Saturday, October 3, 2015

அருட்பாவின் அருளாட்சி - பாகம் 2


உடலின் படிநிலைகள்

உடலில் உள்ள படிகளில் கீழ், மேல் என்ற நிலைகள் ஆறு. அவைகள் முறையே மூலாதாரம், சுவாசஸ்தானம், மணிபூரகம், அனாதகம், விசுத்தி, ஆக்ஞா எனப்படும்.

இதற்கு அப்பாலுள்ளதுசகஸ்த்திராரம்என்பது. இதில் மூலாதாரம், நான்கு இதழ்களைக் கொண்டது. சுவாசஸ்தானம் ஆறு இதழ்களைக் கொண்டது. மணிபூரகம் பத்து இதழ்களைக் கொண்டது. அதற்கு மேற்பட்ட அனாகதம் பன்னிரெண்டு இதழ்களைக் கொண்டது. விசுத்தி பதினாறு இதழ்களைக் கொண்டது. ஆக்ஞம் இரண்டு இதழ்களைக் கொண்டது.

இதில் மூலதாரம் மோப்பத்தை உணர்த்துவதற்காக அதாவது சுகந்தம், துர்நாற்றம், ருசி, நோயுற்பத்தி இவளைகளை உணரும் நான்கு வாசனைகள் அடங்கியதாய் அமைந்திருக்கிறது. சுவாசஸ்தானத்திலுள்ள ஆறு இதழ்களும் அறுசுவை உணர்ச்சி, மணிபூரகத்திலுள்ள பத்து இதழ்களும் பத்துவிதப் பார்வை உயரம், குட்டை, அகலம், நீளம், ஆழம் போன்ற பலவகைப் பார்வைகளும் மென்மை, முரடு, இனிமை, குரூரம் போன்ற சித்திரப்பாவைகளும் உண்டு. அனாசுதகம் பனிரெண்டு வித உணர்ச்சி. அதாவது சண்டமாருதம், தென்றல், மலைபடு காற்று, நீர்படு காற்று, புகைபடு காற்று, புண்படு காற்று, மிருது, கடினம் போன்ற பலதிறப்பட்ட ஸ்பரிச உணர்ச்சி அறியும் தன்மைத்து.

அதற்கு மேலுள்ள விசுத்தி பதினாறு இதழ்களும் நாதஸ்வரங்கள் கிரகிப்பதற்கு இருக்கின்றன. அவைகள் உதாரணமாக சப்தஸ்வரங்கள். அதற்கு ஆதியாகிய சப்த இயக்கம், அதற்கு மேலுள்ள ஓங்கார மோகனஸ்வரங்கள் உணரும், அதற்கப்பாலுள்ள ஆக்ஞா இரண்டு இதழ்களைக் கொண்டது. அவை விருப்பு, வெறுப்பு என்ற இரண்டை மாத்திரம் காட்டிக் கொடுக்கும். எந்த சரீரத்திற்கும் விருப்பு உள்ளவரை வெறுப்பு உண்டு. இரண்டுமற்ற இடம்தான் ஈசனின் திருவடி  இதைத்தான் வள்ளுவர்,
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
என்றார் இதைத்தான் சித்தர், “ஆராதாரமும் தொலையடி அதற்கப்பாலே ஒன்றும் இல்லையடிஎன்றார்.

இந்த ஆராதாரத்திறகும் மேம்பட்ட இடம்தான் சகஸ்ராரம்என்பது. அது எண்ணிறந்த இதழ்களை நுணுக்கமாகவும், ஆயிரத்தெட்டு இதழ்களைக் குறிப்பாகவும் காட்டக் கூடியது. அதன் மேல் விவரம் குரு முகாந்திரமாகக் காண்க. இதழ் ஆறு ஆதாரம் முறையே மூக்கு, வாய், கண், மெய், செவி, பகுத்தறிவு, இவைகளின் இயக்கங்கள். இவை முறையே மண், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம், பராகாயம் முதலிய கூறுகளின் இயக்கங்களாகும். இவைகளுக்கெல்லாம் அப்பால் உள்ளதுதான் உண்மையறிவு. ஊழிக்காலமும் சிதையாது நிற்கின்ற சீரிய அறிவு. இந்தக் கூறுகள் அத்தனையும் முறையே 4, 6, 10, 12, 16, 2 என்பவைகளைக் கூட்டி ஐம்பதாக்கி, அதற்கு மேல் பிரணவமாகிய ஓங்காரத்தை ஒன்றாக்கி, ஐம்பத்தோறு அட்சரமாகியதுதான் சிரம்பர சக்கரம்.

ஒன்றில் ஒன்று ஒடுக்கம். மௌனமே இயக்கமற்ற இடம். இயக்கமற்ற இடமே இறுதி. இறுதியே ஆரம்பம். இதைத்தான்முடிவே முதல், முதலே முடிவுஎன்கிறது சாஸ்திரம். இதைத்தான் குறள் அரங்கேற்றப் போன காலத்தில்நீங்கள் எவ்வூர்என்று சங்கப் புலவர் வினவ,
எந்த ஊர் என்றீர் இருந்த
ஊர் நீர் கேளீர்
அந்த ஊர் முப்பாலும் பாழாய் முடிவிலொரு சூனியமாய் அப்பாலும் பாழாய் அரும் என்ற வாக்கு. அதைத்தான் மற்றொருவர் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று சொன்ன பொதுமையுணர்த்திய குறிப்பு, அதைத்தான் ஞானிகளும் பத்ர காயவெளி அண்ட முசுடு”, “அகண்டிதாகாரம் என்று குறிக்கின்ற மர்மம்.

தோன்றுவனெல்லாம் மறையும். மறைவனவெல்லாம் தோன்றும். இது மாய்கையின் வல்லபம். புறக்கண்ணால் அறியப்படும். தோன்றாத, மறையாத உண்டாகாத, அழியாத, ஆதியற்ற, முடிவற்ற, அனாதியான நிலைதான் தெய்வீகநிலை. தோன்றி அழிவனவெல்லாம் பொய். தோன்றி அழியாதவை மெய். இதைத்தான் தாயுமான சுவாமிகள்,
பொய்வளர் நெஞ்சினர் காணாத காட்சியே பொய்யில்லா மெய்யறிவிற் போதபரிபூரண அகண்டிதாகாரமாய் போக்குவரவற்ற பொருளேஎன்கிறார். இந்த இயக்கமற்ற இடத்தைத்தான் திருமூலர், நினைப்பும் மறப்புமற்றவர் நெஞ்சில் வினைப்பற்றறுக்கும் விமலன் இருக்கும்என்கிறார்.

இந்நிலையை அடைந்த ஆன்மாக்கள் அறிய வேண்டிய அறிவு பள்ளிக் கூடத்தில் இல்லை. புத்தகங்களில் இல்லை. அந்த சரீரமே அறிவின் வடிவம். அதிலுள்ள ஒவ்வொரு அணு இயக்கமும் இந்த அண்டத்தை இயக்கும். அந்தப் படிப்பைத்தான் திருத்தணிகை முருகன் தன் உருக்காட்டி ராமலிங்கருக்குப் போதித்தார். அதன் பின்னர் அவர் பாடிய பாக்கள், சொல்லிய சொற்களை நீங்கள் காண்கிறீர்கள். அதில் அறிவுக் களஞ்சியத்தை காண்பதல்லால் என்ன இலக்கணப் பிழை? என்ன பொருள் குற்றம்? என்ன சொற்குற்றம் காண்கிறீர்கள்? காண முடியும்? முடியாது! பள்ளிக் கூடத்தில் பயிலாத ஒருவரின் வாக்கு இவ்வாறிருப்பது எதைக் காட்டுகிறது? முடிவான ஒன்றை உணர்ந்த பின் எல்லாம் உணர முடியும் என்பதைக் காட்டுகிறது.

அருட்பாவின் அருளாட்சி

சுவாமிகள் உபதேசித்த காலத்தில் சொல்கிறார். “பல நூறு வண்டிகளில் ஏறும் சுமைகளாகிய புஸ்தகங்களைப் படித்துப் தெளிவதைக் காட்டிலும் அருளறிவைப் பெற்றதால் விசேஷ அறிவு கிடைக்கும்என்கிறார். அவர்கள் எல்லாரையும் போல் கர்மத்தை அனுபவிக்க வந்தவர்களல்ல, அவர்கள் தான் வந்த காரணத்தையும் சொல்லுகிறவர்கள்.

அகத்தே கருத்து புறத்தே வெளுத்திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்தி சன்மார்க்க சங்கத்தடை வித்திட, அவரும் இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற் கென்றே என்னை இந்த யுகத்தே இறைவன் வருவிக்க வுற்றேன். அருளைப் பெற்றேனேஎன்கிறார்கள். இதை வேறு வேறு அர்த்தங்கள் பண்ணுவர்கள் உங்களுக்குச் சொல்கிறேன். காலம் வந்தவிட்டதால் உலகத்திலுள்ள மேல் நாட்டாரில் பெரும்பாலோர் புறமாகிய உடல் வெளுத்து அகமாகிய மனம் கருத்திருக்கின்றனர். ஆகையால்தான் அவர்களின் அறிவு பெரும்பாலும் நாஸ்திகமாகி, யாரையும் அடக்கி ஆள்வதற்கு அழிவுக் கருவிகளை உற்பத்தி செய்வதிலே முழுமுயற்சியாய் வேலை செய்கிறது.

சுவாமிகள்கலியின் கொடுமை ஐயாயிரம் வருடங்களுக்கு மேல் நடைபெறாதுஅதனின்றும் காலம் மாறுபடும்என்று சொல்லி இருக்கிறார்கள். அந்த காலம்தான் 1900-க்கு மேற்பட்ட காலம். அதிலிருந்து வெளிப்போக்காக ஒருபுறம் அக்கிரமம் மலிந்து, அநீதிகள் மிகுந்து தோன்றினாலும் ஞானிகளும் யோகிகளும் பல இடங்களில் தங்களுடைய வேலைகைளைத் துரிதமாய் நடத்தி வருகிறார்கள். அதன் சந்திப்பு மத்திய நூற்றாண்டின் காலமாகும். அதாவது 1950 ஆகும். இதைத்தான் சுவாமிகள் சொல்லிய திருவருள் செங்கோலாட்சிக் காலம் என்று உணர்க!

இதை சுவாமிகளுக்குப் பிற்காலத்திய சுவாமி விவேகானந்தாஇப்பொழுது மேற்கே உதித்திருக்கிற இந்த நட்சத்திரம் கிழக்கே உதிக்கப் போகிறது ஆயிரம் மடங்கு பிரகாசத்துடன்என்று சொல்லி இருக்கிறார்.

சுவாமி ராமதீர்த்தா அவர்கள்இருபதாம் நூற்றாண்டின் மத்திய பாகத்திற்குள்ளாக இந்தியா ஒரு உன்னத நிலையை அடையப் போகிறது. அது ஆதி நிலையை விட உயர்ந்தது. இதை தயவுசெய்து பதிவு செய்துகொள்ளுங்கள்என்று சொல்லி மறைந்திருக்கிறார்கள்.

ஏசு கிறிஸ்து அவர்கள் இஸ்ரேயில் கூட்டத்தாரே! நீங்கள் சில ஆயிர வருஷங்கள் உங்களுக்கென ஒரு நாடு இல்லாது பரிதவிப்பீர்கள். முடிவில் உங்களுக்கென ஒரு நாடு உண்டாகும். அக்காலத்தில் கிழக்கிந்திய நாட்டாரின் படையெடுப்பால் பல சாம்ராஜ்யங்கள் அழியும். அப்பொழுது நீங்கள் என்னை இன்னாறென்று உணருவீர்கள்என்று சொல்லிப் போயிருக்கிறார். அந்தக் காலமும் இதுவே.

முகமது நபியவர்கள், “உலகில் அக்கிரமம் மலிந்து, சின்னா பின்னப்படும் காலத்தில், உலகம் மாறுதல் பெற்று ஓர் நல்லாட்சியை அடையும் அப்பொழுது உலகம் ஒரு குடையின் கீழ் வரும்என்று சொல்லி இருக்கிறார்.

மதங்கள் எல்லாம் பல நதிகள்

ராமலிங்க சுவாமிகள் தமதுஜாதி, பேதம், மத பேதம், சமய பேதம் அற்ற சுத்த சமரச சன்மார்க்க நெறி தழைத்தோங்கப் போகும் காலம் சமீபிக்கிறதுஎன்றும் தன்னுடைய சன்மார்க்கக் கொடியேஉலகாளும் கொடிஎன்றும் சொல்லி இருக்கிறார்கள். இதை விவரமில்லாதவர்கள்கிருஸ்தவனும், முஸல்மானும், இந்துவும் வெவ்வேறுஎன்றும்ஒவ்வொருவரும் தன் த்தின் பேரால் உலகத்தை ஆள வேண்டும்என்றும் ஆசை கொள்கிறார்கள். சிறியோர்கள் மதவெறி கொள்கிறார்கள். இதனுடைய உண்மையான அர்த்தத்தை உணராததால் ஏற்பட்ட வினை இது.

கிருஸ்துவனும், முஸல்மானும், இந்துவும் தனக்குள்ளிருக்கும் சரீர தத்துவங்களைக் கண்டு, யோக முறையைப் பயின்று, ஆத்மாவை அனுபவித்து, ஆண்டவனை அடையும் காலத்தில், புறவொழுக்கங்களால் ஏற்பட்ட பாகுபாடுகளைக் கவனியாது, உடைக் கலாச்சாரங்களுக்கு அடிமையாகாது, உடை அந்தந்த நாட்டு சீதோஷ்ண நிலைக்கு தக்கவாறு அமைந்தது என்றும், கலாச்சாரமும் பெரிதும் பூகோள அமைப்பிற்கு உட்பட்டது என்றும் மதங்கள் எல்லாம் பல நதிகள், பல இடங்களில் உற்பத்தியாகிப் பல பாதைகளில் சென்று, முடிவில் ஒரே சமுத்திரத்தில் சங்கமமாவதைப் போல பல மதப் பிரிவுகளும் ஒரே ஆண்டவனை அடையும் மார்க்கம் என்பதை உணருவார்கள்.

மனிதனின் வணக்கம் மனதில் மேன்மையைத் தந்து, அன்பைப் பெருக்கி, யாருக்கும் இன்பம் செய்ய வேண்டும் என்ற உணர்ச்சியை ஊட்டி, அது முதிர்ந்த காலத்தில் மனிதன் மட்டுமல்ல, மிருகங்கள், படசிகளும் ஆண்டவன் சிருஷ்டியே என்பதை உணர்ந்து, அதோடல்லாமல் மலை, மரம், நதி, சமுத்திரம் இவைகளும் தன் இனம் என்பதையும் கண்டு, எதற்கும் தான் அன்னியன் இல்லை, எதுவும் தனக்கு அன்னியமாக இல்லை, எல்லாம் தானே, தானே என்கிறபொழுதில் தானே ஆண்டவன், ஆண்டவனே தான் - என்கிற ஐக்கியம் உதயமாகின்றது. அந்த நிலையில்தான் இந்துக் கோவிலில் காட்டுகின்ற சூடதீப வெளிச்சமும், கிருஸ்தர் வணக்கத்தில் வைக்கின்ற மெழுகுவர்த்தியின் ஒளியும், முகமதியர் வைக்கின்றன ஊதுபத்தியில் காண்கிற சுடரும், தன் சரீரத்தின் இருட்டைப் போக்கி எழுப்ப வேண்டிய ஞான விளக்கின் என்பதைக் காண்கிறான் - காண்பான்.

சரீரத்தின் முலாதாரத்திலிருந்து மூலக்கனல் புகைந்து கொண்டிருக்கிறது. ஆக்ஞா என்ற இடத்தில் அருளொளி எரிந்து கொண்டிருக்கிறது. மூலக்கனல் முறையோடு எழுப்பப்பட்டு, ஆறாவது ஆதாரத்தைச் சிதைவின்றி சென்று தொட்டால், அந்தப் புகை வழியே சுடர் இறங்கி சரீரம் பூராவும் ஒளி வியாபிக்கும். அது மும்மலங்களையும், ஆணவம், காமியம், மாய்கையை எரிக்கும் - இல்லாது செய்யும். இதைத்தான் இந்துக் கோவில்களில் கோபுர வாசலில் சாம்பிராணி போட்டுப் புகையாக்கிக் தூக் காலில் பிடித்துக் கொண்டு நிற்கின்றார்கள். மூலஸ்தானத்தில் சூடத்தைக் கொளுத்திக் காண்பிக்கிறார்கள். இந்த ஒளியைத்தான் கிருஸ்தவர்கள்மோட்ச விளக்குஎன்கிறார்கள். முகமதியர்கள் எந்தக் காரியத்தையும் துவங்குவதற்கு மூலதாரமாய்ப் பெற்றுள்ள காற்றை வணங்கி ஆரம்பிக்கின்ற மூன்றாம் பிறைச் சந்திரனில் காண்கிறார்கள்.

சாமுத்திரிகா லட்சண முறையில் நெற்றியை மூன்றாம் பிறைச் சந்திரனுக்கு ஒப்பிட்டிருப்பதைச் சான்று கூறும். இதுவே சிவபெருமான் மூன்றாம் பிறைச் சந்திரனை அணிந்திருக்கின்றார் என்று சொன்ன மர்மம். விஷயம் ஒன்று. விரிவு பல. விவரித்த விஷயமும் பல. இதையே ராமலிங்க சுவாமிகள் கண்களிக்க புகை சிறிதும் காட்டாதே புருவக்கலை நடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே என்கிறார் ஜோதியின் வடிவத்தை.
பாவம் இருள் வடிவம், அறிவின்மை என்பதை எல்லா மதமும் ஏகோபித்துச் சொல்கின்றன. இருட்டைப் போக்குவது வெளிச்சம் என்பது எல்லாரும் ஒப்புக் கொள்ளும் உண்மை. வீட்டின் இருளைப் போக்குவது விளக்கு. சரீர வீட்டின் இருளைப் போக்குவது சற்குணர்கள் காணகின்ற ஜக ஜோதியாகும்.

இதைத்தான் சரீரத்தில் மறைந்து நிற்கின்ற திரைகளின் நிறங்கள் பல என்பதைக் காட்டி, இத்தனையும் விலக்கிக் காண வேண்டிய ஜோதியை ராமலிங்க சுவாமிகள் வடலூரில் காட்டியிருக்கின்றார்கள். இதைத்தான் குணங்குடி மஸ்தான்,
சூத்திரப் பாவை கயிரற்று வீழுமுன்
சூட்சக் கயிற்றினைப் பாரடா - அதி
சூட்சக் கயிற்றினைப் பாரடா
என்கிறார். சூட்சக் கயிறு உடலுள்ளிருக்கும் உயிரின் ஊசலாட்டம். ந் ஊசலாட்டத்தையும், அதன் முடிவையும் காண்கின்ற பாதைதான் படிப்படியாக மேலேறி ஜோதியைக் காண்கின்ற பாதை. அதைக் கண்ட இடம்தான் சாகாக்கலை பெற்ற இடம்.

இங்கே சாவு என்றா என்ன என்பது சிந்திக்க வேண்டியது. இந்தச் சரீரம் அழியத்தக்க பல பொருள்களைக் கொண்டதால், அழியாத ஒரு பொருளை உள்ளே பொதிந்து வைத்துக்கொண்டு உற்பத்தியாகிறது. அழியும் பொருட்களுக்கும், அழியாப் பொருட்களுக்கும் ஏற்படும் சம்பந்தம் என்ன? அழியாப் பொருள் அழியும் பொருளை மாற்றித் திருத்தி தன் வயமாக்கப் பாடுபடுகிறது. அப்பொழுது அழியாப் பொருளில் மாறுதல்கள் ஏற்படுகின்றன.

உடல் என்ன? ஆசையின் கூறு - ஆசையின் வினை வடிவம்! வினை மூவகைப்படும். சஞ்சிதம், பூர்வவினை, பிரார்த்வம். தற்போது அனுபவிக்க வேண்டுபவை. ஆகாமியம் இப்பொழுது செய்து சேர்த்து வைக்கும் பாவம். பிறந்து அனுபவிக்க வேண்டியவை. பாவிகள் மூன்று வினையையும் அனுபவித்துக் கொண்டே போவார்கள். அறிவாளிகள் ஆகாமியமில்லாமல் மற்ற இரு வினையையும் அனுபவிப்பார்கள். ஞானிகளோ சஞ்சிதம், ஆகாமியம் இரண்டுமில்லாமல் பிராரத்வத்தைச் சேற்றிலுள்ள பிள்ளைப் பூச்சியானது சேறு சிறிதும் ஒட்டாது வாழ்வதைப் போல பற்றற்று நடத்துவார்கள் - பரோபகாரத்தைச் செய்து மறைவார்கள்.
எந்த சரீரத்திற்கும் மும்மலமிருந்தால் மூன்று தோஷங்களும் இருக்கும். முன் சொன்னேன் ஆவணம், காமியம், மாய்கை மும்மலமென்று. அவை உள்ள சரீரத்து வாத, பித்த, சிலேத்துமங்கள் தோஷங்களாக நிற்கும். வாதம் வாயுவின் கூறு. பித்தம் அக்னியின் கூறு. சிலேத்துமம் அந்தி முதல் இரவில். இதில் பித்தம் அதிகரித்தால் சரீரம் அக்னி மயமாக உருகி இற்றுப் போகும். வாதம் அதிகரித்தால் சரீரம் அளவு கடந்து பருத்து, நரம்புகள் தொய்ந்து, ரத்தத்தில் நீர்ச்சத்தும், வாயு சத்தும் அதிமாகி பலஹீனப்பட்டுப போகும். சிலேத்தும் அதிகரித்தால் நெற்றியில் வியர்வை உண்டாகி, உள்ளங்கால் புறங்கைகள் அடிக்கடி வியர்த்து அதிக உணவுப் பிரீதி, உண்டால் ஜீரணிக்க முடியாத துர்ப்பலம் உண்டாகி அழியும்.

இவை மூன்றையும் சமப்படுத்துவது அன்றாட நடத்தையின் மூலம், நீர் பிரிக்கி ஒழுங்காக இருந்தால் பித்த நோய் அணுகாது. சிறு பிராயத்தில் கவலையில்லை. வயது வந்த பருவத்தில் யோகியாயிருந்து இந்திரியத்தைக் கெட்டிபடுத்தினால் அல்லது பதிவிரதா பக்குவமடைய இல்லற வாழ்க்கை வாழ்ந்து, அந்த வாழ்க்கையின் மூலம் இந்திரியம் பரிமாற்றப்பட்டு, முடிவில் இச்சையற்று நின்றால் சிலேத்தும தோஷம் அணுகாது. யோகிக்கு இந்திரியம் சிறு பிராயத்திலிருந்து சாதாரண நீர் வடிவத்திலிருந்து தயிரளவு கெட்டியாகி, பின்னால் வெண்ணெய் அளவுக்கு மாறி பின்னால் ரத்தத்தின் அளவு கெட்டியாகிறது. அதைத்தான்மணிஎன்று சொல்வது. அதுதான் குளிகையும் ஆகும். அந்த நிலை அடைந்தவர்கள் புறக்குளிகையும் செய்ய முடியும்.

இதே நிலையில் இல்லற வாழ்க்கையிலும் நாத விந்து என்ற இரண்டும் ஆணுக்கும், பெண்ணுக்கும் இருந்தாலும் நாதத்தின் பலம் பெண்ணுக்கும் விந்துவின் பலம் ஆணுக்கும் விசேடித்திருக்கும். இதில் நாத விந்துகள் இரண்டும் மாறி மாறி ஒன்றில் ஒன்று ஐக்கியமாகி, அக்காலத்தில் சரீரம் அடைய வேண்டிய சூடு, குளிர்ச்சிகளை அளவுக்களவாக அடைந்து உறுதி பெறுகிற காலத்தில், ரத்தத்திலிலுள்ள வெள்ளை, சிவப்பு அணுக்கள் அடைய வேண்டிய முழுபலத்தையும் பெற்று நின்றால், வியாதியின் அணுக்கள் எவையும் அச்சரீரத்தில் புக முடியா. புகுந்தாலும் அந்த அணுக்கள் இதைப் புசிக்கும். அந்நிலை பெற்ற சரீரி எவ்வித வியாதிகளுக்கும் ஆளாகான்.

யோகி நாத விந்து கலப்பை, சந்திர சூரிய கலையின் மாறல் மூலம் அடைகின்றான். முடிவு மேற்சொன்ன முறையே, இக்கலைகளை அடையும் காலஙகளில் அளவுக்கு மீறினாலும், குறைந்தாலும் சரீர உறுப்புகள் நிலை தவறும், தவறுகிற பொழுது பலம் குறையும். பலம் குறையும்பொழுது யௌவனம் மாறும். யௌவனம் மாறும்பொழுது பிணியும், மூப்பும் இயற்கை. அதன் முடிவு மரணம். ஆனால் சாகாக்கலை பெற்றவர் உலகில் இல்லை. அவர்களும் இறந்துதானே போனார்கள் என்ற வினா எழும்.

திருவுருவின் பெருமை

மரணம் மூன்று வகைப்படும். ஒன்று பிணி முப்பிற்காளாகி, வசிக்கப் பிரியமாயிருக்கும் குடும்பத்தை நீண்ட நாளைக்கு பராமரிக்க வேண்டும் ஆசையிருந்தும், பல வைத்தியம் பார்த்தும் முடியாமல் ஏங்கி, பயந்து, தன்னை மறந்து உயிர்விடுவது.

மற்றொன்று மார்க்கம் இன்னதென்று கண்டு, அதன்படி நடந்து, உடலைக் கவனியாது, உள்ளத்தை மாத்திரம் பக்குவப்படுத்தி, உயிர் என்ன என்பதை உணர்ந்து, உயிரல்ல தான் என்பைதைக் கண்டு, உயிருக்கு அப்பால் உள்ள ஒன்றைக் கண்டபின் அதுவாய் தான் ஆன பின், இந்த உலகம் சாசுவதமாய்க் குடியிருக்க வேண்டிய ஸ்தானமல்ல - இதற்கப்பால் உருவை விட்டுவிட்ட அருளுருவாய் அருவாய் ஆக வேண்டிய நிலையைத் தெரிந்து சரீரத்தைப் போட்டுவிட்டு, மயக்கமுற்று, பயமற்று, மறதியற்று, சட்டை மாற்றத்தைப் போல் சரீரத்தை விட்டுப் பிரயாணமாவது மற்றொன்று.

மூன்றாவது உடலையும் உள்ளத்தையும் சமப்படுத்தி உடலை வஜ்ர காயமாக்கி, உள்ளத்தையும் பரிசுத்தமாக்கி, அதன் பின் இந்த உடலில் இருந்துகொண்டே காமத்தை வென்று, யமனைக் கொன்று, கடவுளைக் கண்டு, கடவுளேயாகி, உருவிலிருந்து அருவாகும் காலம் பூத உருவையும் காட்டாமல், ஸ்தூல சரீரத்தினின்றும் அலை வடிவமான சூட்சும சரீரத்திற்குள் போய், அதனின்றும் கண் வடிவான காரண சரீரத்திற்குள் போய், அதனின்றும் அணு வடிவான மகா காரண சரீரத்திற்குள் போய், அதற்கப்பால் உள்ள அகண்ட வெளியில் ஐக்கியமாவது! இந்த நிலையை அறிந்தவர்கள்தான் உருக்காட்டி மறையாத - உருக்காட்டாதே மறைந்த மாணிக்கவாசகர், ராமலிங்க சுவாமிகள் போன்றோர். மாணிக்கவாசகர் முடிவான அருளுருவை அடைந்து முயற்சியை முடித்துக் கொள்கிறார். ராமலிங்க சுவாமிகள் அருவாகி, அருளாய் இந்த அண்டத்தை ஆட்டி ஆள, சீர்திருத்த முடிவில், இகத்தைப் பரமாக்க அருள் புரிகிறார். இதன் விபரம் அருளாட்சி நடைபெறும் காலத்தில் முற்சொன்ன 20-ம் நூற்றாண்டின் மத்திய பாகத்தில் விளங்கும்.

சற்சங்கத்தார் குறிப்பாக கவனிக்க வேண்டியது சுவாமிகளின் வழிபாடு. மகாநாடு நடத்துகிற காலத்தில், எந்த பிற உருவத்தையும் அந்த் திருவுருவோடு சேர்த்து வைக்காமல், ஏன்? சிந்தனையும் கூடச் செய்யாமல் இருக்கப் பழக வேண்டும். அதன் மகத்துவம் இன்னும் நீங்கள் உணரவில்லை. சாட்சாத் சிவபெருமானின் தில்லையம்பல நடன உருவத்தைக் கூட அதற்கு சமீபித்துச் சேர்க்கக் கூடாது. அந்த நிலையிலும் டமரநாதம் ஒலித்துக் கொண்டிருக்கும். அதற்கும் அப்பாலுள்ள மோனத்திறகும் முடிவான - சொல்லக் கூடாத - சொல்ல முடியாத நிலை சுவாமிகளின் நிலை.

சுவாமிகளே அவரது வசனப்பகுதியில்ஆறாம் திருமறையில்இனிமேல் உலகத்திற்கு வரப்போகும் அருளாளன் தேவர்களுக்குத் தேவனாய், ஞானிகளுக்கு ஞானியாய், யோகிகளுக்கு யோகியாய், கடவுளுக்கு கடவுளாய் காட்சியளிப்பார். அவரிடமிருந்து எல்லா ஞானிகளும், எல்லா யோகிகளும், எல்லா சமயத்தவரும் எல்லா அனுவங்களையும் த்தம் அனுபவங்கள் அனைத்தயும் விவரித்து ஒருங்கே காண்பார்கள்என்று சொல்லி இருக்கிறார்கள்.

தாய்மார்களே, சகோதர்ரகளே, நான் முன்னால் சொன்னது சுவாமியவர்களின் திருவுருவின் நிலையும் அதன் பெருமையும். அதை நான் சொன்ன காலத்தில் ஆகாய கங்கை அமுது மழை சொட்டிற்று. அது ம் மகாநாடு நடைபெற்ற பந்தலுக்கும் அதைச் சுற்றியுள்ள சில நூறு கெஜங்களுக்கும் விழுந்திருக்கிறதே அல்லாது பூரா நகருக்கும் கூட இல்லை. அதுவும் முற்றம் தெளித்தது போல அரை நிமிஷம் பெய்து விட்டது. ஒரு நிமிஷம் கூட இல்லை. இது பெரிய ஆச்சரியக் குறி!

சுவாமி அவர்கள் வசித்த காலத்தில் அவர்களை நேரில் பார்த்த பெரியோர்கள் சொல்லக் கேட்ட விவரம், சுவாமியவர்கள் ஒரு வெள்ளை ஆடையை முக்காடிட்டுப் போர்த்தி இருப்பார்களாம். சில சமயம் தலை திறக்கப்படுகிற பொழுது தலைமீதுள்ள உச்சிக் குழிக்கும், அதாவது குழந்தைகளுக்குத் தலையில் எலும்பு வளராமல் தோல் பிதுக்கிட்டிருக்கும் பாகம் இருக்கும் அல்லவா? அந்த இடத்திற்கும் சூரியனுக்கும் ஓர் ஒளி ஓடிக்கொண்டிருக்குமாம்.

உதாரணமாக ஜன்னல் துவாரங்களின் மூலமாகச் சூரியக் கதிர்கள் பரவும்பொழுது, கோடு போன்ற ஒரு வெளிச்சமும் அதில் தூசி போன்ற துணுக்குகள் பலவும் பறந்து கொண்டிருக்க் காண்கிறோமே அதே போன்று! அந்த சரீரம் ஞானதேகம். ஆகையால்தான், அவரைப் படமெடுக்கப் பலர் முயன்றும், உருவம் நிழல் விழாத்தால் படத்தில் விழவில்லை. ஆகையால் உருவப்படம் பிடிக்க முடியவில்லை. இன்று பார்க்கிற படம் அவரின் பக்தனான ஒரு குயவன் களி மண்ணில் செய்த உருவம். அதை அந்தக் குயவன் பாத காணிக்கையாக சமர்ப்பிக்க, அவர் அதை வாங்கிபொன்னான உடல்  மண்ணாயிற்றேஎன்று சொல்லிக் கீழே போட, உடைந்து நொறுங்கிப் போயிற்று. பின்னால் அவ்வுருச் செய்வதற்கு ஆஸ்பதமாக இருந் சிலவற்றைக் கொண்டுதான் பிற்காலப் படம் வரையலாயிற்று.

எந்தச் செய்தியும், எந்தக் கலையும், எந்த ஆத்மார்த்திக வளர்ச்சியும் அதைப் பின்பற்றிய அரசு இல்லாத காலத்தில் அது பிரதிபலிக்காது.

புத்தரின் பெருமை ஒரு அசோக சாம்ராஜ்யத்தால்தான் உலகிற்கு தெரிய வந்தது. கிருஸ்துவின் பெருமையும், பைபிளின் தன்மையும் அதைப் பின்பற்றாது போனாலும், அதை முகமூடியாக அணிந்து வந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தால்தான் பிரபலமாயிற்று.

முகமது நபியின் பெருமையும் குரானின் தன்மையும் அக்பர் போன்ற ஆட்சியாளர்களால்தான்  இந்தியாவிற்கு தெரிய வந்தது. இதேபோல ராமலிங்க சுவாமிகளின் அருட்பாவும், அதன் பெருமையும் பின்னால் வரப்போகும் அருளாட்சியில்தான் விளங்கப் போகிறது. அது சமயம் ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், சுவாமி ராமதீர்த்தா, லோக்மான்ய பாலகங்காரத திலகர், நேதாஜி போன்றோர் கனவு கண்ட, நினைத்த இந்தியா தோன்றும்.
வாழ்க சமரசம்!


நன்றி - பசும்பொன் தேவரின் எழுச்சிப் பேருரைகள்

No comments: