Tuesday, February 4, 2014

முதல்வருக்கு ஒரு மனம் திறந்த மடல்பெறுனர்:-
                        தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள்,
                        முதலமைச்சரின் தனிப்பிரிவு,
                        தலைமைச் செயலகம், 
                        சென்னை - 600 009.

அனுப்புனர்:-
                        பெருமாள் தேவன்,
                        தேவர் ஆராய்ச்சி மையம்,
                        6-5-17/ 8ஏ, தடிவா நைனார் தெரு, 6வது வார்டு,
                        தேவதானப்பட்டி, பெரியகுளம் (வ), தேனி (மா) - 625602
                        மொபைல் 9047440542

பொருள் :- தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிப்பதற்கு நன்றி தெரிவித்தல் மற்றும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி தேவர் குருபூஜையை அமைதியாக நடத்த நடவடிக்கை எடுக்கக் கோருதல்.

மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு,

பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு தாங்கள் 9-2-2014 அன்று தங்க கவசம் அணிவிக்க இருப்பதை செய்திகளின் வாயிலாக அறிகிறேன். தாங்கள் கடந்த 30-10-2010 அன்று அறிவித்தபடி இந்த தங்க கவசத்தை செய்து அணிவிக்கிறீர்கள் என்று அறிந்து மகிழ்ச்சியுறுகிறேன். தங்களின் இந்த சேவைக்காக என் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேவேளையில், தேவர் குருபூஜை தொடர்பான சில உண்மைகளை தங்களுக்குத் தெரிவித்து சில வேண்டுகோள்களையும் முன்வைக்க விரும்புகிறேன்.

இந்திய மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடுவதே சிறந்த வழி என்று முடிவு செய்த அதனைச் செய்து காட்டிய மாவீரன் சுபாஷ் சந்திர போஸை தலைவராக ஏற்று தான் அடுத்த பிறவியில் தான் ஒரு தமிழனாக பிறக்க ஆசைப்படுகிறேன் என்று அவரை  சொல்ல வைத்த மாபெரும் தலைவர்தான் முத்துராமலிங்கத் தேவர்.

இந்த உன்னதத் தலைவர்கள் தமிழகம், இந்தியம் என்றில்லாமல் ஆசியா, ஆப்பிரிக்க மக்களின் நலனிற்காக சிந்தித்துச் செயல்பட்ட தலைவர்கள் ஆவர். இவர்களின் கருத்துக்கள், லட்சியங்கள் இன்றும் இந்திய மக்களுக்கு ஏற்றவையாக உள்ளன.

ஆனால் அண்மைக் காலங்களில் தேவரின் பெயருக்கு சாதிச் சாயம் பூசுவதில் சில தீய சக்திகள் வெற்றி பெற்று வருகின்றன. நடைபெறும் நிகழ்வுகள் அவர்களுக்குச் சாதகமாக அமைந்து வருகின்றன.

தேவர் குருபூஜையின்போது பள்ளர்-மறவர் சாதிகளிடையே மோதல் ஏற்படுகிறது. இதன் ஆணிவேர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் சதியாகும்.

1957-ம் ஆண்டில் காங்கிரஸ் - ஃபார்வேர்டு பிளாக் கட்சிகளின் இடையே ஏற்பட்ட மோதல் பள்ளர் - மறவர் சாதிகளிடையேயான மோதலாக திரித்துக் காட்டப்பட்டது. உண்மையில் பெரும்பான்மை பள்ளர்களின் ஆதரவு தேவருக்கே இருந்து வந்தது. தேவரின் இந்த அரசியல் செல்வாக்கை சீர்குலைக்கும் வகையில் இந்த சதி அரங்கேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்த நடந்த விரும்பத் தகாத சம்பங்களில் இம்மானுவேல் கொலையும், முதுகுளத்தூர் கலவரமும், துப்பாக்கிச் சூடுகளும் அடங்கும்.

அப்போது காங்கிரஸ் கையில் எடுத்த பிரச்சாரத்தை இன்று வேறு பல தீய சக்திகள் எடுத்து சமூக மோதல்களை ஏற்படுத்தி வருகின்றன.

எனவே குருபூஜை விழா அமைதியாக நடைபெற வேண்டுமெனில் இந்த இரண்டு சாதிகளிடையே புரிதலையும் இணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும். அதற்காக,  பிரச்சனைகள் ஏற்படும் பகுதிகளில் இரு தரப்பினரையும் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் நீண்டகால அமைதித் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை வேண்டும்.

ஆனால் விழாவை ஒழுங்கு செய்கிறேன் என்ற பெயரில் காவல்துறை தொடர்ந்து தவறான, அடக்குமுறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

2012-ம் ஆண்டு குருபூஜைக்குச் செல்லக் கூடாது என்று தென் மாவட்டங்களில் உள்ள வாடகை வாகன ஓட்டுனர்கள் எல்லாரும் மிரட்டப்பட்டனர். அவர்கள் வாகனங்களை இரவில் எடுத்துச் செல்லக் கூடாது என்று தடுக்கப்பட்டனர். இதனால் தொலைவில் இருந்து வருவோர் குருபூஜைக்கு வரவிடாமல் தடுக்கப்பட்டனர்.

2013ம் ஆண்டு 144 தடை உத்தரவு பிறப்பித்த கையோடு வாடகை வாகனங்களில் வரக் கூடாது என்று உத்தரவு போடப்பட்டது. பைக்குகளில் வரக்கூடாது, ஜோதி ஓட்டம் கூடாது, கூட்டமாக வரக்கூடாது, நடந்து வரக்கூடாது போன்ற நடவடிக்கைகளை எடுக்கப்பட்டது.

கமுதி அருகேயுள்ள மூலக்கரைப்பட்டி, அம்மணம்பட்டி, புனவாசல், ஆப்பனூர் போன்ற ஊர்களிலிருந்து நடைபயணமாக வந்தவர்கள் பொதுமக்கள் மற்றும் கிராம தலைவர்கள்  மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது எப்படி இருக்கிறது என்றால் கூட்டத்தை குறைத்து அதன் மூலம் அமைதியை ஏற்படுத்துகிறேன் என்று காவல்துறை சொல்வதாக இருக்கிறது. கூட்டத்தை குறைத்து அமைதியை ஏற்படுத்துவதும் மயானத்தில் அமைதியை ஏற்படுத்துவதும் ஒன்றுதான்.

இதுபோன்ற அடக்குமுறைகளின் மூலமாக ஏற்படுத்தப்படும் அமைதி நிரந்தரமானதாக இருக்காது. உண்மையில் குருபூஜையின்போது ஏற்படும் பிரச்சனைகளின் மூல காரணங்களை ஆராய்ந்து அவற்றை நிரந்தரமாகப் போக்க முயற்சி எடுப்பதே சிறந்த நடவடிக்கையாக அமையும்.

குருபூஜை என்பது இந்து மத வழக்கப்படி ஞானிகளுக்கும், யோகிகளுக்கும், பிரம்மச்சார்யம் காத்து, தன் இறப்பை முன்கூட்டியே நிர்ணயித்து, ஜீவசமாதியடைந்த ஆன்மீக ஞானிகளுக்கு நடத்தப்படுகிறது. அந்த வகையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆலயத்தில் பூஜைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆனால், தற்போது அப்பாவி கிராம மக்கள் பௌர்ணமி தினத்தில் விளக்குப் பூஜை நடத்தவும் காவல்துறை அனுமதி அளிக்க மறுத்து வருகிறது. இது போன்ற அடக்குமுறைகள் ஒருபோதும் அமைதியை ஏற்படுத்தாது. மாறாக மக்களிடம் வெறுப்பையே வளர்க்கும். இதை கடந்த  குருபூஜைக்கு வந்த அமைச்சர்களுக்கு ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

குருபூஜைக்கு வரும் குடிகாரர்கள், சமூக விரோத சக்திகள் தடுக்கப்பட வேண்டும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மது அருந்தி வருபவர்களை தடுக்க சோதனை செய்யலாம். அதேபோல சமூக விரோத சக்திகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் பல்வேறு அடக்குமுறை விதிகளின் மூலமாக தேவரின் பக்தர்களை, பெண்களை ஆலயத்திற்கு வரவிடாமல் தடுப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.

இவ்வாறான அடக்குமுறை நடவடிக்கைகளை காவல்துறை கைவிடாத நிலையில் தாங்கள் தேவரின் திருஉருவச் சிலைக்கு தங்க கவசம் அணிவிப்பது வாக்கு வங்கி அரசியலைக் காட்டுமே ஒழிய வேறெதையும் காட்டாது.

எனவே குருபூஜையை அமைதியாக நடத்த முறையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகிறேன். கடந்த குருபூஜையின்போது அப்பாவி மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தேவர் ஆலயத்தில் இந்துமத முறைப்படி நடத்தப்படும் எந்த வித பூஜைக்கும் தடை விதிக்கக் கூடாது என்று உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

                                                            நன்றி!

                                                                                                            இப்படிக்கு,
                                                                                                            தேவர் அடியேன்
                                                                                                            (பெருமாள் தேவன்)No comments: