Saturday, October 3, 2015

அருட்பாவின் அருளாட்சி - பாகம் 1(1949-ம் ஆண்டு ஜூன் 12-ம் நாள் மதுரை வெள்ளியம்பலம் மண்டபத்தில் நடந்த சன்மார்க்கத் தொண்டர்கள் மாநாட்டில் தேவர் ஆற்றிய தலைமை உரை.)

தாய்மார்களே, சகோதரர்களே நாம் இன்று இங்கு கூடியிருக்கும் மண்டபம் மதுரை வெள்ளியம்பல மண்டபமாகும். இம்மண்டபம் போன்ற பல கட்டிடங்களைக் கொண்ட நிலப்பரப்பை உடையது மதுரையம்பதி. தமிழகத்தின் முத்தமிழ்ச் சங்கங்களை நிறுவிய பொறுப்பு மதுரையம்பதியையே சாரும். தமிழரின் ஆதிக்கடவுளான சுப்பிரமணியரும் இன்னுனம் அகத்தியர் அவரது சிஷ்யர்கள் போன்றோர் உறைந்து தமிழ் வளர்த்த இடம் மதுரையம்பதி. அகத்தியரால் உலக மக்களுக்கென யாத்துக் கொடுக்கப்பட்ட “சிற்றகத்தியம், பேரகத்தியம்” பெயரளவில் நாம் கேள்விப்பட்டதும் நமக்குக் காணக் கிடைக்காததுமான பல நூல்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருந்தது மதுரையம்பதி.

இயக்கும் சக்தி

இத்தகைய மகான்களுக்குப் பிறகு வந்தவர் அநேகர்.  அதன் பிறகு அரசர்கள், ஞானியர், புலவர்கள் தோன்றித் தோன்றி மறைந்தனர். இன்னும் பலர் மக்களிடையே வாழாது மக்கள் வாழ்வதற்கென வழிகளை வகுத்துக் காட்டித் தாம் கண்ட இலட்சியங்களைக் கடைப்பிடிக்கும் ஆட்சியாளர்களை அரச பீடத்தில் அமர்த்தி விட்டுத் தாம் மறைந்திருந்து வருகின்றனர். பித்தர் போல் விளம்பரமின்றி வாழ்கின்றன ஞானியர் பலர்.

உதாரணமாக இதோ என் முன் பேசும் கருவி இருக்கின்றது. இதற்குரிய விசேஷ குணத்திற்கு அதாவது ஒலியைப் பெருக்குவதற்கு முக்கிய காரணமாக உள்ளது பாட்டரியாகும். இதற்குரிய விசேஷ குணம் பாட்டரியால் ஏற்படுகிறது என்பதை யாரும் கருதுவதில்லை. பாட்டரி எங்கோ ஓரிடத்தில் மறைந்திருந்து தன் சக்தியைக் கொடுத்து இக்கருவிக்கு இயக்கும் ஆற்றலைக் கொடுக்கிறது.

இதுபோலவே பல ஞானியர் தம் மக்கட்கு செய்வனவற்றை உண்மையான அரசர்களை ஆட்சி பீடத்தில் அமர்த்துவதன் மூலம் மறைந்திருந்து செய்கிறார்கள்.

அத்தகைய ஞானியோரிடமிருந்து மிளிர்ந்தவனே உண்மையான அரசன் ஆவான். அத்தகைய அரசு பொய்த்துப்போன காலம் இது. ஆன்மீக உணர்வு வளர்ச்சியின்றி வாடிப்போன காலம் இது. உயர்ந்திருந்தது தாழ்வான நிலையையும் தாழ்வான நிலையிலிருந்தது உயர்ந்த நிலைக்கும் மாறி வந்துகொண்டிருக்கும் காலம் இது. பழமை - புதுமை இவ்விரு பொருளும் உண்டாகும் இயக்கம் இது. இவ்வாறு இயக்கமிராது போனால் அத்தகைய நிலைக்கு இயக்கமற்ற சர்வ நாஸ்தியான நிலை என்று கூறப்படும். அத்தகைய உலக ஒடுக்க காலம் மிகவும் கெட்ட காலமாகும். பலவிதப் பேச்சுக்கள், பலவித குறும்புத் தனமான பேச்சுகள் நிறைந்த காலம் இது.

உதாரணமாக தூரதிருஷ்டி கண்ணாடியை ஒருவன் தன் கையில் வைத்துக் கொண்டு, நாற்பது ஐம்பது மைல்களுக்கு அப்பாலிருக்கும் பொருளைத் தான் கண்டதாக் கூறினால் இன்றைய ரசாயனவாதி, ஆம் இவன் கையில் கருவி இருக்கின்றனது. அதைக் கொண்டு அவன் தூரத்தில் உள்ள பொருளைப் பார்க்கிறான் என்று கூறுகிறான். ஒன்றும் அறியாதவனோ இதற்குக் காரணம் எதுவும் கூற முடியாத நிலையில் மௌனமாயிருப்பான். விஷயமறியாத குறும்புக்காரனோ, இவன் பொய் சொல்லுகிறான் என்று கேலி செய்வான்.

இதுபோலவே விஞ்ஞான கண் கொண்டு காண்பனவற்றை ண்மை என்றும், மெஞ்ஞான வழிகளால் காண்பனவற்றை ஆராய வகையறியாத தன்மையினால் பொய் என்றும் கூறும் காலம் இது. அறிவு மந்தமான காலமும் இதுவே. மடமையான அரசுகளின் கையில் மக்கள் அகப்பட்டுப் பலனற்றுப் போனதின் விளைவே இது.

ஆன்மீக போலிகள்

இன்னும் ஆன்மீகத்தின் பெயரைச் சொல்லி சுயநலமிகள் கோவில் கட்டுவதும், கும்பாபிஷேகங்கள் செய்வதும், ருத்ராட்சங்கள் அணிவதும், விபூதி, காவியாடை தரிப்பதும், மொட்டையடித்துப் பண்டாரமாகி, பண்டாரம் மடாதிபதியாகி, சிஷ்ய பரிவாரங்களும் சூழ, மறைவில் திரவிய ஆசை, பெண் ஆசை இவைபோன்ற ஆசைகளால் பல தீய செயல்கள் செய்வதும் மலிந்துபோய் நிற்கின்றன. ஆன்மீகத்தை வயிறு பிழைக்கும் ஒரு கருவியாகக் கொண்ட போலிகள் மலிந்த காலம் இது.

பசுவானது புலித்தோலைப் போர்த்தி வஞ்சகமாக நடித்து, மக்களை ஏமாற்றி சுயவாழ்வு கொள்ளும் கபடர்கள், ஆன்மீகவாதிகளென வேஷங்கொண்டு, மக்களின் மத்தியில் திரிவதனால் குறும்புக்காரர்கள் கிளம்பி ஆன்மீக உணர்வுக்கு எதிராகப் பலவகைப் பிரச்சாரத்தை மக்களிடையே பரப்பி வருகின்றனர். இதைக் கண்டு உண்மையான சன்மார்க்கவாதிகள் பயமடையக் கூடாது. தைரியமிழக்கக் கூடாது. ஆச்சர்யம் கொள்ளவும் கூடாது.

மரணம் வ்வாறு உண்டாகிறது?

செய்கை ஒன்றிருக்குமேயானால் அதற்கு எதிர்ச் செய்கை கண்டிப்பாக இருந்தே தீரும். இது உயருங்காலை அது தாழும். மகாநாட்டைத் திறந்து வைத்த அன்பர். “அருட்பெருஞ்சோதி வள்ளலார் இறுதிக் காலத்தில சூழ்ச்சிக்காரர்களால் கொலை செய்யப்பட்டு இறந்தார்என்று கூறியதாகக் குறிப்பிட்டு மனம் வருந்தினார். இது உண்மைக்கு மாறுபட்டதாகும். மரணம் வள்ளலார் போன்ற ஞானியரை அணுகுவதில்லை.

உண்மையான மரணம் எவ்வாறு உண்டாகிறது? என்ற உண்மையை ஆராய்வோம். மனிதருக்கு குழந்தைப் பருவம், யௌவனப் பருவம், வயோதிகப் பருவம் ஆகிய பருவங்கள் வருகின்றன. மனித உடற்கூறு நம் கண்களுக்கு இரண்டு வகையாகக் காணப்படுகிறது. பெருத்த அளவினதாய் எங்கு பெருக்க வேண்டும்? எங்கு சிறுத்திருக்க வேண்டும்? என்ற நியதி இல்லாமல் சதை மயமாகக் காணப்படும் வாத சரீரம் ஒரு வகை, கன்னங்குழி விழுந்து சதைப் பற்றின்றி எலும்பும் தோலுமாய்க் காட்சியளிக்கும் பித்த சரீரம் ஒருவகை.

இந்த இரண்டு சரீரக் கூறுகளைத் தவிர வேறு உடற் கூறுகளை நாம் சாதாரணமாகப் பார்ப்பதில்லை. இத்தகைய சரீரங்கள் பிணி, விருத்தாப்பியம், மயக்கம், தயக்கம், மரணம் போன்ற பலவகை அவஸ்தைகளுக்கு உள்ளாகின்றன. இந்த அவஸ்தைகள் அனைத்தும் மாயையால் ஏற்படுவதாகும். மாயையை ஒழித்ததனாலேயே ஞானிகள் இவ்வித சரீர அவஸ்தைகளுக்கு உள்ளாகமல் இருக்கின்றனர்.

ஆசையின் லீலைகள் ஆனந்தமானவை. விருத்தாப்பிய தசையோடு நோயும் அதிகரித்து விடுவதால் மரணம் சமீபித்து விடுகிறது. அப்போது தனக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியருக்கு அதிகப் பணத்தைத் தன்னுடைய குடும்பத்தார்கள் கொட்டிக் கொடுத்து விடுகிறார்களே என்ற ஏக்கம் ஏற்பட்டு, மனதை ஆட்டி அசைக்கிறது. அப்போது சாவதற்கு விருப்பம் வருவதே இல்லை.

பாம்பின் வாய்ப்பட்ட தேரை தன் உடலெல்லாம் விழுங்கப் பெற்று, தான் மரண அவஸ்தையிலிருக்கும் போதும், தன்னருகில் வரும் ஈயைக் கவ்வுவதற்கு வாயைத் திறப்பது போலவே, மனிதனுக்கு ஆசை அவன் ஒழியுமட்டும் இருந்துகொண்டே இருக்கிறது.

மரணம் இன்றி இந்த உடலில் எப்போதும் நிலைத்திருக்கும்படி செய்வதற்கான உறுதி உடலுக்கு வேண்டும்.

பழைய கார் ஒன்றை விற்பதற்காக மேலே வர்ணப் பூச்சுப் பூசி வெளிப்பகட்டுடன் வைத்திருப்பதையும், ஆனால் அதனுள்ளேயுள்ள கருவிகள் தேய்ந்து போயிருப்பதையும் நாம் கண்கூடாகப் பார்க்கலாம். அதுபோல உடலுக்கு வெளி அழகு மாத்திரம் போதாது. அது அக அழகும் மனதை அடங்கும் ஆற்றலும் ஒருங்கே வேண்டும். இவ்விரு ஆற்றலும் இருந்தாலன்றி மரண பயத்திற்கு ஆளாகாமல் இருக்க முடியாது.

மனதை அடக்குதல்

மனதை அடக்குவது சுலபமான காரியமில்லை என்பதை ஒவ்வொரு ஞானியரும் கூறிப் போயிருக்கின்றனர்.

மனம் என்னும் பந்தயக் குதிரையின் லகானை ஒழுங்காகப் பிடித்து கடைசி வரை உறுதியுடன் நிற்கின்றவர்களே உண்மையான பேற்றை அடைகின்றனர். மனக் குதிரையிலேறி லகானைத் தன் வயப்படுத்த முடியாதவர்கள் கைகளால் ஒடிந்து மடியும் நிலைக்கு வருகின்றனர்.

மனதின் மந்த நிலை, தீவிர நிலை இவ்விரண்டின் நிலைமையையும் உணர்ந்து, இச்சையை எவ்வாறு அடக்கலாம்? என்று ஆராய்ந்து, அவற்றைத் தன் வயப்படுத்த முயல வேண்டும். இதனை இல்லறத்திலிருந்து செய்தாலும் ஒன்றுதான் துறவறத்திலிருந்து செய்தாலும் ஒன்றுதான். ஒதுங்கி வாழ்வதே சந்நியாசம், ஊருடன் வாழ்வது இல்லறம். ஜீவதயைக் கொள்வதற்கு இல்லறமே சிறந்த ஆசிரமமாகும். துறவறமானது எந்தப் பற்றையும் ஒழித்து, எதையும் தன் வயப்படுத்தும் சக்தியுடையதாகும். இதை உணர்த்துவற்கே காவியாடையை அணிந்து வருகின்றனர். காவி ஆடையின் நிறம் தீயின் நிறமாகும். தீயானது எதையும் தன்மயமாக்கி எரித்துவிடும் குணமுடையது. அதைப்போன்று தன் மனத்திடையே எழும் எவ்வகைப் பாசத்தையும் எரித்து தன்மயமாக்கிக் கொள்வதே ஞானியின் உள்ளம்.

இத்தகைய வாழ்க்கையை நடத்துபவர்களை சோம்பேறிகள் என்று கூறலாமா? இவர்கள் கூறிச் சென்றவை சோம்பேறிகள் கூறியவைகளாகுமா?

ஞானிகளின் வாழ்க்கை

ராமலிங்க வள்ளலார் சென்னையில் வசித்து, வர்த்தகராய் தொழில் நடத்திப் பொருளை ஈட்டித் தானும் தன் சந்ததியும் நன்றாக வாழவேண்டும் என்று பாடுபட்டிருந்தால், அவரைப் பற்றி நமக்குத் ஏதாவது தெரியுமா? பணம் அதிகம் இருப்பதை இன்கம்டாக்ஸ்காரர்தான் தெரிந்து வைத்திருப்பார். அல்லது அவரது சந்ததிகள் வருஷாப்திகம் செய்வார்கள். உலக மக்களை வாழ்விக்க வழிவகுத்துக் கொடுக்கவே நாம் வந்தோம், தான் மாத்திரம் வாழ்வதற்கு அல்ல  என்பதை நிரூபித்தார் வள்ளலார். தான் மாத்திரம் இன்பமுற வேண்டுமென்று வள்ளலார் ஒதுங்கி வாழவில்லை. மக்களிடையே வாழ்ந்து, அவர்களுடன் பழகி தன்னுடைய மார்க்கத்தைப் போதித்து வந்தார்.

உதாரணமாக ஒன்று கூற விரும்புகிறேன். இமயமலையின் சிகரங்களில் பனி உறைந்து இருக்கின்றதைப் பார்க்கின்றோம். சூரிய வெளிச்சம் பட்டதும் பனிக் கட்டியானது உருகி நீலநிறமான தெள்ளிய நீரைக் கொண்ட அருவியாக ஓடி வருவதையும், பின்னர் அதே நீர் தரைக்கு வந்து வண்டல், தூசி, அழுக்கு இவைகளை எல்லாம் அடித்துக் கொண்டு வந்து, கங்கை, யமுனை போன்ற நதிகளாக மக்களுக்காக பயன்படுவதையும் பார்க்கிறோம். ஞானிகளுடன் இதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

மலைச் சிகரத்திலுள்ள பனிக்கட்டி போன்று தனித்து ஒதுங்கி வாழ்பவர்களும் உண்டு. இன்னும் மலை அருவிகள் போல சுத்தமான மலைப் பிரதேசங்களில் தேங்கியிருக்கும் நீரைப் போன்றவர்களும் உண்டு. கடைசியாக கங்கை, யமுனை போன்று தான் அசுத்தமடைந்தாலும் பரவாயில்லை, மக்கள் தன்னால் பயனடைய வேண்டும் என்று விரும்புபவர்களும் உண்டு. இத்தகைய ஞானிகளே மக்களின் மத்தியில் வாழ்ந்து தன் மனத்திடையே தோன்றும் சன்மார்க்க நெறியினைக் கடைப்பிடிக்கும் செங்கோலையும், அரசையும் சிருஷ்டித்து வருகின்றனர்.

எந்தக் காரியத்தையும் சிந்திக்கும் ஆற்றல் ஒவ்வொருவருக்கும் வேண்டும்.

இன்றைய நிலையில் ஏற்பட்டுள்ள குறும்புத்தனமான வாதங்களையும், அதனைப் பேசுபவர்களையும் கண்டு சன்மார்க்கவாதிகள் கலக்கமடையக் கூடாது. வள்ளலார் கொலையுண்டு போயிருக்கலாம் என்று கூறுவதைக் கண்டு சலனமடையக் கூடாது. சாதாரணமாக மனிதன் நோய் வந்தால் சாவான். அல்லது கொலை செய்யப்பட்டால் இறந்து போவான். இந்த இருவகையான மரணத்தைத்தான் சாதாரணவாதிகள் கூறுவார்கள். இது நிற்க, இன்றைய ரசாயனம் எவ்வளவோ சிரமப்பட்டு, எந்த ஒரு வஸ்துவையும் ஒரு உருவத்திலிருந்து மற்றொரு உருவமாக மாறுமேயன்றி, எப்போதும் இல்லாதபடி அழிந்துபோவதில்லை என்று ஒப்புக் கொண்டிருக்கிறது. அணு ஆராய்ச்சி வரைதான் இது வரை சிரமப்பட்டு வந்துள்ள இன்றைய ரசாயன உலகம், அணுவிற்கும் அப்பாலுள்ள வெளி, பரவெளி, அகண்ட வெளி இவைகளைப் பற்றிய ஆராய்ச்சிக்கு இன்னும் வரவேயில்லை. இந்தவெளிகளைப் பற்றி ஆராய அமெரிக்காவில் உள்ள இரும்பு இயந்திரங்களுக்கு திறன் போதாது. அவை எந்திரத்தாலன்றி கருத்தினால் ஆராயப்படுபவை.

இனி சரீரத்தின் கூறுகளைப் பார்ப்போம். தூலமான சரீரமானது படிப்படியாக வழிகளைத் தாண்டி நெருப்பு வடிவமாகின்றனது. நெருப்பு வடிவத்தையேஅழல் உருஎன்று கூறுவர். சிவபெருமான், “அழலுருக் கொண்டிருக்கிறார்என்று கூறுவதன் மர்மம் இதுதான்.

இவ்வாறு உருவம் மறைந்தபோது தீபமாக மாறுகிறது. அதைக் கருத்தில் கொண்டுதான் திருவண்ணாமலையில் குடம் குடமாய் நெய்யை சொரிந்து, மலையின் உச்சியில் தீபத்தை ஏற்றி மக்களுக்குக் காட்டி வருகின்றனர்.

ஆலய வழிபாடு

உதாரணமாக சின்னஞ்சிறு பள்ளிக் கூடங்களில் குழந்தைகளுக்கு அட்டையால் செய்யப்பட்ட அணாக்கள், ரூபாய்கள் இவைகளைக் கொண்டு கணிதம் போதிக்கப்படுவது நமக்குத் தெரியும். அந்த அட்டை ரூபாய்களையே உண்மையான நாணயங்களாக எண்ணச் செய்து கணக்குகள் போடுகின்றனர்.

ஆலய வழிபாடும் உண்மையான பொருளைக் காண்பதற்காக சாதாரண மக்களுக்குக் காட்டியுள்ள ஆரம்ப வழிகளாகும். “அட்டை ரூபாயைக் கொண்டுதான் எதுவும் கடையில் வாங்க இயலாதே? பின் எதற்காக அட்டை ரூபாய்களை வைத்துக் கணக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்என்று குதர்க்கவாதம் செய்வது போலிருக்கின்றனது ஆலய வழிபாட்டை குறை கூறும் குறும்புக் காரர்களின் போக்கு.

ஆலய வணக்கத்தின் மூலமாகத்தான் மெய்ப் பொருளைக் காண வேண்டுமென்பதில்லை. ஞானியர் தங்கள் உடலிலேயே புருவ நடுவிலே ஜோதி துலங்குவதைக் கண்டு மகிழ்ந்து, அதை மக்களுக்குத் தொட்டுக் காட்டும் வகையிலேதான், நெற்றியிலே கபாலத்திடையே பொட்டிடுக் காட்டினர். புருவ நடுவே விளங்கும் இந்த ஜோதியானது. முதிர்ச்சியடைந்த வேப்ப முத்தைப் போன்றது எனறு கூறப்படுகிறது.

ஒரு பொருளைக் காணாதவிடத்து, அப்பொருளை எடுத்துக் காட்ட வேண்டிய அவசியமேற்படும்பொழுது, அப்பொருள் இது போன்றது, இத்தன்மையானது என்று பல பொருள்களைக் குறிப்பிட்டு சொல்வது வழக்கம்.

பஞ்ச பூதங்கள் இயக்கமில்லாத காலத்தில், அதாவது மனிதன் தூக்கத்திலிருக்கும்போது தான் காணும் சொப்பனத்தில் பல்வகைக் காட்சிகளைக் காண்கின்றான். புறக்கண்கள் இரண்டையும் மூடித் தூங்கும் இவன் எந்தக் கண்களினால் அந்தக் காட்சியைப் பார்த்தான்? சொப்பனத்தில் பலருடன் பேசுகிறான். பலவித் தொனிகளைக் கேட்கிறான். எந்தக் காதால் அவற்றைக் கேட்டான்? யாரும் பார்த்திராத அபூர்வக் காட்சிகளை சொப்பனத்தில் பார்ப்பது வழக்கம்.

சொப்பனத்தில் மனமகிழ்ச்சி, பீதி முதலிய பலவகை உணர்ச்சியையும் பெறுகின்றோம். இந்த உணர்ச்சிகளைப் பெறுவது எந்த சக்தி? சொப்பனத்தில் நமது பஞ்சேந்திரியங்களும் இயங்காத காலத்திலும், ஆசையெனும் மாயை நம் சரீரத்தை இயக்கும் தன்மையைப் பெற்றிருக்கிறது. இதைக் கொண்டு ஏதோ ஒரு சக்தி நம் உடலிலேயே உறைந்திருக்கிறது என்று தெரிந்துகொள்கிறோம். இந்த சக்தியைத்தான் அழலுருவாக யோகியர் கண்டு மகிழ்ந்தனர். ஒரு சிறு வேப்ப முத்தைப் போன்ற வடிவமான இந்த ஜோதி, அகண்ட பிரம்மாண்டமான ஜோதியாகப் பல மைல்கள் வரை பலவித ஒளிவீசும் சுடரொளியாக ஞானியருக்குக் காட்சியளுக்கும்.

நாகத்தினிடையே பிறக்கும் ரத்தினத்தை இதற்கு உவமை கூறுவதும் உண்டு. நாகரத்தினம் நெருப்பு வடிவமானதாகும். தண்ணீர் நிறைந்த கோப்பைக்குள் போட்டால் அந்த் தண்ணீர் ரத்தமயமாக இருப்பதோடு, நாகரத்தினமானது எந்த டத்தில் இருக்கின்றது என்பதை பார்க்க முடியாது. விஷம் முதிர்ந்த நூறு வருஷங்களுக்கு மேல் உயிர்வாழும் சர்ப்பங்கள்தான், இத்தகைய நாகரத்தினங்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. காம ஆசையை அடக்கிய ஞானிகளிடத்திலும் இம்மாதிரியே ஒளி வடிவமான காட்சி தோன்றுகிறது.

இதையெல்லாம் இன்றைய உலகம் அப்படியே ஒப்புக்கொள்ளாது. விஷயம் தெரியாமல் பிதற்றுவதாகக் கூறி நகைபுரிவர். எதைச் சொன்னாலும் அதை அப்படியே நம்புவது பெருந்தவறு. தன் அறிவுக்குப் புலப்படும் வரை சொன்னவற்றைச் சிந்தித்து பரிசீலனை செய்து முடிவுகாண வேண்டும். உண்மையானவை, பொய்யானவை என்பதை நிரூபிக்கப் பரிசீலனை வேண்டும் பரிசீலனைகள் இருந்தால் பதர்கள் நெல்லென்ற பெயரில் கடைக்கு விற்பனைக்கு வராது.

போலித்தனத்தை துதிக்கும் உலகம்

இன்றைய உலகம் உண்மையினின்றும் மாறுபட்ட நீசத்தனத்தின் உச்ச நிலையை அடைந்து கொண்டிருக்கிறது. அரசியல் சூதுகள் மலிந்த திறமையில்லாதோரைதீரர்கள்எனப் பறையடிக்கும் மாய்மாலப் பத்திரிகைகள் நிறைந்த காலம் இது. அரசியலில் பங்கு பெறுபவர் எவருக்குப் பதிலாக வந்தவர், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதையே கருத்தில் கொண்டு, தனக்கு வேண்டியவரும் அரசியல் ஞானசூன்யனான ஒருவரை வானளாவத் தூக்கிப் பாடும் பத்திரிகைகளும், சினிமா நடிகரொருவர் தன் குலத்தவர் தனக்கு வேண்டியவர் என்பதற்காக நடிப்புத் திறமையற்ற அவரைப் புகழ்ந்து பக்கம் பக்கமாக எழுதும் பத்திரிகைகளும், வேதாந்தம் ஆத்மார்த்திகம் என்பதைச் சரியாகத் தெரிந்துகொள்ளாதவர்களை மகரிஷிகள் என்றும் புகழ்பாடும் மாய்மாலப் பத்திரிகைகளும் பெருத்துப்போன காலம் இது.

சன்மார்க்க நோக்கமின்மையும், ஆத்மார்த்திகத் துறையில் உண்மைக்குப் புறம்பான, போலிச் செயல்களும் மலிந்து போனதன் பயனாக இத்தகைய விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன.

உதாரணமாக பணம் படைத்த செல்வனொருவனிடம் சென்றுநீங்கள் எப்படிப் பணக்காரர் ஆனீர்கள்?” என்று கேட்டால்நான்பட்ட பிரயாசை சொற்பமா? அதன் பயனாகவே கிடைத்ததுஎன்று கூறுவான். ஆனால் பணத்தை இழந்து தரித்திர நிலையை அடைந்தபோது போய், “நீர் எவ்வாறு தரித்திரரானீர்?” என்று கேட்டால், “நான் குடித்தேன், விபச்சாரம் செய்தேன், கேளிக்கையில் செலவு செய்தேன், இதனால் தரித்திரரானேன்என்று ஒப்புக்கொள்வானா? ஒருபோதும் மாட்டான். “கடவுள் என்னைக் கெடுத்து விட்டார்என்றே கூறுவான்.

வாழும் காலத்தில் ஏற்பட்ட பிரபல்யத்திற்கும், தரித்திரகால அழிவிற்கும் தானே பொறுப்பு என்பதை மனிதன் ஒப்புக்கொள்வதில்லை. இதே நிலைதான் இன்றைய உலகில் ஏற்பட்டுள்ளது.

சீர்திருத்தவாதிகளின் போலித்தனம்

இன்றைய நிலையில் மதத்தின் பேரால் பல குறைகள் கூறப்படுகின்றன. குறைகளில்லாத மதமே கிடையாது. மார்க்கம் ஒன்று வந்தது. பின்னர் முறையே ஞானியும், யோகியும், கர்ம வீரனும், பக்தனும் தோன்றி தத்தம் வழியில் வழிபாடு செய்தனர். இந்த நால்வகையான முடிவும் ஒன்றேதான். நதிகள் பல. ஆனால் சங்கமமாகும் கடல் ஒன்று.

இன்றைய சீர்திருத்தவாதிகளை நாம் வரவேற்கின்றோம். அவர்கள் சம்மான நோக்குடன் எல்லா மதங்களிடத்திலுள்ள குறைகளையும் ஆராய்ந்து கூறுவதாக் காணோம். இஸ்லாம் மதத்தை குறை கூறினால் அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் கண்ட கண்ட இடங்களில் கூட்டமாகக் கூடி இவர்களைத் தாக்க வருவார்கள். கிருஸ்துவ அரசாங்கம் ஆட்சிப் பீடத்தில் இருக்கும்போது அதைப்பற்றி குறை கூறினால் பேசாமல் உள்ளே தள்ளி விடுவார்கள். இதனால்தான் சீர்திருத்தவாதிகள் அவைகளை விட்டு விட்டு இந்து த்தை ஏகப் பொதுச் சொத்தாக எடுத்துக் கையாண்டு வருகிறார்கள். சீர்திருத்தவாதிகள் இவ்வாறு இல்லாது சமநோக்கோடு தங்களுடைய காரியங்களைச் செய்ய வேண்டும்.

சரீரத்தின் தன்மை

நாம் செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடிப்பதற்காகவே இந்த சரீரம் கிடைத்தது.  சரீரம் எதனால் ஆக்கப்பட்டுள்ளது என்பதை வைத்திய நூல்கள் விரிவாகக் கூறியுள்ளன. இந்த சரீரத்தினுள்ளே அண்டம், பிண்டம், ஊர்வன, பறப்பன, விலங்குகள் போன்ற பலவகைப்பட்ட கருவிகள் அமைந்துள்ளன. சரீரத்தைப் பற்றும் வியாதிகள் நானூற்று நாற்பத்து நான்கு என்றும் கண்டிருக்கின்றனர்.

வியாதி எவ்விதம் வருகிறது? என்று பார்ப்போமானால், இந்த சரீரத்தின் ஒவ்வொரு பாகமும் கண்ணுக்குப் புலப்படாத அணுக்களால் நிறைந்தது என்றும், வெளியேயுள்ள அணு ஒன்று சரீரத்தின் ஒரு பாகத்தை வந்தடையும்போது, எதிர்வரும் அணுவை தன்னுடன் வரவேற்றுத் தன்வயப்படுத்திக் கொள்ள முடியாத நிலைமை ஏற்படும்போது வியாதி உண்டாகிறது.

எதையும் தாங்கும் வலிமைபெற்ற உடல் வேண்டும். அழகாகப் படம் வரைய வேண்டுமென்று திரைச்சீலையை எழுதுகோலால் அமுக்கினால் திரைச் சீலை பொத்தலாகிவிடும். சரீரம் ஒருவகை மாற்றத்தை அடைகிறதேயன்றி எப்போதும் இல்லாமல் அழிந்து போவதில்லை.

இந்த உலகில் செய்ய வேண்டுவனவற்றைச் செய்விக்கவே சிலர் அவ்வப்போது வருகின்றனர். அத்தகையோர் உலகத்தோடு சேர்ந்திருப்பதற்கு உவமையாகப் புளியம் பழத்தைக் கூறுவதுண்டு. புளியம் பழமானது தன்னுடைய ஓட்டில் ஒட்டிக் கொள்ளாமல், அதனுள்ளே தனித்து எதிலும் சாராமல் நிற்பது போலவே, ஞானியும் இந்த உடற்கூட்டிலிருந்து வருகிறான். ஞானிக்கு சரீர அபிமானமே கிடையாது. சரீரத்தை விரும்புபவன் ஒரு வகையில் தோல்வினை செய்யும் சக்கிலியன் போலவே ஆகின்றான். அதாவது சக்கிலியன் செத்த மிருகங்களின் தோலை விரும்பி வேலை செய்வது போலவே இவர்கள் உயிருள்ள தோலை விரும்புகின்றனர்.

சரீர அபிமானம் வைத்திருப்போருக்கு மரணம் தன்னை அணுகாமல் பாதுகாக்கும் திறனில்லாமல் போய்விடுகிறது. இதையறிந்தே சில யோகியர் சரீராபிமானம் சிறிதுமின்றித் தாங்கள் அடைய வேண்டிய ஒரு நிலையை அடைந்ததும், தங்கள் உடல்களை பட்சிகள் உண்பதற்காக வெளியில் போட்டு விட வேண்டும் என்று முன்கூட்டியே கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

சரீரத்தின் கூறுகளை இன்னும் நாம் தீர்க்கமாக ஆராய்வோமானால், தூலமான இந்த சரீரத்திற்குள் சூட்சும சரீரமும் அதைத் தொடர்ந்து காரண சரீரமும் அதற்கப்பால் மகா காரண சரீரமும் உண்டென்பதை அறியலாம். மகா காரண சரீரத்தைப் பெற்ற ஞானியர் அஷ்டமா சித்தியையும் பெற்றவர்கள் ஆகின்றனர். அவர்கள் தங்களுடைய உடலை அணுரூபமாக ஆக்கி, இறுதியில் பரத்தோடு தங்களை ஐக்கியப் படுத்திக் கொள்கிறார்கள்.

இந்த முறைகளையெல்லாம் ஆன்மீகத் துறையில் பால பாடத்தின் அளவே தெரிந்து கொண்டுள்ள சாதாரண மக்களிடம் கூறினால், அவர்களுக்கு இதைப் பற்றிய விவரம் சரியாகத் தெரியாது. எத்தகைய விளக்கம் கூறியபோதும் மந்தவாதி தெளியமாட்டான்.

வட்ட வடிவமான பூமியைச் சுற்ற ஆரம்பிக்கும் ஒருவன் எவ்வாறு பூமி முழுவதையும் சுற்றி இறுதியில் தான் எந்த இடத்திலிருந்து தன்னுடைய பிரயாணத்தைத் தொடங்கினானோ, அதே இடத்திற்கு வந்து சேருவது போலவே ஆன்மீகத் துறையில் சந்தேகம் கொண்டுள்ளவர்கள் நாளடைவில் இறுதியானதும் உண்மையானதுமான ஓரிடத்திற்கு வந்தே தீருவார்கள்.

மனிதனை இயக்கும் சக்தி

இனி மனிதன் பிறந்ததிலிருந்து மரணம் வரை மனிதனை இயக்கும் சக்திகளை ஆராய்வோம். கருவிலிருந்து சிசு வெளியானதும் சுவாசிப்பதற்கு பிராண வாயுவும், மலஜல விசர்ஜனத்திற்கு அபான வாயுவும் தேவைப்படுகிறது. கருவிலிருந்து வெளியான சிசுவிற்கு பிராணன், அபானன் இவ்விரு வாயுக்களுக்கும் கிடைக்கவில்லையானால் அந்தக் குழந்தை பிறந்தவுடனேயே இறந்து போகும். இன்னும் குழந்தைகளின் வளர்ச்சியில் அக்கறை காட்ட வேண்டிய பருவம் குழந்தை பிறந்ததிலிருந்து முப்பத்தாறு மாதங்கள் வரையிலுமாகும். இந்தக் காலத்தில்தான் குழந்தைகளுடைய பெற்றோர்களின் கேவலமான செய்கைகள் அல்லது ஒழுக்கமான செய்கைகள் இவற்றை ஒட்டிக் குழந்தையின் எதிர்கால ஒழுக்கம் நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது குழந்தையின் கபாலத்திற்கு அடியிலுள்ள நாதரூபமான மூளையில் தன்னருகில் நடைபெறும் செயல்கள் நுணுக்கமாக பிரதிபிம்பமாய்ப் பதிந்து விடுகின்றது. பின்னர் வயது வந்தபின் இந்தப் பருவத்தில் ஏற்பட்ட அனுபவத்தைக் கொண்டே நற்குணமோ தீயகுணமோ ஏற்படுகின்றது.

குழந்தை பிறக்கும்போது அதனுடைய சில அம்சங்கள் முக்கியமாக் கண்விழிகள், உள்ளங்கை, உள்ளங்கால்கள் மிகவும் மென்மையாக இருப்பதையும், பின்னர் வளர்ச்சியடந்து வரும்போது கண்விழிகளைத் தவிர உள்ளங்கையும் உள்ளங்காலும் கடினமாவதை நாம் பார்க்கிறோம்.

இதுபோலவே ஆரம்பத்தில் மிகவும்  மென்மையாக உள்ள மூளையானது, எண்ணத் தொடர்கள் பாய்ந்து, பாய்ந்து இறுதியில் கடினமான நிலைக்கு வந்து விடுகின்றது. குடல் எவ்வாறு தேவைக்கதிகமான உணவை மனிதன் உண்ணும்போது, தான் ஏற்றுக் கொண்டு அதை ஜீரணிக்கச் செய்யச் சக்தியற்று வெளியே வாந்தி ரூபமாக வெளியேற்றுகின்றதோ, அதுபோலவே மனிதனுடைய மூளையும் தீவிரமான எண்ணங்களைக் கிரகித்துக் கொள்ளும் திறனற்றுப் போகும். இந்தச் சமயத்தில்தான் மனிதன் பிதற்றித் திரியும் பைத்தியத்தின் நிலையை அடைகிறான்.

எவ்வளவு துக்கம் வந்தபோதிலும் அதனைப் பொறுத்துக் கொள்ளும்படியான மனோபாவம் வேண்டும். மனோபாவத்திற்குத் தக்கபடி உயிரை இவ்வுடலில் நிலைக்கச் செய்வதற்குத் தக்கபடி மனித உடலின் ஒவ்வொரு அவயங்களும் பலமடைந்திருக்க வேண்டும். குறிப்பாக இளமைப் பருவத்தில்தான் மனிதனுடைய மனோ நிலைமை அரிய பெரிய விஷயங்களைக் கிரகித்துக் கொள்வதற்குச் சரியான பக்குவத்தில் இருக்கின்றது.

எட்டு வகை யோகங்கள்

மனித வளர்ச்சி மென்மையாக இருக்கும் காலம் பதினாறு ஆண்டுக்கு உட்பட்டதாகும். அக்காலங்களில்தான் ஞாபக சக்தி பூரண வலுவடைந்திருக்கிறது. அக்காலங்களில்தான் ஞாபக சக்தி பூரண வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதற்குத்தான்இளமையில் கல்என்ற வாசகம் சான்று. அதற்கு பிந்தைய பருவம் காம வளர்ச்சிப் பருவம். அதே பருவந்தான் தெய்வ நுகர்ச்சிப் பருவம். காமத்தை அடக்கிக் கையாண்டவன் தெய்வத்தை அடைகிறான். முடியாதவன் அருமையாகக் கிடைத்த சக்தியை. கேவலம் அற்ப ஆசைக்கு ஆளாக்கி, அதன் பயனாய் பிணி, மூப்பு, சாக்காடு என்பதை அடைகிறான். நோயாளிகளாய் அறிவீனர்களாய் அழிந்து போகாமலிருப்பதற்காக மகான்கள் யோக முறையைக் கையாண்டார்கள்.

யோகம் எட்டு வகைப்படும். அதைத்தான், “அஷ்டாங்க யோகம்என்று சொல்வது, அதிலும் அகம், புறம், அனுஷ்டானிக்கப்படுகிறது. அவையாவன கட யோகம், கர்ம யோகம், தாந்திர யோகம், ராஜ யோகம், மந்திர யோகம், பக்தியோகம், லய யோகம், ஞான யோகம் எனப்படும்.

இவற்றில் கடம், தாந்திரம், மந்திரம், லயம் இவை புறம். கர்ம், ராஜம், பக்தி, ஞானம் இவை அகம்.

ஒன்று வெளியானுபவம், உறுப்பு இவற்றின் இயக்கங்களைக் கொண்டு மனதைக் கட்டுப்படுத்துவது. அழியாத சரீரத்தை அடையப் பாடுபடுவது.

மற்றது மனத்தையே மனத்தால் லயிக்கச் செய்து, மனத்தின் மதியின் பாலுண்டாகும் மன அசைவை, மனத்தின் மாறுதலை மதியின்பால் உண்டாகும் நுணுக்கத்தைக் கண்டு, கலந்து, அனுபவித்து, ஆண்டு, அடக்கிக் கையாள்வதாகும். மனம் அடங்கினால் சகல சித்தியும் ஏற்படும் இதைத்தான்,
மனமென்னும் மாடடங்கத் தாண்டவக்கோனே
மாடெல்லாம் தானடங்கும் தாண்டவக்கோனே
என்றனர் பெரியோர். மற்றொருவர்மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்என்கின்றார். மனத்தின் தன்மை அளவிட முடியாதது.

யாரார் எப்படியெப்படி அவரவர்களுடைய கர்மானுஷ்டானங்களுக்குத் தக்கவாறு நடக்க விரும்புகிறார்களோ, அவர்கள் அத்தனை பேருக்கும் அவரவர்களுக்குச் சகாயமாக நின்று உதவுவதுதான் மனத்தின் சுபாவம்.

செய்கையும் செய்கை இன்மையும்

எல்லாம் தெரிந்து எதிலும் இச்சையற்ற, எதுவும் தனக்கு அவசியமில்லை என்று கண்ட, எல்லாம் தானே என்றுணர்ந்த மகான்கள் இச்சிக்க வேண்டிய அனுபவமும் அவர்களுக்கு இல்லை.  அவர்கள் எல்லாம் செய்வார்கள். ஒன்றும் செய்யாமலும் இருப்பார்கள். அவர்கள் எதையும் இச்சை பற்றி செய்வதில்லை. அவர்களின் செய்கை உலக உபகாரம், உலக சேமத்திற்காக, தான் கண்ட இன்பம் எல்லாம் காண வேண்டும் என்பதற்காக உலகத்திற்கு வழிகாட்டுகிறார்கள். அவர்களின் செய்கைக்கும் அவர்களுக்கும் எந்தவித பற்றும் கிடையாது.

அதைத்தான் கிருஷ்ண பரமாத்மா, “செய்கையில் செய்கை இன்மையும் செய்கை இன்மையிற் செய்கையும் காண்பவன் எவனோ அவனே உத்தமன்என்கிறார். இதைத்தான்சும்மா இருக்கச் சுகம்என்கிற மற்றைய நூல். ஒன்றும் தெரியாதிருப்பது, ஒன்றும் செய்ய முடியாதிருப்பது சும்மா இருப்பதோடு ஒப்பிட லாயக்கற்றது.

உதாரணத்திற்கு சுவர். ஒரு சிறு மரக்கட்டை சும்மாதானிருக்கிறது. அதைப் போன்றதல்ல இந்த நிலை. சர்வமும் தெரிந்து, சர்வமும் செய்யும் தன்மையும் சக்தியும் பெற்று பிரபஞ்சத்தை ஆட்டி  வைக்கும்  சக்தி இன்னது என்பதை உணர்ந்து, அதுவே தான் என்பதைக் கண்டு, அந்தப் பிரபஞ்ச சக்கரத்தில் தான் ஒரு அணு என்பதை உணர்ந்து அடங்கி நிலையே ஆத்மார்த்த அனுபவநிலை.

இந்நிலையைத்தான் ராமலிங்க சுவாமிகள் அடைகிறார்கள் இளம் பருவத்தில். அவர்கள் சிறு வயதில் பள்ளிக் கூடத்திற்கு ஒழுங்காகப் போவதில்லை. அதைக் கண்டு வருத்தப்பட்டு, அவரின் அண்ணன் கடைசி முறையாக அவருக்குஆகாரம் போடக்கூடாதுஎன்று தன் மனைவிக்குச் சொன்னார். ஒருநாள் சுவாமிகளின் தகப்பனார் சிரார்த்தம் தம் அண்ணனால் நடத்தப்பட்டது. அவரும் உறவின் முறையாரும் போஜனம் புசித்து முடிந்தபின் சாயந்திர நேரம் வழக்கம்போல் கொல்லை வாசலில் ஒளிந்து மெல்ல நுழைந்தார் ராமலிங்க சுவாமிகள். அவரின் அண்ணியார் கொழுந்தனுக்காகச் சாப்பிடாது காத்திருந்தார். அவர் இவரைக் கண்டதும் விரைந்தெழுந்து, அன்னம் பரிமாறி இவரைச் சாப்பிடச் செய்தார். இவர் சாப்பிடும்போது அவ்வமையாரின் கண்ணீர், குனிந்து பரிமாறும் பொழுது இலையில் விழுந்தது.

ராமலிங்கக் குழந்தை துக்க மேலீட்டால் அண்ணியார் முகத்தை நோக்கிஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்டார். அம்மையார், “இவ்வீட்டில் நடந்த விசேஷத்தில் பலரும் உண்டுகளித்துப் போக, வீட்டுக்குடைய நீங்கள் அந்நியனைப் போல் ஒளிந்து அகால வேலையில் வந்து பதனழிந்த சோற்றை உண்ண வேண்டுவது விதியா? உங்கள் அண்ணன் உங்களைப் படிக்கத்தானே சொல்கிறார். இதைச் செய்தால் இத்தனை துன்பமும் வராதேஎன்றார்கள். அப்போது ராமலிங்கம்அண்ணியாரே, நாளை முதல் படிக்கிறேன். எனக்கு ஒரு தனி அறை வேண்டும். கண்ணாடியும் திருவிளக்கும் வேண்டும்என்றார். அம்மையார் அப்படியே தந்துவினார்கள். சுவாமிகள் அற்குப் பின்னிருந்து அந்தக் கண்ணாடியில் தோன்றுகிற திருவிளக்கைப் பார்த்த வண்ணமேயிருப்பார். இப்படிச் சில தினங்கள் இருந்தார்.

ஒருநாள் அந்தக் கண்ணாடியில் விளக்கு உருவம், தன்னுருவம் ஒன்றும் தெரியாமல் மறைந்து, திருத்தணிகை குமரன் திருவுருவைக் காண்கிறார். படிப்பு முடிவடைகிறது. சர்வமும் கற்றார். சர்வசித்தியும் பெற்றார். சாகாக் கலையுணர்ந்தார். இதன் மர்மம் என்ன? மனித சரீரத்தில் உள்ள நிலைகள் பல. அதற்கு இலக்கான மூர்த்திகள் பல. அவற்றுள் முடிவான இடத்தையும், மூர்த்தியையும் கண்டார். காரணம் கலியுகத்தைக் கடைத்தேற்ற கந்தன், ராமலிங்க சுவாமிகளாய் வந்தார். தன்னைத் தன் சாயலுக்கு உணர்த்தினார்.

நன்றி - பசும்பொன் தேவரின் எழுச்சிப் பேருரைகள்

-----------------------------------------------------------------------------------

No comments: