Saturday, July 20, 2013

எங்கள் ஊர் கள்ளர் பள்ளி

இது எங்கள் ஊரில் (தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், தேவதானப்பட்டி கிராமம்) உள்ள அரசு கள்ளர் பள்ளி. இந்தப் பள்ளி 1923ம் ஆண்டு துவக்கப்பட்டது. 

நான் படித்ததும் என் தந்தை (வயது 84) படித்ததும் இந்தப் பள்ளிதான். 90 ஆண்டுகளை நிறைவு செய்த இந்தப் பள்ளி தற்போது மூடும் நிலையை அடைந்துள்ளது. 

மக்களின் ஆங்கிலக் கல்வி மோகத்தால் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்த இந்தப் பள்ளியில் தற்போது வெறும் 30க்கும் குறைவான மாணவர்கள்தான் படிக்கிறார்கள். 

மாணவர்கள் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. எனவே இந்த பள்ளியை மூடவிடாமல் செய்ய, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பிரமலைக் கள்ளர் கல்வி அறக்கட்டளையை நிறுவ முடிவு செய்துள்ளோம். 


கடந்த 14/07/2013 அன்று நடந்த சமுதாயக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அடுத்த ஆண்டு முதல் பிரி கேஜி, எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை ஆரம்பிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Tuesday, July 9, 2013

ஆன்மீக நடைபயணத்தில் யார் - எவ்வாறு கலந்துகொள்ளலாம்

அன்பு நண்பர்களே,

தேவர் குருபூஜையை அமைதியாக நடத்தக் கோரி ஆன்மீக நடைபயணம் நடத்த இருப்பதை அறிவித்ததும் பலரும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் எப்போது வருவீர்கள், நாங்கள் என்ன உதவி செய்ய வேண்டும், நாங்கள் எப்படி கலந்துகொள்வது என்று விசாரித்து தங்களின் பேராதரவை தெரிவித்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே, இந்த தகவலுடன் ஆன்மீக நடைபயணத்தி

ற்கான தோராயமான வரை படத்தை இணைத்திருக்கிறேன். இன்னமும் இந்தப் பாதை இறுதி செய்யப்படவில்லை. ஒவ்வொரு வட்டம், மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பகுதியில் எந்தப் பாதையில் செல்வது இந்தப் பயணம் பயன் மிக்கதாக இருக்கும் என்பதை தெரிவித்தால் அதற்கேற்ப இந்தப் பாதையை மாற்றி அமைத்துக்கொள்ளலாம் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே, தோராயமாக 2000 கி.மீ. நீளமுள்ள இப்பாதையை 75 நாட்களில் கடக்கத் திட்டமிட்டுள்ளோம். ஒரு நாளில் குறைந்தபட்சம் 30 கிமீ தூரத்தை கடக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பயணத்தை இறுதி செய்வதற்கு முன்னதாக இதில் யார் கலந்துகொள்ளலாம்? எவ்வாறு கலந்துகொள்ளலாம்? எவ்வாறு உதவலாம்? என்பதை விவரிக்க விரும்புகிறேன்.

யார் - எவ்வாறு கலந்துகொள்ளலாம்?
1. இந்தப் பயணத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கண்டிப்பாக 18 வயது நிறைவடைந்தவர்களாக, 45 வயதுக்கும் அதிகமில்லாதவர்களாக இருக்க வேண்டும்.

2. பங்குபெறுபவர்கள் தன்னிச்சையாகவே பங்கேற்க வேண்டும், யாரையும் பங்கேற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட மாட்டாது.

3. மாணவர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

4. கலந்துகொள்ள விரும்புபவர்கள் அனைவரும் கண்டிப்பாக முன் அனுமதி பெற வேண்டும்.

5. கலந்துகொள்ள விரும்புபவர்கள் அனைவரும் கண்டிப்பாக ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, கடவுச் சீட்டு போன்ற அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டை வைத்திருப்பவராக இருக்க வேண்டும்.

6. கலந்துகொள்ள விரும்புபவர்கள் அனைவருக்கும் முன்னதாக ஒரு படிவம் அளிக்கப்படும் அதில் அவர்களின் புகைப்படத்தை ஒட்டி அதில் கேட்கப்படும் விவரங்களை நிரப்பித் தரவேண்டும்.  

7. வேலை பாதிக்கப்படுவது, சம்பள இழப்பு ஏற்படும் நிலையில் உள்ளவர்கள் பங்கேற்கக் கூடாது.

8. தான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தனது வேலை, தொழில் சிறப்பாக நடைபெறும் என்ற நிலையில் உள்ளவர்கள் பங்கேற்கலாம்.

9. இந்தப் பயணத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் ஒருநாள் முழுவதுமாக பங்கேற்க வேண்டும். அதாவது 30 கி.மீ. தூரம் வரை பயணத்தில் கலந்துகொள்ள வேண்டும். அவ்வாறு கலந்துகொள்பவர்கள் மட்டுமே இந்த பயணத்தில் கலந்துகொள்பவர்களாக கருதப்படுவர். அவ்வாறு கலந்து கொள்பவர்களுக்கு இறுதியில் ஆன்மீக நடைபயணத்தில் பங்கேற்றதற்கானச் சான்றிதழ் வழங்கப்படும்.

10. அதற்கும் மேலாக, 3, 7, 11, 15 நாட்கள், ஒரு மாதம், இரண்டு மாதம் அல்லது பயண இறுதி வரை என்ற கால அளவிலும் கலந்து கொள்ளலாம்.

11. இதில் ஒரு மாதம், இரண்டு மாதம் அல்லது பயண இறுதி வரை கலந்து கொள்பவர்கள் கண்டிப்பாக பயணத் துவக்கத்தில் நடைபெறும் திருப்பணி அர்ப்பணிப்பு நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும். அதாவது அவர்கள் துறவு மேற்கொள்வது போல தலையை மொட்டையடித்து, மஞ்சள் ஆடை அணிந்துகொள்ள வேண்டும். பயணம் நிறைவடையும் வரை சவரம் செய்ய அனுமதிக்கப்படாது.

12. நடை பயணத்தில் ஒரு நாள் பங்கேற்பவராக இருந்தாலும் அவர் மஞ்சள் நிற ஆடை அணிந்து வரவேண்டும்.

13. மஞ்சள் நிற ஆடையில் எந்தவித எழுத்துக்களோ, அடையாளங்களோ இல்லாமல் பார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதில் ஜிப்பா, சட்டை, வேட்டி, பேன்ட் அனிந்துகொள்ளலாம்.

14. அதேபோல நடைபயணத்தின்போது புகைப்பிடித்தல், மது அருந்துதல், வேறு எந்த வகையிலான போதைப் பழக்கங்களிலும் ஈடுபடாதவராக இருக்க வேண்டும்.

15. முக்கியமாக நடை பயணத் திட்டக் குழுவின் ஆணைகளுக்கு கீழ்ப்படிந்து செயல்படக் கூடியவராக இருக்க வேண்டும்.

மேலும் ஏதாவது விவரம் தேவைப்படுபவர்கள் 9047440542-ல் என்னைத் தொடர்புகொள்ளலாம்.

நன்றி.





Wednesday, July 3, 2013

தேவர் குருபூஜையை அமைதியாக நடத்தக் கோரும் ஆன்மீக நடைபயணம்


பாசத்திற்குரிய உறவினர்களே, அன்புக்குரிய நண்பர்களே, மரியாதைக்குரிய பெரியோர்களே! 

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ம் தேதி பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவருக்கு குருபூஜை நடத்தப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. அண்மைக் காலமாக இந்த குருபூஜையின்போது விரும்பத் தகாத சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. 

எனவே இந்த குருபூஜையை அமைதியாக நடத்த வேண்டுகோள் விடுத்து, அந்த தேவர் பெருமகனார் மற்றும் பெரியோர்களின் நல்லாசியுடன் ஆன்மீக நடைபயணம் நடத்த திட்டமிட்டுள்ளேன். ஆகஸ்டு 15ம் தேதி பசும்பொன்னில் ஆரம்பிக்கும் இந்த பயணம் தென் மாவட்டங்கள் வழியாக சென்று இறுதியில் பசும்பொன்னில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த பயணத்தில் கமுதி, முதுகுளத்தூர், சாயல்குடி, தூத்துக்குடி, திருச்செந்தூர், திருநெல்வேலி, தென்காசி, சங்கரன் கோவில், ராஜபாளையம், சிவகாசி, வத்திராயிருப்பு, பேறையூர், திருமங்கலம், மதுரை, உசிலம்பட்டி, தேனி, பெரியகுளம், வத்தலக்குண்டு, திண்டுக்கல், பழனி, கரூர், திருச்சி, கும்பகோணம், நாகபட்டினம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களின் வழியே செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. 

பயணத்திற்கான வழித்தடங்களை தீர்மானிக்க அந்தந்தப் பகுதியைச் சேர்ந்தோர் ஆலோசனை வழங்கி உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

இந்த பயணத்தில் தேவர் குருபூஜைக்கு வருவோருக்கு தேவரைப் பற்றிய விழிப்புணர்வும், பூஜைக்கு அமைதியாக வந்து செல்ல வேண்டிய அவசியம் பற்றியும் வலியுறுத்தப்படும். இந்த பயணத்திற்கு அனைவரும் நல்லாதரவு தருமாறு கோருகிறேன். இந்தப் பயணம் பற்றி அதிகம் அறிய விரும்புவோர் 9047440542 என்ற எண்ணில் என்னை தொடர்புகொள்ளலாம். 

இப்படிக்கு
உங்கள் அன்பன்
அ. பெருமாள் தேவன்

தேவர் குருபூஜையை அமைதியாக நடத்தக் கோரும் ஆன்மீக நடைபயணம்