Tuesday, July 31, 2012

தலையங்கம்: சிலையல்ல, தமிழனின் விலை!
ஐம்பொன் சிலைக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்கா வாழ் இந்தியர் சுபாஷ் சந்திர கபூருக்குச் சொந்தமான மன்ஹாட்டன் காலரியில் 20 பில்லியன் டாலர் மதிப்புடைய இந்தியக் கோயில் சிலைகள் அமெரிக்க அரசினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருட்டுப் பொருள்களை வைத்திருந்ததற்காகவும் அவர் மீது அமெரிக்க அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  பறிமுதல் செய்யப்பட்டுள்ள கோயில் சிலைகளில் மூன்று சோழர் காலத்தைச் சேர்ந்தவை. கோயில்களிலிருந்து நேரடியாகத் திருடி, கடத்தி வரப்பட்டவை.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சுத்தமல்லி, ஸ்ரீபுரந்தன் கிராமங்களைச் சேர்ந்த சிவ ஆலயங்களில் திருடப்பட்ட இந்தச் சிலைகளின் மதிப்பு தோராயமாக 8.5 பில்லியன் டாலர் என்று மதிப்பிடுகிறார்கள் அமெரிக்க அதிகாரிகள்.  இந்தச் சிலைகள் யாருக்குச் சொந்தமானவை என்பது வழக்கின் முடிவில் தெரியவந்தபிறகு, இந்தச் சிலைகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். அதாவது, சிலைக்கடத்தல் வழக்கில், ஜெர்மனியில் கைது செய்யப்பட்டு, தற்போது புழல் சிறையில் இருக்கும் சுபாஷ் சந்திர கபூர் மீதான புகார்கள் நிரூபிக்கப்படாமல் போகுமென்றால், இந்தச் சிலைகள் மீண்டும் அவரிடமே திருப்பி அளிக்கப்படும் என்று பொருள்கொள்ளலாம்.  

வழக்கு எவ்விதமாக முடிந்தாலும், இந்தச் சிலைகள் தமிழ்நாட்டுக்கு உரியவை, இவற்றைத் தமிழ்நாட்டுக்குத் திரும்ப அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசின் அறநிலையத்துறை இப்போதே கோருதல் அவசியம். இந்த மனுவை இந்திய அரசின் மூலமாக அமெரிக்க அரசுக்கு அனுப்பி, சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், அந்தச் சிலைகள் நமக்குக் கிடைக்காமலே போகக்கூடும். 

இத்தகைய வெண்கலம் மற்றும் ஐம்பொன் சிலைகள் தென்னிந்தியாவுக்கு மட்டுமே உரியவை. இந்தியாவில் வேறு மாநிலங்களில் இத்தகைய ஐம்பொன் சிலைகள் கிடையாது. இவை சோழர் காலத்தவை என்றால், நிச்சயமாகத் தமிழ்நாட்டுக்கு மட்டுமே உரியவை. அவற்றைத் தமிழகம் கோரிப் பெறும் நடவடிக்கைகளை, உரிமை கொண்டாடுவதை இப்போதே தொடங்க வேண்டும். 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கபூர் தற்போது சிறையில் இருந்தாலும், அவரது வழக்குரைஞரைப் பொருத்தவரையில், ""இந்தச் சிலைகள் கபூரின் காலரியில் இருந்ததை மட்டுமே நிரூபிக்க முடியும்; அவர்தான் கடத்தினார் என்பதை நிரூபிக்கச் சான்றுகள் இல்லை. நியூயார்க் நகரில் கபூரின் கணக்கிலிருந்து சென்னையைச் சேர்ந்த சஞ்சீவி அசோகன் என்பவரின் கணக்கில் ரூ.1.17 கோடி போடப்பட்டது சிலைக்கடத்தலுக்காகத்தான் என்று நிரூபிக்கப்படவில்லை''. இதன்படி பார்த்தால், கலைப்பொருள் சேகரிப்பாளர், விற்பனையாளர் என்ற முறையில் அவர் யாரிடமோ வாங்கினார் என்பதாக வழக்கு திசை மாறும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே இந்த வழக்கு எப்படி முடிந்தாலும், அந்தக் கோயில் சிலைகள் தமிழ்நாட்டுக்கு உரியவை, தமிழ்நாட்டுக்கு மட்டுமே சொந்தமானவை என்பதை வலியுறுத்தி, அவைகளைக் கோரிப்பெறும் நடவடிக்கை இப்போதே தொடங்கப்பட வேண்டும். 

கபூர் வழக்கில் மட்டுமல்லாது, உலகில் எந்த இடத்தில் இத்தகைய கோயில் ஐம்பொன் சிலைகள் இருந்தாலும் அவை தமிழகத்திலிருந்தே சென்றிருக்க முடியும். அவற்றின் மெய்த்தொன்மையை அறிவியல்பூர்வமாகச் சோதித்து, அவற்றை மீட்க வேண்டும். தேவைப்பட்டால், விலைகொடுத்து வாங்கி, எடுத்து வர வேண்டும். 

காந்தியின் மீது அவதூறு சொல்லக் காரணமான மகாத்மா காந்தி- காலன்பாக் கடிதங்கள் ஏலத்தில் மற்றவர்களுக்குக் கிடைக்காத வகையில், இந்திய அரசு 1.28 மில்லியன் டாலருக்கு பேரம் பேசி வாங்கியுள்ளது. தேசத்தந்தைக்காகச் செய்யும் இதே நடவடிக்கையை தேசத்தின் கலைப்பொக்கிஷங்களை மீட்பதற்காகச் செய்தால் அதில் தவறில்லை. 

இவ்வாறாக உரிமை கோரும்போது, நாம் சிலைகளின் அடையாளங்களைக் குறிப்பிடவும், அத்தகைய கோயில் சிலைகளின் தொன்மையை நவீன ஆய்வுக்கூடங்களில் கண்டறிந்த சான்றுகளை ஒப்புநோக்குக்கு அளிக்கவும் இயலாதவர்களாக இருக்கிறோம். இதற்குக் காரணம், தமிழகத்தின் கோயில் சிலைகள் எதுவுமே ஆவணப்படுத்தப்படவில்லை. இத்தகைய கலைப்பொக்கிஷங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வே நமக்கு அண்மையில் ஏற்பட்டதுதான். தமிழனின் பெருமையைத் தமிழன் உணராமல் வாழ்ந்து வருவதற்கு இதுவும் ஒரு சான்று. 

கடத்தல்காரன்கூட ஒரு கோயில் சிலையை அதன் தொன்மை, ஐம்பொன் கலப்பு விகிதம் ஆகியவற்றை நவீன அறிவியல் சோதனைக்கு உட்படுத்தி. தன் கலைநுட்பத்துக்கு ஏற்ப சந்தை மதிப்பைத் தீர்மானிக்கிறான். ஆனால், நாம் நம் கோயில் ஐம்பொன் சிலைகளின் தொன்மை குறித்தும் அதன் மதிப்பு குறித்தும் எந்தப் புள்ளிவிவரமும் வைத்திருக்கவில்லை. 

மோனாலிசா ஓவியத்தைப் பிரதியெடுப்பதைப்போல, நமது ஐம்பொன் சிலைகளையும் அப்படியே வடிப்பது இன்றைய கணினி உலகில் மிக எளிது. மெய்த்தொன்மை உள்ள சிலைகளை எடுத்துக்கொண்டு போலிச் சிலைகளை வைத்து மாற்றிவிடும் சம்பவம் ஏதாகிலும் நடந்திருந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆகவே, தமிழகக் கோயில்களில் உள்ள அனைத்து ஐம்பொன் சிலைகளையும் ஆவணப்படுத்திப் பாதுகாப்பது இன்றைய உடனடித் தேவை. 

கோயில்களின் ஐம்பொன் சிலைகளைப் பழுதுபார்க்கும் தேவை இருந்தால், அதைத் தமிழக அரசின் அனுமதியோடு, வல்லுநர்கள் மேற்பார்வையில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். ஐம்பொன் சிலையைப் பழுதுபார்க்கிறோம் என்று, தேவைப்படும் வெப்பஅளவு தெரியாமல் சூடேற்றிச் சிலையைச் சேதப்படுத்திவிடுவார்கள் என்பதால், இந்த நடவடிக்கை மிகமிக அவசியம். 

கோயிலில் விளக்கு எரிகிறதா, ஆறு காலப் பூஜையோ, மூன்று காலப் பூஜையோ நடைபெறுகிறதா என்பதைக் கண்காணிக்கவும், உண்டியலில் சேரும் பணத்தை எண்ணி எடுத்துக்கொள்வதும் மட்டுமே இந்து சமய அறநிலையத் துறையின் வேலை என்று நினைக்காமல், கோயிலிலுள்ள சிலைகளையும், விலையுயர்ந்த பொருள்களையும் முறையாக ஆவணப்படுத்திப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்த வேண்டிய கடமையும் அவர்களுக்கு உண்டு!  

நன்றி -
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=636331&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

No comments:

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...