Tuesday, August 14, 2012

இந்திய சுதந்திரத்தை கொண்டாட மனம் வரவில்லை
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய சுதந்திரத்தை கொண்டாட மனம் வரவில்லை தோழர்களே. 

குறிப்பாக இந்தியா ஈழப்படுகொலைக்கு துணை சென்ற பின்னர் இந்தியா என்றாலே கசக்கவே செய்கிறது. 

இந்த நேரத்தில் நாம் இந்திய நாட்டின் வரலாறையும் சுதந்திரத்தையும் மறு பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. ஏன் இந்தியா இந்த நிலையை அடைந்தது என்று ஆராய வேண்டியுள்ளது.

ஆரம்ப கட்ட சுதந்திரப் போராட்டத்தில் தெற்கே பூலித்தேவன், கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், தீரன் சின்னமலை, ஹைதர்அலி, திப்பு சுல்தான் வடக்கே ஜான்சி ராணி லட்சுமி பாய், பகதூர் ஷா, தாத்தியா தோபே, மங்கல்பாண்டே, போன்றோர் தங்கள் இன்னுயிரை ஈந்தனர்.

அதற்கு பிந்தைய காலத்தில் வடக்கே பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு, தெற்கே வாஞ்சி நாதன், கொடி காத்த குமரன் இன்னும் ஏராளமானோர் தங்கள் இன்னுயிரை ஈந்தனர்.

இந்திய தேசிய ராணுவத்தில் சுபாஷ் சந்திர போஸ் திரட்டிய ராணுவத்தில் ஆயிரக்கணக்கானோர் இணைந்து போராடினர். பர்மாவில் ஜப்பானியரின் சப்ளை துண்டிக்கப்பட்ட நிலையில் அவர்கள் பட்ட பாட்டை அவர்களது வரலாற்றை படித்தோருக்குத்தான் தெரியும்.

ஆனால் இத்தனை பேரும் உயிர் துறந்தாலும் சுதந்திரம் கொடுக்கப்பட்டது கோழைகளின் கைகளில்.

அஹிம்சாவாதம் பேசி வந்த காந்தி நினைத்திருந்தால் பக்த் சிங் முதலானோரை காப்பாற்றி இருக்கலாம். அவர், போரடியவர்களுக்கு ஆங்கிலேயன் கொடுத்த பட்டம் தீவிரவாதிகள் பட்டத்தையே கொடுத்தார். காந்தி அந்த தீவிரவாதிகளை எதிரியாக நினைத்தார்.

அவர் வளர்த்த கோழையான நேருவிடம் சுதந்திரம் ஒப்படைக்கப்பட்டது. வெறும் பதவி சுகத்தையே பிரதானமாக நினைத்த நேருவால் பெரிதாக ஒன்றும் சாதித்து விட முடியவில்லை. அவர் ஒரு தந்திரம் மிக்கவர் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது.

சுதந்திரம் பெற்ற பின்னரும் நமது அரசியல்வாதிகள் இந்த பரந்த கண்டத்தை கட்டிக் காப்பாற்ற அரசியல் ரீதியாக நடவடிக்கை எடுக்க வில்லை. சுதந்திரம் பெற்ற சமஸ்தானங்களை மிரட்டித்தான் இந்திய யூனியனில் இணைத்தனர். அதையே இன்றைக்கும் தேசிய கொள்கையாக வைத்துள்ளனர். இந்த ஒற்றையாட்சியில் வல்லவனே வாழ்வான் என்ற நிலை உள்ளது.

நேரு, சுபாஷ் சந்திர போஸ் பற்றிய அனைத்து தகவல்களையும் மறைக்க விரும்பினார் சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதை கண்டுபிடிக்க விரும்பவில்லை. வெள்ளையர்களுடன் ஒட்டி உறவாடிய நேரு சுபாஷ் சந்திர போஸை எதிரியாகவே பாவித்தார். அது திரிபுரா காங்கிரஸ் மாநாட்டில் நிரூபனமானது. அதையே சுதந்திரத்திற்கு பின்னரும் கடைப்பிடித்தார். சுபாஷ் சந்திர போஸுக்குச் சொந்தமான பெட்டியை தானே சுத்தியலால் உடைத்து திறந்து தனது நாகரீகத்தை காட்டினார்.

சுபாஷ் சந்திர போஸை ஒப்படைப்போம் என்று வாக்குக் கொடுத்துத்தான் இந்திய அரசியல்வாதிகள் சுதந்திரம் பெற்றனர். ஒரு மாபெரும் வீரனை காட்டிக் கொடுப்போம் என்று வாக்குக் கொடுத்து சுதந்திரம் வாங்கிய பாவம்தான் இன்று இந்தியாவை துரத்துகிறது.

அதேவேளையில் தென்னாட்டுத் திலகரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தொடர்ந்து சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் இருக்கிறார் என்று சொல்லி வந்தார். அது நேருவுக்கு தலைவலியாக இருந்தது. தனக்கு வேண்டப்பட்டவர்களிடம் சொல்லி அப்படி பேச வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால் தேவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தேவருக்கு எதிரான சதிக்கு இதுவும் ஒரு காரணமே.

இன்று போலியான சுதந்திரம் நிலவுகிறது. அதனால்தான் அவர்களுக்கு எல்லையில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க இவர்களுக்கு துணிவில்லை. வடகிழக்கு மாநிலங்களில் 4 லட்சம்பேர் வீடுகளை இழந்து இடம்பெயர வேண்டியுள்ளது.

கச்சத் தீவை தாரை வார்த்தற்கும் ஈழப்படுகொலைக்கு துணை போனதற்கும் இந்த போலியான நிலையே காரணம். இவர்களால் ஒருக்காலும் காவிரி நீரைப் பெற்றுத் தர முடியாது.

தற்போது இந்தியா முன் நிற்கும் சவால்கள் அதிகாரப் பரவல் ஆகும். மத்திய அரசு தனது அதிகாரங்களை மாநில அரசுகளுக்கு கொடுத்து கூட்டாட்சியை கட்டி காக்க முயற்சிக் வேண்டும் அதை விடுத்து, வெறும் ராணுவ பலத்தால், பண பலத்தால் இந்தியாவை கட்டிக் காக்க முயன்றால் நிச்சயம் இந்தியா தோல்வி பெறும். சிறந்த கூட்டாட்சியை உருவாக்காத நிலையில் இந்தியா உடைவது உறுதி.

இந்தியா மீதும் இன்னமும் நம்பிக்கை வைத்திருக்கும் தோழர்களே சிந்தியுங்கள். என்னால் இந்த சுதந்திர தினத்தை கொண்டாட முடியாது என்பது நிச்சயமான ஒன்று.