Saturday, August 16, 2014

தேவர் கொண்டாடாத சுதந்திரம்

“சுதந்திர இந்தியா” வந்துவிட்டதாக தகவல்கள் பத்திரிகைகள் மூலமாக படாடோபமாகக்  கொடுக்கப்பட்டன. ஆங்காங்கு கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டன. மக்கள் ஆராவாரம் செய்து மகிழ்ந்தனர்.

ஆனால், இதை எல்லாம் செய்து பலன் என்ன என்று பரிசீலனை செய்து பார்க்கும்பொழுது கிடைத்திருப்பது தங்கம்தான். நிறத்திலும் மஞ்சள்தான் சந்தேகமில்லை. எடையும் கனமாகவே இருக்கிறது. ஆனால் தங்கத்திற்கு உரிய மாற்றில்தான் கோளாறு காணப்படுகிறது என்ற முடிவுக்கு வந்து சேர நேரிடுகிறது.

இந்த மாற்றில் ஏற்பட்ட சூசகம் என்ன? சுதந்திரம் வந்துவிட்டது என்று சொன்னால் நீடித்து இந்நாட்டில் இருந்து வரும் தரித்திரம் விலகாமல் இருப்பதேன்? அல்லது அந்த தரித்திர நிலைமையை ஒழிப்பதற்காகவது உறுதியான, நேர்மையான திட்டங்கள் இருக்கின்றனவா? சுதந்திரமடைந்த நாடுகளில் நடக்கும் காரியங்கள் ஏதாவது இந்நாட்டில் நடக்கின்றதா? சுதந்திரம் அடைந்த நாடுகள் என்று விளங்கும் நாடுகளிலேயே நடக்கும் ராணுவப் பயிற்சியும் ஆயுதப் பயிற்சியும் இந்த நாட்டில் நம் மாணவர்களுக்கு அளிக்கப்படுகின்றதா?

சுதந்திரமடைந்த நாடுகளிலே ஒரு பள்ளிக் கூடத்தில் 1000 மாணவர்கள் கல்வி பயின்றால் பள்ளிக் கூடத்தின் மூலையில் 1000 துப்பாக்கிகள் கொண்ட ஆயுதச் சாலை ஒன்றிருக்கும். சாயந்திர நேரத்தில் டாக்டரால் பயிற்சிக்கு அருகதையற்றவர்கள் என்று ஒதுக்கப்படும் மாணவர்கள் நீங்கலாக மற்ற மாணவர்களுக்கு ராணுவப் பயிற்சி அளித்து அந்த துப்பாக்கிகளை உபயோகிக்கும் விதத்தையும் கற்றுக் கொடுத்து, பின்னர் ஆயுதங்களை வைத்து ஆயுதச் சாலையைப் பூட்டி, அதன் சாவியைப் பள்ளிக் கூடத் தலைமை ஆசிரியர் வைத்திருப்பார்.

மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் படையினரைப் பள்ளிக் கூடத்திற்குக் கொண்டு வந்து அவர்களைக் கொண்டு மாணவர்களுக்கு ‘மார்ச்’ பண்ணும் விதத்தையும் போலி ரவைகளைக் கொண்டு துப்பாக்கியில் சுடும் விதத்தையும் கற்றுக் கொடுத்து நாளடைவில் உண்மையைன ரவைகளை உபயோகிக்கவும் மாணவர்களிலே இரு சாரராகப் பிரித்து ஒரு சாரரை மற்றொருவர் தாக்க வருவது போன்ற ‘போலி யுத்தங்களை’ சிருஷ்டித்து பயிற்சியளிப்பது வழக்கம்.

இந்த முறையை தன்னாட்டு வாலிபர்களுக்குச் செய்து கொடுக்காமல் இந்தியா தவிர சுதந்திரம் பெற்ற வேறு எந்த ஒரு நாடும் வாளாவிருக்கவில்லை. இந்தியா இவ்வாறு வாளாவிருப்பதன் மர்மமென்ன? இவ்வாறிருப்பதுதான் அஹிம்சையா? இது அஹிம்சை என்றால் இப்போது நமது போலீஸ் ஸ்டேஷன்களில் இருக்கும் ஓடடை உடைசல் துப்பாக்கிகளையும் லத்தி கம்புகளையும் சேமித்து வைத்துவிட்டு போலீஸ்காரர்கள் ஒவ்வொருவர் கையிலும் குரான் ஒன்றையும், பகவத் கீதை ஒன்றையும் கொடுத்து பொது மக்களை அஹிம்சை வழியில் நடங்கள், தப்புத் தண்டா செய்யாதீர்கள் என்று உபதேசம் செய்யச் சொல்லலாமா?

இப்படி இரண்டு மூன்று நாட்களுக்குச் செய்தால் அஹிம்சையின் பெருமை தெரியாமலா  போய்விடப் போகிறது? அஹிம்சை முறையை அப்படியே பின்பற்றும் சர்க்காருக்கு ஹைதராபாத்தை எதிர்க்க டாங்குகள் எதற்கு? காஷ்மீர் போருக்கு விமானங்கள் போதவில்லை என்று ஓலம் ஏன்? ஆங்கிலச் சேனாதிபதி அத்தனைபேருக்கும் இந்தியச் சேனையும் அங்கமும் எதற்கு?

கரியப்பா முதலாவது இந்தியராக நமது இந்திய சேனை முழுவதற்கும் தளபதியாகப் பதவி ஏற்றார் என்றும், அதே சமயத்தில் 56 ஆங்கில சேனாதிபதிகள் இந்திய ராணுவத்தில் அங்கம் வகிப்பதற்காக லண்டனிலிருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றனர் என்றும் முன்னுக்குப் பின் முரணாக சம்பவங்கள் பத்திரிகைகளில் வெளியாவதேன்? இதன் மர்மம் என்ன?

‘இந்திய மக்களே நமக்குப் பூரண சுதந்திரம் வந்துவிட்டது’ என்று தலைவர்கள் ஒருமுகமாக களிப்புடன் நாட்டு மக்களுக்குச் செய்தி விடுக்கின்றது ஒருபுறம். அதே சமயத்தில் ‘கனம் ராஜாஜியைக் கவர்னர் ஜெனரலாக மன்னர்பிரான் அங்கீகரித்தார்’ என்ற செய்தியும் வருகின்றது. சுதந்திரமடைந்த நாட்டிற்கு மன்னர்பிரான் அனுமதி எதற்கு என்று கேட்டால் பதிலில்லை. அப்படி என்ன நமது தலைவர்கள் படியாதவர்களா? குடியேற்ற நாட்டு அந்தஸ்தைத்தான் பெற்றிருக்கிறோம் என்று ஒப்புக் கொண்டால் பாவமா? அல்லது பூரண சுதந்திரத்தின் நுணுக்கம்தான் தெரியாதா? இந்த இடம் வரும்போதுதான் யாருக்கும் சந்தேகமேற்பட்டு விடுகிறது.

- தேவர்
24.4.49 அன்று காரைக்குடியில் நடைபெற்ற பாரத இளைஞர் சங்க ஆண்டுவிழாவில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி


(1984-ம் ஆண்டு பொற்கோவிலில் இந்திய ராணுவம் நுழைந்த ‘ஆபரேஷன் புளூஸ்டார்’ என்ற தாக்குதல் நிகழ்வுக்கும் இந்திய ராணுவத்திற்கு இங்கிலாந்து அதிகாரிகள் திட்டமிட்டுக் கொடுத்தார்கள் என்பது அண்மையில் வெளியான கூடுதல் செய்தி.)

No comments: