Saturday, January 11, 2014

சேரி அரசியலும் நவீன சேரிகளும்

            ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுகிறோம் என்று பேசுபவர்களின் மற்றொரு வாதம் ஒடுக்கப்பட்டவர்கள், பட்டியல்சாதியினர் சேரிகளில் வசிக்கிறார்கள் என்பதுதான். அதாவது அவர்கள் ஒதுக்கப்பட்டு சேரிக்குள் தள்ளப்பட்டார்கள் என்பது இவர்களின் வாதம். இதில் இவர்கள் ராஜராஜ சோழனையும் திட்டுவார்கள்.

            இதன் மூலம் இவர்கள் சொல்ல விரும்புவது என்னவென்றால் ஆதிக்கசாதிகள் அத்தனையுமே இந்தக் கொடுமையை செய்தன. எனவே அவர்கள் இதற்கு பிரதியுபகாரமாக தங்கள் வீடுகளை விட்டுக் கொடுத்து விட்டு சேரிகளில் வந்து இருக்கவேண்டும் என்ற தோரணையில் பேசுவார்கள்.

            ஆனால் அவர்களை சேரியில் வைத்திருக்க காரணம் என்ன என்பதைப் பற்றி ஒருபோதும் பேச மாட்டார்கள். அவர்கள் ஒரு காலத்திலும் சேரியை விட்டு வெளியேறி ஊருக்குள் வர முயற்சிக்க வில்லையா? அப்படி வந்தவர்கள் எப்படித் தண்டிக்கப்பட்டார்கள்? அதற்கான ஆதாரம் ஏதாவது இருக்கிறதா? ஆயிரக்காணக்கான வருடங்களில் ஒரு புரட்சியாளர் கூட தோன்றவில்லையா? அல்லது அங்கிருந்து வந்தவர்கள் ஏன் அதைக் கண்டுகொள்ளவில்லை என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.

            தற்போதும் கிராமங்களில் மக்கள் சாதிவாரியான தெருக்களில்தான் வசிக்கிறார்கள். இந்த நிலையில் இந்தச் சேரிகளில் இருப்பவர்களை ஊரின் மற்ற பகுதிகளில் குடியேற்ற முடியுமா? அதற்கான சாத்தியக் கூறு என்ன என்பதைப் பற்றிச் சிந்திக்கத் தயாராக இல்லை. வசதி வாய்ப்புடன் வாழும் ஒருவரை திடீரெனக் கொண்டு போய் சேரியில் வைக்க முடியுமா? அல்லது சேரியில் இருப்பவர்களை திடீரென கட்டிடங்களில் கொண்டு போய் வைக்க முடியுமா என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது.

            இதற்கு உதாரணமாக குடிசை மாற்றுத் திட்டங்களின் கீழ் வீடுகளைப் பெற்றோரை எடுத்துக் கொள்ளலாம். அதுபோன்ற கட்டிடங்களுக்குச் சென்று பார்த்தவர்களுக்கு அந்தக் கட்டிடங்களின் அவலநிலை புரியும். குடிசைவாசிகளுக்கு அந்தக் கட்டிடத்தின் மதிப்புக் கூடத் தெரியாது. அவர்கள் தங்கள் குடியில் இருந்ததைப் போலவே நடந்துகொள்வார்கள். அவ்வாறு வீட்டைப் பெற்றவர்கள் கூட எவ்வளவு விரைவாக விற்க முடியுமோ அவ்வளவு விரைவாக விற்று விடுகிறார்கள். பின்னர் மீண்டும் குடிசைகளில் சென்று குடியேறுகின்றனர். பெரும்பாலானோர் இவ்வாறுதான் நடந்து கொள்கிறார்கள். மும்பையில் இதுபோன்ற நிகழ்வுகளை சாதாரணமாக காண முடிகிறது.

            அதேபோல இவர்கள் தமிழக அரசு கட்டித் தரும் குடியிருப்புகளையும் (காலனி வீடுகள்) முடிந்த வரை விரைவிலேயே கைமாற்றி விடுகிறார்கள். ஒரு கணக்கெடுப்பு நடத்தினால் அதன் உண்மை நிலை தெரியவரும். இந்த குடியிருப்புகளை நவீனச் சேரிகள் என்றே சொல்லலாம். இவர்களின் வாதப்படி அரசாங்கம் பட்டியல் சாதியினருக்காக மற்ற சாதிகள் குடியிருக்கும் பகுதிகளில் காலி இடங்கள் அல்லது வீடுகளை வாங்கி குடியேற்ற வேண்டும்.  அப்படி இல்லாமல் பட்டியல் சாதியினருக்காக தனியே அமைத்து தரும் வீடுகளும் நவீனச் சேரியே. ஆனால் பட்டியல் சாதிக்காக பேசுகிறேம் என்ற பெயிரில் பேசுவோர் இவற்றை சௌகரியமாக மறந்து விடுவார்கள்.

            இதில் இன்னொரு கேள்வியும் எழுகிறது. அரசாங்கம் இலவசமாக அளிக்கும் வீடுகளை விற்கும் உரிமை அவர்களுக்கு இருக்கிறதா என்பதே அது. ஆமாம் உள்ளது என்றால் பின்னர் அவர்கள் இந்த வீடுகளை இலவசமாக பெறும் உரிமையையும் இழந்து விடுவார்கள். இது ஒரு தனிமனிதனின் முயற்சி, குணநலன் அடிப்படையிலானது. இது சிக்கலான உளவியல் அடிப்படையிலான பிரச்சனை.

            எந்தவொரு பொருளையும் அதன் அருமை தெரிந்தோர்தான் முறையாக, சரியாக பயன்படுத்துவார்கள். அப்படி ஒரு பொருளின் அருமை தெரிந்தவர் அந்தப்பொருளை எப்பாடு பட்டாவது அடைந்துவிடுவார். இது உலகப் பொருட்கள் மற்றும் மறுஉலகப் பொருளான பரம்பொருளுக்கும் பொருந்தும். பொருள்வாதத்தின் இந்த அடிப்படைத் தத்துவத்தை அறியாதோர் பொருளை, பணத்தை, நிலத்தை பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்று வாதம் செய்து வருகின்றனர். இது முற்றிலும் தவறான ஒன்று. இந்த மூன்றும் ஓரிடத்தில் குவிந்து கிடப்பது எத்தனை தீமைகளை ஏற்படுத்துகின்றனவோ அதேபோல பிரித்துக் கொடுப்பதும் தீமைகளையே ஏற்படுத்தும்.

            ஒரு சிறந்த அரசாங்கம் என்பது அடிப்படைத் தேவைகள் அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். மற்ற பொருட்களை அனைவரும் அடைய வழி செய்து தரவேண்டும். அதற்காக அனைத்தையும் இலவசமாக கொடுக்க வேண்டும் என்பது ஏற்க முடியாத கருத்தாகும்.

            அதேபோல நிலப்பகிர்வையும் எடுத்துக் கொள்ளலாம். பட்டியல்சாதிகளுக்காக போராடும் கட்சிகள், அமைப்புகள் பட்டியல் சாதியினருக்கு அளிக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்க போராடி வருகின்றனர். இது வரவேற்கத் தக்கதே. வெள்ளையர் காலத்தில் இந்த நிலங்கள் இவர்களுக்கு ஒதுக்கப்பட்டன.

            ஆனால் இப்போது நாம் முன்வைக்கும் கேள்வி இந்த நிலங்கள் எவ்வாறு கைமாறின என்பதே. தொகுப்பு வீடுகள் கைமாறுவதைப் போல இந்த நிலங்கள் கைமாறி இருந்தால் இந்த நிலங்களை மீட்கிறோம் என்று சொல்வதும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். அதேவேளையில் பொருளாதார ரீதியில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையையும் மேம்படுத்தும் கடமை ஒரு அரசாங்கத்திற்கும், சக மனிதனை உயர்த்தும் கடமை சமுதாயத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் உள்ளது. எனவே அறிஞர்கள் இதுபற்றி சிந்தித்து எதிர்காலத்தில் எந்தவிதமான அரசு உதவிகள் பயனுள்ளதாக அமையும் என்று முடிவெடுக்க வேண்டும்.

            ஓரிடத்தில் அதிகாரம், பணம், பொருள், நிலம் குவிவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதை முழுவதுமாக அனைவருக்கும் பிரித்துக் கொடுப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.No comments: