Monday, September 3, 2012

ஜெவும் கருணாநிதியும் யாருக்கு அஞ்சுகிறார்கள்?தமிழக அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளைப் பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது. குறிப்பாக மற்ற மாநில அரசியல்வாதிகளுடன் ஒப்பிடுகையில் வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது.

ஒரு அரசியல் தலைவர் என்பவர் தன்னை தேர்ந்தெடுக்கும் அல்லது தான் சார்ந்திருக்கும் மக்களுக்கு பொறுப்பு வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்கே அந்த தலைவர்கள் அஞ்சுபவர்களாக இருக்க வேண்டும். அதுவே அரசியல் நீதி. ஆனால் இங்கு நிலை மாறாக உள்ளது.

அண்டை மாநிலமான கர்நாடக அரசியல்வாதிகள் மீண்டும் மீண்டும் காவிரி நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறி வருகின்றனர். இவர்கள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தாலும் மீறுவார்கள் என்றே தெரிகிறது. அதேபோல கேரள அரசியல்வாதிகள் முல்லைப் பெரியாறு பிரச்சனையில் நடுவர் நீதி மன்றத்தின் உத்தரவுகளை துச்சமாக மதித்து வருகின்றனர்.

இந்த இரண்டு மாநில அரசியல்வாதிகளும் மாநில அளவிலான பிரச்சனைகளில் உச்ச நீதிமன்றத்தையும் தூக்கி எறிய தயாராக உள்ளனர். அது இந்திய நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தையே கேள்விக் குறியாக ஆக்குவதாக இருந்தாலும் அதற்கு அவர்கள் தயாராக உள்ளனர்.

மஹாராஷ்டிராவில் சில தினங்களுக்கு முன்பு எந்தவித அனுமதியும் வாங்காமல் பேரணியையும் பொதுக் கூட்டத்தையும் நடத்திக் காட்டினார் நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரே. மத்திய - மாநில அரசுகள் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 144, 149-ன் கீழாக அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்கலாம். அதேபோல தீஸ்தா நதிநீர் பகிர்வை மம்தா பானர்ஜி தூக்கி எறிகிறார். மத்திய அரசு அவருக்கு பயந்து அந்த திட்டத்தை கிடப்பில் போடுகிறது.

ஆனால் செத்துப்போன டெசோ மாநாட்டை நடத்திய தானைத் தலைவர் என்னென்ன கூத்துப் பண்ணினார்? அந்த மாநாட்டுக்கு எதற்காக உள்துறை, வெளியுறவுத்துறையிடம் அனுமதி கோரினார் என்று தெரியவில்லை. இந்தியாவில் எந்த கட்சியாவது உள்துறையிடம் அனுமதி பெற்று மாநாடு நடத்தியதா என்று தெரியவில்லை. இதில் என்ன ராசதந்திரம் இருக்கிறதோ தெரியவில்லை. ஈழம் என்ற வார்த்தைக்கு அனுமதி மறுக்கப்பட்ட கூத்தும் அரங்கேறியது.

அதேபோல ஜெயலலிதா அவர்கள் பரமக்குடியில் துப்பாக்கிச் சூட்டை நடத்தினார். முல்லை பெரியார் பிரச்சனையில் போராடியவர்கள் மீது போலீஸை ஏவினார். சேலம் நெய்க்காரப் பட்டியில் தடியடி என்ற மனிதத் தன்மையற்ற செயலை அரங்கேற்றினார்.

ஏனெனில் அவருக்கு எருதாட்டத்தைவிட விலங்குகள் வதைச் சட்டத்தை அமல்படுத்துவதுதான் முக்கியமானதாக தெரிந்தது. இவர்களுக்கு தமிழர்களின் உணர்வை, வாழ்க்கையை பற்றி கவலை இல்லை. தங்கள் ஆட்சியை மத்திய அரசு கலைத்துவிடக் கூடாது என்பதுதான் கவலை. அதற்காகத்தான் இவர்கள் சட்ட ஒழுங்கு என்ற பிரச்சனையே எழுந்துவிடக் கூடாது என்று பார்த்துக்கொள்ள விரும்புகிறார்கள்.

இதற்கு இவர்கள் தமிழர் அல்லாதவராக இருப்பதும் ஒரு காரணம். மக்களுக்கு என்ன ஏற்பட்டால் என்ன? தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள். அதுதான் உணர்வு. தமிழர்களோடு ஒட்டும் உறவும் இல்லாத இவர்களுக்கு ஏன் தசை ஆட வேண்டும்? இவர்களுக்கு தமிழனின் உரிமை போனாலும் கவலையில்லை. உயிர் போனாலும் கவலையில்லை. இவர்களைப் பொறுத்தவர் தமிழகம் ஒரு அதிகார - பணப் பட்டறை.

எனவே, இவர்கள் மத்திய அரசுக்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 356 வது பிரிவுக்கும்தான் அஞ்சுகிறார்களே தவிர தமிழ் மக்களுக்கு அல்ல. தங்கள் பதவி, அதிகாரத்திற்காக எதையும் செய்வார்களே தவிர மக்கள் நலனுக்காக எதையும் செய்ய மாட்டார்கள்.  ஒருவேளை இந்த 356 வது பிரிவை நீக்கிவிட்டால் மக்களுக்காக செயல்படுவார்களோ என்னவோ?
••••••••

4 comments:

Tamilkural said...

// ஆனால் செத்துப்போன டெசோ மாநாட்டை நடத்திய தானைத் தலைவர் என்னென்ன கூத்துப் பண்ணினார்? அந்த மாநாட்டுக்கு எதற்காக உள்துறை, வெளியுறவுத்துறையிடம் அனுமதி கோரினார் என்று தெரியவில்லை. இந்தியாவில் எந்த கட்சியாவது உள்துறையிடம் அனுமதி பெற்று மாநாடு நடத்தியதா என்று தெரியவில்லை. // மாநாட்டிற்கு வரும் வெளிநாட்டு விருந்தினர்களுக்கு மாநாட்டிற்கான விசா(கான்ஃபரன்ஸ் விசா) பெற உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை அனுமதி தேவை....கொஞ்சம் விசயம் தெரிந்து, அறிந்து விமர்சியுங்கள்....நன்றி!

தேவன் said...

வெளிநாட்டிலிருந்து வருபவருக்கு விசா கொடுப்பதும் கொடுக்காததும் வெளியுறவுத்துறை பாடு. அதற்கு எதுக்கு நீங்க அங்க விண்ணப்பிக்கிறீங்க?

Unknown said...

நல்ல அலசல்... நிதர்சனமும் கூட...

thangamari said...

இதற்கு இவர்கள் தமிழர் அல்லாதவராக இருப்பதும் ஒரு காரணம். மக்களுக்கு என்ன ஏற்பட்டால் என்ன? தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள். அதுதான் உணர்வு. தமிழர்களோடு ஒட்டும் உறவும் இல்லாத இவர்களுக்கு ஏன் தசை ஆட வேண்டும்? இவர்களுக்கு தமிழனின் உரிமை போனாலும் கவலையில்லை. உயிர் போனாலும் கவலையில்லை. இவர்களைப் பொறுத்தவர் தமிழகம் ஒரு அதிகார - பணப் பட்டறை.