Tuesday, September 18, 2012

உதயக்குமார் அவர்களுக்கு,நீங்கள் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை ஓராண்டு காலமாக அமைதியான முறையில் நடத்தி வந்ததை பாராட்டுகிறேன். நீங்கள் உங்கள் போராட்டம் குறித்து பேட்டிகளில் விளக்கம் கூறிய முறை என்னை கவர்ந்தது. உங்கள் போராட்டத்திற்காக அரசியல் தலைவர்களிடம் அறிவுரை கோரியது உங்கள் முதிர்ச்சியை காட்டியது.

உங்கள் போராட்டத்திற்கு ஆதரவளித்த உங்கள் தோழர்கள், கிராம மக்கள் அனைவரும் பாராட்டத் தக்கவர்களே. இவ்வளவு நீண்ட காலம் மக்களை ஒன்றுதிரட்டி போராடுவது முடியாத காரியம். எனவே உங்கள் போராட்டம் பாராட்டத் தக்கது. இருந்தாலும் அண்மையில் நடைபெற்ற தடியடி, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் விரும்பத் தாகாதவையாக அமைந்தன.

எனவேதான் நான் உங்கள் எதிர்கால போராட்டம் குறித்து பேச விரும்புகிறேன். நீங்கள் இதுநாள் வரை உங்களுக்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு அவர்களை மேலும் அலைக்கழிக்காத வகையில் உங்கள் போராட்ட முறையை திட்டமிட்டால் நல்லது என்று நினைக்கிறேன்.

ஆளும் கட்சிகளாக உள்ள அதிமுக, திமுக இரண்டுமே அணுஉலைக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில் உங்கள் போராட்டத்தை எவ்வாறு முந்நகர்த்துவீர்கள் என்ற கேள்வி எழுகிறது. மாநிலத்தில் ஆட்சி செய்யும் அதிமுக, முதலில் மக்களின் சந்தேகம் தீர்க்கப்பட வேண்டும் என்று சொல்லிவிட்டு பின்னர் சாதுர்யமாக ஒரு குழுவை அமைத்து தனது நிலையை மாற்றிக் கொண்டது. அதேபோல மத்திய அரசாங்கத்தில் சகல பதவிகளையும் பெற்றுள்ள திமுக அணுஉலையைப் பற்றி கவலைப்படாமல் உள்ளது.

எனவே இந்த இரண்டு கட்சிகளும் ஆதரவு தெரிவிக்காத நிலையில், நீங்கள் மாநிலத்தில் உள்ள மற்ற கட்சிகள், இயக்கங்களின் ஆதரவை பெறாமல் உங்கள் இலக்கை அடைய முடியாது. அதாவது அணுஉலையை ஒன்றும் செய்ய முடியாது.
அப்படி இருக்கும்போது நீங்கள் மக்களிடம் உங்களுக்குள்ள ஆதரவை அரசியல் அதிகாரமாக மாற்றலாம். அதன் மூலம் நீங்கள் தேர்தலில் போட்டியிட்டு ஒரு சட்டமன்ற உறுப்பினர், அல்லது பாராளுமன்ற உறுப்பினராகலாம். அவ்வாறு தேர்தலில் வெற்றிபெற்றால் நீங்கள் உங்கள் போராட்டத்தை தமிழகம் முழுவதும், ஏன் இந்தியா முழுவதும் எடுத்துச் செல்லலாம். அதுவே ஒரு வெற்றியாக அமையும்.

நிலம் பெறப்பட்டபோது என்ன வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படுகிறதா? அணுஉலையில் பணிபுரிவோர் எப்பகுதியை சேர்ந்தவர்கள்? தமிழகத்தை சேர்ந்தோர் எத்தனை சதவீதம்? அணுஉலை எவ்வாறு செயல்படுகிறது? அங்கு ஏதாவது விபத்து ஏற்படுகிறதா? அந்த விபத்து மறைக்கப்படுகிறதா? கிராம மக்களின் ஆரோக்கியத்தை கண்காணிப்பது, காப்பீடு பெற்றுத் தருவது என நீங்கள் உங்கள் குறைந்தபட்ச இலக்குக்களை நிர்ணயித்து அவற்றை அடைய போராடலாம்.

அதேபோல நீங்கள் சூரியசக்தி மின் நிலையங்களை அமைத்து காட்டலாம். அந்த கூடங்குளத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் பத்து வீடுகளுக்கு ஒன்று என்ற கணக்கில் அமைத்தீர்களானால் அதுவே அணுஉலைக்கு விடும் சவாலாக அமையும்.

