Saturday, October 11, 2014

வட மாநில தொழிலாளர்களுக்கு உதவி


திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையை அமைக்கும் பணி “டிரான்ஸ்ட்ராய்” என்ற ஆந்திர நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இடையிடையே சிறிதளவு சாலைகளை அமைப்பது தவிர ஏறக்குறைய இந்த நிறுவனம் இந்த பணியை பூர்த்தி செய்யும் நிலையில் உள்ளது. ஆனால் அரசாங்கம் ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காத காரணத்தால் இந்தப் பணி கடந்த ஓராண்டு காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் முகாம் ஒன்று எங்கள் ஊர், தேனி மாவட்டம் தேவதானப்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

எப்போது வேண்டுமானாலும் வேலை மீண்டும் தொடங்கப்படலாம் என்ற நிலையில் நிறுவனம் 200 ஊழியர்களை தயாராக முகாமில் தங்க வைத்துள்ளது. இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ள ஊழியர்களில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, ஒரிஸ்ஸா, ஜார்க்கண்ட், பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர். இவர்கள் நிறுவனத்தின் முகாமில் தங்கி அங்குள்ள உணவகத்தில் உணவருந்தி வந்தனர்.

ஆனால் நிறுவனம், வேலையை நிறுத்திய பிறகு உரிய நேரத்தில் சம்பளம் வழங்காமல் இழுத்தடிக்கத் துவங்கியது. இதில் கடந்த நான்கு மாதமாக இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களுக்கு பணம் அனுப்ப இயலாமலும் மொழிப் பிரச்சனையாலும் செய்வதறியாது திகைத்தனர். என் நண்பர்களின் மூலமாக இவர்கள் என்னிடம் உதவி கோரி வந்தனர்.

இதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 8-ம் தேதி எங்கள் ஊர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் செய்தேன். புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர், நிறுவன அதிகாரிகளை அழைத்துப் பேசினர். தொழிலாளர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டால் 15 நாட்களுக்குள் அதாவது செப்டம்பர் 23-ம் தேதிக்குள் 3 மாத சம்பளத்தையும் கொடுத்துவிடுவதாக நிறுவன அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர்.

ஆனால் அவர்கள் எழுத்துப்பூர்வமாக இந்த வாக்குறுதியை கேட்டபோது அக்டோபர் 10-ம் தேதிக்குள் சம்பளம் தருவதாக எழுதிக் கொடுத்தனர். அதற்கு சம்மதித்த காவல் ஆய்வாளர் நிறுவனத்திற்கு சாதகமாக நடப்பதாக சந்தேகம் ஏற்பட்டது. எனவே இது பற்றி பெரியகுளம் சட்ட மன்ற உறுப்பினர் திரு. லாசர் அவர்களிடம் புகார் அளித்தேன்.

உடனே அவர் மாவட்ட ஆட்சியர் திரு பழனிச்சாமியைச் சந்தித்து இதுபற்றி புகார் அளிக்க ஏற்பாடு செய்தார். 50 தொழிலாளர்களின் 3 மாதச் சம்பளம் 14 லட்சத்திற்கும் அதிகமான தொகையாக இருந்தது. தொழிலாளர்களிடம் விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர்  தொழிலாளர்கள் பிரச்சனையின் தீவிரத் தன்மையை உணர்ந்தார். மாவட்ட ஆட்சியர், பெரியகுளம் வட்ட வருவாய் அதிகாரியிடம் சொல்லி இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அதன் பின்னர் வட்ட வருவாய் அதிகாரி நிறுவன அதிகாரிகளை அழைத்து விசாரணை செய்தார். அப்போது அவர்கள் ஏற்கனவே சொன்னபடி அக்டோபர் 10-ம் தேதிக்குள் சம்பளத்தை கொடுத்து விடுவதாக கூறினர். இதற்குள் செப்டம்பர் 20-ம் தேதி ஆகிவிட்டிருந்தது.

அக்டோபர் 8-ம் தேதி வரை நிறுவனம் தொழிலாளர்களுக்கு சம்பளம் தருவதற்கான எந்தவித அறிகுறியும் தென்படவில்லை. அக்டோபர் 9-ம் தேதி 28 பேருக்கு மட்டும் ஒரு மாதச் சம்பளத்தை அளித்தனர். மீதி தொகையை மறுநாள் அளிப்பதாக கூறினர். தொழிலாளர்களுக்கு சந்தேகம் அதிகரித்தது.  அவர்கள் ஏதாவது போராட்டம் நடந்த வேண்டும் என்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டனர்.

அவர்களிடம் ஆலோசனை செய்த பின்னர், சம்பளம் தருவதை மேலும் தாமதித்தால் சிறைநிறைப்பு போராட்டம் நடத்தலாம் என்று முடிவு செய்தேன். இதற்கிடையில் இந்தப் பிரச்சனை குறித்து தோழர்கள் தமிழர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு அதியமான், மறத்தமிழர் சேனை கட்சியின் தலைவர் புதுமலர் பிரபாகரன், தமிழர் நலம் பேரியக்கத்தின் தலைவரும், திரைப்பட இயக்குனருமான திரு. மு. களஞ்சியம், மும்பை பாஜக பொதுச் செயலாளர் திரு. ராஜா உடையார் ஆகியோரிடம் தெரிவித்து காவல் ஆய்வாளரிடம் பேசி நிலமையின் தீவிரத்தன்மையை உணர்த்துமாறு கேட்டுக் கொண்டேன். அவர்களும் ஆய்வாளரிடம் பேசி நிலமையை எடுத்துக் கூறினர்.

இந்த நிலையில் இன்று (11.10.2014) தொழிலாளர்கள் அனைவருக்கும் சம்பளம் வழங்கப்பட்டது. சம்பளத்தைக் கொடுத்தவுடனே அங்கிருந்து வெளியேறுமாறு தொழிலாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. ஆனால் சட்டமன்ற உறுப்பினர் திரு லாசர் அவர்களின் மூலமாக அதிகாரிகளிடம் தொழிலாளர்களின் நிலையை எடுத்துக் கூறி அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் செல்ல ஒருவார கால அவகாசம் வாங்கிக் கொடுக்கப்பட்டது.  

இந்தப் பிரச்சனை எழுந்த உடனேயே நிறுவன அதிகாரிகள் தொழிலாளர்கள் மீது தேவையில்லாத குற்றச் சாட்டுக்களை வைக்க முயன்றனர். தொழிலாளர்களை தூண்டிவிடுவதாக என் மீதும் புகார் அளிக்க முற்பட்டனர். மேலும் தொழிலாளர்களுக்கு ஒரு மாதச் சம்பளத்தை கொடுத்து புறப்பட்டுச் செல்லுமாறு அவர்களின் ஒற்றுமையை குலைக்க முயன்றது. ஆனால் அதிகாரிகளின் தலையீடு, தொழிலாளர்களின் ஒற்றுமை காரணமாக நிறுவனத்தின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

ஹூட்ஹூட் புயல் காரணமாக தொழிலாளர்கள் உடனடியாக தங்கள் ஊர்களுக்கு கிளம்பிச் செல்ல முடியாமல் உள்ளனர். ஒரு சில நாட்களுக்குள் அவர்கள் புறப்பட்டுச் செல்லும் வரை நிறுவனத்தின் முகாமிலேயே தங்கி உணவருந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
                                                ---------------

No comments: