Sunday, September 27, 2015

காங்கிரஸ் அரசியல் சூழ்ச்சியில் சிக்கிய இம்மானுவேல்

காங்கிரஸ் அரசியல் சூழ்ச்சியில் சிக்கிய இம்மானுவேல்

திரு இம்மானுவேல் என்பவர் பரமக்குடி அருயுள்ள செல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பள்ளர் வகுப்பினர். ராணுவத்தில் சிறிது காலம் பணியாற்றியவர். பேரையூர் வைத்தியர் பீட்டர் பெருமாள் என்பவர் தொடங்கியதேவந்திர குல வேளாளர் சங்கத்தில் இம்மானுவேல் முதுகுளத்தூர் வட்டத்தின் தலைவராகவும், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளராகவும் பணி செய்தனர்.

காங்கிரஸ் அமைச்சர் திரு கக்கன் அவர்களின் நண்பராக இருந்ததால், காவல்துறை வட்டாரத்தில் செல்வாக்கு பெற்றவர். அச்செல்வாக்கினால் தனக்கு வேண்டியவர்களுக்கு காவல் துறை மூலம் சில உதவிகளை செய்து கொடுத்து வந்தார்.

அப்போதிருந்த முதல்வர் திரு. காமராஜ் நாடாரிடம், இம்மானுவேலுக்கு பதவி கொடுக்க வேண்டும் என்றும், தனித் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தும்படியும் அமைச்சர் திரு. கக்கன் கோரினார். திரு. காமராஜர் அவர்கள் பதவி எதுவும் கொடுக்காமல் கால தாமதப்படுத்திக் கொண்டிருந்தது அன்றைய காங்கிரஸ்காரர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

மேலும், தனித் தொகுதியில் வேட்பாளராக ஒரு இந்து அரிசனரே நிற்க முடியும் என்ற காரணத்தால், கிறிஸ்தவ மதத்திலிருந்து மாறி தனது பெயரைஇம்மானுவேல் குலசேகரன்என்று இந்துப் பெயராக மாற்றிக் கொண்டார். அவரைஇம்மானுவேல் சேகரன்என்றும் அழைத்தார்கள்.

1957 இடைத் தேர்தலில் காங்கிரஸ் இம்மானுவேலுவை வாக்குகளைச் சேகரிக்கத்தான் பயன்படுத்தியது. இதற்காக முதுகுளத்தூர் இடைத் தேர்தலில் இம்மானுவேல் கடுமையாக உழைத்தார். காங்கிரஸ் கட்சியினர் இம்மானுவேல் மூலம் அதிக வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது போல ஒன்றும் நடக்கவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சியினருக்கு இம்மானுவேல் மீது அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. இதனால்தான் காங்கிரஸ் கட்சி இம்மானுவேல் கொலையுண்ட பின்பும் அவரை தனது கட்சிக்காக உழைத்த தியாகி என்று ஏற்கவில்லை. இம்மானுவேலை அவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே இன்றும் தியாகியாகப் போற்றி வருகின்றனர்.

இம்மானுவேல் கொலை பற்றி அவரது மைத்துனரும், அப்போதைய பரமக்குடி தேவேந்திரகுல வேளாளர் பண்பாட்டு மையத்தின் தலைவர் ஜி. பாலச்சந்திரன் தனது கருத்தில், “தேவர் சட்டமன்றத்திலும், தனது சொந்த வீட்டிலும் பள்ளர் இன மக்களை சம்மாகப் பாவித்து நடத்துவதை நானே நேரில் பார்த்துள்ளேன். மறவர் - பள்ளரிடையே நல்லுறவை வளர்த்தவர் தேவர். அவர் இம்மானுவேல் கொலைக்குக் காரணமாக இருந்தார் என்பதை நம்புவதற்கில்லைஎன்று கூறியுள்ளார்.

இம்மானுவேல் கொலைக்குப் பின்பு 1962-ம் ஆண்டு முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடந்தது. இத்தேர்தலிலும் பார்வேர்டு பிளாக் வேட்பாளராக திரு. சசிவர்ணத்தேவர் போட்டியிட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக மறவர் இனத் தலைவர் ராமநாதபுரம் சேதுபதி காசிநாத துரை போட்டியிட்டார். இறுதியில் பார்வேர்டு பிளாக் வேட்பாளர் திரு. சசிவர்ணத் தேவர் வெற்றி பெற்றார். இத்தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற காசிநாத துரை, 1957 இடைத் தேர்தல் கலவரத்தின்போது நடந்த சமாதானக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கலந்துகொண்டவர் என்பது குறிப்பிடத் தக்கது.
1962 பாராளுமன்றத் தேர்தலில் பசும்பொன் பெருமகனாரும் வெற்றி பெற்றார். அவரும் அவரது தொண்டர்களும் சாதிவெறியர்களாக இருந்திருந்தால் 1962 தேர்தலில், இம்மானுவேல் கொலைக்குப் பின்பும் அந்த பூமியில் வெற்றி பெற்றிருக்க முடியுமா என்பது சிந்தித்துப் பார்க்கத் தக்கது.

அப்போதைய காங்கிரஸ் கட்சி, திரு. இம்மானுவேல் அவர்களை பதவி ஆசை காட்டி பகடைக் காயாகப் பயன்படுத்தி பலிகடாவாய் ஆக்கியது. 1957 தேர்தலில் காங்கிரஸ்-க்காக தேர்தல் களத்தில் கடுமையாக உழைத்த அவரை இறப்புக்குப் பின்னர் காங்கிரஸ்காரர்கள்தான் தியாகி என்று கொண்டாடி இருக்க வேண்டும். அவர்கள் அப்படிச் செய்தார்களா? இல்லை.
ஓநாய்கள் கூட்டம்போல் சதைகளைத் தின்றுவிட்டு எலும்புகளை துப்பிச் சென்று விட்டார்கள் அப்போதைய காங்கிரஸ்காரர்கள். அன்றுதொட்டு இன்றுவரை இதைத்தான் இந்த பாரத புண்ணிய தேசத்தில் காங்கிரஸ்காரர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.

--------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி - 1957 யார் காரணம்? முதுகுளத்தூர் கலவரம்
பசும்பொன் தேவர் ஆன்மீக மனிதநேய நலச் சங்கம்
14, ஆண்டவர் நகர், 2-வது தெரு,
கோடம்பாக்கம், சென்னை - 600024
--------------------------------------------------------------------------------------------------------------------------


No comments: