Saturday, September 1, 2012

தமிழ்தேசியம் பேசுவோர் செய்ய வேண்டியது என்ன?-சீமானுக்குள் இருப்பது சுழியமா?- என்ற தலைப்பில் நான் எழுதிய குறுங்கட்டுரையை படித்த பலர் நீங்கள் ஏன் சீமானிடம் மட்டும் இத்தனை கேள்விகளை கேட்கிறீர்கள்? அவர் புதியவர்தானே என்று கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதில் அளிக்கும் முகமாக இந்த குறுங்கட்டுரையை எழுதுகிறேன்.

சீமான் அந்த வீடியோவில் மீண்டும் கருணாநிதியின் வீட்டிலிருந்து ஒரு முதல்வரை தேர்ந்தெடுத்தால் ஒருவரையும் விடமாட்டேன் என்று பேசியிருந்தார். இதற்கு என்ன அர்த்தம்? மக்கள் கொடுக்கும் தீர்ப்பை ஏற்கமாட்டேன் என்றுதானே அர்த்தம்? இது பற்றி பேசிய ஒருவர் உணர்வற்றவர்களை கொன்றால் என்ன என்று கேட்டார். கொலை என்பது ஜனநாயகம் கிடையாது. அதை ஏற்க முடியாது. ஒருவருக்கு தமது கருத்தை புரிய வைத்து அவரது ஆதரவை பெறுவதே ஜனநாயகம்.

ஏற்கனவே உள்ள அரசியல்வாதிகளின் சாயம் வெளுத்துவிட்டது. அவர்களை நம்பி பிரயோஜனம் இல்லை என்று தெளிவாகி விட்டது. எனவே புதியவர்கள் மீதே மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டியுள்ளது. ஆனால் புதியவர்களும் பழையவர்களின் தவறுகளை செய்யக் கூடாது.

தற்போதைய அரசியல் சூழலை பயன்படுத்தும் ஒருவர் அதற்கான தகுதியை கொண்டுள்ளாரா? அவரது அரசியல் பார்வை, பயணம், நோக்கம் சரிதானா என்று பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. எனவே ஏற்கனவே உள்ள அரசியல்வாதிகளை விட புதிய அரசியல்வாதிகளை அதிகம் விமரிசனம் செய்வேன் என்பதை இங்கு தெளிவு படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

தற்போது தமிழகத்தில் அரசியல்வாதிகள் மக்களின் மதிப்பை இழந்து விட்டனர். வேறு வழியில்லாத காரணத்தால் மக்கள் இருக்கிற அரசியல்வாதிகளையே தேர்தலில் தேர்ந்தெடுக்கும் நிலையில் உள்ளனர். இந்த பட்டியலில் ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ, ராமதாஸ், திருமாவளவன் போன்றோரும் அடங்குவர்.  

ஈழத்தில் தமிழர்கள் சந்தித்த தோல்வி தமிழர்களை அரசியல் குறித்து தீர்க்கமாக சிந்திக்க வைத்துள்ளது. அரசியல் மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் மத்தியில் தமிழர்களை தமிழர்களே ஆளவேண்டும் என்ற கருத்து பரப்பப்பட்டு வருகிறது.

பொதுவாக இந்த கருத்துக்களை முன்னெடுப்போர், தமிழர்களின் உரிமைகள் பலமுனைகளிலும் பறிக்கப்பட்டு வருகிறது, அதனை தடுக்க தமிழர்களை தமிழர்களே ஆளவேண்டும் என்று கூறி வருகின்றனர். இதில் முன்வரிசையில் நிற்போர் தமிழ்தேசியம் பேசுவோரே.

ஆனால் இவர்களிடம், ஒரு தெளிவு இல்லாமல் இருக்கிறது. இவர்கள் தங்களுக்குள் முரண்படுகின்றனர். ஒருவர் பொதுவுடமை பற்றி பேசுகிறார். ஒருவர் நில உச்ச வரம்பு பற்றி பேசுகிறார். ஒருவர் சாதி - மத ஒழிப்பு பற்றி பேசுகிறார்.

அதோடு தமிழர்களை தமிழர்களே ஆள்வது எவ்வாறு? அதனை மக்கள் எவ்வளவு தூரம் விரும்புவார்கள்? தற்போது பேராசையில், பண வெறியில் மூழ்கியிருக்கும், இலவசங்களை விரும்பும், சினிமா மயக்கத்தில் உள்ள மக்கள் அது போன்ற முன்னெடுப்புக்கு ஆதரவு தெரிவிப்பார்களா? என்பது போன்றவற்றை யாரும் தெளிவு படுத்த தயாராக இல்லை. நாங்கள் ஆட்சியை கைப்பற்றி விடுவோம் என்று ஏதோ  நம்பிக்கையில் பேசுகின்றனர். ஆனால் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் என்ன செய்வார்கள் என்றால் பதில் சொல்லத் தயாராக இல்லை.

தற்போதைய அரசியல் சூழலில் யாராக இருந்தாலும் தெளிவான கருத்துக்களை முன்வைத்து மக்களின் நம்பிக்கையை பெற்று அதன் மூலமே அரசுக் கட்டிலுக்கு வரவேண்டும். முதலில் தமிழர் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனைகளை கூறி அவற்றை தாங்கள் எவ்வாறு தீர்த்து வைப்போம் என்று தெளிவு படுத்த வேண்டும்.

தமிழர் நலனை முன்னிறுத்தி அரசியலுக்கு வரும்போது மத்திய அரசு, அந்த அரசை பழிதீர்க்கும் விதமாக நடத்தினால் என்ன செய்வார்கள்? தமிழர் நலனைப் பொறுத்தவரை மற்ற அரசியல் கட்சிகளுடன் எவ்வாறு நடந்து கொள்வார்கள்? மத்திய அரசின் ஆதரவுடன் அல்லது ஆதரவு இல்லாமல் எவ்வாறு செயல்படுவார்கள்? என்பதை உள்ளங்கை நெல்லிக் கனியாக விளக்க வேண்டும்.

தமிழர் நலன் குறித்து அரசியல் கட்சிகளிடையே ஒரு கருத்தொற்றுமையை ஏற்படுத்த வேண்டும்.  எந்தவித மாற்றமாக இருந்தாலும் அது ஜனநாயகத்தின் மூலமாகவே வரவேண்டும். மூடி மறைக்கப்படும் அல்லது பூடகமான கருத்துக்களை முன் வைத்தால் அதனை ஏற்க முடியாது. விமரிசனத்திற்கு தயாராக இல்லாதவர்கள் வீட்டிற்குள்ளேயே இருந்து விடலாம். அரசியலுக்கு வரக் கூடாது.
••••••••


2 comments:

தேவன் said...

திரு அசோகன் சிவவடிவேலுவ அவர்களின் கருத்து.

நண்பர் தேவன் அவர்களே,

மிகவும் சரியாகச் சொல்லியுள்ளீர்கள். மிக்க நன்றி.

சீமான் தி.க வுடன் கை கோர்த்துப் பேசியவை நீகுழலில் உள்ளது. அவர் அணியும் கருப்பு சட்டைக்கும் அதுவே காரணம். எந்த மரத்த்டியில் அவருக்குப் புத்தறிவு வந்ததோ தெரியவில்லை அவர்கள் பெரியாரை வசைபாடத் தொடங்கிவிட்டனர்.

சரி

அவரின் அரசியல் கோட்பாடு என்ன?

பொருளியல் கோட்பாடு என்ன?

இந்திய இறையாண்மைக்கு உட்பட்டு எவ்வாறு தமிழ் தெசியமோ, தமிழ் ஈழமோ அமைப்பார்.

இவரை விட மணியரசன் நேர்மையானவர். நாங்கள் இந்திய இறையாண்மையை ஏற்பதற்கில்லை என்று சொல்கிறார். தேர்தலில் நிற்பதற்கில்லை என்று சொல்கிறார்.

பிரமிடு என்பது அதிகாரக் குவிவு.

அவருடைய ஆவணத்திலே அதிகாரப் பரவலை ஏற்படுத்துவோம். பெருமேடு(பிரமிடு) போல என்கிறார்.
அவருடையக் கட்சியிலேயே அதிகாரப் பரவல் இல்லை. இவருடைய ஆட்சியில் ஏற்படுத்தி விடுவாரா?

இதை இப்படி ஒழிப்பேன்.
இதை இவ்வாறு வளர்ப்பேன்
இந்த சட்டத்தை இவ்வாறு திருத்துவேன்.

இதுதான் தற்போதைய அரசியல். உண்மையான அரசியல்.

இந்தியாவில் அவ்வாறு இருவரே உளர்.
ஒருவர் குஜராத் இராகுல் மேத்தா
மற்றவர் நான்.

புதிய டாக்டர் எந்த மருந்தை வேண்டுமானாலும் கொடுக்கட்டும், பாவம் பிழைக்கட்டும் என்று உங்கள் குடும்பத்தினருக்கு மருத்துவம் பார்ப்பீரா?

ஐயா இது உங்கள் வாரிசுகளின் கல்வி, வேலை வாய்ப்பு, திருமணம், உடல் உள ஆரோக்கியம், இயற்கைப் பாதுகாப்பு அத்தனையும் அடங்கிய விடயம்.

இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? என்ற காலம் போய்விட்டது.

குஜராத் இராகுல் மேத்தாவையோ அமரிக்க ஜாக்கு பிரஸ்கோவையோ அழைத்து வந்துத் தமிழ் நாட்டின் முதல்வராக்குங்கள். தமிழைக் காப்பாற்ற உ.வே.சாமினாத ஐயர், மறைமலை அடிகள், தேவனேயப் பாவணர் இவர்கள் போன்றவர்கள் உள்ளனர். அவர்கள் காப்பாற்றுவார்கள்.அவர்களை ஆதரிக்கக் கூடிய ஆட்சியை ஏற்படுத்துங்கள். இனிக்க இனிக்க அடுக்கு மொழி பேசி நம்மை இளிச்ச வாயன்கள்
ஆக்குவோரை விரட்டுங்கள்.

திரைப் பின்புலம், உணர்ச்சிப் பேச்சி இவற்றை விட்டால் திரு.சீமானிடம் என்ன உள்ளது?

தேவன் said...

கவிஞர் திரு வாசுதேவன் அவர்களின் கருத்து//

தேவன்

நல்ல அரசியல் பார்வை.

இருக்கின்ற அரசியல் வாதிகள் எல்லாம் தமிழர் அல்ல! (ஜெயலலிதா அல்ல) என்று ஒரு பட்டியல், தமிழ்த் தேசியர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழர்கள் என்றால் அவர்கள் யார்? அவர்களின் தொன்மை வரலாற்றில் கிளைகளே இல்லையா? தமிழகத்தை தமிழர்களே ஆள வேண்டும்! என்பதற்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை!

இன்றைய தமிழகத்தை வைத்துக் கொண்டு தமிழர்கள்! தமிழர்கள் என்று கூறிக் கொண்டிருந்தால், பாரதப்போரில் சக்கர வியூகத்தில் நுழைந்த அபிமன்யூ கதையாக முடியும். காரணம்?

இந்தியா சுதந்திரம் பெற்று மொழிவழி மாநிலங்களைப் பிரித்த காங்கிரசு, தமிழர்களைப் பலியிட்டுள்ளது. எந்த நிலையிலும் அண்டை மாநிலத்தின் உதவியைப் பெற்றே வாழ வேண்டிய ”பிச்சை”களாக ஆக்கியுள்ளது.

’நீரின்றி அமையாது உலகு’ என்று தெரிந்தும், காவிரி, பெண்ணை, பாலாறு, வைகை,பொருணை எல்லாம் தமிழகத்தை விட்டு ஓடிவிட்டன.

நிலத்தடி நீரை மட்டுமே வைத்துக் கொண்டு வாழ வேண்டிய நிலை உறுதி செய்யப் பட்டுவிட்டது. தமிழரின் முதுகுத் தண்டாக விளங்கிய நதிகளெல்லாம் அண்டை நிலத்தின் ஆதிக்கத்திற்குள் அடங்கிவிட்டன.

கிடைக்க வேண்டிய உரிமைகள் அனைத்தையும் இழந்து விட்டு ’ஏதிலியர்’களாகிவிட்ட ஈழ மக்களைப் போல, தமிழகத்திலுள்ள தமிழர்களையும் ஆக்க நினைக்கின்றவர்கள் பலர் உருவாகி வருகின்றனர்.

தமிழ் தமிழர் என்று பேசுகின்றவர்கள் கட்சியிலிருக்கும் அனைவரும் தமிழர் தானா? என்பதை உறுதி செய்ய வேண்டும். அவர்கள் தமிழர் நலனைப் பாதுக்காக்கும் வல்லமை கொண்டவர்களா? என்பதைத் தெளிவு படுத்த வேண்டும்.

தமிழ் தமிழர் என்பவர்கள் “தேசியம்” என்னுஞ் சொல்லின் பொருள் என்னவென்று விளக்க வேண்டும்.

மரபுகளை மீட்டெடுக்கும் பணியைத் தொடங்க வேண்டும்! ஆட்சி என்பது ஒரு கருவி. ஆட்சியைக் கைப்பற்றினாலும் ஆட்சியை இயக்கும் ஆதிக்கமின்றி அல்லல் படநேரிடும்.

அரசியல் என்பது ஒரு வகையான சூதாட்டம்! அதில் வெற்றிபெறுவது என்பது எவ்வளவு கடினமோ அதைவிட கடினம் தோல்வியிலிருந்து மீள்வது!

தமிழர் வரலாற்றின் தோல்வியின் தடயங்களே மிகுதி! அதுவே தொடந்து கொண்டிருக்க எண்ணுவோர்களை அடையாளங் காண வேண்டும்.


இருக்கும் வரை தமிழ் அணையில்
அன்புடன்
இரவா

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...