Sunday, September 27, 2015

இம்மானுவேல் கொலை வழக்கின் தீர்ப்பு - நகல் - பாகம் 4

இம்மானுவேல் கொலை வழக்கின் தீர்ப்பு - நகல் - பாகம் 4

41. நான், இப்போது எதிரி-1 (முத்துராமலிங்கத் தேவர்) - பற்றிய வழக்கினை, அதன் தகுதிப்பாட்டின் அடிப்படையில தனியாக பரிசீலிக்க இருக்கிறேன்.

42. இதில் தீர்மானிக்கப்பட வேண்டிய எழுவினா கீழ் வருமாறு:-

(1) விசாரணையின்போது கூறப்பட்ட சாட்சியத்தின் அடிப்படையில், அரசு மற்றும் காவல்துறை, முதலமைச்சர் திரு. காமராஜ் மற்றும் உள்துறை அமைச்சர் திரு. பக்தவச்சலம் மற்றும் பிறர், எப்படியாவது எதிரி-1- இந்த வழக்கில் சிக்க வைத்திட வேண்டுமென்று அரசியல் பகைமையின் காரணத்தினால் எண்ணம் கொண்டிருந்தார்களா எனக் கருதிட அடிப்படைக் காரணம் அல்லது அதற்குரிய அநேகமாக நிகழக்கூடிய நிலை இருந்ததா? இயற்கையாகவே இத்தகைய அனுமானத்தை நியாயப்படுத்தும் அடிப்படை ஆதாரங்கள் இருப்பின், அது எதிரி 1-ன் வழக்கினை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், அரசு தரப்பு வழக்கு முழுவதையுமே பாதித்துவிடும். இந்த வழக்கில் சீரான கண்டுபிடிப்பு மற்றும் புலனாய்வு ஆகியவை, தவறாகப் பயன்படுத்தப்பட்டால் - உயர் பதவியில் இருப்பவர்களுக்கு ஆதரவாக - அல்லது அவர்களை திருப்திப் படுத்துவதற்காக எந்தவொரு நீதிமன்றமும் புலனாய்வு, சாட்சிகளின் சாட்சியம் இவற்றினை நம்ப முடியாமல் போய்விடுவதுடன், நீதியும் நிலைநாட்டப்படாது போய்விடும்.

(2) சமாதான மாநாட்டில், இம்மானுவேல் மீது சீற்றம் கொள்ளும் அளவில் நிகழ்வுகள் நடந்து, அதன் காரணமாக எதிரி-1 அவர் மீது காழ்ப்புணர்ச்சியை கொண்டிருந்தாரா? மற்றும் இத்தகைய உணர்ச்சிகளைத் தன் மனத்தில் தேக்கி வைத்திருந்தாரா?

(3) ஆத்மநாதபிள்ளையின் வீட்டுத் திண்ணையிலிருந்து எதிரி-1 அன்னாரின் ஆதரவாளர்களுக்கு (தேவர்கள்) தூண்டிவிடுவதாகக் கூறப்படும் சொற்களைக் கொண்ட பேச்சைப் பேசினாரா?

(4) அத்தகைய சொற்கள் பேசப்பட்டிருக்குமேயானால், அவை கொலை செய்வதற்குத் தூண்டப்பட்டதாக, இத்தகைய குற்றமுறு செயலைச் செய்திட (பிரிவு 107 ...)-ன் கீழாக அமைந்துவிடுமா? அத்தகைய சொற்கள் வேறு பொருளைக் கொண்ட நல்ல சொற்களாகக் கருதப்படுமா?

43. புலனாய்வுப் பகுதிகளை கூராய்வு செய்து - அவற்றில் உள்ள சில தவறுகள் - திருத்தங்கள்- பிழைகள் இருந்திட்ட போதிலும் - அவை, காவல் துறை அலுவலர்களால் புனைந்து கட்டப்பட்டவையாகவோ அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவோ காணப்படவில்லை. அதாவது, .சா.30 மற்றும் 32, 33, பின்னர் காணப்படும் நிலைகளில் இந்தப் பதிவுருக்களில் காணப்படும் உள்சாட்சியங்கள், அவை உண்மைத் தன்மை உடையவை என்று காட்டுவதோடு, அவை சமகாலத்தில் ஏற்படுத்தப்பட்டவை என்பதையும் காட்டுகின்றன. அநேகமாக நிகழக் கூடியவையும், இத்தகைய தற்காலிக ஆதாரமாக் கொள்ளப்படும் கருத்துக்கு எதிரானவை. எதிரி-1 ஆல், இன்றைய அரசைக் குறித்து சாட்டுரைகள் கூறப்பட்டபடியால், இவற்றைக் கவனமாகப் பரிசீலனை செய்து, நியாயமான மற்றும் நடுநிலையாக நான் இயன்ற அளவு ஆராய்ந்து உள்ளேன்.

எதிரி-1 (முத்துராமலிங்கத்தேவர்) அவரது பகுதியில் முக்கியமான சக்திகொண்டவர் என்பதை நான் ஒப்புக்கொண்டிட சம்மதிக்கிறேன். அவர், தனது ஆதரவாளர்கள் மற்றும் மக்களில் சில பிரிவுகளின் மீதும் ஆதிக்கம் பெற்றவர் என்பதை மறுத்திட முடியாது. பல தேர்களிலும் உப தேர்தல்களிலும் அவர் வெற்றி அடைந்துள்ளது இதனை தெளிவாக காட்டுகிறது. காங்கிரஸ் தலைவர்களும், அன்னாரின் எதிர்ப்பினை ஒரு தொந்தரவாகவே உணர்ந்து அன்னாரை அரசியல எதிரியாக நடத்தினர் என்பதையும் நான் ஒப்புக்கொள்வதற்கு இசைகிறேன். திரு. காமராஜ் மற்றும் திரு. பக்தவச்சலம் போன்ற அரசியல் முதிர்வும் அனுபவமும் உடைய தலைவர்கள் அரசியல் வாழ்க்கையிலும் அல்லது தேர்தல் பிரச்சாரங்களின்போதும், எதிரி-1ஐப் போன்றவர்களால் கடுமையான சொற்கள் பயன்படுத்தப்படும் என்றும், மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துக் கூட சொல் அம்புகள் வீசப்படும் என்பனவற்றை முற்றிலும் உணரவில்லை என்பதை நான் கற்பனை செய்து பார்ப்பது மிகவும் கடினமான ஒன்றாகவே எனக்குத் தோன்றுகிறது. அரசியல் வாழ்க்கையில் எதையும் தாங்கும் இதயம் வேண்டும். அதிகமான மன உணர்வு கொண்டவர்களுக்கு அரசியல் போராட்டம் என்பது அவர்களுக்குரிய இடமல்ல. இத்தகைய காரணங்களால் அரசியல் எதிரி மீது த்தாங்கல்களை வைத்துக் கொண்டிருப்பது அரசியல் ரீதியாக பக்குவமற்றதாகும். இதன் காரணமாக அரசு அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துவது என்பது குற்றமுறு செயலுமாகும். எதிரி-1 சட்டமன்றக் கூட்டங்களில் பேசிய சில பேச்சுக்கள், மோதல் மற்றும் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தினார் என்பதை வைத்துக் கொண்டு அரசு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது குற்றச் செயல். திரு. காமராஜ் அல்லது திரு. பக்தவச்சலம் ஆகியோர் அந்தத் தொகுதி தேர்தல் முடிவு, காங்கிரஸ் கண்ணோட்டத்தில் ஏமாற்றம் தருவதாக அமைந்திருந்தாலும் அரசின் தலையெழுத்தோ அல்லது காங்கிரஸ் போன்ற ஒரு பெரிய அரசியல் கட்சிக்கோ ஒரே தொகுதியில் அடையும் வெற்றியை ம்பி இருக்கின்றன நிலை இல்லை என்பதை உணராதிருப்பது என்பது என்னால் சிந்தித்துக் கூடப் பார்க்க இயலாத ஒன்றாக இருக்கிறது. காவல் துறையைப் பொறுத்த மட்டில், வழக்கு வலுவாக உள்ளது என்று அவர்கள் சொன்னாலும், எதிரி-1 காவல் துறையினர் மீது அவதூறாக, அரிசனங்கள் மற்றும் நாடார்களுடன் ரகசியமாகச் சதி செய்வதில் ஈடுபட்டுக் கொண்டு அரிசனங்களுக்கு துப்பாக்கிகளை வழங்கிடும் அளவுக்கு சென்றுள்ளனர் என்று பழி சுமத்தியுள்ளார் என்று எதிர் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது நம்பும்படியாக இல்லை. கீழத்தூவல் துப்பாக்கிச் சூடு, இம்மானுவேல் இறப்பிற்குப் பிறகு நடைபெற்றது. இது அதன்பிறகு ஏற்பட்ட இனக் கலவரச் சூழ்நிலையால் ஏற்பட்டதாகும். உண்மையாகவே இந்த நிகழ்ச்சி, திரு. எஸ். வெங்கடேஸ்வரன், .சி.எஸ். என்பவரால் பரமக்குடியில் விசாரணை நடத்தப்பட்டு அது பதிவுருவில் இடம்பெற்றுள்ளது. எனவே, இந்த வழக்கில் எதிரி-1 துப்பாக்கிச் சூடு நடைபெற்றதற்கு நீதி விசாரணை வேண்டுமெனக் கிளர்ந்து எழுந்ததால், இவ்வழக்கில் பொய்யாகச் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற வாதத்தைப் பின்பற்றுவது கடினமாகவே உள்ளது.

