான காரணங்கள் என்ன? இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கான, மனித உரிமை மீறல்களுக்கான துல்லியமான சாட்சியங்கள் இருக்கிறது. சேனல் நான்கு ஆவணப்படம் மிகப்பெரும் ஆதாரம். மேற்கத்திய நாடுகளில் வாழும் தமிழர்களின் திரட்சி, இந்தத் திரட்சி அந்தந்த நாட்டின் தேர்தலில் அரசியலில் முக்கியமான சக்தியாக இருக்கிறது. இதனை அதிகாரம் வேண்டும் அரசியல்வாதி புறந்தள்ள முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தனது நோக்கின் பொருட்டு அமெரிக்கா அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தும். இதுதான் அந்தப் பொருண்மைப் பண்புகள்.     இலங்கையின் மீது அமெரிக்கா முன்னின்று கொணர்ந்த தீரமானத்தை இஸ்ரேல், கியூபா மீதான தீர்மானம் போல ஒப்பிட முடியாது. அமெரிக்காவும் ஐரோப்பாவும் தமது அதிகாரத்தின் பொருட்டு செயல்படும் சக்திகள். அவை பொருளாதாரத் தடைகள் கொணரும். ராணுவத் தலையீடுகள் செய்யும். அமெரிக்காவை எதிர்க்கும் ரஸ்யா, சீனா போன்றவை வெறும் பொருளாதார இலாபம் மட்டுமே நோக்கம் கொண்டவை.

இவைகள் அமெரிக்க ஆதரவு நாடுகள் மீது, குறிப்பாக இஸ்ரேல் மீது பொருளாதாரத் தடைகளோ அல்லது ராணுவத் தலையீடுகளோ செய்யாது. வெறும் வாய்வீச்சு பொருளாதார நலன்களும்தான் இந்த நாடுகளது அரசியல்.   கியூபா மீது பொருளாதாரத் தடை விதித்தாலும், கியூபா மீது போர்க் குற்றங்களையோ, பாரிய மனித உரிமை மீறல்களையோ, இனவழிப்பு குற்றச்சாட்டுக்கள் போன்ற பொருண்மையான தலையீட்டுக்கான காரணங்களை ஒரு போதும் கியூபா மீது எவரும் சுமத்தமுடியாது. அமெரிக்காவைப் பொறுத்து இலங்கை மீதான அதனது அணுகுமுறை இஸ்ரேல், கியூபா போன்றது அல்ல. அது ஈராக், லிபியா, சிரியா மீதான அணுகுமுறை போன்றது. இந்த வித்தியாசத்தைத் தெளிவாகப்புரிந்து கொள்ள வேண்டும்.   மகிந்தா, கடாபி போலத் தன்னைக் கொல்லத் தமது மக்கள் விடமாட்டார்கள் என்பதும், இத்தீர்மானம் ஒரு பொறி என தாயன் ஜயதிலகா சொல்வதும் இந்த அர்த்தத்தில்தான்.  

இலங்கைக்கு ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும்தான் ஆயுதம் கொடுத்தது எனக் கியூபா சொல்வது வெறும் சொல் ஜாலம். எந்த இஸ்ரேல் மீது கியூபா கண்டனத் தீர்மானம் கொணர்ந்ததோ அந்த இஸ்ரேலிடமிருந்தும் மகிந்த அரசு ஆயுதம் வாங்கியதே, அதற்கு கியூபா என்ன சொல்கிறதுஉண்மையிலேயே கியூபாவுக்கு அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பும் இஸ்ரேல் மீதான விமர்சனமும், ஓடுக்குப்பட்ட மக்கள் மீதான ஓர்மையும் இருந்திருந்தால் எவனையும் பார்க்காது அது இலங்கையை அல்லவா விமர்சித்திருக்க வேண்டும்?   இலங்கை மீதானது மென்மையான தீர்மானம் எனச் சொல்லப்படுகிறது. இந்தத் தீர்மானம் ஏன் மென்மையாக ஆனது என்பதற்கான காரணம் இந்தத் தீர்மானத்தின் மீதான இந்தியாவின் தாக்கத்தில் உள்ளது.   மென்மையான தீர்மானம் என்பதால் இதனது எதிர்கால முக்கியத்துவம் குறைகிறதா? நிச்சயமாக இல்லை. கடாபியை முதலில் மென்மையான அணுகு முறையினால்தான மேற்குலகும் அமெரிக்காவும் அணைத்தது. சலுகைகளை அள்ளி வழங்கியது. திட்டங்கள் போட்டது. ஹிலாரி உள்பட ஜான் மேஜர் போன்ற தலைவர்கள் லிபியா போய் கடாபியை கட்டித் தழுவினார்கள். கடாபிக்கும் மேற்குக்குமான கசப்பு, தேனிலவில்தான் துவங்கியது. இலங்கையைப் பொறுத்தும் பயங்கரவாத எதிர்ப்புத் தேனிலவில்தான், அதனது அங்கமாகத்தான் இந்த மென்மையானதீர்மானம் வரை வந்திருக்கிறது. சதாம் போல, கடாபி போல, மகிந்த தேர்ந்தெடுக்கப்படாத எதேச்சாதிகாரி அல்ல. தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக இனவாதி. இதனை அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் இப்படித்தான் துவங்க முடியும்.

இது நெடிய செயல்போக்கு. தமிழ் தேசிய அரசியலின் வயது அறுபது ஆண்டுகள். இலங்கை இனவாத அரசியலின் வயதும் இதுதான். இன்று ஈழத்தமிழர்கள் கடக்க வேண்டிய தூரத்தை மின்னற்பொழுதில் கடக்க முடியாது. இந்தச் சர்வதேசிய அரசிலை நிதானமாகப் புரிந்து கொள்கிற எவரும் இந்தத் தீர்மானத்தைத் துச்சமாக மதிப்பிடுகிற உணர்ச்சிகரமான எல்லைகளை நாடிப் போகமாட்டார்கள்.   ஆம், ஈழத்தமிழர் அரசியல் கடக்க வேண்டிய தூரம் மின்னற்பொழுதில் இல்லை.

Courtesy to Desathinkural

No comments:

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...