மக்கள் சக்தியை அரசியல் சக்தியாக, ஆக்க சக்தியாக மாற்றுவீர்களானால் அது அணுஉலை ஆதரவு அரசியல்வாதிகளை கரியை பூசுவது போல இருக்கும். ஏதோ நான் உங்கள் அளவுக்கு ஒரு போராளியாக இல்லாவிட்டாலும் எனக்குப் பட்டதை சொல்லிவிட்டேன்.

நன்றி, வணக்கம்.
அன்புடன்
அ.பெருமாள் தேவன்.

4 comments:

இரா.பார்த்தசாரதி said...

வணக்கம் அண்ணன்... முதலில் உதயகுமார் அண்ணன் உங்கள், எண்ணங்களை ஏற்பார் என்று நீங்கள் நினைத்ததற்கு ஒரு சபாஷ். இந்த நாட்டின் மாபெரும் அறிவியாலலர்களுக்கே அறிவில்லை என்று சொன்ன மனிதர் அவர். திமுக, அதிமுக ஆதரவு அவருக்கு கிடைப்பதற்கான சாத்திய கூறுகள் கிடையாது. ஏன்?. இன்று அவருடன் நின்று நீட்டிமுழக்கும் வைகோ கூட, நாளை ஆட்சிக்கு வந்தால், அணுசக்திக்கு ஆதராவாக பேசித்தான் ஆகவேண்டும். அப்படித்தான் இருக்கிறது நம் நாட்டு நிலைமை. இயற்கை எதிர்பாராத மாபெரும் தாக்குதலை, சப்பானில் நடத்தி விட்ட போதும் கூட, கதிர்வீச்சால் உயிரிழந்த மனிதர்கள் யாரும் கிடையாது. ஆனால் அனாவசியமாக ஒரு போராட்டம் நடத்தி, இரண்டு உயிர்களை காவு வாங்கிய பெருமை அண்ணன் உதயகுமாரை சாரும். ஆனால் என்ன பரிதாபம்.. அதற்கும் நீங்கள் காவல் துறையையே குறை சொல்கிறீர்கள். சூரிய ஒளி மின்சாரம் அமையுங்கள் என்ற உங்களது கோரிக்கை, இந்த நாட்டின் மின்தேவை குறித்தும், அதற்கு நம்மிடம் இருக்கும் வளங்கள் குறித்துமான உங்கள் புரிதலை எனக்கு காட்டுகிறது. அது குறித்து நான் மேலும் பேச விரும்பவில்லை. நீங்கள் சொல்லும் குறைந்த பட்ச இலக்குகள் எல்லாம், கேட்கப்பட்டு, அதற்கு பதில்களும் சொல்லப்பட்டு விட்டன. ஒரு காலத்தில் மக்கள் போராட்டமாகத்தான் இருந்தது. ஆனால் எப்போதும் மக்களை ஏமாற்ற முடியாது. அதனால் மெல்ல, தமிழர்கள் போராட்டமாகி, இன்று தமிழர்களிலும் ஒரு பிரிவினரின் போராட்டமாகி நிற்கிறது. போராடுவதாலோ, போராட்டத்துக்கு அதன் மூல காரணத்தை விட்டுவிட்டு வேறு சில உணர்வுகளை தூண்டி விட்டு ஆள்சேர்த்து நிற்பதாலோ, ஒரு மனிதன் போராளி ஆகிவிட மாட்டான். என்ன காரணம் பற்றி அவன் போராட வந்தான் என்பதும், அந்த காரணத்தில் நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது செய்யும் சிந்தை இருந்ததா என்பதும் தான், அவனை போராளி என்னும் தகுதிக்கு உயர்த்து. உதயகுமார் அண்ணனை நீங்கள் போராளி என்று சொல்வது, அந்த பதம் குறித்த உங்கள் புரிதலில் ஐயம் கொள்ள செய்கிறது. நீங்கள் சொல்லும் குறைந்த பட்ச இலக்குகள் நியாயம் ஆனவை. ஆனால் அதையும் இழந்து இந்த போராட்டம் முடியப்போகிறது என்பதுதான் நிதர்சனம். அறிவுள்ளவன் என்று அடுத்த நாட்டுக்காரர்களை புகழ்ந்து பேசியே நமக்கு பழக்கம். ஆனால் அதே சப்பான் காரன் தன்னாட்டுக்கு தேவையான மின்சாரத்தின் பெரும் பகுதியை அணுசக்தி மூலமாகத்தான் பெறுகிறான் என்பதை நாம் சிந்திதுக்கூட பார்ப்பது கிடையாது. மாற்று எரிபொருள் குறித்து இன்றைய சூழ்நிலையில் சிந்திக்க, ஒரு உற்பத்தி தன்னிறைவு வேண்டும். அது இல்லாமல் முடியாது. அதற்கான காரணங்கள் பல. குஜராத் தன்னிறைவு பெற்ற காரணத்தால் மாற்று எரிபொருள் குறித்து சிந்திக்கிறது. அணுஉலை அமைக்க, இடம் தேடி தருவதிலும், அணுமின் கழகத்துக்கு மிகுந்த சகாயங்கள் செய்வதிலும் குஜராத்து அரசு போல செயல்பட முடியாது. கட்டுமானம் நடக்கும் இரண்டு அணு உலைகளை, வேகமாக கட்டச்சொல்லி அரசு நெருக்கடி தருகிறது. அவன் மாநிலத்தை வளர்க்க நினைக்கிறான். நாம் சாதி சொல்லி, மதம் சொல்லி, தமிழ் சொல்லி, நம் மாநிலத்தை தாழ்த்த நினைக்கிறோம். இந்த துயரத்துக்கு நீங்களும் துணை போனது எனக்கு வியப்பு. நன்றி.

தேவன் said...

திரு. பார்த்தசாரதி அவர்களுக்கு,

உங்கள் மேலான கருத்துக்களுக்கு நன்றி.

எந்தவொரு காரணத்திற்காகவும் நீண்டகாலமாக போராடினால் போராளியே. அந்தவகையில்தான் உதயக்குமாரை ஒரு போராளி என்று குறிப்பிட்டேன்.

மற்றவகையில் அவரது உள்நோக்கங்கள் குறித்து எனக்குத் தெரியாது. ஒருவேளை அவருக்கு உள்நோக்கங்கள் இருந்தால் அவரால் நீண்டகாலம் களத்தில் நிற்க முடியாது.

அணு உலையைப் பொறுத்தவரை நான் கடுமையாக எதிர்க்கிறேன். அபாயம் நிறைந்த இந்த வேலையை மனிதாபிமானமிக்க சமுதாயம் செய்யாது.

மாற்று மின் ஆதாரங்களில் உடனடியாக பெருமளவு மின்சாரத்தை எடுத்துவிட முடியாது. ஒரு துளி தேனிற்கு எத்தனை பூவிலிருந்து தேனை சேகரிக்கிறது என்பது அந்த தேனீக்குத்தான் தெரியும்.

மாற்று ஆதாரங்களைப் பற்றி சிந்திக்கவே ஆரம்பிக்காத காலத்தில் என்னவென்று சொல்வது? வாழ்க பாரத தேசம். இது உலகையே சமாதான வழிக்கு அழைத்துச் செல்லும்.

இரா.பார்த்தசாரதி said...

வணக்கம் அண்ணன்...நீண்ட காலம் போராடினால் அவன் போராளி என்று சொல்வது எந்த வகை நியாயம் என்று எனக்கு புரியவில்லை. இதிலோ இந்த போராட்டம் இடையில் நிறுத்தப்பட்ட சரித்திரம் கூட உண்டு. ஒரு நியாயமான கருத்துக்கு ஒருவன், கூட்டம் சேர்த்து போராடி, அதை நியாயம் என்றும் உலகம் உணர்ந்து, அவன் வெகுசீக்கிரம் வென்றுவிட்டால், அவனை என்ன சொல்வீர்கள். சீக்கிரமாகவே அவன் போராட்டம் ஆதிக்கசக்திகளால் முடக்கப்பட்டால், அவன் போராளி ஆக மாட்டானா?. இதற்கு பல உதாரணங்கள் கூட என்னால் சொல்ல முடியும். அது குறித்த ஆய்வு இருக்கட்டும் ஒருபுறம்.

அணு உலையை நீங்கள் எதிர்ப்பதாக சொல்கிறீர்கள். ஏன்?. எப்போதில் இருந்து இந்த தெளிவு உங்களுக்கு வந்திருக்கலாம் என்பதெல்லாம் எனக்கு உங்களிடம் கேட்க இருக்கும் கேள்விகள். கூடங்குளம் தொடங்கும் முன்னர், இதே தமிழகத்தில், இரண்டு அணு உலைகள் இயங்குகிறது என்பது உதயகுமார் அண்ணனுக்கோ, உங்களுக்கோ தெரியாமல் போனது எப்படி?. இன்னும் ஓர் அணு உலை கட்டப்பட்டு வருகிறது என்பதையாவது நீங்கள் அறிந்து வைத்திருக்கிறீர்களா?. அங்கே சென்று ஏன் போராட்டம் நடத்த வில்லை. தமிழகத்திலே கூட, வடதமிழன் மீது துவேசமும், தென்தமிழன் மீது பாசமும் இருக்க முடியுமா என்ன?.

அணுமின் நிலையத்தை அபாயம் நிறைந்தது என்று எதை வைத்து நீங்கள் சொல்கிறீர்கள்?. ஏனென்றால் இந்தியா முழுவதும் இருபது இடங்களில் அணுமின்நிலையம் இயங்கி வருகிறது. அதில் எல்லாம் பால்லாயிர கணக்கில் பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு மனிதாபிமானம் இல்லை என்ற குற்றச்சாட்டு நீங்கள் வைத்திருப்பதால், நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் மனிதாபிமானம் இல்லாத அந்த கூட்டத்தில் அடியேனும் ஒருவன் என்பதால், இதற்கு எதிர்வினை எனது கடமை ஆகிறது. சுற்றுப்புற மனிதன் மீது, தமிழன் நல்லபிமானம் இழந்து எத்தனை ஆண்டுகள் ஆயின என தெரியாதாயினும், அது வெளியே தெரிய வந்து, நான்கு ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஈழத்தில் இனத்தின் பெயராலே கொலை நடந்தபோது, கைகட்டி, மெய்பொத்தி, நம் இனஉணர்வை உலகுக்கு உணர்த்திய உத்தமர்கள் நாம். ஆனால் ஒருவன் தன் குடும்பத்தின் மீது கூட, ஏன்?, தன் மீது கூட பாசம் இல்லாதவனாக இருப்பான் என்பது என்னால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சுயநலம் துறந்து, தேச சேவை செய்வதற்கா இங்கே பணியாற்றுகிறார்கள், இருக்காது என்று நீங்கள் நம்பினால், மனிதாபிமானம் இல்லாத செயல் எனும் சொல் அடிபட்டு போகும்.

மற்ற ஆதாரங்கள் குறித்து நாம் ஏன் சிந்திக்கவில்லை. அதற்கு என்ன காரணம்?. எல்லா வகைகளிலும் இன்று இந்தியாவில் மின் உற்பத்தி உண்டு. சொல்லப்போனால் அனுசக்திதான் குறைவானது அதில். முழுக்க முழுக்க அணுசக்தியை நோக்கி நம் நாட்டு பயணம் இல்லை.

வெளிநாட்டு காரர்கள் மாற்று எரிபொருள் குறித்து சிந்திக்கிறார்கள். நாமும் சிந்திக்கலாம். ஆனால் யாருக்கு சிந்திக்க முடியும் தெரியுமா அண்ணன்?. சாப்பாடு இருப்பவனுக்குத்தான். நன்றாக சாப்பிட்டுவிட்டு இருப்பவன் தான், அடுத்தவன் குறித்தோ, உலகம் குறித்தோ சிந்திக்க முடியும். அவனுக்குத்தான் நேரம் இருக்கும். இது எல்லா நாட்டுக்கும் பொருந்தும். மட்டுமல்லாமல் அப்படி சிந்திக்க அடிப்படை தேவை கூட, இதே மின்னாற்றல் தான். இருட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு சிந்திக்க முடியாது. இந்தியா இன்றைய நிலையில், மின் உற்பத்தியில் ஏழையாக இருக்கிறது. தன்னிறைவு பெறுவதற்கு விடுங்கள். அப்புறம் சிந்திக்கலாம். அதற்குத்தான் நான் குஜராத்தை எடுத்துக்காட்டுக்கு சொன்னேன்.

உள்நோக்கங்கள் இருந்தால் களத்தில் நிற்க முடியாது என்று நீங்கள் சொல்வது உண்மை. அப்படி நிற்க முடியாமல் போனதும் உண்மை. அதற்கு பிறகுதான் போராட்டம் தமிழர் போராட்டமாக, காங்கிரஸ் எதிர்ப்பு போராட்டமாக, ஈழ ஆதரவு போராட்டமாக, இன்னும் ஒரு குறுகிய வட்டத்தை ஈர்க்கும் போராட்டமாக எல்லாம் மாறியது. மாற்றப்பட்டது. இன்று அவர்களே கூட அதிகமாக அணுசக்தி ஆபத்து குறித்து பேசுவது இல்லை. போராடுகிறோம், அதனால் பதில் சொல்லுங்கள் என்பது மாதிரி ஆக்கிவிட்டார்கள். உங்களை மாதிரி என்ன காரணம் ஆனாலும் போராடினால், அவன் போராளி என்று சிந்திப்பவர்களுக்கு அவர் பெரிய மனிதர் ஆகிவிட்டார்.

நிறைவாக ஒன்றை சொல்கிறேன். அணுமின்சக்தி ஆபத்து நிறைந்தது அல்ல. இந்த நாட்டில் கல் தடுக்கி விழுந்து ஒருவன் செத்துப்போகும் வாய்ப்பை விட, ஆபத்து வாய்ப்பு குறைந்தது அணுமின் நிலையங்கள். நன்றி.

ஆபத்து இதன் காரணத்தால் என்று நீங்கள் சொன்னால், தொடர்ந்து விவாதம் நடத்தலாம். ஒரு தம்பியாக உங்களுக்கு சொல்ல வேண்டியது என் கடமை. நன்றி அண்ணன்...