திரு. ஹோம்ஸ் (.சா.-22)-ன் சாட்சியம், அலுவலர் என்ற முறையில், எதிரி-1 விஷயத்தில் நியாயமாக நடந்துகொள்ள இணக்கமாக இருப்பது என் மனதில் பட்டது. இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களில், காவல் துறையின் ஒரு பகுதியினரோ அல்லது அதிகாரத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட காவல் துறை அலுவலரோ, எதிரி-1-ன் மீது பழி தீர்த்துக் கொள்ளும் வகையில் செயல்பட்டார்கள் எனக் காட்டுவதை நியாயப்படுத்தும் வகையில் எந்தவித ஆதாரமும் இல்லை.

44. எனவே இந்த அம்சத்தைப் பொறுத்து எனது முடிவினைப் பதிவு செய்திட விரும்புவது யாதெனில் காவல் துறைப் புலனாய்வு அமைப்பு இவ்வழக்கில் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கும், அது அரசின் தலைவர்களால் செய்யப்பட்டுள்ளது என்பதற்கும், அல்லது அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காகச் செய்யப்பட்டுள்ளது என்பதைக் காட்டுவதற்கும் எவ்வித மூகாந்திரமும் இல்லை என்பதாகும்.

45. மாநாட்டினைப் பொறுத்தவரையில் அதன் குறிக்கோள்கள் வழக்கிற்கு உரித்தானவை அல்ல. எதிரி-1-ன் கற்றறிந்த வழக்குரைஞரின் வாதம் யாதெனில், .சா.-21 மற்றும் .சா.-22 ஆகியோரின் கருத்தின்படி, இம்மானுவேல் ஏனையோரை விட மரியாதைக் குறைவாக நடந்துகொண்டார் என்பதை கருத்தில் எடுத்துக் கொண்டிருக்கக் கூடாதுஏனெனில் இது தவறாக இருக்கக் கூடும்.

பொருண்மைகளைக் கருத்தில் கொண்டு நோக்கும்போது, சாதாரணமாக எவர் ஒருவரின் பொறுமையையும் சகிப்புத் தன்மையையும் சோதிக்கும் அளவில் எதுவும் அங்கு நடந்ததாகக்  கூற முடியாது. ஆனால் நான் இங்கு குறிப்பிட வேண்டியிருப்பது, மனப்பாங்கு ஒரு முக்கியமான அம்சம். இதில் எனக்கு தோன்றுவது யாதெனில், எதிரி-1 நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பினரின் தலைவர் போன்ற நிலையில் இருந்தவராகவும், மரியாதைக்குரியவராகவும் காணப்பட்டார். ஒரு புதிய தலைமுறையின் சார்பாக பேசும் இம்மானுவேல், சாதாரண மரியாதைக்கு அதிகமாகக் கொடுத்திடாத்து கண்டு, அவர் கோபம்கொள்ளும் அளவுக்கு ஆளானவராகக் காணப்பட்டார் என மதிப்பிடல் கடினமான ஒன்றாக காணப்பட்டது. அதன் பின்னர் எதிரி-1 கர்ணத்தின் வீட்டில் பேசிய பேச்சின் உண்மைத் தன்மையினைப் பொறுத்தமட்டும், இந்த வினா எழும். இங்கு நான் மீண்டும் கூறுவது என்னவெனில்,  நேரடிச் சாட்சியம் உண்மையாக இருக்கும் நிலையில், எதிரி-2 கூறியதாக கூறப்படும் சொற்கள், இம்மானுவேல், மாநாட்டில் எதிரி-1-க்கு எதிராக நடந்துகொண்ட முறை, கொலைக்கு காரணமாக இருந்தது என்பது, எதிரி-1 இதனை தூண்டினார் எனும் குற்றச் சாட்டுக்கு போதிய சாட்சியமாக அமைந்திடவில்லை.

46. வார்த்தைகளைப் பொறுத்தமட்டில், கவனமான பரிசீலனைக்குப் பின், .சா.-18, 19 மற்றும் 20 ஆகியோருடைய  மற்றும் குறிப்பாக, பெருமாள் பீட்டரின் (.சா.-20) சாட்சியத்தை ஏற்றுக் கொள்கிறேன். இந்த வயோதிகன் என் மனதில் பதியக் கூடியவராக இருக்கிறார். எதிரி-1-ன் மீது பெரிதும் மதிரியாதை கொண்டவராக காணப்படுகிறார். அவர் அளித்த சாட்சியம் இயல்பானதாகவும் இயற்கையானதாகவும் பிறரால் சொல்லிக் கொடுக்கப்படாததாகவும் பொய்மை இல்லாததாகவும் உள்ளது. மிகவும் திறமை வாய்ந்த குறுக்கு விசாரணையிலும் கூட அவரை அசைக்க முடியவில்லை. பெருமாள் நாயுடு (.சா.-19) விருப்பு வெறுப்பற்ற சாட்சி. அவருக்கு பொய் சொல்ல வேண்டிய தேவையும் இல்லை. ஏனெனில் இரு குழுக்களுக்கிடையேயுள்ள இனப் பதற்றத்தில் அவருக்கு தொடர்பில்லை. இதற்கு மாறாக திரு. ராமசாமி செட்டியார் (.சா.-19), திரு. சுப்பிரமணியராஜா (.சா.-2) இவர்களது உண்மைத் தன்மை நம்மை வெகுதூரம் கொண்டு செல்லவில்லை. சாதகமில்லாத ஒரு உண்மையைச் சொல்ல நேரிடும்போது, இவர்கள் தமது ஞாபக சக்தி மீது சார்ந்து நிற்கின்றனர். மற்றும் எதிரி-1-ன் மீது தங்கள் விருப்பங்களை ஒப்புக்கொள்கின்றனர். இந்த இரண்டு சாட்சியங்களும் கர்ணத்தின் வீட்டிற்கு எதிரி-1 செல்லும் முன்பு சென்றிருக்கக் கூடும்.  மற்றும் 30 அல்லது 40 ஆட்கள் முக்கியமாகத் தேவர்களைக் கொண்ட கும்பல் தொடர்ந்து வருவதைக் கவனித்திருக்க முடியாது இருக்கலாம். தாலுகா அலுவலகத்தில் பெருங்கூட்டம், இத்தகைய கூட்டம், எதிரி-1ஐத் தொடர்ந்து செல்வது என்பது இயல்பான ஒன்றுதான். திரு ராஜா (.சா.-2) சிறிது தொலைவில் இத்தகையக் கூட்டம் தொடர்ந்து சென்றது என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார். எனவே எதிரி-1, அவரால் பேசப்பட்டதாகச் சொல்லப்பட்ட வார்த்தைகளை, அவரது மன உணர்வுகள் புண்பட்டுவிட்டதால், மாநாட்டில் இறந்துபட்டவர் நடந்து கொண்ட வித்தினால், பேசியுள்ளார் என்று நான் முடிவு செய்ய வேண்டியுள்ளது.

47. ஆனால், இந்தச் சொற்கள், கொலைக் குற்றச் செயலைத் தூண்டிவிட்ட குற்றமாக சட்டத்தில் எப்படிக் கருத முடியும் என்பது பற்றி அனுமானம் செய்திட, கடினமாக, ஏறத்தாழ இயலாத ஒன்றாகவே இருக்கிறது. அரசுத் தரப்பு, இரு வகையாகவும், இதனை எடுத்துக் கொள்ள முடியாது.  இந்தச் சொல் உண்மையிலேயே ஒரு தெளிவான குறிப்பாக அவர் தம்மை பின்பற்றுபவர்கள் எடுத்துக் கொண்டு, இம்மானுவேலை தீர்த்துக் கட்ட வேண்டும் என கருதியிருந்தால், அந்தச் சந்தர்ப்பத்தில் அவற்றை அந்தக் கூட்டத்தினருக்குப் பேசி இருக்க முடியாது. ராமநாதன் (.சா.-18), பெருமாள் நாயுடு (.சா.-19) மற்றும் பெருமாள் பீட்டர் (.சா.-20) ஆகிய தேவர் அல்லாதவர்களை எதிரி-1 தன் முன்னர் தெளிவாகப் பார்க்க இயலும். அந்தச் சொற்கள், கோபத்தின் காரணமாக அந்த வேளையில் பேசப்பட்டிருக்கும் அந்தச் சொற்கள் வெளிப்படையாகவோ, உள்ளிடையாகவோ, இம்மானுவேலை தீர்த்துக்கட்ட வேண்டும் எனும் பொருளில் பேசப்பட்டவை அல்ல. ஆனால் அவர் மேற்கோளிட்டுக் காட்டியது அவமதிப்பிற்குரியவை. இதற்கு மாறாக அவற்றுக்கு மாசற்றது என விளக்கம் கூறவு இயலும். எதிரி-1 அவர் தம்மை பின்பற்றுபவர்கள், இம்மானுவேல் தானும் அரிசனங்களின் பிரதிநிதி என்று உரிமைகொண்டாட முடியுமென தைரியமாகக் கூறியதால் ஏமாற்றம் அடைந்திருக்கக் கூடும். இந்த வழக்கில் அநேகமாக நடந்திருக்கக் கூடியது என்னவெனில் எதிரி-1 பின்பற்றுபவர்கள், இத்தகை வெறுப்பினையும், வெட்கத்தையும், அவர் (எதிரி-1) பேச்சு ஏற்படுத்தி, இம்மானுவேலின் இறப்பிற்கு காரணமாக அமைந்துவிட்டது. ஆனால் எதிரி-1 இத்தகைய செயல் நடைபெற வேண்டும் எனக் கருதிடவில்லை மற்றும் இத்தகைய குற்றமுறு செயலைச் செய்திட தூண்டிடவும் இல்லை.

இந்த வார்த்தைகள் ஆங்கில வரலாற்றில் ஒரு அரசர் தனது பேராயரின் தனித்தன்மை வாய்ந்த சுபாவத்தை தாங்கிக்கொள்ள இயலாமல், “இந்தக் கொந்தளிப்பான பாதிரியாரை என்னிடமிருந்து நீக்குவதற்கு யாருமில்லையாஎன்பதன் அர்த்தத்தில் பார்க்கின்றபோது அந்த வார்த்தைகளின் கருத்துக்கள் மிகவும் பலமற்றவைகளாகும். ஆனால் அந்த கவனக் குறைவான பேச்சு ஒரு துறவியான மதகுரு கொலை செய்யப்பட காரணமானது. பின்னர் அந்த அரசர் அதற்குரிய பிராயச்சித்தங்களை எல்லாம் செய்தார்.  இருந்தபோதிலும் அவர் ஆங்கில சட்டத்தின்படிஉண்மைக்கு முன் அவர் ஒரு குற்றத் துணைவர்என்பதை எந்தவொரு வரலாற்று ஆசிரியரும் வற்புறுத்தவில்லை. இந்தியாவில் இந்த முக்கிய விஷயம் வெளிப்படையான சட்ட ஆதாரமாகத் தோன்றுகிறது. இதன் தொடர்பாக கற்றறிந்த அரசு தரப்பு சிறப்பு வழக்குரைஞரோ, அல்லது 1-வது எதிரியின் கற்றறிந்த வழக்குரைஞரோ எந்கத் தீர்ப்பையும் என் முன் கொணரவில்லை. ஆனால் கிளான்வில்லே வில்லியம்சின்கிளாசிக்கல் டிரிடீஸ் ஆன் கிரிமினல் லா (Classical Treaties on Criminal Law) (1953-ம் ஆண்டு பதிப்பு), அதில் பிரிவு 57-ன் கீழ், இந்த முக்கிய விஷயம் குறித்த விவாதத்தில் பெரும் புகழ் வாய்ந்த சட்ட மேதை ஸ்டீபன் அவர்களின் மேற்கோள் ஒன்று இருப்பதை நான் காண்கிறேன்.”

ஒருவேளை, உதாரணமாகஎன்பவன்பி’  என்பவனிடம் சொன்ன உண்மைகள், ‘பிஎன்பவன்சிஎன்பவனைக் கொலை செய்வதற்கான முன்விரோதமாகச் செயல்பட்டது. இதனால்என்பவன்சிஎன்பவனைக் கொன்றான் என்பது மொழியின் அவதூறு எனறு சொல்லலாம். ஏனெனில் அவன்சியின் மரணத்திற்கு சிறு காரணமுடையவனாக இருந்திருக்கிறான் என்பதில் சந்தேகமில்லை. ஒத்தல்லோ வழக்கில் டெஸ்டிமோனோ கொலை வழக்கின் முன்புள்ள விவரங்களின்படி, குற்றத்துக்கு துணைபோனவர் என்ற வகையில், “விஷத்தை வைத்து இதைச் செய்யாதே, அவளது படுக்கையில் வைத்து கழுத்தை நெறிஎன்ற ஒரு சொல்லிற்காக இயாகோவை தண்டித்திருக்கக் கூடாது என நினைக்கிறேன்.

இந்த வழக்கில் 1-வது எதிரியின் வார்த்தைகள் அவரை பின்பற்றுபவர்கள் அந்த வகையான வெறுப்பினாலும் அவமானம் போன்ற உணர்ச்சியாலும் தூண்டப்பட்டிருக்கலாம். அதுவே இம்மானுவேல் இறந்ததற்கு வழியாக இருந்திருக்கலாம் என்பது சரியாக இருக்கக் கூடியதாக இருந்தாலும், 1-வது எதிரியானவர் அத்தகைய செயலை தாமே எண்ணி அந்த வார்த்தையைக் கூறவில்லை. மேலும் அவர் அதுமாதிரியான குற்றத்திற்காக தூண்டுதலான வார்த்தைகளை அவர் பயன்படுத்தவும் இல்லை.

48. பல பத்தாண்டு காலமாக, சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனும் பொதுக் கருத்தும், சட்டம் அனைவரின் பாதுகாப்பிற்காக அமைந்திருக்கிறது, சட்டம் அனைவரின் பாதுகாப்பிற்காக அமைந்திருக்கிறது எனும் குற்றவியல் சட்ட இயல், நமது அடிப்படை உரிமைகளாக அரசமைப்பில் பாதுகாக்கப்படுகிறது. இந்த பொதுக் கருத்தில் அடங்கி இருப்பதாவது, எந்த ஒரு மனிதனாக இருந்தாலும், எவ்வளவு அதிகாரம் உடையவராக இருந்தாலும் சரி, மக்களின் தலைவனாக இருந்தாலும், குற்றவியல் சட்டத்தை மீறினால், நாட்டின் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவதற்கு உரியவராகிறார். சட்டம் எந்தவொரு மனிதனையும் மதிப்பது அல்ல, இதுவே சட்டத்தின் மாட்சிமையாகும். சட்டச் சாட்சியம், சட்டத்திற்குத் தெரியும் வகையில் முன்னிலைப்பட்டு, குறுக்கு விசாரணையின் மூலம் சோதிக்கப்படும் என்பதே. இப்பொதுக் கருத்தின் நோக்கம் ஆகும். சந்தேகம், எந்த அடிப்படையும் இல்லாத கருத்து, யூகம் இவை சட்ட ரீதியான நிரூபணம் ஆகாது.

49.எனவே, எதிரி-1-ன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்ற முடிவுக்கு வர எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. எதிரி -1 குற்ற விடுதலை பெற உரிமைபெற உரிமையுடையவர் ஆகிறார்.

50. ஏனைய எதிரிகளைக் குறித்து, இவ்வழக்கில் தனித்தனியாக, கொலைக் குற்றச்சாட்டு பற்றி பார்ப்போம்.

51. அங்குச்சாமித் தேவர் (எதிரி-2) : இவர் மீதுள்ள சாட்சியம் வெற்றி கொள்ளும்படி தெளிவாக அமைந்திருக்கிறது. இவர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இவர் செய்தாக சொல்லப்படும் வெளிப்படையான செயல், .சா.-1, .சா.-2, .சா.-3, .சா.-4 ஆகியோரால் நேரடியாகக் கண்ணுறப்பட்டு, சம்பவத்திற்கு பின்னர், விரைவாகக் கொடுக்கப்பட்ட அறிக்கை (.சா.-1) மூலம் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. .சா.-15, 16 மற்றும் 17 ஆகியோர் எதிரி-2 உடைக்குளத்திலிருந்து பேருந்து நிலையத்திற்கு வந்து, மேற்கு நோக்கி, கொலைத்  தாக்குதல் நடத்தியவர்களுடன் சென்றிருக்கிறார். செல்லச்சாமி (.சா.-8)ன் மதிப்புள்ள சாட்சியத்தின்படி, சம்பவ இடத்திலிருந்து பிறருடன் ஓடிச் சென்றதை அவர் கண்டுள்ளார். கீழகன்னிசேரி அரிசனங்கள், சந்தானம் (.சா.-1) போன்றவர்கள் மற்றும் மறவர்களுக்கு உள்ள தெளிவற்ற பகைமை மற்றும் இவருக்கும், முதுகுளத்தூர் சார்பு ஆய்வாளர் திரு. நடராஜ அய்யர் மீதுள்ள, நிரூபிக்கப்படாத பகைமை பற்றியும் தவிர, இந்த எதிரி குறித்து எதிர் விவாதம் ஏதும் இல்லை. மேற்படி அம்சம் குறித்து எதிரி-2 மற்றும் எதிரி-3 குறித்து சில வாக்குமூலங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள. இவை இவ்வழக்கிற்குத் தேவையானவை அல்ல. எதிரி-2ன் குற்றச் செயல் நிலைநாட்டப்பட்டுள்ளது என்று ஏற்றுக் கொள்கிறேன்.

52. பேயன் முடியாண்டித் தேவர் (எதிரி-3) : இந்த எதிரி-3ன் மீதுள்ள சாட்சியம் மிகத் தெளிவாக உள்ளது, இவரது வெளிப்படைச் செயல்கள் .சா.1-ல் கூறப்பட்டுள்ளன. இவர், “அவன் கழுத்தை வெட்டுஎன்று தாக்குதலை நடத்தும் முன் சத்தமிட்டிருக்கிறார். .சா.-1, .சா.-2, .சா.-3 மற்றும் .சா.-4 இவர்கள் அனைவருமே இவர் குற்றமிழைத்தவர் என்று சாட்சியம் அளித்துள்ளனர், மற்றும் செல்லச்சாமி (.சா.-8) சம்பவம் நடந்த உடனே ஓடிச் சென்றதைக் கண்ணுற்றிருக்கிறார். பேருந்து வந்து சேர்ந்தது குறித்துக் கூறப்பட்ட சூழ்நிலை சாட்சியத்தில், வேலு குடும்பன் (.சா.-15), எதிரி-3 சம்பவ இடத்தில் காத்துக் கொண்டிருந்தார் என்று சாட்சியம் அளித்துள்ளார். .சா.-2, .சா.-3, மற்றும் .சா.-4 இவரை அடையாளம் காட்டியுள்ளனர். .சா.-4 இதற்கு முன் இவரது பெயர் எனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார். ஏனைய சாட்சிகள், இதற்கு முன் பல சந்தர்ப்பங்களில் எதிரி-3 பார்த்திருக்கின்றனர்.

.சா.-1ன் சாட்சியம் மிகவும் தெளிவானது. ஏனைய சாட்சியங்களிலிருந்து இது சான்றுருத்தம் பெறுகிறது. இந்த எதிரி தனது வாக்குமூலத்தில், தனக்கும் முதுகுளத்தூர் சார்பு ஆய்வாளர் திரு. நடராஜனுக்கும் பகைமை இருப்பதாக கூறுகிறார். மேலும், தனக்கும் .சா.-1க்கும் ஒத்தி சம்பந்தமாக பகைமை உள்ளது என்றும் கூறுகிறார். ஆனால் இதற்கு எந்த சாட்சியமும் முன்னிடவில்லை. எதிரி 2 மற்றும் சிலரைக் குறித்து, தீவைத்ததாக வழக்குகள் உள்ளன என்று மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. ஆனால் .சா.-1 இது குறித்துத் தெரியாதெனக் கூறியிருக்கிறார் மற்றும் இவ்வழக்கில் தனது உறவினர்கள் சாட்சிகள் என்றும் கூறுகிறார். பெயர்கள் மற்றும் அடையாளம் குறித்து, சாட்சியம் இல்லாத நிலையில், முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிரியின் வாக்குமூலத்துடன் தாக்கல் செய்திருப்பதால், இது பயனற்றது. இவர் குற்றம் நிலைநாட்டப்படுவதாக சந்தேகத்திற்கு அப்பால் நான் காண்கிறேன், அரசு தரப்பு சாட்சியம் ஏற்றுக் கொள்ளடும் நிலையில்.

53. தவசித் தேவர் (எதிரி-4) : இந்த எதிரி மீது குறிப்பிடப்பட்ட வெளிப்படைச் செயல், அருவாளால் பலியானவரின் தலையில் வெட்டினார் என்பதாகும். கொலைத் தாக்குதல் நடத்தியவர்களில் இந்த எதிரியை .சா.-1, .சா.-3 மற்றும் .சா.-4 அடையாளம் காட்டியுள்ளனர். செல்லச்சாமி (.சா.-8)ன் சான்றுருத்தம் செய்யும் சாட்சியமும் உள்ளது. இதில் முக்கியமானது யாதெனில், சுந்தர வாத்தியார் (.சா.-5) உண்மையான சாட்சியாக எனது உள்ளத்தில் பதிந்தவர். எதிரி-4 இறந்துபட்டவரின் தலை மீது அருவாளால் வெட்டியதை தான் கண்ணுற்றதாகக் கூறுகிறார். இந்த பொருண்மையைத் தெளிவுபடக் கூறுகிறார். இதனை ஜெயராஜ் (.சா.-2) சான்றுருத்தம் செய்கிறார். சுந்தர வாத்தியார்(.சா.-5) மீது சாட்டுரை ஏதுமில்லை. இவர் அளித்த சான்றுருத்தமான சாட்சியம், சம்பவத்தின் சற்று முன்னர் அதே இடத்தில், கொலையுண்டவரின் உடன் இருந்திருக்கிறார். இவருக்கும் எதிரி-4-க்கும் இடையே பகைமை இருந்ததாகக் கூறப்பட்ட சாட்டுரை மறுக்கப்பட்டுள்ளது. .சா.-5-ன் சாட்சியம் மனதில் பதிவதாகவும், பயனுள்ளதாகவும் இருந்ததால் .சா.-2ன் சாட்சியத்தால் இது சான்றுருத்தம் பெறுகிறது. எதிரி மீது குற்றச்சாட்டு முழுதும் நிலை நாட்டப்படுகிறது.

54. சல்லிக் குருசாமித் தேவர் (எதிரி-5) : இந்த எதிரி மீது, செல்லச்சாமி (.சா.-2)ன் சாட்சியத்தைத் தவிர வேறு சாட்சியம் ஏதும் இல்லை. இவர் வெளிப்படையாகக் குற்றச் செயல் புரிந்தார் என்ற சாட்சியம் இல்லை. இந்தச் சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கும்போது இவர் குற்றவாளி என்று நிரூபிக்கும் சாட்சியம் வேறில்லை என்று சான்றுருத்தம் உள்ளது.

55. காட்டுச் சாமி (எதிரி-6) : இவரைப் பொறுத்துக் கூறப்பட்ட சாட்சியம், இவர் பேருந்து நிலையத்திற்குச் சென்று வந்து மட்டுமே. இதனை .சா.-15,16 மற்றும் 17 ஆகியோர் சாட்சியம் தெரிவிக்கிறது மற்றும் செல்லச்சாமி (.சா.-8) சாட்சியமும் கூறுகிறது.

பொதுவாக, இந்த சாட்சிகளின் சாட்சியம், ஏனைய, குறிப்பிடப்பட்ட சாட்சியங்களைச் சான்றுருத்தம் செய்வதற்குப் பயன்படுகிறது. காரணம், இவர்களுக்கும் எதிரிகளுக்கும் இடையேயுள்ள நட்பு தெளிவுபடுத்தப்பட வில்லை. இவர்கள் தவறுதலாகக் கூட சொல்லி இருக்கலாம். குறிப்பாக இவர்கள் சம்பவத்தை கண்ணுற்ற சாட்சிகள் அல்லர். எவ்வகையிலும், இந்த எதிரி, இக்குற்றச் செயலில் ஈடுபட்டார் என்பதைக் காட்டுவதற்கு தகுதிநிலைக்கு அப்பாற்பட்ட சந்தேகம் இல்லை.

56. முனியசாமி (எதிரி-7) : மேற்கண்ட குறிப்பு, இந்த எதிரிக்கும் பொருந்தும். சூழ்நிலைச் சாட்சியத்தைத் தவிர (.சா.-15, 16 மற்றும் 17) மற்றும் செல்லச்சாமி (.சா.-8)ன் சாட்சியம் மற்றும் கண்ணுற்ற நேரடிச் சாட்சி மாணிக்கம் (.சா.-4), இந்த எதிரியை அடையாளம் காட்டினார். ஆனால், இவர்தம் முந்தைய பழகிய தன்மை நிரூபிக்கப்படவில்லை.

57. சடையாண்டி (எதிரி-8) : .சா.-2, 3 மற்றும் 4 இந்த எதிரி-8 அடையாளம் கண்டனர். மற்றும் சூழ்நிலைச் சான்றும் உள்ளது. ஆனால் இவர் அடையாளம் முன்னர் எவ்வளவு காலமாகத் தெரிந்திருந்தது என்பது நிலைநாட்டப்படவில்லை மற்றும் அவர் பெயர் கொண்டு தெரியும் என்பதும் கூறப்படவில்லை.

58. திருக்கண்ணத்தேவர் (எதிரி-9) : மேற்கண்ட சாட்சியம் இந்த எதிரிக்கும் பொருந்தும், இவர் பற்றிய சூழ்நிலை சாட்சியம் .சா.-15 மற்றும் செல்லச்சாமி (.சா.-8)ன் சாட்சியம்.

59. நல்லுத்தேவர் (எதிரி-10) : .சா.-1 மற்றும் .சா.-3 இவர்கள் மட்டுமே இந்த எதிரியைப் பார்த்திருக்கின்றனர். சூழ்நிலைச் சாட்சியத்தைப் பொறுத்து செல்லச்சாமி (.சா.-8)ன் சாட்சியம் தெரிவிக்கிறது.

60. கருப்பணன் (எதிரி11) : இந்த எதிரியை, .சா.-3 மட்டுமே பார்த்த்தாக சாட்சியம் அளித்துள்ளார். .சா.-8 மற்றும் .சா.-15 இவர்களது சாட்சியமும், இந்த எதிரி-11க்குப் பொருந்தும்.

61. பெரியசாமித் தேவர் (எதிரி-12) : .சா.-3 மட்டுமே இவரைப் பார்த்ததாக சாட்சியம் அளித்துள்ளார். மற்றும் .சா.-8 மற்றும் .சா.-15 சாட்சியமும் இவருக்குப் பொருந்தும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி - 1957 யார் காரணம்? முதுகுளத்தூர் கலவரம்
பசும்பொன் தேவர் ஆன்மீக மனிதநேய நலச் சங்கம்
14, ஆண்டவர் நகர், 2-வது தெரு,
கோடம்பாக்கம், சென்னை - 600024

--------------------------------------------------------------------------------------------------------------------------

No comments: