Tuesday, July 9, 2013

ஆன்மீக நடைபயணத்தில் யார் - எவ்வாறு கலந்துகொள்ளலாம்

அன்பு நண்பர்களே,

தேவர் குருபூஜையை அமைதியாக நடத்தக் கோரி ஆன்மீக நடைபயணம் நடத்த இருப்பதை அறிவித்ததும் பலரும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் எப்போது வருவீர்கள், நாங்கள் என்ன உதவி செய்ய வேண்டும், நாங்கள் எப்படி கலந்துகொள்வது என்று விசாரித்து தங்களின் பேராதரவை தெரிவித்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே, இந்த தகவலுடன் ஆன்மீக நடைபயணத்தி

ற்கான தோராயமான வரை படத்தை இணைத்திருக்கிறேன். இன்னமும் இந்தப் பாதை இறுதி செய்யப்படவில்லை. ஒவ்வொரு வட்டம், மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பகுதியில் எந்தப் பாதையில் செல்வது இந்தப் பயணம் பயன் மிக்கதாக இருக்கும் என்பதை தெரிவித்தால் அதற்கேற்ப இந்தப் பாதையை மாற்றி அமைத்துக்கொள்ளலாம் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே, தோராயமாக 2000 கி.மீ. நீளமுள்ள இப்பாதையை 75 நாட்களில் கடக்கத் திட்டமிட்டுள்ளோம். ஒரு நாளில் குறைந்தபட்சம் 30 கிமீ தூரத்தை கடக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பயணத்தை இறுதி செய்வதற்கு முன்னதாக இதில் யார் கலந்துகொள்ளலாம்? எவ்வாறு கலந்துகொள்ளலாம்? எவ்வாறு உதவலாம்? என்பதை விவரிக்க விரும்புகிறேன்.

யார் - எவ்வாறு கலந்துகொள்ளலாம்?
1. இந்தப் பயணத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கண்டிப்பாக 18 வயது நிறைவடைந்தவர்களாக, 45 வயதுக்கும் அதிகமில்லாதவர்களாக இருக்க வேண்டும்.

2. பங்குபெறுபவர்கள் தன்னிச்சையாகவே பங்கேற்க வேண்டும், யாரையும் பங்கேற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட மாட்டாது.

3. மாணவர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

4. கலந்துகொள்ள விரும்புபவர்கள் அனைவரும் கண்டிப்பாக முன் அனுமதி பெற வேண்டும்.

5. கலந்துகொள்ள விரும்புபவர்கள் அனைவரும் கண்டிப்பாக ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, கடவுச் சீட்டு போன்ற அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டை வைத்திருப்பவராக இருக்க வேண்டும்.

6. கலந்துகொள்ள விரும்புபவர்கள் அனைவருக்கும் முன்னதாக ஒரு படிவம் அளிக்கப்படும் அதில் அவர்களின் புகைப்படத்தை ஒட்டி அதில் கேட்கப்படும் விவரங்களை நிரப்பித் தரவேண்டும்.  

7. வேலை பாதிக்கப்படுவது, சம்பள இழப்பு ஏற்படும் நிலையில் உள்ளவர்கள் பங்கேற்கக் கூடாது.

8. தான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தனது வேலை, தொழில் சிறப்பாக நடைபெறும் என்ற நிலையில் உள்ளவர்கள் பங்கேற்கலாம்.

9. இந்தப் பயணத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் ஒருநாள் முழுவதுமாக பங்கேற்க வேண்டும். அதாவது 30 கி.மீ. தூரம் வரை பயணத்தில் கலந்துகொள்ள வேண்டும். அவ்வாறு கலந்துகொள்பவர்கள் மட்டுமே இந்த பயணத்தில் கலந்துகொள்பவர்களாக கருதப்படுவர். அவ்வாறு கலந்து கொள்பவர்களுக்கு இறுதியில் ஆன்மீக நடைபயணத்தில் பங்கேற்றதற்கானச் சான்றிதழ் வழங்கப்படும்.

10. அதற்கும் மேலாக, 3, 7, 11, 15 நாட்கள், ஒரு மாதம், இரண்டு மாதம் அல்லது பயண இறுதி வரை என்ற கால அளவிலும் கலந்து கொள்ளலாம்.

11. இதில் ஒரு மாதம், இரண்டு மாதம் அல்லது பயண இறுதி வரை கலந்து கொள்பவர்கள் கண்டிப்பாக பயணத் துவக்கத்தில் நடைபெறும் திருப்பணி அர்ப்பணிப்பு நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும். அதாவது அவர்கள் துறவு மேற்கொள்வது போல தலையை மொட்டையடித்து, மஞ்சள் ஆடை அணிந்துகொள்ள வேண்டும். பயணம் நிறைவடையும் வரை சவரம் செய்ய அனுமதிக்கப்படாது.

12. நடை பயணத்தில் ஒரு நாள் பங்கேற்பவராக இருந்தாலும் அவர் மஞ்சள் நிற ஆடை அணிந்து வரவேண்டும்.

13. மஞ்சள் நிற ஆடையில் எந்தவித எழுத்துக்களோ, அடையாளங்களோ இல்லாமல் பார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதில் ஜிப்பா, சட்டை, வேட்டி, பேன்ட் அனிந்துகொள்ளலாம்.

14. அதேபோல நடைபயணத்தின்போது புகைப்பிடித்தல், மது அருந்துதல், வேறு எந்த வகையிலான போதைப் பழக்கங்களிலும் ஈடுபடாதவராக இருக்க வேண்டும்.

15. முக்கியமாக நடை பயணத் திட்டக் குழுவின் ஆணைகளுக்கு கீழ்ப்படிந்து செயல்படக் கூடியவராக இருக்க வேண்டும்.

மேலும் ஏதாவது விவரம் தேவைப்படுபவர்கள் 9047440542-ல் என்னைத் தொடர்புகொள்ளலாம்.

நன்றி.





No comments: