Thursday, October 3, 2013

தேவருக்கு மாலை அணிந்து விரதமிருத்தலின் அவசியம்


தேவர் அண்மைக் காலத்தில் வாழ்ந்த சித்தர், அவதார புருஷர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் கலியுக தெய்வமான முருகப் பெருமானின் பக்தர் என்பதும் அறிந்ததே. ஆனால் அந்த முருகனின் அவதாரம்தான் தேவர் என்பதை மிகவும் குறைவான மக்களே அறிந்திருக்கிறார்கள்.

அந்த உண்மையை உணர்ந்தவர்கள்தான் பசும்பொன்னுக்கு ஆண்டுதோறும் சென்று தங்கள் கண்கண்ட தெய்வமான தேவரை வணங்கி வழிபட்டு வருகின்றனர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை தெய்வமாக நினைத்து பசும்பொன்னுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் மாலை அணிந்து விரதமிருந்து செல்லுதல் அவசியம்.

மாலை அணிதல்

ஒருவர் தான் உறுதி பூணுவதை காட்டும் விதமாகவே மாலை அணியப்படுகிறது. ஒரு பதவிக்கு செல்பவர் தான் தனக்கு அளிக்கும் அதிகாரத்தை எந்தவித துஷ்பிரயோகம் செய்யாமலும், அந்த அதிகாரத்தை அளித்த மக்களுக்கு துரோகம் செய்யாமலும் பணியாற்றுவேன் என்பதை உறுதிமொழியாக அளிக்கிறார். அதுபோலவே தேவரை தெய்வமாக வணங்குபவர் அவர் காட்டிய வழியில் செல்வதற்கு உறுதியேற்பது அவசியமாகிறது. அதற்கு மாலை அணிதல் அவசியமாகிறது.

விரதமிருத்தல்

‘அன்னம் பிரம்மம்’, உணவே கடவுள். இதனை உணர்த்தவே ஆலயங்களில் அன்னதானம் செய்யப்படுகிறது. பசியிலிருப்பவனுக்கு தனது பசியைத் தவிர வேறு எதையும் தெரியாது. பசி உணர்வைத் தூண்டுகிறது. அது தேடுதலுக்கு வழிவகுக்கிறது. தனது உடலை அறிய, உணர தூண்டுகோலாக உள்ளது. பசியில்லாதவனே மற்றவற்றைத் தேடுகிறான்.

எனவே பசியிலிருப்பவன் உடலையும், உள்ளத்தையும் அதன் மூலம் மெய்ப்பொருளையும் உணரும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். உணவைக் குறைத்தல் உடலுக்கு ஆரோக்கியத்தை அளித்து காமத்தை கட்டுப்படுத்துவதாக உள்ளது.

சிற்றின்பத்தை அளிப்பது காமம். பேரின்பத்தை அளிப்பது ஆன்மீகம். அந்த ஆன்மாவை உணர ஒருவன் பசியுணர்வோடும் விழிப்புணர்வோடும் இருக்க வேண்டிய அவசியமாக உள்ளது. எனவே விரதமிருத்தல் அவசியமாகிறது.

உடல் செயலற்ற தற்கால வாழ்க்கை முறையில் ஒருமாத காலம் விரதம் இருப்பதன் மூலம் தனது கூடுதல் எடையை, கொழுப்பைக் குறைக்கவும் செய்யலாம். இந்த உலகாதாயத்திற்காகவும் விரதம் இருக்கலாம்.

மஞ்சளாடை அணிதல்
           
மஞ்சள் நிறம் மங்களகரமான நிறம். மஞ்சள் இயற்கை அன்னையின் நிறமான பசுமைக்கு அடுத்த நிறம். மஞ்சள் குருவுக்கு உகந்த நிறம். மகாகுருவான தேவரை வழிபடும் அனைவரும் மஞ்சள் நிறத்தில் ஆடையணிவது சாலச் சிறந்தது. அதுவே அவர்களுக்கு அழகு தரும் உடையாகும்.

நடைபயணமாக வருதல்

            நமது முன்னோர் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டே ஆலயங்களை அமைத்துள்ளனர். ஆலயங்களுக்குச் சென்று வருவது வெறும் ஆன்மீக நிகழ்வாக இருக்காமல் ஆரோக்கிய நிகழ்வாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆலயங்களை குன்றுகளிலும் மலைகளிலும் அமைத்தனர். மலையேற முடியாத ஊர்களில் ஆலயங்களுக்கு நடந்து சென்று திரும்பும் வகையில் ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

            நாகரீகத்தின் உச்சத்தில் உள்ள மனிதன் நடப்பதையே மறந்து வருகிறான். அருகேயுள்ள இடத்திற்குக் கூட அவன் வாகனங்களை தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளான். எனவே இது போன்ற ஆன்மீக நிகழ்வுகளின்போது அதைப் பயன்படுத்தி நடந்து செல்வது உடலுக்கும் மனதுக்கும் நல்லது.


            மேலும் அன்மைக் காலங்களில் நடைபெற்றுவரும் விரும்பத்தகாத சம்பவங்களால் காவல்துறை தேவர் பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. காவல் துறைக்கு உதவும் வகையிலும், பக்தர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் வகையிலும் நடை பயணமாக  வருவது சிறந்தது. அவரவர் தனது திறனுக்கேற்ப பசும்பொன் ஆலயத்திலிருந்து 5, 10, 20 கிமீகள் அல்லது ராமநாதபுர மாவட்ட எல்லையிலிருந்து நடைபயணமாக வரலாம். இது ஒவ்வொருவருக்கும் ஆன்மீக அனுபவத்தை அளிப்பதோடு மற்றவர்களையும் ஊக்குவிக்கும் விதமாக அமையும். 

No comments:

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...