Sunday, August 26, 2012

சீமானுக்குள்ளே இருப்பது சுழியமா?


ஈழப்போரைத் தொடர்ந்து அவசரமாக முளைத்து வந்த அரசியல்வாதிதான் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ஈழப்போரால் எழுச்சி பெற்ற இளைஞர் கூட்டம் இவரது உணர்ச்சிகரமான பேச்சுக்களைக் கேட்டு இவர் பின்னே திரண்டனர்.

இவரது வேகம் பல அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சியையும் பொறாமையையும் ஏற்படுத்தியது. இவர் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததை யாரும் கண்டு கொள்ளவில்லை.

ஆனால் விஜயலட்சுமி விஷயத்துக்குப் பின்னர் அடங்கிப்போனது இவரது பேச்சுக்களை பொய்யென நிரூபித்தன. முதலில் தான் பெரியாரின் பேரன் என்று சொல்லிக் கொண்ட இவர் பின்னர் பெரியாரை விமரிசனம் செய்தார். இவரது கட்சி வெளியிட்ட அறிக்கை பலரது கண்டனங்களை வரவேற்றது.

தற்போது கருணாநிதியின் வீட்டிலிருந்து அடுத்த முதல்வரை தேர்ந்தெடுத்தால் சுப.வீரபாண்டியனை கத்தியால் குத்தி கொலை செய்து விடுவேன் என்று பேசியுள்ளார். இந்த பேச்சு காதலர்கள் பற்றி காடு வெட்டி குரு பேசியது, துரோகிகள் கொல்லப்படுவார்கள் என்று கேரளாவில் கம்யூனிச தலைவர் பேசிய பேச்சுக்களுக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல.

(திரு தமிழ்ப்புலி அவர்கள் சீமானின் காணொளியை அளித்திருந்தார். உண்மையின் சீமான் அந்த சொற்பொழிவில் அவர் சுப. வீரபாண்டியனை கத்தியால் குத்துவதாக பேசவில்லை. ஒரு பயல் உயிரோடு இருக்க மாட்டான் என்று சொல்லி இருக்கிறார். (http://www.youtube.com/watch?v=aIcinN7pcOkகாணொளியின் 1.09 நேரத்தில்) இந்த கருத்துமே ஜனநாயகத்திற்கு விரோதமானதுதான். இவ்வளவு இனத் துரோகத்திற்குப் பிறகும் தமிழ் மக்கள் மீண்டும் கருணாநிதி வீட்டிலிருந்து ஒருவரை முதல்வராக தேர்ந்தெடுத்தால் அதை ஏற்றுக் கொள்வதே ஜனநாயகமாகும்.)

இப்போது சீமானின் நோக்கத்தையும் கொள்கைகளையும் பரிசீலிக்க வேண்டியுள்ளது. ஒரு பொறுப்பு வாய்ந்த அரசியல் தலைவரான இவர் உருப்படியான கொள்கையை வைத்திருக்கிறாரா? உண்மையிலேயே இவர் தமிழர்களின் நலனை விரும்புகிறாரா அல்லது முதலமைச்சராக விரும்புகிறாரா? மக்களின் ஆதரவைப் பெற்று முதல்வராக முடியாவிட்டால் என்ன செய்வார்?

தமிழர்களின் நலனைத்தான் விரும்புகிறார் என்றால் இவர் ஏன் ஒத்த கருத்துக்கள் கொண்ட மற்ற தலைவர்களை ஒன்று சேர்க்க முயற்சிக்கக் கூடாது? இல்லை, எல்லாத் தலைவர்களும் இவர் பின்னால் வரவேண்டும் என்று எதிர் பார்க்கிறாரா?

அதேபோல தமிழகத்தின் இன்றைய முக்கியப் பிரச்சனைகள் என்ன? இவர் முதல்வராக வந்தால் அவற்றை எவ்வாறு தீர்த்து வைப்பார்? அதற்கான திட்டங்களை வைத்திருக்கிறாரா? இதில் காவிரி, முல்லைப் பெரியாறு, கச்சத் தீவு, மீனவர் பிரச்சனைகளை எவ்வாறு தீர்ப்பார்? தீர்த்து வைக்க முடியாமல் போனால் என்ன செய்வார்? ஈழம் பற்றிய இவரது கருத்து என்ன? ஒரு முதலமைச்சராக இவர் ஈழத்திற்கு என்ன செய்வார்?

ஒருவேளை மத்திய அரசு இவரது அரசை கலைத்து விட்டால் என்ன செய்வார்? தனது கட்சியினரிடம் துப்பாக்கிகளை கொடுத்து ஆயுதப் புரட்சி செய்வாரா?

மேடையில் உணர்ச்சிவசப் பட்டு கொலை செய்து விடுவதாக பேசும் இவர் ஜனநாயக அமைப்பில் நம்பிக்கை வைத்துள்ளாரா? தமிழருக்கான இவருடைய சமுதாய-பொருளாதாரக் கொள்கை என்ன?  சாதிகளை கடந்து வரச் சொல்லும் இவர் தனது ஆட்சியில் சாதியை ஒழித்துவிடுவாரா? மதங்களை என்ன செய்வார்?

முடிந்தால் நாம் தமிழர் கட்சிக்காரர்கள் யாராவது இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். இல்லை சீமானிடம் அல்லது அவருக்கு ஆலோசனை சொல்லும் அண்ணன்மார்கள் குழுவிடம் கேட்டுப் பதில் சொன்னால் கூட பரவாயில்லை.
••••••
16 comments:

இலக்கியவாசகன் said...

bதேவன் அண்ணே! முதலில் சீமான் பேசிய பேச்சில் சுபவீ அவர்களை கத்தி எடுத்து குத்துவேன் என்று அவர் பேசவில்லை! இது அந்த ஒளி நாடாவை பலதடவை பார்த்து உறுதிப்படுத்தியுள்ளேன்! மற்றது சீமான் அரசியல் பயணத்தில் ஆரம்பப் புள்ளி! சீமானிடம் இவ்வளவு அவசரமாக திட்டங்கள் கொள்கைகள் விளக்கம் கேட்கும் மர்மம் புரியவில்லை! இதே கேள்விகளை இதற்க்கு முன் எத்தனை பேரிடம் கேட்டு இருக்கிங்க? எத்தனை பேர் பதில் தந்திருக்காங்க?

தேவன் said...

திரு இலக்கியவாசகன் அவர்களே, அவர் சுபவீயை கத்தியால் குத்துவேன் என்று சொல்ல வில்லை என்றால் யாரை குத்துவேன் என்று சொன்னார்? அந்த ஒலிநாடாவை இணையத்தில் போட முடியுமா? மற்றபடி நான் அவசரப்பட்டு எதையும் கேட்கவில்லை. அவரது கட்சி இயக்கமாக இருந்த போதிருந்தே அவருக்காக சிறு உழைப்பை மேற்கொண்டவன் என்ற அடிப்படையிலும் தமிழ மக்களுக்காகவும் கேட்கிறேன். இதில் எந்த மர்மமும் இல்லை. மர்மங்கள் இருக்கக் கூடாது என்றுதான் கேட்கிறேன். இதற்கு முன் யாரிடமும் கேட்கவில்லை. இனி யார் வந்தாலும் கேட்கப்படும். இருப்பவர்களிடமும் கேட்கப்படும். பதில் தராவிட்டால் எங்களுக்கு கவலையில்லை. அவர்களைப் பற்றி மக்கள் புரிந்துகொள்வார்கள். நன்றி.

thamizh puli said...

http://www.youtube.com/watch?v=FA7jQdCmDy4&feature=related

தேவன் said...

சீமான் அவர்களின் பேச்சின் இணைப்பை கொடுத்ததற்கு நன்றி தமிழ்ப் புலி அவர்களே.

இலக்கியவாசகன் said...

ஈழப்போரைத் தொடர்ந்து அவசரமாக முளைத்து வந்த அரசியல்வாதிதான் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.///////இப்படி நீங்கள் ஆரம்பித்தது தான் உங்களது நாம் தமிழர் மீதான பார்வையை அல்லது ஒரு முற்போக்கான/ நடுநிலையான எழுத்துப்பரம்பரியத்தை நீங்கள் கொண்டிருக்கிறீர்களா என்கிற கேள்வியை எழுப்புகிறது! ஈழப்போரின் பின்னர் விழுந்த அரசியல் இடைவெளியை கிட்டத்தட்ட முழுமையாக நிரப்பியது நாம்தமிழர் கட்சிதான்! அதன் தொடர்ச்சி தான் இன்று மஞ்சள் துண்டு மாணிக்கம் ஈழ ஆதரவு என்று நீலிக்கண்ணீர் வடிப்பதற்கு காரணம்! இதை யாரும் மறுக்க முடியாது!

இவரது வேகம் பல அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சியையும் பொறாமையையும் ஏற்படுத்தியது. இவர் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததை யாரும் கண்டு கொள்ளவில்லை.////இந்த பகுதியில் நீங்களே முன்னுக்குப் பின் முரணான கருத்தை பதிவு செய்கிறீர்கள்! சட்டமன்றத் தேர்தலில் சீமான் ஜெயாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவில்லை! சீமான் காங்கிரசை எதிர்த்தே களம் கண்டார்! ஆனால் நீங்கள் அதை மறைக்கிறீர்கள்! ஆனால் இவரது வேகம் பலருக்கு பொறாமையை ஏற்ப்படுத்தியது என்கிறீர்கள்! பொறமை ஏற்ப்படுத்தியது மட்டுமல்ல பலர் பொறுமை இழந்து புரண்டதும் நடந்தது! உங்களது இந்த கட்டுரையும் அதன் தொடர்ச்சி என்றே படுகிறது!

இலக்கியவாசகன் said...


ஆனால் விஜயலட்சுமி விஷயத்துக்குப் பின்னர் அடங்கிப்போனது இவரது பேச்சுக்களை பொய்யென நிரூபித்தன. முதலில் தான் பெரியாரின் பேரன் என்று சொல்லிக் கொண்ட இவர் பின்னர் பெரியாரை விமரிசனம் செய்தார். இவரது கட்சி வெளியிட்ட அறிக்கை பலரது கண்டனங்களை வரவேற்றது.//// எந்தவிதமான பொறுப்புணர்வும் உங்களது இந்த பகுதியில் இல்லை! தனிமனித ஒழுக்கம் பற்றி பேச எந்தக்கட்சிக்காரனுக்கும் தமிழ் நாட்டிலோ ஏன் இந்தியாவிலே அருகதை இல்லை என்றே சொல்லலாம்! ஒன்றில் தலைவன் செய்வான் இல்லை தொண்டன் செய்வான்! நிலைமை இப்படி இருக்க...விஜயலட்சுமி விவகாரம் என்று சம்மந்தம் இல்லாமல் இழுத்துவிடும் நீங்கள் விஜயலக்சுமி இன்னொரு மாநிலத்தில் இன்னொருவர் மீது இப்படியே ஒரு புகாரைக்கொடுத்த கதையை வசதியாக மறந்துவிடுகிறீர்கள்! உங்கள் நடுநிலைமை இங்குதான் மொட்டாக்குக்குள் இருந்து மெல்ல எட்டிப்பார்க்கிறது! சீமானது கட்சி வெளியிட்ட அறிக்கை கண்டனங்களை வரவேற்றது என்பதன் ஊடாக யாரும் இதுவரை எந்தவிதமான செய்தியையும் சொல்லவில்லை! அது சுபவீ , கொளத்தூர் மணியண்ணன் உட்பட உங்களது இந்தப் பத்திவரை நீழ்கிறது! இதன் காரணம் சீமான் மீது கொண்டுள்ள காழ்ப்பே தவிர வேறு எதுவும் இல்லை! இல்லாவிட்டால் அந்த ஆவணத்தை விமர்சிக்கும் யாராவது இதுவரை அதில் உள்ள ஒரு பகுதியையாவது இது இப்படி இருந்திருந்தால் தான் சரி என்று சொன்ன ஒருவரை காட்டுங்கள்? யாரும் இல்லை! பாசிசம் என்று முழங்கிய சிறுபிள்ளைத்தனமான எழுத்தர்கள் முதல் அனைவரும் தங்களது சொந்த விருப்பு வெறுப்பையே முதன்மைப்படுத்தினர்! இரண்டு ஆண்டுகளே ஆன ஒரு கட்சிக்கு உபதேசம் செய்வது எப்படி என்றோ அல்லது முற்றிலும் இளைஞர்கள் நடாத்தும் கட்சி என்ற நிலையில் இருக்கும் ஒரு கட்சிக்கு எப்படி வழிகாட்ட வேண்டும் என்கிற சிறு அறிவோ இல்லாமல் மீண்டும் அந்த இளைஞர்களை தூண்டி விட்டு அல்லது அவர்களது உணர்ச்சி மேலீட்டுக்கு இடமளிக்க வழி செய்வதாகவே அந்த எதிர்ப்புக் கட்டுரைகள் இருந்தது! அதிலும் நீங்கள் சொன்ன இந்த சுபவீ அவர்கள் ஒருபடி மேலே போய் சீமானைக் காட்டிக்கொடுக்கும் பணியில் இறங்கினார்! இதுதான் நீங்கள் உயர்த்திப்பிடிக்கும் இந்த மனிதனின் உண்மை முகம்!

இலக்கியவாசகன் said...

தற்போது கருணாநிதியின் வீட்டிலிருந்து அடுத்த முதல்வரை தேர்ந்தெடுத்தால் சுப.வீரபாண்டியனை கத்தியால் குத்தி கொலை செய்து விடுவேன் என்று பேசியுள்ளார். இந்த பேச்சு காதலர்கள் பற்றி காடு வெட்டி குரு பேசியது, துரோகிகள் கொல்லப்படுவார்கள் என்று கேரளாவில் கம்யூனிச தலைவர் பேசிய பேச்சுக்களுக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல./////
இதில் நீங்கள் முதலில் தவறாக எழுதி இருந்ததை நான் சுட்டிக்காட்டினேன் ஆனாலும் நீங்கள் நீக்க வேண்டிய இந்தப்பகுதியை அப்படியே வைத்திருக்கிறீர்கள் இதன் காரணம் என்ன?


(திரு தமிழ்ப்புலி அவர்கள் சீமானின் காணொளியை அளித்திருந்தார். உண்மையின் சீமான் அந்த சொற்பொழிவில் அவர் சுப. வீரபாண்டியனை கத்தியால் குத்துவதாக பேசவில்லை. ஒரு பயல் உயிரோடு இருக்க மாட்டான் என்று சொல்லி இருக்கிறார். (http://www.youtube.com/watch?v=aIcinN7pcOkகாணொளியின் 1.09 நேரத்தில்) இந்த கருத்துமே ஜனநாயகத்திற்கு விரோதமானதுதான். இவ்வளவு இனத் துரோகத்திற்குப் பிறகும் தமிழ் மக்கள் மீண்டும் கருணாநிதி வீட்டிலிருந்து ஒருவரை முதல்வராக தேர்ந்தெடுத்தால் அதை ஏற்றுக் கொள்வதே ஜனநாயகமாகும்.)////
உங்கள் ஜனநாயகம் பற்றிய புரிதல் நன்றாக இருக்கிறது! ஆனால் அதில் ஒரு பயல் உயிரோடு இருக்க மாட்டான் என்று சொன்னதன் உள் அர்த்தம் கலைஞர் குடும்பத்தினரே எல்லோரையும் கொன்றுவிடுவார்கள் என்று இருக்கக் ௯டாதா? நீங்கள் ஏன் அதை பரிசீலிக்கவில்லை? இதையே மஞ்சள் துண்டு சொல்லியிருந்தால் அப்படியே மாற்றி பிட்டைப் போட்டிருக்கும்! ஆனால் இவர்களது நோக்கம் மக்களை ஏமாற்றுவதல்ல என்பதால் அதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை என்றே நினைக்கிறேன்!

இலக்கியவாசகன் said...


இப்போது சீமானின் நோக்கத்தையும் கொள்கைகளையும் பரிசீலிக்க வேண்டியுள்ளது. ஒரு பொறுப்பு வாய்ந்த அரசியல் தலைவரான இவர் உருப்படியான கொள்கையை வைத்திருக்கிறாரா? உண்மையிலேயே இவர் தமிழர்களின் நலனை விரும்புகிறாரா அல்லது முதலமைச்சராக விரும்புகிறாரா? மக்களின் ஆதரவைப் பெற்று முதல்வராக முடியாவிட்டால் என்ன செய்வார்?/////இதுவரை வந்தவர்கள் என்ன செய்தார்கள்? அதைவிட சீமான் வரமாட்டார் என்ற முற்கற்பிதம் உங்களுக்கு எதற்கு? கருணாநிதிக்குப் பின்னாலும் திராவிடம்? என்கிற மாயைக்குப் பின்னாலும் ஜந்துக்களாக திரிந்த மக்களை குறைந்த பட்சம் தங்களது இனத்தினது மானத்தை புரிந்துகொள்ளவாவது செய்தது நாம்தமிழர் கட்சியும் சீமானும் மட்டுமே! இதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இருக்கமுடியாது! [இது தமிழன் என்கிற மானத்தோடு இருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்]

தமிழர்களின் நலனைத்தான் விரும்புகிறார் என்றால் இவர் ஏன் ஒத்த கருத்துக்கள் கொண்ட மற்ற தலைவர்களை ஒன்று சேர்க்க முயற்சிக்கக் கூடாது? இல்லை, எல்லாத் தலைவர்களும் இவர் பின்னால் வரவேண்டும் என்று எதிர் பார்க்கிறாரா?///இதை கட்டாயம் சீமான் தான் செய்யவேண்டுமா? இதையும் சீமானிடம் கொணர்ந்து முடிச்சுப் போடும் காரணம் என்ன? இதே கேள்வியை தனி ஒரு பதிவில் அய்யா பழ நெடுமாறனிடம் கேழுங்கள், அய்யா தமிழருவி மனியனிடம் கேழுங்கள் அதை விடுத்து மாடு வண்டியில் அடிபட்டுச் செத்ததுக்கும் சீமான்தான் காரணம் என்றால் என்ன அர்த்தம்?

இலக்கியவாசகன் said...

அதேபோல தமிழகத்தின் இன்றைய முக்கியப் பிரச்சனைகள் என்ன? இவர் முதல்வராக வந்தால் அவற்றை எவ்வாறு தீர்த்து வைப்பார்? அதற்கான திட்டங்களை வைத்திருக்கிறாரா? இதில் காவிரி, முல்லைப் பெரியாறு, கச்சத் தீவு, மீனவர் பிரச்சனைகளை எவ்வாறு தீர்ப்பார்? தீர்த்து வைக்க முடியாமல் போனால் என்ன செய்வார்? ஈழம் பற்றிய இவரது கருத்து என்ன? ஒரு முதலமைச்சராக இவர் ஈழத்திற்கு என்ன செய்வார்?////நீங்கள் தனியே சீமானை பார்த்து கேட்கத் தேவை இல்லாத கேள்விகள் இவை அதே வேளை அரசியலின் பாலபாடம் ௯ட அறியாத விஜயகாந்த் போன்றோருக்கு மக்கள் வாக்களித்து பல எம் எல் ஏக்களை சட்டமன்றம் அனுப்பிய நிகழ்வும் இங்கு நினைவு ௯ரத்தக்கது! மேலும் சீமானின் பேச்சுக்களும் நாம் தமிழர் கட்சி ஆவணமும் தமிழ் மக்களுக்கு தாம் செய்யப்போவதை ஏனைய கட்சிகள் பசப்புவதை போல இல்லாது கொஞ்சம் தெளிவாகவே எடுத்து வைக்கின்றது! ஆக உங்கள் தெளிவுக்கு நீங்கள் அவற்றை முழுமையாக பார்ப்பதும் படிப்பதுமே சிறப்பாக இருக்கும்!


ஒருவேளை மத்திய அரசு இவரது அரசை கலைத்து விட்டால் என்ன செய்வார்? தனது கட்சியினரிடம் துப்பாக்கிகளை கொடுத்து ஆயுதப் புரட்சி செய்வாரா?///இவற்றுக்கு பொறுத்திருந்தே பார்க்கணும்! ஆனால் மாயாவதி ஆட்சியை கலைத்து களைத்துப்போன மத்திய அரசையும் இங்கு நினைவு ௯ரலாம்!

இலக்கியவாசகன் said...

மேடையில் உணர்ச்சிவசப் பட்டு கொலை செய்து விடுவதாக பேசும் இவர் ஜனநாயக அமைப்பில் நம்பிக்கை வைத்துள்ளாரா? தமிழருக்கான இவருடைய சமுதாய-பொருளாதாரக் கொள்கை என்ன? சாதிகளை கடந்து வரச் சொல்லும் இவர் தனது ஆட்சியில் சாதியை ஒழித்துவிடுவாரா? மதங்களை என்ன செய்வார்?////இதற்க்கு நாம் தமிழர் ஆவணம் பதில் சொல்லியிருக்கிறது!

இறுதியாக உங்களிடம் கேட்டுக்கொள்வது என்னவெனில் இந்தக்கட்டுரையை நீங்கள் அந்தக் காணொளியை பார்க்காது எழுதியது போல இனிமேல் எழுதாமல் இருப்பது பலரது நேரத்தை மீதப்படுத்தும் என நம்புகிறேன்! அதே வேளை நான் சீமானது கட்சிக்காரன் அல்ல! அடிப்படையில் நான் வைகோ அபிமானி! இப்போதும் ௯ட! ஆனால் இப்போதைய சூழலில் நாம் தமிழர் கட்சியை வழர்த்து விடுவதன் மூலமே மதிமுகவை மேலெழ வைக்க முடியும் என்பது என்னுடைய தனிப்பட்ட ஆய்வின் முடிவு! [இதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம்!] ஆனால் தமிழகத்தில் மதிமுகவும், நாம்தமிழர் கட்சியுமே ஆழும் கட்சி எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்குத் தகுதிபடைத்தவையாக சமகாலத்தில் நோக்கப்படுகின்றன! எனவே தனிப்பட்ட காழ்ப்புக்களுக்காக தமிழக மக்களதும் தமிழ் மக்களதும் எதிர்காலத்தின் மீது மண்ணை வாரிப்போடாது இருப்பதே நாம் தமிழ் மக்களுக்கு செய்யும் உயரிய நற்பணியாகும்! -நன்றி-

Mokka Paradeshi said...

சீமான் தன் கூட்டங்களில், ஏகப்பட்ட தவறான கருத்துகளை பேசுகிறார் !. முல்லைப்பரியாறு விஷயத்தில் சீமான்தான் முதல்குரல் கொடுத்ததாக பல கூட்டங்களில் பேசியிருக்கின்றார் !. இது உண்மையா ???. நானே இதை கேட்டிருக்கின்றேன். எதிர்கேள்வி கேட்டு நான் அனுப்பிய துண்டு சீட்டு அலட்சியப்படுத்தபட்டதே சாட்சி !. சீமான் தன் ஆக்ரோஷத்தை பேச்சில் காட்டுவது தமிழருக்கு நன்மையே ! ஆனால், தமிழருக்கு நன்மை செய்தவர்களை,செய்பவர்களை துவேஷம்கொண்டு ,பகைமை பாராட்டி விமர்சிப்பது அவருடைய கையாகாலாத்தனத்தை வெளிப்படுத்துகிறது . அவரால் இயன்ற முறையில் ,பாணியில் முன்னேறுவது என்பதன் அர்த்தம் என்ன ???. தமழர் வரலாறு, போராட்ட காலங்கள் அறியாத பலரை கூட வைத்துக்கொண்டு ,பாளையத்தான் பாணியில் பரிபாலனம் செய்வது என்னவகை அரசியல்???. தமிழனின் மிக பாராட்டப்படும் குணமே நன்றி மறவாமைதான் !. ஆனால், அதற்கே வெடி வைக்கும் சீமான், தன்னை திருத்திக்கொண்டு முன்னேறுவது சால சிறந்தது . நண்டுகளின் கதை நமக்கு ஒப்பாவது நல்லதல்ல !. சீமானின் ஆரம்பகால கூட்டங்களில் ஓடி,ஓடி கலந்து கொண்டு அவரை கண்காணித்து, தவறான பல கருத்துகளை கேட்டபின் , சிரித்துக்கொண்டு விலகியது தனிக்கதை !. ஆனாலும்,சீமான் வளருவது வைகோவின் எதிர்காலத்திற்கு நல்லது என்பதை நானும் மனதார வரவேற்கிறேன் !. வைகோ ஆரம்பம் முதல் இன்று வரை ஒரே /அதே ஆக்ரோஷத்துடன் உள்ளார் . ஆனால்,சீமானின் குரல் அவ்வப்போது பிசிறடிப்பதையும் நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் !. நன்றி.

Mokka Paradeshi said...

சீமான் தன் கூட்டங்களில், ஏகப்பட்ட தவறான கருத்துகளை பேசுகிறார் !. முல்லைப்பரியாறு விஷயத்தில் சீமான்தான் முதல்குரல் கொடுத்ததாக பல கூட்டங்களில் பேசியிருக்கின்றார் !. இது உண்மையா ???. நானே இதை கேட்டிருக்கின்றேன். எதிர்கேள்வி கேட்டு நான் அனுப்பிய துண்டு சீட்டு அலட்சியப்படுத்தபட்டதே சாட்சி !. சீமான் தன் ஆக்ரோஷத்தை பேச்சில் காட்டுவது தமிழருக்கு நன்மையே ! ஆனால், தமிழருக்கு நன்மை செய்தவர்களை,செய்பவர்களை துவேஷம்கொண்டு ,பகைமை பாராட்டி விமர்சிப்பது அவருடைய கையாகாலாத்தனத்தை வெளிப்படுத்துகிறது . அவரால் இயன்ற முறையில் ,பாணியில் முன்னேறுவது என்பதன் அர்த்தம் என்ன ???. தமழர் வரலாறு, போராட்ட காலங்கள் அறியாத பலரை கூட வைத்துக்கொண்டு ,பாளையத்தான் பாணியில் பரிபாலனம் செய்வது என்னவகை அரசியல்???. தமிழனின் மிக பாராட்டப்படும் குணமே நன்றி மறவாமைதான் !. ஆனால், அதற்கே வெடி வைக்கும் சீமான், தன்னை திருத்திக்கொண்டு முன்னேறுவது சால சிறந்தது . நண்டுகளின் கதை நமக்கு ஒப்பாவது நல்லதல்ல !. சீமானின் ஆரம்பகால கூட்டங்களில் ஓடி,ஓடி கலந்து கொண்டு அவரை கண்காணித்து, தவறான பல கருத்துகளை கேட்டபின் , சிரித்துக்கொண்டு விலகியது தனிக்கதை !. ஆனாலும்,சீமான் வளருவது வைகோவின் எதிர்காலத்திற்கு நல்லது என்பதை நானும் மனதார வரவேற்கிறேன் !. வைகோ ஆரம்பம் முதல் இன்று வரை ஒரே /அதே ஆக்ரோஷத்துடன் உள்ளார் . ஆனால்,சீமானின் குரல் அவ்வப்போது பிசிறடிப்பதையும் நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் !. நன்றி.

தேவன் said...

நண்பரே, நான் யாரென்று மும்பையில் ஆரம்ப கட்டத்தில் நாம் தமிழருக்காக வேலை செய்தவர்களிடம் கேளுங்கள்.

இலக்கியவாசகன் said...

நீங்கள் நாம் தமிழர் கட்சியில் இருந்திருந்தால் அதை தான் ஆணித்தரமாக முதலில் பதிவு செய்யணும்!
http://www.facebook.com/groups/tamilsoru/doc/337484003009442/

asokan said...

திரு.இலக்கியவாசகன் அவர்களே நண்பர் தேவன் அவர்கள் கேள்வியில் எந்த தவறும் இல்லை. தவறு திரு.சீமானிடமும் நாம் தமிழரிடமும்தான் உள்ளது.ஆசிரியரை மாணவன் கேள்வி கேட்கக் கூடாது, பெற்றோரை பிள்ளைகள் கேள்வி கேட்கக் கூடாது. இதனால் நீங்கள் சாதித்தது என்ன? ஒபாமாவைப் பார்த்து 10 வயது சிறுவன் உங்களை ஏன் மக்கள் வெறுக்கிறார்கள் என்று கேள்வி கேட்கிறான். அவரும் பொறுப்பாக பொறுமையாகப் பதில் சொல்கிறார்.மம்தா பானர்ஜியைக் கேள்வி கேட்டால் காவலர்கள் கைது செய்கிறார்கள். பொய் வழ்க்குப் போடுகிறார்கள். இதுதான் சனனாயகமா? சுதந்திரமா? அதற்கு நீங்கள் எதற்கு? வெள்ளைக் காரணே இருக்கலாமே.இந்திய இறையாண்மையை ஏற்றுக் கொண்டு எப்படி தமிழ் தேசியம் அமைப்பீர் என்று திரு.மணியரசன் கேட்கிறார். பதில் சொல்லுங்கள் அல்லது நாம் தமிழர் என்பது இந்திய தேசியத்தை ஏற்றுக்கொண்ட தமிழ் மானிலக் கட்சி என்று சொல்லுங்கள். மத்திய ஆட்சியில் ஆதிக்கம் செலுத்த முடியாத நீங்கள் அதற்குட்பட்டத் த்மிழ் நாட்டிற்கும் தமிழ் ஈழத்திற்கும் என்ன செய்யப் போகிறீர்கள்? நண்பர் தேவன் தங்களைக் கேட்டமாதிரி என்னையும் கேட்டார். நான் பதில் சொல்லியிருக்கிறேன். மேலும் சேர்க்கவிருந்தப் பகுதி சேர்க்கப் படாமல் விடுபட்டதை அறிந்தேன்.ஆடத் தெரிந்தவள் அவளுக்கு ஆடத் தெரியுமா? இவளுக்கு ஆடத் தெரியுமா? என்று கேட்க மாட்டாள்.ஆடிக்காட்டுவாள்.சீமானும் ஒரு மம்தாதான்.சீமான் சுழியமல்ல அதற்கும் குறைந்தக் குறை எண்(மைனஸ்).கேளுங்கள் சொல்லப்படும் என்பவனே நல்லத் தலைவன்.விஜயகாந்தை முதல்வராக நடிக்க வைத்துப் படம் இயக்குவதோடு நிறுத்திக்கொள்ளலாம்.இனி நடிகர்களின் அர்சியல் ஆட்டம் செல்லுபடியாகாது. வேண்டுமானால் இரஜினி காந்தை இறக்கிப் பாருங்கள்.

தேவன் said...

//நீங்கள் நாம் தமிழர் கட்சியில் இருந்திருந்தால் அதை தான் ஆணித்தரமாக முதலில் பதிவு செய்யணும்!//

திரு இலக்கியவாசகன் அவர்களே, அதை ஏன் ஆணித்தரமாக பதிவு செய்ய வேண்டும்? அதிலிருந்துதான் வெளியேறிவிட்டேனே?

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...